பிரீமியம் ஸ்டோரி

கண் தானம் - வயது ஒரு தடையல்ல!

அக்கம் பக்கம்

பொதுவாக 40 வயதுக்கு மேற்பட்ட கொடையாளர்களிடமிருந்து பெறப்படும் கருவிழியைக்கொண்டு மட்டுமே 'கருவிழி மாற்று அறுவைசிகிச்சை’ செய்யப்படும். சில கருவிழி அறுவைசிகிச்சைகளில், இந்த நிலைக்கு மாற்றாக, 'துவா படிவம்’ என்ற கருவிழியின் கடைசிப் படிவத்தை மட்டும் மாற்றும் தொழில்நுட்பத்தை, சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனை கண்டறிந்துள்ளது. ''உலகத்திலேயே முதன்முறையாக 60 வயது முதியவர் ஒருவருக்கு, ஒரு வயதுக் கொடையாளரிடமிருந்து பெறப்பட்ட கருவிழியின் துவா லேயரை எடுத்து, 'ப்ரீ டிசமென்ட்ஸ் எண்டோதீனியல் கெரடோபிளாஸ்டி’ (பி.டி.ஈ.கே.) என்ற முறையில் அறுவைசிகிச்சை செய்து பார்வை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் முழுக் கருவிழியையும் மாற்ற வேண்டியது இல்லை. பெரிய பெரிய கருவிகள் பயன்படுத்தத் தேவை இல்லை. ஊசி மூலம் கருவிழியின் துவா லேயரைச் செலுத்தினாலே போதும். இந்தப் புதிய முறையால் எந்த வயதினரும் 'கண் தானம்’ செய்யலாம்'' என்கிறார் டாக்டர் அமர் அகர்வால்.

வெளுத்ததெல்லாம்  கறுப்பு!

அக்கம் பக்கம்

வெள்ளைத் தலைமுடியைக் கறுப்பாக்கும் புதிய மருந்தைக் கண்டுபிடித்திருப்பதாக அறிவித்திருக்கிறது லண்டன் பிராட்ஃபோர்ட் பல்கலைக்கழக 'கரின் ஸ்கல்ரூய்டர்’ தலைமையிலான மருத்துவ ஆய்வாளர் குழு. ஹைட்ரஜன் பெராக்ஸைடு என்ற வேதிப்பொருள் மனிதர்களின் முடியில் கொஞ்சம் கொஞ்சமாகப் படிவதனால், முடி தனது இயற்கை வண்ணத்தை இழந்து வெள்ளையாக மாறுகிறது. இந்த நடைமுறையை மருத்துவ ஆய்வாளர்கள் 'ஆக்ஸிடேட்டிவ் ஸ்ட்ரெஸ்’ என்று அழைக்கிறார்கள். இந்த ஹைட்ரஜன் பெராக்ஸைடை முடிகளில் இருந்து நீக்குவதன் மூலம், முடியின் இயற்கை நிறத்தை மீண்டும் அளிக்க முடியும் என்று கருதி, அந்த வேதிப்பொருளை நீக்கும் மருந்தை உருவாக்கி இருக்கின்றனர். அதைப் பரிசோதனை முயற்சியாக சிலரிடம் கொடுத்துப் பயன்படுத்திய பிறகு அவர்களின் தலைமுடி பழைய நிறத்துக்கு மாறியதாகக் கூறுகின்றனர்.

முதியோர் மனநோயில் முன்னணியில் இந்தியா

வரும் 2020-ஆம் ஆண்டில், வயதானவர்களில் மனநிலை பாதிக்கப்பட்டவர்களை அதிகம்கொண்ட நாடுகளில் முதல் ஐந்து இடங்களில் இந்தியா மற்றும் சீனா இருக்கும் என்று தெரியவந்துள்ளது. வயதாவதால் மட்டுமே மனநிலை பாதிப்பு ஏற்படுவது இல்லை. பல நோய்களாலும் மனநிலை பாதிக்கப்படும்.  உலக அளவில் இப்போது 2 கோடியே 40 லட்சம் பேர் மனநிலை பாதிப்புக்குள்ளாகி இருப்பதாகத் தகவல். வளர்ந்த நாடுகளில், இந்த நோய்க்கு முக்கியக் கவனம் அளிக்கப்படுகிறது. இந்தியாவைப் பொறுத்தவரை கூட்டுக்குடும்பங்கள் இருந்த நிலை மாறி, கணவன்- மனைவி, குழந்தைகள் என்ற மைக்ரோ அளவிலான சிறிய குடும்பங்கள் பெருகிவருகின்றன. இதன் காரணமாக வயதானவர்களுக்கு மனரீதியில் பாதிப்பு ஏற்படுவது அதிகரிக்கக்கூடும் என்று தெரியவந்துள்ளது. மனநிலை பாதிப்புக்குள்ளானவர்களுக்கு சிகிச்சையுடன் சமூக ரீதியிலான ஆதரவும் அளிக்க வேண்டியது அவசியம்.

அக்கம் பக்கம்

ரத்த அழுத்தம் குறைக்கும் தர்ப்பூசணி!

மாரடைப்பு, ஸ்ட்ரோக் போன்ற நோய்களுக்கு முதல் காரணமாக விளங்கும் உயர் ரத்த அழுத்தத்தை, தர்ப்பூசணிப்பழம் குறைக்கிறது என்று ஃபுளோரிடா மாகாண உணவு ஆராய்ச்சி விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். உயர் ரத்த அழுத்தம் ஏற்படுவதற்கான முந்தைய நிலைமையில் இருப்பவர் முதல் முழுமையாக உயர் ரத்த அழுத்தம் இருப்பவர் வரையில் இந்த  சிகிச்சை  பயனளிப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். ''தர்ப்பூசணியில் 'லிஸிட்ருலைன்’ என்ற அமினோ அமிலம் உள்ளது. இது ஆரோக்கியமான ரத்த அழுத்தத்தைப் பராமரிக்கிறது. இந்த அமினோ அமிலம், வேறொரு வேதிப்பொருளாக (லிஆர்ஜினைன்) மாற்றமடைந்து ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துகிறது'' என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். ஆனால் இந்த 'லிஆர்ஜினைனை’ நேரடியாக உட்கொண்டால் வாந்தி ஏற்படுவது உறுதி. மேலும் குடல் பிரச்னைகளும், சில வேளைகளில் வயிற்றுப்போக்கும் ஏற்படும். வயதானவர்கள், நீண்ட நாளைய உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் என்று அனைவருக்கும் தர்ப்பூசணி சிகிச்சை பயனளிப்பதாக இந்த ஆய்வு நிரூபித்துள்ளது.

##~##
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு