Published:Updated:

ஏழைக்கும் உண்டு காஸ்(ட்லி)மெடிக் சிகிச்சை!

ஏழைக்கும் உண்டு காஸ்(ட்லி)மெடிக் சிகிச்சை!

பிரீமியம் ஸ்டோரி
##~##

ழகாகக் காட்டிக்கொள்வதில் அனைவருக்குமே விருப்பம் உண்டு. ஆனால் என்ன... அழகின் விலை அதிகம். பிரபல தனியார் மருத்துவமனைகளில் மட்டுமே அழகுக்கான சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன. பணம் என்கிற பெரும் தடையால், ஏழை எளிய மக்களுக்கு அத்தகைய அழகுச் சிகிச்சைகள் கட்டுப்படி ஆகாது.

இப்போது அனைத்துத் தரப்பு மக்களுக்கும் இத்தகைய சிகிச்சைகள் கிடைக்கும் வகையில், சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் காஸ்மெடிக் சிகிச்சைக்கு என அதிநவீனக் கருவிகள் அமைக்கப்பட்டு, 'அழகியல் துறை’ தொடங்கப்பட்டுள்ளது. மிகக் குறைந்த கட்டணத்தில், சருமம் தொடர்பான அனைத்து சிகிச்சைகளும் அளிக்கப்பட்டு வருகின்றன.

இந்தியாவிலேயே அரசு மருத்துவமனை ஒன்றில் அழகியல் துறை தொடங்கப்படுவது இதுவே முதல் முறை.

ஏழைக்கும் உண்டு காஸ்(ட்லி)மெடிக் சிகிச்சை!

ஸ்டான்லியில் அளிக்கப்படும் சிகிச்சைகள் பற்றி அழகியல் துறைத் தலைவர் டாக்டர் ரத்தினவேல் விரிவாகப் பேசினார்.  

'அனைத்துத் தரப்பு மக்களும் பயன் பெற வேண்டும் என்பதற்காக, அரசால் இந்தத் துறை தொடங்கப்பட்டுள்ளது. இங்கு லேசர் சிகிச்சை (laser Treatments), தலைமுடி மாற்று அறுவை சிகிச்சை (Hair transplantation) போன்ற சிறப்பு சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன.

பிரச்னை என்று வருபவர்களுக்கு முதலில் மாத்திரை, மருந்துகள் மூலம் அடிப்படை சிகிச்சை தரப்படும். அதில் முன்னேற்றம் இல்லாதபட்சத்தில் நவீனக் கருவிகளைக் கொண்டு சிகிச்சை அளிக்கப்படும்.

இத்தகைய சிகிச்சைகளை, தனியார் மருத்துவமனைகளில் செய்யும்போது பல ஆயிரங்களில் இருந்து, சில லட்சங்கள் வரை செலவாகும்.

ஆனால், இங்கே உபகரணங்கள் பராமரிப்புக்கு என மிகக் குறைந்த அளவில் மட்டுமே கட்டணம் வசூலிக்கப்படுகிறது. தனியார் மருத்துவமனைகளைக் காட்டிலும் இது 10 மடங்கு குறைவுதான்.

'டையோடு லேசர்’ (diode laser) முறையைப் பயன்படுத்தி தளர்வாக உள்ள தோலை, இறுக்கமாக்குதல் (skin tightening), பெண்கள் முகத்தில் வளரும் தேவையற்ற ரோமங்களை நீக்குதல் போன்ற சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்தப் பிரத்யேக பெட்டிக்குள் நோயாளியை உட்காரவைத்து புறஊதா கதிர்வீச்சை செலுத்தி, தோலில் ஏற்படும் பிரச்னைகளை நீக்கும் சிகிச்சையும் அளிக்கப்படுகிறது. மேலும், மச்சங்கள், மருக்கள் போன்றவற்றை இரண்டே நிமிடங்களில் இருந்த தடம் தெரியாமல் நீக்கிவிடலாம்.

ஏழைக்கும் உண்டு காஸ்(ட்லி)மெடிக் சிகிச்சை!

கெமிக்கல் பீலிங்க் (chemical peeling) முறையில் தோல் மங்கு மறையவைத்தல், கிரையோ சர்ஜரி (cryo surgery) முறையில் நைட்ரஜன் திரவத்தைத் தெளித்து தோலை மிளிரவைத்தல் (skin lightening)

ஃபில்லர்ஸ் என்ற முறையில் உடலில் உள்ள தழும்புகளை மேடு செய்து தோலோடு சமமாக்கித் தழும்பை மறையவைக்கும் சிகிச்சை,  இளமையில் முதுமைத் தோற்றம் ஏற்படுவதைப் போக்கும் 'மீசோ தெரப்பி’ (meso theraphy), தோலில் ஏற்படும் சுருக்கங்களை நீக்கும் 'போடெக்ஸ்’ (botox) போன்ற சிகிச்சைகள் இங்கு அளிக்கப்படுகின்றன.

இன்றைக்கு அதிக அளவில் இளைஞர்களும், இளம்பெண்களும் ஆர்வக்கோளாறில், 'டாட்டூ’ (tattoo) எனப்படும் பலவண்ண அழகு பச்சை குத்திக்கொள்கின்றனர். இதை நீக்க அதிக அளவில் செலவாகும். டாட்டூஸ் அகற்றும் லேசர் சிகிச்சையும் இங்கு அளிக்கப்படுகிறது.

இவற்றையெல்லாம் தாண்டி மிகத் தீவிர தோல் நோயான வெண்படை நீக்குதலும் இங்கு மேற்கொள்ளப்படுகிறது. 'தோல் திசு வளர்ப்பு’ (culture medium) முறை மூலமும், 'லேசர்’ மற்றும் அறுவை சிகிச்சை மூலமும் தீர்வுகாணும் சிறப்பு உயர் வழிமுறைகளும் இங்கு பின்பற்றப்படுகின்றன.

ஏழைக்கும் உண்டு காஸ்(ட்லி)மெடிக் சிகிச்சை!

மிகச் சிறந்த, உயர் மருத்துவத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, அனைத்து அழகு சம்பந்தமான சிகிச்சைகளும் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் வழங்கப்படுகின்றன. மக்கள் நம்பிக்கையுடன் இந்தச் சேவையைப் பயன்படுத்திக்கொள்ளலாம்' என்கிறார். வாருங்கள் அழகாக!

 'அழகு’ சென்னை!

உலகின் உயர் மருத்துவச் சிகிச்சை கிடைக்கும் நகரங்களில் ஒன்று சென்னை. தனியார் மருத்துவமனைகளால் மட்டுமே கிடைத்து வந்த இந்த உயர்தர சேவை, சாதாரண மக்கள் நாடும் அரசு மருத்துவமனையால் வழங்கப்படுவது சென்னை நகருக்குக் கிடைத்த மற்றுமொரு சாதனை. இதைச் செய்த அரசுக்கும், ஸ்டான்லி மருத்துவமனைக்கும் வாழ்த்துகள்!

- ரெ.சு.வெங்கடேஷ்,   படங்கள்: க.பாலாஜி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு