பிரீமியம் ஸ்டோரி
அக்கம் பக்கம்
அக்கம் பக்கம்

ஹெச்.ஐ.வி.க்கு தடுப்பூசி

சமீபத்தில், ஓரிகான் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் எய்ட்ஸ் நோயைக் குணப்படுத்தக்கூடிய தடுப்பூசி ஒன்றைக் கண்டுபிடித்துள்ளனர். இந்தத் தடுப்பூசியை ஹெச்.ஐ.வி. பாதிக்கப்பட்ட குரங்குகள் மீது செலுத்தி ஆய்வு செய்ததில், 16 குரங்குகளில் 9 குரங்குகள் குணம் அடைந்தன.

இந்த ஆய்வை நடத்திய பேராசிரியர் லூயிஸ் பிக்கர், 'இந்தத் தடுப்பூசி, ஹெச்.ஐ.வி. வைரஸை முழுமையாக அழிக்கக்கூடிய ஆற்றலைப் பெற்றுள்ளது.  ஹெச்.ஐ.வி. வைரஸை விட, நூறு மடங்கு சக்திவாய்ந்த வைரஸ் எஸ்.ஐ.வி. இந்த எஸ்.ஐ.வி. வைரஸைக் கூட இந்த ஊசியால் தடுக்கமுடியும். குரங்குகள் மீது நடத்திய ஆய்வில் வெற்றி கண்டுள்ளோம். அடுத்தது மனிதர்கள் மீதும் இதைப் பயன்படுத்த உள்ளோம்' என்றார். இந்தத் தடுப்பு மருந்து, மருத்துவ உலகத்தில் பெரும் மாற்றத்தை உண்டாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அக்கம் பக்கம்

செயற்கைக் கருவூட்டல் முறையில் சாதனை!

அக்கம் பக்கம்
##~##

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த வலி என்ற பெண் கருப்பையில் தோன்றிய புற்றுநோய் காரணமாக தாயாகும் பாக்கியத்தை இழந்தார். அவருக்கு, செயற்கைக் கருவூட்டல் முறையில் முயற்சி செய்து பார்க்க மருத்துவர்கள் முடிவு செய்தனர். வலி-க்கு, புற்றுநோய் சிகிச்சை செய்தபோது, வெட்டி எடுக்கப்பட்ட கருப்பையின் நோய் தாக்காத பகுதியின் திசுக்கள், ஏழு வருடங்களுக்கு முன்னால் எடுக்கப்பட்டு உறைய வைக்கப்பட்டிருந்தது. அவற்றைப் பயன்படுத்துவதன்மூலம் அவருக்கு, கருமுட்டை வளர்வதற்கு மருத்துவர்கள் முயற்சித்தனர். தொடர் முயற்சிக்குப் பின், தற்போது 26 வயதான வலி, 26 வாரம் கர்ப்பமாக உள்ளார். அவருக்கு, இரட்டைக் குழந்தைகள் என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. ராயல் மெல்பேர்ன் மருத்துவமனையும், செயற்கைக் கருவூட்டல் முறை மருத்துவர்கள் குழு ஒன்றும் இணைந்து இந்தச் சாதனையைப் புரிந்துள்ளன. கருப்பைப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, தாயாகும் வாய்ப்பினை இழக்கும் பெண்களுக்கு இந்த முறை நிச்சயம் பலன் அளிக்கும்.

அக்கம் பக்கம்

மருத்துவ மேதைகளுக்கு நோபல் பரிசு

இந்த ஆண்டு மருத்துவத்துக்கான நோபல் பரிசு, கடந்த அக்டோபர் 7ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. அமெரிக்காவைச் சேர்ந்த மருத்துவ அறிவியல் விஞ்ஞானிகள் ஜேம்ஸ் இ. ராத்மேன், ரேண்டி டபிள்யு. ஷேக்மேன், ஜெர்மனைச் சேர்ந்த மருத்துவ அறிவியல் விஞ்ஞானி தாமஸ் சி. சூடாஃப் ஆகிய மூவருக்கும் நோபல் பரிசு பகிர்ந்தளிக்கப்பட உள்ளது.  'நோபல் பரிசுத் தொகையான ரூ.7.75 கோடியை (சுமார் 1.25 மில்லியன் அமெரிக்க டாலர்) மூவரும் சரிசமமாகப் பகிர்ந்து கொள்வார்கள்’ என நடுவர் குழு அறிவித்துள்ளது.

அக்கம் பக்கம்

சர்க்கரை நோய், நரம்பியல் மற்றும் நோய்த் தடுப்பு செல்களுக்கு இடையே நடைபெறும் மூலக்கூறு பரிமாற்றத் தன்மையை நுணுக்கமாக ஆராய்ச்சி செய்து, நோய்த் தடுப்புக்கு உரிய மருத்துவ வழிமுறையை இந்த நிபுணர்கள் கண்டுபிடித்துள்ளனர். உதாரணமாக ரத்த சர்க்கரை அளவு ஆற்றலைத் தீர்மானிக்கும் இன்சுலின், கணைய செல்களில் உற்பத்தியானவுடன், அது ரத்தத்தில் சென்று கலக்க, 'நியூரோடிரான்ஸ்மிட்டர்ஸ்’ என்ற வேதிவினை நிகழ்கிறது. இப் பரிமாற்ற நிகழ்வு உடலுக்குள் ஒரு நரம்பு செல்லில் இருந்து மற்றொரு நரம்பு செல்லுக்கு, தன்னிச்சையாக நடைபெறுகிறது. இத்தகைய பரிமாற்றத்தின் ஒழுங்குத் தன்மையை, இந்த நிபுணர்கள் வெற்றிகரமாக ஆராய்ச்சி செய்து மருத்துவ முடிவுகளைக் கண்டுபிடித்துள்ளனர். சர்க்கரை நோய், நரம்பியல் தொடர்பான உடல் நலப் பிரச்னைகள், உடலின் நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு ஆகியவற்றுக்குத் தீர்வு காணும் வகையில் இந்த நிபுணர்களின் செல் ஆராய்ச்சி இருந்ததால், நோபல் பரிசுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

அக்கம் பக்கம்

 அதீத சுத்தமும் ஆபத்துதான்!

அக்கம் பக்கம்

'அல்ஸைமர் நோய் வருவதற்கான சாத்தியம், சுத்த விரும்பிகளுக்கு உள்ளது’ என்கிறது, கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழக வெளியீடான‌,  'எவல்யூஷன், மெடிசென் அண்ட் பப்ளிக் ஹெல்த்’  எனும் பத்திரிகை. 'ரொம்ப சுத்தமா இருந்தாலும் பிரச்னைதான்’ என்கிறது அவர்களின் சமீபத்திய ஆராய்ச்சி முடிவு. 'குழந்தைகள் மண்ணில் விளையாடுவதைத் தடுக்க வேண்டாம்’ என்றும் சொல்கிறது. வளர்ந்த நாடுகளில் தண்ணீரிலிருந்து அனைத்தும் மிகவும் சுத்த பத்தமாக (ஹைஜீனிக்காக) கிடைக்கும்போது, இயற்கையாக உடலுக்குத் தேவையான பாக்டீரியா, வைரஸ் மற்றும் நுண்ணுயிர்கள் உடலுக்குக் கிடைப்பது அரிதாகிவிடுகிறது. இதனால் உடலின் நோய் எதிர்ப்பு ஆற்றல் குறையும். அல்ஸைமர் உட்பட சில நோய்களுக்கு இது என்ட்ரி கொடுக்க உதவுகிறது என்கிறது இந்த ஆராய்ச்சி.

அக்கம் பக்கம்

பயிற்சியால் பலன்

அக்கம் பக்கம்

அமெரிக்காவில், சுமார் 700 பெண்களிடம் ஆய்வு நடத்தப்பட்டது. தினசரி, பெண்கள் உடற்பயிற்சி செய்தால் மார்பகப் புற்றுநோயைத் தடுக்கலாம். வாரத்துக்கு 7 மணி நேரம் உடற்பயிற்சி அல்லது வாக்கிங் செய்யும் பெண்களுக்கு, மற்ற பெண்களைக்காட்டிலும் மார்பகப் புற்றுநோயிலிருந்து 14 சதவிகிதம் அதிகத் தடுப்பினைப் பெறமுடியும்.  அது மட்டுமல்ல, மார்பகப் புற்றுநோயை எதிர்க்கும் திறனும் அந்தப் பெண்களிடம் அதிகமாகக் காணப்பட்டது. மார்பகப் புற்றுநோய் அதிகரித்துவரும் இந்தக் காலக்கட்டத்தில், அமெரிக்கா போன்ற நாடுகளில் பெண்கள் உடற்பயிற்சி செய்ய, பல விழிப்பு உணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

அக்கம் பக்கம்

67 வயதில், 23 கிலோ கட்டி

பல்கேரியா நாட்டைச் சேர்ந்த மருத்துவர்கள், 67 வயதான ஒரு பெண்ணுக்கு, புற்றுநோய் அறுவை சிகிச்சை செய்து 23 கிலோ எடையுள்ள கட்டியை அகற்றி உள்ளனர். இந்தச் சிகிச்சையைச் செய்த டாக்டர் பொசிடார் ஸ்லேவிக், 'என்னுடைய மருத்துவச் சேவையில் இப்படி ஒரு சிகிச்சையைச் செய்ததில்லை. அறுவை சிகிச்சைக்குப் பயந்தே 20 வருடங்களாக அந்தப் பெண்மணி, மருத்துவர்களின் உதவியை நாடவில்லை. இதனால் தான் கட்டி நாளுக்கு நாள் அதிக எடையுடன் வளர்ந்துள்ளது. அறிவியலும் தொழில்நுட்பமும் பெரும் வளர்ச்சி அடைந்துள்ள நிலையில், மக்கள் பயப்படாமல் மருத்துவர்களின் உதவியை நாடினால், இதுபோன்ற பிரச்னைகளை சுலபமாகத் தீர்த்துக்கொள்ளலாம்' என்றார். கட்டியை அகற்றிய பிறகு, அந்தப் பெண்மணியின் இடுப்புப் பகுதி, மூன்றில் ஒரு பங்காகக் குறைந்தது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு