Published:Updated:

வீட்டுக்கு ஒரு துளசி!

வீட்டுக்கு ஒரு துளசி!

##~##

''காற்றைச் சுத்தப்படுத்தி, சுவாசத்தைச் சீராக்கி, சளித் தொல்லையைப் போக்கும் துளசிச் செடியை வளர்த்து தினமும் நான்கு இலைகளைப் பறித்துச் சாப்பிட்டுப் பாருங்கள். அதன் பலன் நமக்குத் தெரிய ஆரம்பிக்கும்' என்கிறார் விஸ்வநாதன்.  ஆழ்வார்பேட்டையிலுள்ள, பரம்பரா மூலிகை விழிப்பு உணர்வு அறக்கட்டளையின் இயக்குநர்.  

''அடிப்படையில், நான் ஒரு விவசாயி. எங்கள் அறக்கட்டளை மூலம் மூலிகை, சுற்றுச்சூழல், விவசாயம் குறித்த விழிப்பு உணர்வை மக்களிடம் பரப்பி வருகிறோம். கிராமங்களில்  யாருக்காவது சளி பிடித்தால், வீட்டின் கொல்லைப்புறத்தில் இருக்கும் துளசியை மென்று தின்போம். குழந்தைகளுக்கு மூக்கு ஒழுகினால் துளசி இலையை நசுக்கி அந்தச் சாறைக் கொடுப்பார்கள். இப்படி, துளசி நம் அன்றாட வாழ்க்கைக்கு அவசியம் தேவை. ஆனால், இன்றோ, சளி, மூக்கடைப்பு என்றாலே மருந்துக்கடையில் போய் மாத்திரைகளை வாங்குகின்றனர். மாத்திரைகளைச் சாப்பிட்டு வயிற்றைப் புண்ணாக்கிக்கொண்டதுதான் மிச்சம். இப்படிச் செய்வதன் மூலம் சளியை நம் உடலுக்குள்ளேயே அடக்கிவைக்கிறார்களே தவிர, அதை வெளியேற்றுவது இல்லை. ஆனால், துளசிச் செடியை வீட்டில் வளர்த்து, தினமும் துளசி இலையை உண்டுவந்தால், சளித் தொந்தரவே இருக்காது.

வீட்டுக்கு ஒரு துளசி!
வீட்டுக்கு ஒரு துளசி!

துளசிச் செடியை வளர்க்க, ஒரு சதுர அடி இடம் போதும். ஒரு பூந்தொட்டியில்கூட துளசியை வளர்க்கலாம். இப்படிச் செய்தால், சுவாசப் பிரச்னை மட்டுமில்லாமல், நோய் நொடியையும் நெருங்கவிடாமல் செய்யலாம்'' என்கிற விஸ்வநாதன் துளசியின் இதர மருத்துவக் குணங்கள் பற்றியும் பேசினார், 'துளசி அதிக அளவு நோய் எதிர்ப்பு சக்தியைக் கொண்டது.  தினமும் இதைச் சாப்பிட்டுவந்தால் சளி, காய்ச்சல் வராது. துளசியில் உள்ள 'யூஜினால்’ என்ற வேதிப்பொருள் இருமலைக் குணப்படுத்தும். தொண்டைப் பகுதியில் உள்ள நோய்க் கிருமிகளை அழிக்கும். துளசிச் சாறை தோல் அரிப்பு, சொறி சிரங்கு உள்ளவர்கள் பூசி வந்தால் விரைவில் குணம் தெரியும். துளசி இலை மற்றும் அதன் குச்சிகளைக்கொண்டு புகை போட்டால், வீட்டில் கொசுக்கள் வராது. காற்றில் உள்ள கார்பன்-டை-ஆக்சைடை உள்ளிழுத்து, அதிக அளவு ஆக்சிஜன் மூலக்கூறுகளை வெளியிடுவதால், சுற்றி இருக்கும் காற்று மண்டலத்தைச் சுத்தமாக வைத்துக்கொள்ளும். அதனால்தான் மற்ற மூலிகைச் செடிகளைவிட, துளசிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறோம்'' என்கிறார்.  

ஒவ்வொருவரும் வளர்க்கலாமே!

- த.ஜெயகுமார் படங்கள்: ரா.மூகாம்பிகை

 மூலிகைக்கு முக்கியத்துவம்!

கூடுவாஞ்சேரி அருகில் காயரம்பேடு கிராமத்தில் 50 ஏக்கர் பரப்பளவு பரம்பரா பண்ணை முழுவதும் மூலிகை வாசம் வீசுகிறது. பல்வேறு தனியார் நிறுவனங்கள், பள்ளிக்கூடங்கள் மற்றும் விரும்பிக் கேட்பவர்களுக்கு மூலிகைச் செடிகளை விநியோகித்து வருகிறது இந்த அறக்கட்டளை.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு