Published:Updated:

அக்கம் பக்கம்

அக்கம் பக்கம்

அக்கம் பக்கம்

அக்கம் பக்கம்

Published:Updated:
அக்கம் பக்கம்

பிற்கால நோய்களுக்கு தாய்ப்பாலில் மருந்து!

##~##

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

'தாய்ப்பாலில் உள்ள மூல செல்களுக்கு, மறதி வியாதி முதல், புற்றுநோய் வரை குணப்படுத்தும் ஆற்றல் உண்டு’ என்று ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். மூல செல்களுக்கு உடலில் உள்ள எந்த செல்லாகவும் மாறும் ஆற்றல் உண்டு. புற்றுநோய், சர்க்கரைநோய், பார்வைக்குறைபாடு, பக்கவாதம் போன்ற நோய்களைக் குணப்படுத்தும் ஆற்றல் இந்த செல்களுக்கு உண்டு. மூலசெல் மருத்துவத்தில் தாய்ப்பால் புதிய ஆராய்ச்சி வாய்ப்புகளைத் திறந்துவிட்டுள்ளது என்கிறார் மேற்கு ஆஸ்திரேலிய பல்கலைக்கழகப் பேராசிரியர் ஹசியோடோவ். தாய்ப்பாலில் உள்ள மூல செல்கள் பன்முகப் பயன்பாட்டுத்தன்மை மிக்கவை என்று நிரூபிக்க, நிறைய ஆதாரங்கள் தேவைப்படுகின்றன. அவற்றுக்குப் பன்முகப் பயன்பாட்டுத்தன்மை இல்லை என்றாலும் தாய்மார்கள் தங்கள் தாய்ப்பாலில் உள்ள மூல செல்களைச் சேர்த்துவைத்து, பிற்காலங்களில் வரும் நீரிழிவு போன்ற நோய்களைக் குணமாக்கப் பயன்படுத்திக்கொள்ளலாம் என்கிறார் நியு கேசில் பல்கலைக்கழக விஞ்ஞானி லைல் ஆம்ஸ்ட்ராங்.

நல்ல தூக்கம் கொழுப்பைக் குறைக்கும்!

தினமும் குறித்த நேரத்தில், தூங்கி எழும் பெண்களுக்கு உடல் கொழுப்பு குறைவாக உள்ளது என்று புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது. ப்ரிகம் யங் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த‌ உடற்பயிற்சிப் பேராசிரியர் புரூஸ் பெய்லி 300-க்கும் மேற்பட்ட பெண்களை ஆய்வுசெய்தார். முதலில் 17 வயது முதல் 26 வயதுப் பெண்களின் உடல் அமைப்புகள் சோதிக்கப்பட்டன. பகல் மற்றும் இரவில் அவர்களின் உடல் மாற்றங்கள் நுட்பமாக சோதிக்கப்பட்டன.

அக்கம் பக்கம்

'உறங்கும் பழக்கம் சரியாக இருக்கும் பெண்களின் உடல் எடை சரியாக இருக்கிறது. தினமும் ஆறரை மணி நேரத்துக்குக் குறைவான உறக்கமோ, எட்டரை மணி நேரத்துக்கு அதிகமான தூக்கமோ, உடல் கொழுப்பை அதிகரிக்கச்செய்துவிடுகிறது. சரியான கால அளவு உறக்கம் எல்லா வகை உடல் அமைப்பைக்கொண்டவர்களுக்கும் அவசியம் என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. மேலும், தொடர்ச்சியாக நன்றாகத் தூங்கியவர்களின் உடல் எடை அப்படியே இருக்க, சரியாகத் தூங்காதவர்களின் உடல் எடைகளில் மாறுபாடும் தேவைக்கு அதிகமான‌ கொழுப்பும் இருந்தது. சரியான தூக்கம் இல்லையென்றால் ஹார்மோன் சுரப்புகள், சரிவர இயங்குவது இல்லை என்பதையும் கண்டறிந்துள்ளனர்.

புற்றுநோயைத் தடுக்கும் ஆஸ்பிரின்!

அக்கம் பக்கம்

கல்லீரல் பாதிப்பால் ஏற்படும் மரணத்தையும் ஆஸ்பிரின் மாத்திரைகள் தடுப்பதாக அமெரிக்காவில் நடந்த ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. ஏ.ஏ.ஆர்.பி. டயட் மற்றும் ஹெல்த் ஆய்வில் 50 வயது முதல் 71 வயது வரையிலான மூன்று லட்சம் நபர்களிடம் ஆராய்ச்சியை மேற்கொண்டது. ஆஸ்பிரின் எடுத்துக்கொண்டவர்களுக்கு, 'கல்லீரல் புற்றுநோய்’ ஏற்படுவதற்கான அறிகுறிகள் தென்படவில்லை. மேலும் ஆஸ்பிரின் எடுத்துக்கொண்ட கல்லீரல் நோய் உள்ளவர்கள், ஆஸ்பிரின் மாத்திரைகளால் மரணத்தை இதுவரை வென்றுவந்துள்ளனர் என்றும் இந்த ஆய்வு தெரிவித்துள்ளது. தேசிய கேன்சர் இன்ஸ்டிட்யூட் ஆய்வாளர்களை மேற்கோள்காட்டி, இந்தச் செய்தியை பி.பி.சி. வெளியிட்டுள்ளது. மேலும், ஆஸ்பிரினைத் தொடர்ந்து நீண்ட நாட்கள் எடுத்துவருபவர்களுக்கு எந்தவிதமான கேன்சர் வருவதற்கும் வாய்ப்பு குறைவாக இருப்பதாக பர்மிங்ஹாம் அலபாமா பல்கலைக்கழக புற்றுநோய் நிபுணர் போரிஸ் தெரிவித்துள்ளார். ஆஸ்பிரினின் புற்றுநோய் தடுப்பு சக்தியைக் குறித்து நிறைய ஆய்வுகள் நடைபெற்றுக்கொண்டே இருக்கின்றன.

ஆயுளும்... ஆய்வும்!

அக்கம் பக்கம்

ரத்தப் பரிசோதனையின் மூலம் நாம் எவ்வளவு ஆண்டு உயிரோடு இருப்போம் என்பதைத் தீர்மானிக்கும் 'சர்ச்சைக்குரிய’ புதிய பரிசோதனையை லண்டனைச் சேர்ந்த ஆய்வாளர்கள் செய்துள்ளனர். ''எவ்வளவு வேகத்தில் நம் உடல் உறுப்புகள் முதுமையடைகின்றன என்பதை குரோமோசோம்களின் முடிவில் உள்ள, 'டெலோமியர்ஸ்’ (Telomeres) என்ற நுண் அமைப்புகளின் நீளத்தைக் கணக்கிடுவதன் மூலம் ஆயுளைக் கணித்துவிட முடியும்'' என்கின்றனர். அதாவது ரத்த செல்கள் பிரியும்போது, குரோமோசோம்களைச் சிதையாமல் பாதுகாக்கும் டெலோமியர்ஸின் நீளத்தைக் கணக்கிட்டு இந்தப் பரிசோதனை செய்யப்படுகிறது. ஏற்கெனவே நூற்றுக்கணக்கான பிரிட்டன்வாசிகள், இந்தப் பரிசோதனையைச் செய்துள்ளதாக 'தி இன்டிபெண்டன்ட்’ கூறியுள்ளது. ''காப்பீட்டு நிறுவனங்களின் வசதிக்கேற்ப இந்தப் புதிய பரிசோதனை அநேகமாக வாழ்வின் இன்றியமையாத டெஸ்ட் ஆகிவிடும்'' என்கிறார் ஆய்வை நடத்திய நிறுவனத்தின் தலைமைச்செயல் அதிகாரியான ஸ்டீபன் மாட்லின். ஆனால், இந்த ஆய்வினால் பயன் எதுவும் இல்லை என்று நோபல் பரிசு பெற்ற ஆய்வாளர் ஒருவர் கூறியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

கட்டுக்குள் வரும் எய்ட்ஸ்

அக்கம் பக்கம்

'கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவில் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்படுபவர் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளது’ என தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பின் சமீபத்திய அறிக்கை கூறுகிறது. ஒவ்வோர் ஆண்டும் புதிதாக இந்த நோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை கடந்த 2000-ம் ஆண்டு, 274 மில்லியனிலிருந்து 2011-ம் ஆண்டில் 116 மில்லியனாகக் குறைந்துள்ளது. இது 50 சதவிகிதம் குறைவாகும். தவறான உடலுறவால் எய்ட்ஸ் நோய் பாதிப்புக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 40 சதவிகிதமாகக் குறைந்துள்ளது. ஆனால், ஒரே ஊசியை, பலர் பயன்படுத்தி, போதைப்பொருள் உட்கொள்வதால் பரவும் எய்ட்ஸ் நோயின் எண்ணிக்கை மொத்த மக்கள் தொகையில் 7.17 சதவிகிதம் உயர்ந்திருக்கிறதாம். ஊசிகளைப் பயன்படுத்துவதால் ஏற்படும் எய்ட்ஸ் பரவலைப் பற்றிய விழிப்புஉணர்வு இல்லாததால்தான், இந்த நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அதில் பெரும்பாலும் கிராமப்புறங்களைச் சேர்ந்தவர்களே இருக்கிறார்கள் என்கிறது அந்த அறிக்கை.

அக்கம் பக்கம்

படையலிட்ட பாரம்பரிய உணவு!

பாரம்பரிய உணவுமுறைகளைப் பற்றிய விழிப்புஉணர்வு முகாம் சென்னையில் நடந்தது. அதில், பேசிய சித்த மருத்துவர் திருநாராயணன், 'நமது மூதாதையர்கள், காலத்தையும் நாம் இருக்கும் இடத்தையும் பொருத்தே நமது உணவுமுறையை வகுத்தனர். அதுவே நமக்கு உகந்ததாகும். சூரிய உதயமானது முதல் நான்கு மணி நேரத்தில் எளிதில் ஜீரணிக்கக்கூடிய உணவுகளை உட்கொள்ள வேண்டும். காலை 10 மணி முதல் பிற்பகல் இரண்டு மணி வரை சமமான சத்துக்களோடு சற்று அதிக உணவை உட்கொள்ள வேண்டும். பிற்பகல் இரண்டு மணி முதல் மாலை ஆறு மணி வரை மிகக் குறைந்த, எளிதில் செரிமானமாகக்கூடிய உணவுகளை உட்கொள்ள வேண்டும். பெரும்பாலும் நம் உணவில் சிறுதானியங்களைச் சேர்த்துக்கொள்ள வேண்டும். அவையே நம் மண்ணுக்கான பாரம்பரிய உணவு. பசிக்கும் நேரத்தில் மட்டுமே சாப்பிட வேண்டும். இனிப்பு வகைகளை உணவுக்கு முன் சாப்பிடுவது நல்லது. பின்னால் சாப்பிட்டால், ஜீரணக் கோளாறு ஏற்படும். தற்போது மனிதரின் சராசரி வாழ்நாள் 68 ஆண்டுகள். ஆனால் பாரம்பரிய உணவுப்பழக்கத்தைப் பின்பற்றி வந்தால், மனிதர்கள் சுமார் 100 ஆண்டுகள் ஆரோக்கியமாக வாழலாம்' என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism