Published:Updated:

துரத்திய கேன்சர்... விரட்டிய வலிமை!

புற்றுநோயை வென்ற நம்பிக்கை நாயகி!

##~##

ஞ்சாபிக்கே உரிய பளிங்கு நிறம். கண்களில் தேங்கியிருக்கும் கனிவு, எப்போதும் முகத்தில் பூத்திருக்கும் சந்தோஷச் சாரல். இவற்றின் மொத்த உருவம்தான் நீர்ஜா மாலிக். இவர், சென்னை அப்பல்லோ ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைக்குவரும் புற்றுநோயாளிகளுக்கு, முக்கியமாக கீமோதெரப்பி பெறுபவர்களுக்கு ஆலோசனை வழங்கும் கவுன்சலர். கீமோதெரப்பிக்கு வரும் நோயாளிகள், இவரைச் சந்தித்த பிறகுதான் டாக்டரையே பார்க்கிறார்கள்.

சிரிப்பையே சுவாசிக்கும் இந்த 60 வயது நீர்ஜாவும், புற்றுநோயின் பிடியில் சிக்கி மீண்டுவந்தவர்தான் என்பது வியக்கவைக்கிறது. இரண்டு முறை மார்பகப் புற்றுநோய் பாதித்து அறுவைசிகிச்சை, கீமோ, கதிர்வீச்சு என்று தொடர் சிகிச்சைக்குப் பிறகு, மீண்டுவந்திருக்கும் இவருடைய மனவலிமை, அனைவருக்குமே ஒரு பாடம்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

'கேன்சர் சப்போர்ட் குரூப்’ என்று பெயர்ப்பலகை தாங்கிய மேஜையின் பின் கம்பீரமாக அமர்ந்திருக்கிறார் நீர்ஜா. ''என் சொந்த ஊர் மும்பை. கணவர் மந்தீப். தோல் தொழில் காரணமாக சென்னைக்கு வந்தோம். 1978-ல் கல்யாணம். பல முறை வயிற்றில் கரு தங்காமல் போய், தவமாய் தவமிருந்து எனக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்தாங்க. ஷிவானி, சித்தார்த் ரெண்டு பேருக்கும் இப்ப 22 வயசு. படிச்சிட்டிருக்காங்க.

துரத்திய கேன்சர்... விரட்டிய வலிமை!

கர்ப்பப்பையில் பிரச்னை இருந்ததால், குழந்தைங்க பிறந்த ஐந்து ஆண்டுகளில் என் கர்ப்பப்பையை எடுக்கவேண்டியதாச்சு. சரியா ரெண்டு வருஷம் கழிச்சு, என் இடது அக்குள் பக்கத்துல சின்னதா, பட்டாணி அளவுக்கு ஒரு கட்டி வந்தது. பத்தே நாள்ல, அது எலுமிச்சம் பழம் அளவுக்கு பெரிசாச்சு. வலியும் இருக்கவே பயந்துட்டேன். உடனே மருத்துவமனைக்குப் போனோம். மேமோகிராம் தொடங்கி எல்லாப் பரிசோதனைகளையும் செஞ்சு, 'மார்பகப் புற்றுநோய்’னு சொன்னாங்க. ஏழு வயசுக் குழந்தைகளை விட்டுட்டு, சிகிச்சைக்கு மும்பை போனேன். அறுவைசிகிச்சை, மூணு கீமோதெரப்பி, மூணு கதிர்வீச்சு தெரப்பினு எல்லாம் அடுத்தடுத்து நடந்தது. எனக்குக் கட்டி இருந்த இடத்திலிருந்து, 21 சின்னச் சின்னக் கட்டிகளை எடுத்தாங்க. அதுல ஒன்பது, புற்றுநோய்க் கட்டிகள்!

துரத்திய கேன்சர்... விரட்டிய வலிமை!

எங்க பரம்பரையில் என் தாத்தா, பாட்டி, ரெண்டு அத்தைகள், அப்பா, சித்தி, கசின்ஸ்னு மூணு தலைமுறையா புற்றுநோய் ஒரு தொடர்கதையா இருக்கு. இதுவரைக்கும் 80 உறவினர்கள் பாதிக்கப்பட்டிருக்காங்க. இறந்தும் போயிருக்காங்க!'' என்று அதிர்ச்சித் தகவல் தந்து, சில நொடிகள் நம்மை உறையவைத்தார்.

''அஞ்சு மாசம் கழிச்சு, சென்னைக்கு வந்தேன். கீமோதெரப்பியை, கடவுள் என்னைக் குணப்படுத்துவதற்காக அனுப்பிய ஒரு நல்ல விஷயமாக நினைச்சு, ஒவ்வொருமுறை சிகிச்சைக்குப் போகும்போதும், நான் கீமோகிட்ட பேசுவேன். 'கீமோவே... என் உடலுக்குள்ளே போய், புற்றுநோய் செல்கள் இருந்தால், அதை மட்டும் அழிச்சிடு. நல்ல செல்களை விட்டுடு!’ என்று மானசீகமாகச் சொல்வேன். ஏன்னா, 'கீமோ’ சிகிச்சையில் கொடுக்கப்படும் வீரியமிக்க மருந்துக்கு, நல்ல செல் எது, கெட்ட செல் எதுன்னு பிரிச்சுப் பார்க்கத் தெரியாது. எல்லாத்தையும் சகட்டுமேனிக்கு அழிச்சிடும். நோய் எதிர்ப்பு சக்தி குறைஞ்சுபோய், உடல் மெலிஞ்சு, முடிகொட்டி, பலவீனமான தோற்றம் வர்றதுக்குக் காரணம் இதுதான்!  

கடவுள் மீதான நம்பிக்கையோடு என் பெற்றோர், கணவர், நண்பர்கள் எனக்குத் தந்த ஆறுதலான வார்த்தைகளும் தைரியமும்தான் எனக்குப் பக்கபலம்'' என்றவர், புற்றுநோய் கவுன்சலிங் கொடுப்பதற்கான வாய்ப்பு வந்ததைச் சொன்னார்.

''சில வருஷங்களுக்கு முன், தன் நண்பர் ஒருத்தர், புற்றுநோய் சிகிச்சைக்காக அப்பல்லோ வந்திருப்பதாகச் சொல்லி என்னை உடனே வரச்சொன்னார், என் சித்தப்பா. ஆஸ்பத்திரிக்கு நான் போனபோது, கீமோதெரப்பி பயத்தில் அந்த நண்பரின் முகம் வெளிறி இருந்தது. நான் அவரிடம், எனக்கு ஏற்பட்ட அனுபவத்தையும், சிகிச்சைகளையும் சொன்னேன். அவர் உடனே, இயல்புநிலைக்கு வந்து தெம்பா பேச ஆரம்பிச்சிட்டார். அங்கிருந்த நர்ஸ், ஃப்ளோர் அட்மினிஸ்ட்ரேட்டர் எல்லாரும் இதைக் கவனிச்சிட்டிருந்தாங்க. அதுக்கப்புறம் இந்த மாதிரி நோயாளிகள் ரொம்ப 'பீதி’ அடையுறப்போ என்னைக் கூப்பிட ஆரம்பிச்சாங்க. இப்படியே ஆரம்பிச்சதுதான் என் கவுன்சலிங்' என்று சொல்லும் நீர்ஜா, இதுவரை சந்தித்திருக்கும் நோயாளிகளின் எண்ணிக்கை ஆயிரத்துக்கும் மேல்.

மருத்துவமனை நிர்வாகத்திடம் பேசி, புற்றுநோயிலிருந்து மீண்ட 20 நபர்களைச் சேர்த்துக்கொண்டு, 'கேன்சர் சப்போர்ட்டிவ் குரூப்’ ஒன்றை ஆரம்பித்திருக்கிறார் நீர்ஜா.

''விதியோட விளையாட்டைப் பாருங்க. திரும்பவும் என் வலது மார்பகத்தில் வலி... இன்னொரு கட்டி. மீண்டும் மும்பையில் கீமோ, ரேடியேஷன் சிகிச்சை. இந்த முறை 38 கட்டிகள். சிகிச்சை முடிஞ்சு வந்த நான், எனக்காகக் காத்திருந்த கீமோ பேஷன்ட்களைப் பார்க்க, நேரா மருத்துவமனைக்குத்தான் போனேன்.

திரும்பத் திரும்ப, கதிரியக்க சிகிச்சையினால், என் விலா எலும்பு நொறுங்கிப்போற மாதிரி மெலிஞ்சு ரொம்பவே பலவீனமாக இருந்தேன். அந்த நேரம் பார்த்து பாத்ரூமில் விழப்போக, என் விலா எலும்பில் பலமா அடி. எலும்புகள் உடைஞ்சிடுச்சு. ஆபரேஷன் எதுவும் செய்ய முடியாது, அதுவாகவே சேர்ந்துடும்னு சொன்னதால, அப்படியே விட்டுட்டேன். அதனால, உடற்பயிற்சி செய்ய முடியாமல்  எடை கூடி,  இப்ப 120 கிலோ இருக்கேன். ஆனாலும் முழங்கால் வலியோ, முதுகுவலியோ எனக்கு வந்தது இல்லை. முழுக்கமுழுக்க என்னைச் சுற்றி பாசிட்டிவ் எண்ணங்களால் வலைபின்னியிருக்கிறதால், நோ பெயின் அண்ட் நோ ஸ்ட்ரெஸ். ஒன்லி ஸ்மைலிங்!'' -  கன்னம் குழிய... கண் சிமிட்டிச் சிரிக்கும் நீர்ஜா, வலிகளை வெல்லும் வழிகள் சொல்லும் நம்பிக்கை நாயகி!

- பிரேமா நாராயணன்

படங்கள்: ரா.மூகாம்பிகை

 'கீமோ ஏஞ்சல்’

கீமோதெரப்பியை செல்லமாக ’கீமோ ஏஞ்சல்’ என்று அழைக்கிறார் நீர்ஜா. வீரியமிக்க மருந்துகளை நரம்பு மூலம் ரத்தத்தில் செலுத்தும் இச் சிகிச்சையின்போது, உடலின் நீர்ச் சத்து மிகவும் குறைந்துவிடும் என்பதால், முதலில் உடலுக்குள் சலைன் ஏற்றப்படும். வாந்தி, மற்ற பக்கவிளைவுகளைத் தடுக்க மருந்துகளும் போடப்படும். கீமோவுக்குப் பிறகும், உடலில் இருக்கும் நச்சுக்களை வெளியேற்ற மீண்டும் சலைனும் மருந்துகளும் ஏற்றப்படும்.

எப்போதும் அணுகலாம்!

புற்றுநோய் பாதித்தவர்கள், கீமோதெரப்பி குறித்த பீதியில் இருப்பவர்களுக்கு இவரது அன்பான, ஆறுதலான வார்த்தைகளே எதையும் தைரியமாக எதிர்கொள்ளும் பக்குவத்தைத் தருகிறது. இதற்கு கவுன்சிலிங் பெற விரும்புபவர்கள் 99419 93333 என்ற எண்ணுக்கு எந்த நேரத்தில் பேசினாலும், முகம் சுளிக்காது ஆலோசனை சொல்கிறார் நீர்ஜா. 'கவுன்சலிங் கொடுப்பதே எனக்குக் கடவுள் கொடுத்த வரம்’ என்கிறார்.