Published:Updated:

அக்கம் பக்கம்

அக்கம் பக்கம்

அக்கம் பக்கம்

வெயிலோடு விளையாடு!

சென்னை நகரப் பெண்களுக்கு, வைட்டமின் டி அளவு மிகவும் குறைவாக உள்ளதாக சமீபத்திய ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது. கடந்த 2012 ஜனவரி முதல், 2013 நவம்பர் வரையில் சென்னையில் 32,601 பெண்களிடம் வைட்டமின் டி அளவு பரிசோதிக்கப்பட்டது. இதில் 17,938 பெண்களுக்கு, வைட்டமின் டி குறைபாடு இருப்பது தெரியவந்துள்ளது. பெரும்பாலானவர்கள், 30 வயதைக் கடந்த பெண்கள் என்கிறார் 'லிஸ்டர் மெட்ரோபோலிஸ்’ மருத்துவப் பரிசோதனை நிறுவனத்தின் தமிழ்நாடு மற்றும் இலங்கைக்கான துணைத் தலைவர் அனிதா சூர்யநாராயணன். வைட்டமின் டி-யை சூரிய ஒளியில் இருந்து நம் சருமமே உற்பத்தி செய்துகொள்கிறது. எல்லாப் பருவத்திலும் வெப்பமான சூழ்நிலை உள்ள தமிழ்நாட்டில் வைட்டமின் டி குறைபாடு பெரும்பான்மையாக இருப்பது, வேதனை தரும் விஷயம்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
அக்கம் பக்கம்

உயிருக்கு 'உத்தர(வு)வாதம்’!

விபத்துகளில் சிக்குபவர்களை, போலீஸ் விசாரணைக்குப் பயந்தே பல மருத்துவமனைகள் அட்மிட் செய்வது இல்லை. இதேபோல, ஆசிட் வீச்சு, பாலியல் பலாத்காரத்தின்போதும் பாதிக்கப்பட்டவர்களை, மருத்துவமனைகள் அனுமதிக்கத் தயங்குகின்றன. இப்போது இந்தப் பிரச்னைக்கு முற்றுப்புள்ளிவைக்கத் தொடங்கிவிட்டது அரசு. பாலியல் பலாத்காரம், ஆசிட் வீச்சுக்கு ஆளாகி மருத்துவமனைக்குக் கொண்டுவரப்படுபவர்களை, உடனடியாக மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதித்து, அவர்களுக்கு இலவச சிகிச்சை அளிக்க வேண்டும் என்று டெல்லி மாநிலத்தில் உள்ள எல்லா மருத்துவமனைகளுக்கும் உத்தரவு அனுப்பப்பட்டுள்ளது. இதன் மூலம் இதுபோன்ற தாக்குதலுக்கு ஆளான எந்த ஒரு நோயாளியையும் மருத்துவமனை நிர்வாகம் புறக்கணிக்க முடியாது. இதுபோன்ற உத்தரவை, நாடு முழுவதும் அமல்படுத்துவதன் மூலம், மதிப்புமிக்க உயிர்கள் காப்பாற்றப்படும்.

அக்கம் பக்கம்

அதிகம் டெக்ஸ்ட் செய்தால் ஆபத்து!

##~##

ஆஸ்திரேலியாவின் சிட்னி பல்கலைக்கழகம் ஒரு வித்தியாசமான ஆய்வை நடத்தியுள்ளது. அதாவது, மொபைல் போனில் 'டெக்ஸ்டிங்’ பழக்கத்தால் ஏற்படும் பாதிப்புகளைக் கூறும் இந்த ஆய்வு, இளைஞர்களைக்கொண்டு நடத்தப்பட்டது. நடக்கும்போதும், அமரும்போதும், சாப்பிடும்போதும் டெக்ஸ்டிங் செய்யும் இளைஞர்களுக்கு மனஉளைச்சல் ஏற்படுத்துவதுடன் எலும்பின் வலிமை குறைந்து, நரம்புத் தளர்ச்சியும் ஏற்படுகிறது. ஸ்மார்ட் போன் அதிகரித்துள்ள இந்தக் காலகட்டத்தில், அதிகமாக டெக்ஸ்ட் பண்ணுபவர்கள், 'ரோபோக்கள்’ என்று இந்த ஆய்வுக்குத் தலைமை தாங்கிய ஸ்காபரன் கூறினார்.

கண் அசைவில்... கணிக்கலாம்!

அமெரிக்காவின் ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் ஒரு புதுமையான ஆய்வை நடத்தியுள்ளது. பொறுமையாக இருப்பவர்களின் பார்வையின் வேகமும் தெளிவும் அதிகமாக இருக்கும் என்பதே இந்த ஆய்வின் முடிவு. நம் கண் அசைவுக்கேற்ப மன அமைதியும், முடிவுகள் எடுக்கும் திறமையும் அமையும். ஒருவரது கண்ணின் அசைவைவைத்தே அவரது குணாதிசயத்தையும், பண்பையும் கண்டுபிடித்துவிடலாம். இந்த ஆய்வுக்குத் தலைமை தாங்கிய ரிசா ஷாட்மேர், 'இந்த ஆய்வுக்காகப் பல நபர்களின் கண் அசைவுகளைச் சேகரித்தோம். ஒவ்வொருவரின் கண் அசைவும் அதனைப் புரிந்துகொள்ளும் திறனும் மிகவும் வேறுபட்டு இருந்தது. பதின்பருவ இளைஞர்களின் கண் அசைவு, மிகத் தெளிவாகவும் பல நுணுக்கங்களைத் தெரிந்துகொள்ளும் திறனுடனும் அமைந்திருந்தது'' என்கிறார்.

இரண்டுக்கு மேல் வேண்டாம்!

காலை எழுந்ததும் காபி குடிக்கும் பழக்கம் நம்மிடையே நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. தினசரி 1.6 பில்லியன் காபிகள் பருகப்படுகின்றன. ஆனால், காபியில் உள்ள 'காஃபின்’ (caffeine) மிகவும் கொடியது. சராசரியாக 300 மில்லி கிராம் காபி, நம் உடலில் தங்குவதாக அமெரிக்க அரசின் உணவுப் பிரிவு ஓர் அறிக்கையை அளித்துள்ளது. காபியில் உள்ள 'காஃபின்’ 15 நிமிடத்தில் உடம்பின் அலுப்பைப் போக்கிப் புத்துணர்ச்சி தரும் ஆற்றலை உடையது. இந்தப் புத்துணர்ச்சி, ஆறு மணி நேரும் வரை நீடிக்கும். ஆனால், தினசரி இரண்டு கப்புக்கு மேல் காபி குடித்தால், அது மூளை, இதயம் மற்றும் வயிற்றைப் பாதிப்பதுடன் பெண்களுக்கு, பிரசவ காலப் பிரச்னைகளையும் தருகிறது என்று எச்சரிக்கை செய்கின்றன சர்வதேச காபி குழுமம் நடத்திய ஆய்வு முடிவுகள்.

ஸ்மார்ட் போன் மாடலில் ஸ்டெதஸ்கோப்!  

டாக்டர் என்றாலே அனைவருக்கும், அவர் கழுத்தில் மாட்டிய ஸ்டெதஸ்கோப்தான் ஞாபகத்துக்கு வரும். 'இந்த ஸ்டெதஸ்கோப் விரைவில் அழிந்துவிடும்’ என்கிறார்கள் இந்தத் தலைமுறை டாக்டர்கள். இந்த ஸ்டெதஸ்கோப்புக்கு மாற்றாக, ஸ்மார்ட் போன் போலத் தோற்றமளிக்கும் புதிய கருவி வலம்வரத் தொடங்கிவிட்டது. அல்ட்ரா சவுண்டு முறையைப் பயன்படுத்தி இதயத் துடிப்பை அளக்கும், இந்தக் கருவியின் விலை லட்சங்களில்! மிகத் துல்லியமாகக் கணிக்கக்கூடிய ஆற்றலைக் கொண்ட இதில், தவறு ஏற்பட வாய்ப்புகள் மிகக் குறைவு. இந்தக் கருவி மருத்துவ உலகத்தில் பெரும் மாற்றத்தை உண்டாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.