Published:Updated:

காக்க...காக்க..!

முதல் உதவி இதுதான்

காக்க...காக்க..!
##~##

''அம்மா... விளையாடுறப்ப விழுந்துட்டேன்... முட்டியில ரத்தம் வருது!'' என்று உங்கள் செல்லக் குழந்தை ஓடிவரும்போது, ''சொன்னாக் கேட்டாத்தானே... எங்கே அந்த டெட்டால் பாட்டிலை எடு... இங்கே கத்தரி இருந்துச்சே... யார் எடுத்தது? பிளாஸ்டர் தீர்ந்துபோச்சா... அடடா!'' என்று அம்மாக்கள் டென்ஷனாகும் காட்சிதான் பல வீடுகளில் அரங்கேறும். குழந்தைகள் இருக்கும் வீடோ, பெரியவர்கள் இருக்கும் வீடோ... பொதுவாக எல்லோர் வீடுகளிலும் இருக்க வேண்டிய முக்கியமான விஷயம் - முதல் உதவிப் பெட்டி.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

முதல் உதவி என்பது, சின்னக் காயம் பட்டவர்களுக்கு மருந்து போடுவதில் தொடங்கி, பெரிய விபத்தில் சிக்கியவர்களுக்கு உயிர் காப்பது வரை மிக உன்னதமான விஷயம். ஆரோக்கியத்தில் அக்கறை இருக்கும் ஒவ்வொரு மனிதரும் தெரிந்துகொள்ள வேண்டிய, செய்ய வேண்டிய சிறந்த உதவி, முதல் உதவி!

சிறு காயம் முதல் விபத்து வரை அனைத்துப் பாதிப்புகளுக்கும் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்வதற்கு முன், 'முதலில் என்ன செய்ய வேண்டும்?’ என்பது மிக முக்கியம். 'என்ன செய்ய வேண்டும்’ என்பதைவிட, சில சூழ்நிலைகளில் என்ன செய்யக் கூடாது என்பதையும் முக்கியமாகத் தெரிந்துகொள்ள வேண்டும். அதற்கான வழிகாட்டலை டாக்டர் விகடனின் இந்த இணைப்பிதழ் உங்களுக்கு முழுமையாகத் தந்திருக்கிறது.

காக்க...காக்க..!

அவசர காலத்தில் கைகொடுக்கும் இந்தக் குறிப்புகள் அனைத்தையும் வாசித்துத் தெரிந்துகொள்ளுங்கள். இதை எப்போதும் உடன்வைத்திருந்தால், ஆபத்துக் காலத்தில் கைகொடுக்கும். எதிர்பாராமல் நேரும் காயங்கள், விபத்துக்கள், விஷக்கடி மற்றும் பல பிரச்னைகளுக்கு நீங்களே முதல் உதவி செய்யலாம். அதன் பிறகு மருத்துவரிடம் அழைத்துச் செல்லலாம்.

அவசர காலங்களில் செய்ய வேண்டிய முதல் உதவிகள் குறித்து, சென்னை திருவல்லிக்கேணியில் இயங்கும் அவசர கால மேலாண்மை மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின், டாக்டர் அட்லின் திவ்யா இஸ்ரேல், டாக்டர் அபிஷாந்த் பிரபு, டாக்டர் கே. சுந்தர்ராஜன், டாக்டர் பாபுலால் சௌத்ரி மற்றும் டாக்டர் வெங்கட கிருஷ்ண ரெட்டி ஆகியோர் விவரிக்கின்றனர்:

காக்க...காக்க..!

நெஞ்சு வலி போன்ற மிகத் தீவிரமான பாதிப்பு ஏற்படும்போது, 'கோல்டன் ஹவர்ஸ்’ எனப்படும் அந்தச் சில மணித்துளிகளுக்குள் மருத்துவரிடம் கொண்டுசெல்ல வேண்டும். அதற்குள், அவருக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில், முதல் உதவி செய்யப்பட வேண்டும்.

முதல் உதவியின் முக்கியமான அடிப்படைக் கொள்கைகள் பற்றி அறிந்துகொள்ள வேண்டியது அவசியம். இவை எல்லா அவசர சிகிச்சைகளுக்குமே பொதுவான விதிகள்.

விதி 1:

பாதிக்கப்பட்டவருக்குத் தெரிந்தோ, தெரியாமலோ... நம்மால் எந்த ஊறும் நேர்ந்துவிடக் கூடாது. 'உதவி செய்கிறோம்’ என்று போய், நம்மை அறியாமல் அவர்களுக்கு எந்தக் கூடுதல் கஷ்டத்தையும் ஏற்படுத்திவிடக் கூடாது. சாதாரண எலும்பு முறிவாக இருந்தது, கூட்டு எலும்பு முறிவாக மாறிவிட நாமே காரணமாக இருந்துவிடக் கூடாது.

காக்க...காக்க..!

உதாரணத்துக்கு, ஒரு வாகன விபத்தில் அடிபட்டவரின் ஹெல்மெட்டைக் கழற்றும்போது கூட, மிக மிகக் கவனமாகக் கழற்ற வேண்டும். ஏனெனில், கழுத்தில் எந்தப் பிரச்னையும் இல்லாமல், நிலையாக இருப்பது முக்கியம். அதேபோல் கட்டடத்தின் உயரத்திலிருந்து ஒருவர் விழுந்துவிட்டால், அவரைத் தூக்கும்போது கழுத்துக்கு முக்கியத்துவம் தர வேண்டும்.

காக்க...காக்க..!

விதி 2: பாதுகாப்பு மிக முக்கியம். எந்த ஒரு அவசரகட்டத்திலும் மூன்று நபர்கள் இருப்பார்கள். அதாவது, பாதிக்கப்பட்டவர், உதவச் செல்லும் நாம், நமக்கு அருகில் இருப்பவர்கள்... இந்த மூன்று பேருக்கும் எந்தப் பிரச்னையும் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

விதி 3: பொது அறிவு முக்கியமாகத் தேவை. அங்கே உடனடியாகக் கிடைக்கும் அல்லது இருக்கும் வசதிகளைவைத்து எப்படி உதவலாம் என்ற சமயோசித புத்தியுடன் சாமர்த்தியமாகச் செயல்படும் வேகமும் வேண்டும்.

ரத்தக்காயம் / வெட்டுக்காயம்:

• குழந்தைகள் விளையாடும்போதும் சாதாரணமாக நடக்கும்போதும் கீழே விழுந்து அடிபடுவதும் ரத்தம் வருவதும் சகஜம். அப்போது, காயம்பட்ட இடத்தை, குழாயிலிருந்து வரும் சுத்தமான நீரால் (running water) கழுவ வேண்டும். சோப் போட்டுக் கூடக் கழுவலாம்.

• காயம்பட்ட இடத்தில் ரத்தம் வந்தால், சுத்தமான துணியால் அழுத்திக் கட்டுப்போட வேண்டும். பவுடர், சந்தனம், மஞ்சள், காப்பித் தூள் என்று எந்தப் பொருளையும் காயத்தின் மீது போடக் கூடாது.

காக்க...காக்க..!

• சமீபத்தில் 'டெட்டனஸ் டெக்ஸாய்டு’ தடுப்பூசி போடப்பட்டிருந்தால், திரும்பவும் அது போடத் தேவை இல்லை. இப்போதெல்லாம் எல்லோருமே தொடர்ந்து தடுப்பூசிகள் போட்டு வருவதால், 10 வருடங்களுக்கு ஒருமுறை 'டி.டி’ போட்டால் போதும்.

• குழந்தைகளுக்கு உடலில் வலுக்குறைவு என்பதால், வெட்டுக்காயம், பூச்சிக்கடி போன்ற என்ற விபத்தாக இருந்தாலும், அவர்களால் அதிக நேரம் தாக்குப்பிடிக்க முடியாது. எனவே முதல் உதவிக்குப் பிறகு, உடனே மருத்துவமனைக்குச் சென்றுவிட வேண்டும். அலட்சியமாக இருக்கக் கூடாது.

காக்க...காக்க..!

ரத்தக் கசிவு:

• சிறிய காயம், கத்தி அல்லது பிளேடால் ஏற்பட்ட வெட்டுக் காயம், கீழே விழுந்து அடிபட்டது என ரத்தக் கசிவு எப்படி ஏற்பட்டாலும், எங்கிருந்து ரத்தம் வருகிறது என்பதை முதலில் கண்டறிந்து, ரத்தம் வருவதை நிறுத்த வேண்டும். வாய், மூக்கு, கை, கால், நெற்றி என எங்கிருந்து ரத்தம் வந்தாலும் சுத்தமான துணியைவைத்து அழுத்தி, ரத்தத்தைக் கட்டுப்படுத்த வேண்டும்.

• ஒருவேளை ரத்தம் மூக்கிலிருந்து வந்தால், அவரை முன்னோக்கிக் குனியச்செய்து, மூக்கின் மென்மையான முன்பகுதியை, விரல்களால் பிடித்துக் கொண்டு, வாயால் மூச்சுவிடச் செய்ய வேண்டும். மூக்கிலிருந்து வரும் ரத்தத்தை அவர் விழுங்கிவிடக் கூடாது. அதனால்தான் முன்னால் குனியச் சொல்கிறோம். தலையைப் பின்பக்கமாக சாய்த்துவிடக் கூடாது. அப்படி சாய்த்தால், ரத்தம் வாய்க்குள் போய், நுரையீரலுக்குள் புகுந்துவிடும் அபாயம் உள்ளது. எனவே நிமிரவே கூடாது. மூக்கு சிந்தச் செய்யவும் கூடாது.

• காதிலிருந்து ரத்தம் கசிந்தால், சுத்தமான துணியைவைத்து ரத்தத்தை நிறுத்த வேண்டும். காதுக்குள் எதையும் போட்டுக் குடையக் கூடாது.

காக்க...காக்க..!

குறிப்பு: ரத்தக் கசிவு அல்லது காயத்தின் மீது துணி போட்டால், அதை அப்படியே விட்டுவிட வேண்டும். ரத்தம் நின்றுவிட்டதா என்று பார்க்க, அதைத் திரும்பவும் எடுத்து எடுத்துப் பார்க்கக் கூடாது. அப்படிப் பார்த்தால், நின்றிருந்த ரத்தம் மீண்டும் வர ஆரம்பித்துவிடும். முதலில் போட்ட துணி, ரத்தத்தால் நனைந்துவிட்டால், அதன் மேலேதான் அடுத்தடுத்த துணி அல்லது டிரெஸ்ஸிங் பஞ்சைப் போட வேண்டுமே தவிர, முதலில் போட்ட துணியை எடுத்துவிட்டுப் போடுவது தவறான செய்கை.

காக்க...காக்க..!

வெட்டுப்படுதல்:

கை, கால் விரல் அல்லது கை போன்ற உறுப்புகள் ஏதேனும் விபத்தில் துண்டிக்கப்பட்டுவிட்டால், துண்டிக்கப்பட்ட உறுப்பை, சுத்தமான ஈரத்துணியில் சுற்றி, ஒரு பாலித்தீன் கவரில் போட்டு, அதை ஐஸ்கட்டிகள் நிரம்பிய பெட்டியில் போட்டு உடனடியாக மருத்துவமனைக்கு, பாதிக்கப்பட்டவருடன் எடுத்துச்செல்ல வேண்டும். இதில் முக்கியமாகக் கவனிக்க வேண்டியது, துண்டிக்கப்பட்ட உறுப்பை நேரடியாக ஐஸ்கட்டிகளுக்குள் போடக் கூடாது. சுற்றிலும் ஐஸ் இருக்கும் பையில் வைத்து, எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் கொண்டுசெல்ல வேண்டும்.

காது / மூக்கினுள் ஏதேனும் பொருளைப் போட்டுக்கொண்டால்:

• காதுக்குள் ஏதாவது பொருள் போய்விட்டாலும், எடுக்க முயற்சிக்க வேண்டாம். குச்சி, 'பட்ஸ்’ போன்றவற்றால் எடுக்க முயற்சித்தால், செவிப்பறை பாதிப்படைய வாய்ப்பு உண்டு. அதனால் காது கேட்காமலே கூடப் போய்விடலாம். எனவே, உடனே காது, மூக்கு, தொண்டை நிபுணரிடம் போய்விடுவது நல்லது.

காக்க...காக்க..!

• காதுக்குள் ஏதேனும் பூச்சி போய்விட்டால், டர்பன்டைன் எண்ணெய் சில துளிகள் விடலாம். பூச்சி இறந்துவிடும். பிறகு அதுவே வெளியே வரவில்லை எனில், டாக்டரிடம் போய் எடுத்துவிட வேண்டும்.

• குழந்தைகள் விளையாடும்போது, ஏதேனும் சிறு மணிகள் அல்லது சிறு பயறுகள் போன்றவை மூக்கினுள் போய்விடக்கூடும். சில பெண்கள் மூக்குத்தியைக் கழற்றும்போது, திருகாணி கூடப் போய்விட வாய்ப்பு உண்டு. அப்படிப் போய்விட்டால், 'அதை எடுக்கிறேன் பேர்வழி’ என்று அந்தப் பொருளை இன்னும் கொஞ்சம் உள்ளே தள்ளி, 'எமர்ஜென்சி’ ஆக்கிவிடாமல், உடனடியாக டாக்டரிடம் போய்விட வேண்டும். மூக்கைச் சிந்த வைக்கவும் கூடாது.

குழந்தை ஏதேனும் விழுங்கிவிட்டால்:

• குழந்தைகள் தவறுதலாக ஏதேனும் விழுங்கிவிட்டாலோ அல்லது சாப்பிடும்போது ஏதேனும் உணவுத் தொண்டையில் எக்குத் தப்பாகச் சிக்கிக்கொண்டாலோ, கையை விட்டு எடுக்கவோ, விரலை விட்டு எடுக்கவோ, கண்டிப்பாக முயற்சிக்கக் கூடாது.

காக்க...காக்க..!

• தொண்டையில் ஏதேனும் பொருள் சிக்கிக்கொண்டால், அதை எடுப்பதற்கு, 'ஹீம்லிக் மெனுவர்’  ( HEIMLICH MANEUVER) என்ற செய்முறை இருக்கிறது. இந்த முதல் உதவி சிகிச்சை முறைப்படி தெரிந்தவர்கள், அதை உபயோகித்துப் பொருளை எடுக்கலாம். இல்லையெனில் உடனடியாக மருத்துவமனைக்குப் போய்விட வேண்டும். ஏனென்றால், விழுங்கிய எட்டு நிமிடங்களுக்குள் அந்தப் பொருளை வெளியே எடுக்க வேண்டும். எனவே ஒவ்வொரு நொடியும், தங்க நொடிதான். எட்டு நிமிடங்களுக்குப் பிறகும் ஆக்ஸிஜன் மூளைக்குச் செல்லவில்லை என்றால், விளைவு விபரீதம் ஆகிவிடும். இப்போது பள்ளிகளிலேயே இந்த முறை கற்றுத்தரப்படுகிறது.

காக்க...காக்க..!

தீக்காயம்:

• முதலில் பாதிக்கப்பட்டவரை அந்த இடத்திலிருந்து அப்புறப்படுத்த வேண்டும். உடலில் துணி ஏதேனும் இருந்தால், அதைப் பிடித்து இழுக்காமல், கத்தரியால் கவனமாக வெட்டி, முழுமையாக அப்புறப்படுத்திவிட வேண்டும். நகைகள் இருந்தாலும் அப்புறப்படுத்திவிட வேண்டும்.

• தீக்காயம் பட்ட இடத்தில், குழாய்த் தண்ணீர் படும்படி 10 நிமிடங்கள் அப்படியே வைத்திருக்கலாம். எந்தக் களிம்பும், ஆயின்மென்ட்டும் தடவக் கூடாது.

• கம்பளி, ஜமக்காளம் போன்ற தடிமனான துணிகளைப் போர்த்தி தரையில் உருளச் செய்யும்போது, அந்த வெப்பத்தில் திசுக்கள் வெந்துவிட வாய்ப்புள்ளது. ஒருவர் ஆடையில் தீப்பற்றிவிட்டால், உடனடியாகத் தண்ணீரை அவர் மேல் ஊற்றி, தீப் பரவாமல் அணைக்கலாம். தண்ணீர் ஊற்ற வழி இல்லை என்னும்போது, கம்பளி போன்றவற்றைப் பயன்படுத்தலாம். ஆனால், கம்பளியை நீண்ட நேரம் உடலில்வைத்திருக்கக் கூடாது.

காக்க...காக்க..!

• தலை மற்றும் கழுத்தில் தீக்காயம் இருப்பின், வாய் வழியே குடிக்கவோ, சாப்பிடவோ எதையும் கொடுக்கக் கூடாது.

• கொப்புளங்கள் தோன்றினால், அதை உடைத்துவிடக் கூடாது. காயத்தைக் கையால் தொடவே கூடாது. மிகப் பத்திரமாகத் தூக்கிக் கொண்டு, மருத்துவமனைக்குக் கொண்டுசெல்ல வேண்டும்.

• தீக்காயம் அடைந்தவரைக் காப்பாற்றச் சென்றவர்களே தீக்காயம் அடைந்ததாகப் பலமுறை படித்திருப்போம். எனவே, தீ விபத்தில் காப்பாற்றச் செல்பவர், தன்னுடைய முன்புறத்தில் கம்பளியைப் பாதுகாப்பாகக் கட்டிக் கொண்டு பாதிக்கப்பட்டவரை அணுகும்போது, தீக்காயம் ஏற்படாமல் பாகாப்பாக இருக்கலாம்.

• ரசாயனம் அல்லது ஆசிட் போன்றவற்றால் காயம் ஏற்பட்டாலும், தொடர்ந்து 20 நிமிடங்களுக்கு அந்த இடத்தை ஓடும் தண்ணீரால் கழுவ வேண்டும்.

விஷக்கடி:

• குளவி போன்ற விஷப்பூச்சிகள் கடித்தால், அதன் கொடுக்கு ஒட்டியிருந்தால், அதை மிகக் கவனமாக அப்புறப்படுத்த வேண்டும். ஏனெனில், அதில்தான் விஷம் இருக்கும். நாம் நேரடியாகப் பிடுங்கி எடுத்தால், அதில் இருக்கும் விஷம் இன்னும் உள்ளே இறங்க வாய்ப்பு உண்டு. அப்படியே சாய்வாக ஒரு கத்தியால் சீய்ப்பது போல, கொடுக்கைச் சீவி விட வேண்டும்.

• தேள் கொட்டினால், டாக்டரிடம் போய்விட வேண்டும். நாம் எதுவுமே செய்ய முயற்சிக்கக் கூடாது. ஏனெனில் விஷம் ரத்தத்தில் பரவும் வாய்ப்பு உண்டு.

காக்க...காக்க..!

• பாம்புக்கடி என்று நிச்சயமாகத் தெரிந்தால், அது நிச்சயம் தீவிர சிகிச்சை தேவைப்படும் பிரச்னை. கடிவாயில் வாயைவைத்து உறிஞ்சுதல், கடித்த இடத்துக்கு மேலே இறுக்கிக் கட்டுதல் போன்றவற்றைச் செய்யக் கூடாது. இவற்றால் ரத்த ஓட்டம் தடைபட்டு, விஷம் வேகமாகப் பரவ வாய்ப்பு இருக்கிறது. உடனடியாக மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும். பாதிக்கப்பட்டவர் மயக்கம் ஆகாமல் இருந்தால், அவரிடம் பேசி, 'ரிலாக்ஸ்’ செய்யலாம்.

• கை அல்லது காலில் பாம்பு கடித்திருந்தால், அதை அசைக்கக் கூடாது. அப்படியே, எவ்வளவு விரைவாக மருத்துவமனைக்குச் செல்கிறோமோ, அவ்வளவு நல்லது.

• எந்த விஷக்கடி என்றாலுமே, குடிக்கத் தண்ணீர் கொடுக்கக் கூடாது. அரை மயக்கத்தில் இருப்பவருக்கு தண்ணீர் கொடுத்தால், அது நுரையீரலுக்குள் சென்று விடும்.

• நாய்க்கடி என்றால், அந்த இடத்தை சோப் தண்ணீரால் நன்றாகக் கழுவ வேண்டும்.

• எந்தக் கடியாக இருப்பினும் ஐஸ் அல்லது வெந்நீர் ஒத்தடம் கொடுக்கக் கூடாது.

வலிப்பு:

• மூளையில் திடீரென ஏற்படும் உந்துதல் அல்லது திடீர் விசை காரணமாக ஏற்படுவதுதான் வலிப்பு. அந்தச் சமயத்தில் அவர்களின் கை, கால் வேகமாக உதறும்போது, நாம் அவர்களைப் பிடிக்கவோ, அசைவைக் கட்டுப்படுத்தவோ முயற்சிக்கக் கூடாது. ஏனெனில் அவர்களின் கட்டுப்பாட்டிலேயே அந்த இயக்கம் இருக்காது. அவர்களை அப்படியே விட்டுவிட வேண்டும்.

• அவர்களைச் சுற்றிலும் மேசை, நாற்காலி போன்ற பொருட்கள் இருந்தால், வலிப்பு வந்தவர் இடித்துக்கொள்ளாமல் அப்புறப்படுத்திவிட வேண்டும். ஏதாவது கூர்மையான பொருட்களோ, கூர் முனையுள்ள பொருட்களோ அருகில் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

காக்க...காக்க..!

• எதிலும் இடித்துக்கொள்ளாமல் / காயப்படுத்திக்கொள்ளாமல் இருப்பதற்காக, சுற்றிலும் தலையணைகள் போடலாம். தலைக்கு அடியிலும் ஒரு தலையணைவைக்க வேண்டும்.

• வலிப்பு வந்தவரிடம் சாவிக்கொத்து அல்லது மற்ற இரும்புச் சாமான்கள் கொடுப்பது தவறு. அதனால் அவர்கள் காயம்பட வாய்ப்பு உண்டு.

காக்க...காக்க..!

• நாக்கைக் கடித்துக்கொள்ளாமல் இருப்பதற்கு, சுத்தமான துணியைச் சுருட்டி பற்களுக்கு இடையில் வைக்கலாம்.

• வலிப்பு நின்ற பின், மயக்க நிலையில் இருக்கும் அவர்களை, ஒருபக்கமாகத் திருப்பிப் படுக்கவைக்க வேண்டும். அப்போதுதான், வாந்தி எடுத்தால் கீழே போய்விடும். இல்லையென்றால், உள்ளேயே போய்விடும் அபாயம் உண்டு.

• அவரைச் சுற்றிக் கூட்டம் போடாமல், நிறையக் காற்று வருவது போல விலகி நிற்க வேண்டும். கண்டிப்பாகத் தண்ணீர் கொடுக்கக் கூடாது.

கண்ணுக்குள் ஏதாவது விழுந்துவிட்டால்:

• கண்ணுக்குள் ஏதேனும் தூசி, குச்சி, கண்ணாடித் தூள் போன்ற பொருள் விழுந்துவிட்டால், 20 நிமிடம் தொடர்ந்து கண்ணில் தண்ணீரை அடித்தபடி இருக்க வேண்டும்.

• பெரிய சிரிஞ்ச் இருந்தால், அதில் தண்ணீரை நிரப்பித் தொடர்ந்து அடிக்கலாம். இல்லையென்றாலும், பரவாயில்லை; கைகளால் தண்ணீரை அள்ளி அள்ளித் தொடர்ந்து பாதிக்கப்பட்ட கண்ணில் அடித்துக்கொண்டே இருக்க வேண்டும்.

காக்க...காக்க..!

• கையால் கண்ணைக் கசக்கக் கூடாது. விரலை விட்டு எடுக்க முயற்சிக்கக் கூடாது.

• கண்களில் கண்ணாடி போன்ற கூர்மையான பொருள் குத்தியிருந்தால், கையை விட்டு எடுக்க முயற்சிக்கக் கூடாது. அப்படி எடுத்தால், கண்ணில் ரத்தக் கசிவு ஏற்பட வாய்ப்பு உள்ளது. உடனடியாக கண் நல மருத்துவரை அணுக வேண்டும்.

காக்க...காக்க..!

• நேரடி வெளிச்சம், தூசி கண்களில் படாதவாறு, இரண்டு கண்களிலும் சுத்தமான துணி வைத்து, அதன் மேல் பிளாஸ்திரி போட்டு மூடிவிட வேண்டும்.

• ஒரு கவர் அல்லது பேப்பர் கப் வைத்துக்கூட, கண்களை மூடலாம். அப்படியே கண் மருத்துவரிடம் போய்விட வேண்டும்.

பலத்த காயம் / அடிபடுதல்:

• உயரமான மரம் அல்லது கட்டடத்திலிருந்து யாரேனும் விழுந்துவிட்டால், உடனே ரத்தம் வருகிறதா என்று பார்க்க வேண்டும். ரத்தம் வந்தால், முன்னே சொல்லியது போல, ரத்தப்போக்கைக் கட்டுப்படுத்த வேண்டும். ரத்தம் வெளியே வராவிட்டாலும் உள்ளே ரத்தக் கசிவு இருக்கலாம். அப்படி இருந்தால் மயக்கம் வரும். குளிரும். அவரைக் கீழே படுக்கவைத்து, கால்கள் இரண்டையும் மேலே சிறிது உயரமாகத் தூக்கிவைக்க வேண்டும். அவரைத் தூக்கும்போதும், கழுத்தின் நிலையைக் கவனமாகப் பார்த்துத் தூக்க வேண்டும், ஏனெனில், தண்டுவடம் பாதிக்கப்பட்டால், பிறகு ஆயுள் முழுவதும் பிரச்னையாகிவிடும்.

காக்க...காக்க..!

• கால்களை மடக்கியபடி விழுந்திருந்தால், காலை நீட்ட முயற்சிக்க வேண்டாம். உட்காரவைக்காமல், படுத்த நிலையில்தான் மருத்துவமனைக்கு அழைத்துச்செல்ல வேண்டும்.

• வாயில் ரத்தம் வந்தால், துப்பச் சொல்லலாம். விழுங்கக் கூடாது.

காக்க...காக்க..!

• விழுந்தவர் பெண்ணாக இருந்தால், அவர் கர்ப்பிணியா என்பதை முதலில் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம்.

விஷம் / ஆசிட் குடித்தால்:

• என்ன குடித்தார்கள், எவ்வளவு குடிக்கப்பட்டது என்ற விவரத்தைத் தெரிந்துகொள்ள வேண்டும்.

• வாந்தி எடுக்கத் தூண்டக் கூடாது. விரலை உள்ளே விட்டோ, சாணம் அல்லது உப்புக் கரைசலைக் கொடுத்தோ, வாந்தி எடுக்கச் செய்யக் கூடாது.

காக்க...காக்க..!

• அவராகவே வாந்தி எடுத்தால், இடது பக்கமாக ஒருக்களித்துப் படுக்கவைக்கலாம். வாந்தி உள்ளே போய், மூச்சுக்குழல் அடைபடாமல் இருக்க இது உதவும்.

• உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டுசெல்ல வேண்டும்.

நெஞ்சு வலி:

• நெஞ்சு வலி வந்தவரை உட்காரவைத்து, முன்புறமாகச் சாய்த்து, நன்கு மூச்சை இழுத்து விடச் சொல்ல வேண்டும்.

• ஏற்கெனவே நெஞ்சுவலிக்கான மாத்திரை எடுப்பவராக இருந்தால், டாக்டர் சொன்னபடி அதை எடுத்துக்கொள்ள வேண்டும்.

• நெஞ்சுவலி வந்தால், அதை, 'சாதாரண வாய்வுக் குத்து’ என்று அலட்சியமாக விடவே கூடாது. இதய வலி எனில், யானை ஏறி மிதிப்பது போல், வலி பயங்கரமாக இருக்கும். மூச்சு விடச் சிரமமாக இருக்கும். வியர்த்துக் கொட்டும். சிலருக்குத் தாடை வரை வலி வரும். சிலருக்கு இடது கை வலிக்கும். சில சமயங்களில் முதுகு, வயிறுக்குக் கூட வலி பரவும்.

காக்க...காக்க..!

• ஆனால், சர்க்கரை நோய் இருப்பவர்களுக்கு இவற்றில் எந்த அறிகுறியும் இருக்காது. அதனால் அவர்கள் எந்த மாதிரியான நெஞ்சுவலியாக இருந்தாலும், அதை 'மாரடைப்பு’ போலவே கருதி, டாக்டரிடம் போய்விடுவது நல்லது. சும்மா சோடா குடித்தால் வலி போய்விடும் என்று சொல்லித் தவிர்க்கக் கூடாது. தாமாக மாத்திரை வாங்கிப் போடுவதும் மிக ஆபத்து.

• நெஞ்சுவலி வந்துவிட்டால், நேரம் என்பது மிக முக்கியம். நாம் தாமதிக்கும் ஒவ்வொரு நொடியும் ஆபத்து. அருகில் இருக்கும் மருத்துவமனையில், இதய நோய்க்கான சிகிச்சை உபகரணங்கள் (ஈ.ஸி.ஜி. போன்றவை) இருக்கும் இடமாகச் செல்வது நல்லது.

காக்க...காக்க..!

• மாரடைப்பு என்றால், மார்புப் பகுதியில் அழுத்துவதுபோன்ற கடுமையான வலி இருக்கும். அதிகம் வியர்வை மற்றும் மயக்கம் வருவதுபோல் இருக்கும்.

• இதில் எந்த வகையாக இருந்தாலும், உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்குச் செல்வது நல்லது. மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும்போது பாதிக்கப்பட்டவருக்கு ஆஸ்பிரின் மாத்திரை கொடுக்க வேண்டும். இது ரத்தம் கட்டியாவதைத் தடுக்கிறது.

காக்க...காக்க..!

மயக்கம்:

• மூளைக்குச் செல்லும் ஆக்சிஜன் தடைபடுவதால்தான் மயக்கம் ஏற்படுகிறது.

• மயக்கம் வருவதைக் கொஞ்சம் முன்கூட்டியே தெரிந்துகொண்டோமானால், அவர் கீழே விழுவதற்குள், தாங்கிப் பிடித்து, அடிபடுவதில் இருந்து காப்பாற்றிவிடலாம்.

காக்க...காக்க..!

• மயங்கியவரை, கீழே படுக்கவைத்து, கால்கள் இரண்டையும் சிறிது உயரத்தில் இருக்குமாறு மேலே தூக்கிவைக்கவும்.

• காற்றோட்டம் தேவை. தண்ணீரால் முகத்தைத் துடைக்கலாம். சோடா போன்றவற்றைப் புகட்ட வேண்டாம்.

மூச்சுத்திணறல்:

• ஏற்கெனவே 'வீஸிங்’ பிரச்னை இருப்பவர் என்றால், அவர் எடுத்துக்கொள்ளும் இன்ஹேலரை எடுத்துக்கொள்ளச் சொல்லலாம்.

காக்க...காக்க..!

• மூச்சுத்திணறல் ஏற்பட்டவரை உட்காரவைத்து, மெதுவாக மூச்சுவிடச் செய்ய வேண்டும்.

ஸ்ட்ரோக் (பக்கவாதம்):

• முகம் கோணுதல், பேச்சில் குழறல், கைகள் உதறுதல், வாயில் எச்சில் ஒழுகுதல் போன்றவை ஸ்ட்ரோக்கின் அறிகுறிகள்.

காக்க...காக்க..!

• பாதிக்கப்பட்டவருடன் பேச்சுக் கொடுத்து, அவரை ஆசுவாசப்படுத்த வேண்டும். அவரால் பேசவோ, உங்களுக்குப் பதில் சொல்லவோ முடியாவிட்டாலும், நீங்கள் சொல்வதைக் கேட்கவும் புரிந்துகொள்ளவும் முடியும்.

காய்ச்சல்:

• உடல் வெப்பநிலை அதிகமாக இருக்கும்போது, 'ஸ்பாஞ்ச் பாத்’ எனப்படும் ஈரத்துணியால் ஒற்றி எடுக்கும் முறை மிகவும் சிறந்த முதல் உதவி. இது, வெப்பநிலையையும் குறைக்கும்.

காக்க...காக்க..!

• நான்கு வயதுக்குக் குறைந்த குழந்தைகளுக்கு, கண்டிப்பாக மருத்துவமனைக்கு வரும் வரையிலும், ஈரத்துணியை நெற்றியில், அக்குளில் போட்டுப் போட்டு எடுத்தபடி இருக்க வேண்டும். இல்லையென்றால் அது வலிப்பாகவோ, ஜன்னியாகவோ மாறிவிடும் அபாயம் உள்ளது.

சர்க்கரையின் அளவு குறைதல்:  

• ஏற்கெனவே சர்க்கரை நோய் இருப்பவர்களுக்கு, திடீர் கோபம், எரிச்சல் போன்றவை ஏற்பட்டால் அல்லது எதற்கெடுத்தாலும் அவர்கள் சத்தம் போட்டுக் கத்தி டென்ஷன் ஆனால், அவர்களின் சர்க்கரை அளவு குறைந்துள்ளது என்பதை அறிந்துகொள்ளலாம். உடனே ஒரு சாக்லேட் அல்லது ஒரு ஸ்பூன் சர்க்கரையை வாயில் போட்டுக்கொள்ளச் செய்தால், சிறிது நேரத்தில் அந்த சுபாவம் மாறிவிடும். ஆனால், இது சுயநினைவுடன் இருப்பவர்களுக்கான முதல் உதவி.

காக்க...காக்க..!

• சர்க்கரையின் அளவு குறைந்து, மயக்கம் ஆகிவிட்டால், உடனே அருகிலிருக்கும் மருத்துவமனைக்கு அழைத்துச்செல்வதே சிறந்தது.

பாலியல் பலாத்காரம்:

• பாதிக்கப்பட்டவருக்கும் முதலில் உளவியல் ரீதியான ஆதரவு தேவை.

• காயங்களுக்கு சிகிச்சை அளிக்கும் முன், அவருடைய ஒப்புதலைப் பெற்றுவிட்டுச் செய்ய வேண்டும்.

காக்க...காக்க..!

• ரத்தக்கறை படிந்த உடைகள் அல்லது பொருள்கள் கிடந்தால், அவற்றை ஆதாரத்துக்காகப் பாதுகாக்க வேண்டும்.

• மருத்துவமனைக்குச் செல்வதற்கு முன், முடிந்தவரை குளித்தல், சிறுநீர் கழித்தல், பல் துலக்குதல், உடைகளை மாற்றுதல் என்று எதையும் செய்யாமல் இருப்பது நல்லது.

வாகன விபத்து:

• விபத்து நடந்த இடத்தில், அடிபட்டவரைச் சுற்றிக் கூட்டமாக நிற்பதைத் தவிர்த்து, காற்றோட்டமான சூழலை ஏற்படுத்த வேண்டும்.

• இடிபாடுகளுக்குள் அல்லது இரண்டு வாகனங்களுக்கு இடையே சிக்கி இருந்தால், மிக மிகக் கவனமாக, தலையில் கழுத்தில் அடிபடாமல் அவரை மீட்க வேண்டும்.

• சுவாசம் எப்படி இருக்கிறது என்பதைப் பரிசோதிக்க வேண்டும். இதயத் துடிப்பு இருந்து, மூச்சு வரவில்லை என்றால், ஒரு கையை நெஞ்சின் மேல்வைத்து, மறு கையால் அதன் மேல் வைத்து அழுத்திக்கொடுத்தால், தடைபட்ட சுவாசம் வந்துவிடும்.

காக்க...காக்க..!

• அடிபட்டவர் வாந்தி எடுத்தால், வாயைத் துடைத்துவிட்டு ஒருபக்கமாகத் திருப்பிப் படுக்கவைக்க வேண்டும்.

• குடிக்க எதுவும் தர வேண்டாம். முக்கியமாக சோடா கொடுக்கவே கூடாது. முகத்தில் தண்ணீர் தெளிக்கலாம். துணியைவைத்து அழுத்தி, ரத்தக் கசிவைக் கட்டுப்படுத்த வேண்டும்.

• அடிபட்டவருக்கு நினைவு இருக்கிறதா என்று பார்க்க, பேச்சுக் கொடுக்க வேண்டும். நினைவு இல்லையெனில், நரம்பியல் மருத்துவர் இருக்கும் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்வது நல்லது.

காக்க...காக்க..!

• எல்லாவற்றையும் மிக வேகமாக, அதேசமயம் பதற்றமின்றிச் செய்ய வேண்டும். தண்டுவடத்தில் அடிபட்டது போலவே யூகித்துக்கொண்டுதான் கையாள வேண்டும்.

• கவனமாகப் படுக்கவைத்து, தலையை ஒரு பக்கமாகத் திருப்பிவைத்து, மருத்துவமனைக்குக் கொண்டுசெல்ல வேண்டும்.

காக்க...காக்க..!

முதல் உதவிப் பெட்டியில் இருக்க வேண்டிய பொருட்கள்:

ஒரு ஜோடி சுத்தமான கையுறைகள், டிஸ்போஸபிள் ஃபேஸ் மாஸ்க், ஸ்டெரிலைஸ்டு காட்டன் ரோல், ஸ்டெரிலைஸ்டு டிரெஸ்ஸிங் துணி, ரோலர் பேண்டேஜ், நுண்ணிய துளைகள் கொண்ட, ஒட்டக்கூடிய டேப், தரமான ஆன்டிசெப்டிக் லோஷன் (ஸாவ்லான், டெட்டால் போன்றது), பெட்டாடைன் (Betadine) ஆயின்மென்ட், துரு இல்லாத கத்தரிக்கோல், குளுகோஸ், எலெக்ட்ரால் போன்ற நீர்ச் சத்துக்கான பவுடர் பாக்கெட்டுகள், பாரசிட்டமால் மாத்திரை, வலி நீக்கும் மாத்திரை மற்றும் அவரவர் குடும்ப உறுப்பினர்களின் உடல்நிலையைப் பொருத்து, ரத்த அழுத்தத்துக்கான மாத்திரை, அன்டாஸிட் ஜெல் போன்றவை.

கவனம்...!

முக்கியக் குறிப்புகள்:

• முதல் உதவிப் பெட்டியோ, மற்ற மருந்துகளோ... குழந்தைகளுக்கு எட்டாத இடத்தில் வைக்க வேண்டும்.

• குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் பார்க்கக்கூடிய இடத்தில் முதல் உதவிப் பெட்டி இருக்க வேண்டும். சிவப்பு நிறத்தில் 'ப்ளஸ்’ குறியிட்ட பெட்டி என்றால், யாருமே பார்த்ததும் எடுக்க முடியும்.

காக்க...காக்க..!

• அதைப் பூட்டிவைக்கக் கூடாது. எமர்ஜென்சி சமயத்தில் சாவியைத் தேடுவதால், வீண் டென்ஷனும் கால விரயமும் உண்டாகும்.

• உபயோகித்த மருந்துகள் மற்றும் பொருள்களுக்குப் பதிலாக மீண்டும் வாங்கிவைத்துவிட வேண்டும்.

• காலாவதி ஆன மருந்துகளை, தேதி பார்த்து உடனுக்குடன் அப்புறப்படுத்த வேண்டும்.

• குடும்ப மருத்துவர், அவசர சிகிச்சை மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனைகளின் தொலைபேசி எண்களை ஒரு சீட்டில் குறித்து அந்தப் பெட்டிக்குள்ளேயே வைத்திருப்பது அவசியம்.

கற்கலாம் முதல் உதவி:

FRT (First Responder Training program)

ஓர் ஆபத்தையோ விபத்தையோ பார்க்கும்போது, ஓடிப்போய் உதவி செய்வது மனித இயல்பு. முதலில் விபத்தைப் பார்க்கும் நபர்தான் 'First responder’. அவர் செய்யும் முதல் உதவிதான் அங்கே முக்கியமானது. அந்த முதல் உதவி சிகிச்சைகளையே முறைப்படி கற்றுக்கொண்டு செய்யும்போது, உயிர் காக்கும் முயற்சி இன்னும் அர்த்தமுள்ளதாகும்.

காக்க...காக்க..!

முதல் உதவி செய்வதற்கு யார் வேண்டுமானாலும் பயிற்சி எடுத்துக்கொள்ளலாம். அதற்கான ஒரு நாள் பயிற்சி அளிக்கிறது, அவசர கால மேலாண்மை மற்றும் ஆராய்ச்சி நிறுவனம். விபத்து மற்றும் அனைத்து அவசர காலப் பிரச்னைகளுக்குமான முதல் உதவிகளை, இங்கே செய்முறைப் பயிற்சியுடன் கற்றுத்தருகிறார்கள். சான்றிதழுடன் கூடிய இந்த ஒரு நாள் பயிற்சிக்குக் கட்டணம் ரூ. 608. பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அலுவலகங்களில் நிர்வாகம் விரும்பினால், இவர்கள் அங்கேயே சென்று பயிற்சி அளித்தும் வருகின்றனர்.

பிரேமா நாராயணன், படங்கள்: உசேன், தி. குமரகுருபரன்.