Published:Updated:

“ஓடி விளையாடுங்கள்... உடல் ஆரோக்கியம் பெருகும்!”

“ஓடி விளையாடுங்கள்... உடல் ஆரோக்கியம் பெருகும்!”

“ஓடி விளையாடுங்கள்... உடல் ஆரோக்கியம் பெருகும்!”

“ஓடி விளையாடுங்கள்... உடல் ஆரோக்கியம் பெருகும்!”

Published:Updated:
“ஓடி விளையாடுங்கள்... உடல் ஆரோக்கியம் பெருகும்!”

ழுத்துக்களில் இருக்கும் எளிமை, உடையிலும், உருவத்திலும் உரையாடலிலும்கூட இருக்கிறது. பயணங்களைத் தன் வாழ்க்கைப் படகாக்கி, அணுஅணுவாகப் புவியை ரசித்து, தாய் மண்ணுக்குத் தமிழால் வணக்கம் கூறிவரும் அற்புதப் படைப்பாளி எஸ்.ராமகிருஷ்ணன்.  

''நலம் விசாரிக்க வந்த டாக்டர் விகடனுக்கு நன்றி... காபி எடுத்துக்கங்க'' என்று விருந்தோம்பலுடன் பேசத் துவங்கினார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''பயணத்தின் மீதான உங்கள் காதல் தெரியும். உணவில் நாட்டம் எப்படி?''

'பயணம், என் மனதுக்கு நெருக்கமான விஷயம். பயணங்கள் தரும் அனுபவத்தை வார்த்தைகளால் விளக்க முடியாது. நிறைய நாடுகள், ஊர்களுக்குப் பயணிக்கிறேன். அந்தந்த ஊர்களுக்குப் போகும்போது அங்கு கிடைக்கும் உணவுகளை விரும்பிச் சாப்பிடுவேன். சில நேரத்தில் அது சரிப்படாமல் போய், உடல் உபாதையை உண்டுபண்ணிவிடும். அந்த நேரத்தில் ஹோமியோபதி மருந்துகளையே எடுத்துக்கொள்வேன். பெரும்பாலும் 'உணவே மருந்து’ என்று வாழ்வது ரொம்பவே பிடிக்கும். சிறுதானிய உணவுகளை விரும்பிச் சாப்பிடுவேன். அதுவும் குறைவான அளவுதான். உணவில், சுவைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்காமல், சாப்பிடும் உணவு சத்தானதா என்று தெரிந்து சாப்பிடும் பழக்கம் உள்ளவன் நான். அந்தந்தப் பருவத்தில் கிடைக்கும் காய், கனிகளைத் தவறாமல் சாப்பிடுவேன்.'

'உங்கள் ஆரோக்கியத்துக்கான பயிற்சிகள் என்னென்ன?'

'தினமும் காலையில் அரை மணி நேரம் தியானம், மூச்சுப் பயிற்சி பண்ணுவேன். மாலையில் 40 நிமிடங்கள் வியர்க்க வியர்க்க ஷட்டில் காக் விளையாடுவேன். விருதுநகர் பக்கம் ஒரு கிராமத்தில் உள்ள அரசுப் பள்ளியில்தான் நான் படித்தேன். எங்கள் பள்ளியில் இரண்டே இரண்டு கால்பந்துகள்தான் இருக்கும். அதை வைத்துத்தான் ஒட்டுமொத்தப் பள்ளியே விளையாடும். சீனியர் மாணவர்கள் விளையாடிவிட்டுத் தரும் வரை காத்திருந்து விளையாடுவோம். மிக விருப்பமான விளையாட்டும் அதுதான். மாலையில் பள்ளி விட்டதும், 4 மணியில் இருந்து 8 மணி வரை விளையாடுவோம். ஓடி ஆடி விளையாடுவதே, உடலைப் புத்துணர்ச்சியாக வைத்திருக்கும். மறக்க முடியாத அனுபவம் பள்ளி வாழ்க்கை.''

'இன்றைய இளைய தலைமுறையின் வாழ்க்கைமுறை குறித்து..?'

''உடல் குறித்த கவனம் இல்லை. தவறான உணவுப்பழக்கம். இவை தவிர, அவர்கள் வாழும் சூழலுக்கு ஏற்ப, யாரும் வாழ்க்கையை வாழ்வது இல்லை. மற்றவர்களிடம் இருந்து மாறுபட்டுத் தெரியவேண்டும் என்பதற்காக உடையில் இருந்து, உண்ணும் உணவு வரை, அதன் தன்மையை உணராமல் இருக்கின்றனர். சரியான உடற்பயிற்சி செய்வது இல்லை. ஒரு நாளைக்குக் குறைந்தது அரை மணி நேரமாவது விளையாட வேண்டும். விளையாட்டு என்பது, பொழுது போக்கும் விஷயம் மட்டும் இல்லை. உடலையும் மனதையும் நம்முடைய அன்றாட வேலைக்குத் தயார்ப்படுத்துகிறது. நான் பார்த்த பல நாடுகளில் வாலிபர்கள் வேலையை முடித்துவிட்டு, இரவு நேரங்களில் விளையாடுகிறார்கள். அங்கு, விளையாட்டுக்கு அந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றனர்.

நம் ஊர் இளைஞர்கள் விளையாட்டை வேடிக்கை பார்க்கத்தான் ஆர்வம் காட்டுகின்றனரே தவிர, யாரும் கலந்துகொள்ளத் தயாராக இல்லை. இளமையில் உடல் உறுதியாக வைத்திருந்தால், வயதாகும்போது நோயில்லாமல் இருக்கலாம். போதுமான உறக்கம் இல்லாமல் இருப்பதும்கூட ஆபத்துதான். ஆனால், அதன் ஆபத்து இப்போது தெரியாது. வயதான பிறகுதான் தெரியும். உடலுக்கு தேவையான தூக்கம் அவசியம் வேண்டும். அதே போல, நேரம் தவறிச் சாப்பிடுவதும்கூட, உடலுக்கு ஒவ்வாமையை உண்டுபண்ணும். சரியான உணவுப் பழக்கம் என்பது, பள்ளிப் பருவத்திலிருந்தே வரவேண்டும்.'

“ஓடி விளையாடுங்கள்... உடல் ஆரோக்கியம் பெருகும்!”

'இன்றைய மாணவர்களின் சமூக வலைத்தளங்கள் மீதான மோகம் குறித்து...?'

'நிறையப் பேரை அடிமைப்படுத்தும் களமே வலைத்தளம்தான்.  பக்கத்தில் இருக்கும் மனிதர்களை விட்டுவிட்டு, எங்கோ முகம் தெரியாத மூன்றாம் மனிதர்களுடன் மணிக்கணக்கில் நேரம் செலவிடுகின்றனர். உடன் படிப்பவர்கள், விடுதி நண்பர்கள், அலுவலக சகாக்கள் என்று நம்மைச் சுற்றியே இருப்பவர்களிடம் உரையாடுவதுகூட இல்லை. சுற்றி இருப்பவர்களை முதலில் நேசியுங்கள். நட்பு என்பது நல்லதுதான். ஆனால், அதே நேரம், நம் அருகில் இருப்பவர்களை மறந்துவிடுவது சரியல்ல.''

''வாசிப்புப் பழக்கமும் இப்போது குறைந்துகொண்டே வருகிறதே...!''

'குழந்தைகளுக்குப் பொருட்களை அன்பளிப்பாகத் தருவதைத் தவிர்த்து,  புத்தகங்களைத் தந்து, வாசிப்புப் பழக்கத்தை உருவாக்கலாம். புத்தகம் படிப்பதில் இருக்கும் நன்மையை எடுத்துச்சொல்ல வேண்டும். பாடப் புத்தகம் தவிர்த்து, மற்ற புத்தகங்களையும் படிக்கிற பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்.

முதலில் புத்தகத்தை நேசிக்கக் கற்றுக்கொள்ளுங்கள். ஒரு கல்லூரியில் கராத்தே கிளப், ஸ்போர்ட்ஸ் கிளப், டான்ஸ் கிளப் என்று எத்தனையோ இருந்தாலும் வாசிப்புப் பழக்கத்தை உருவாக்குவதற்கென்று எதுவுமே இல்லை. வெளிநாடுகளில் பல்கலைக்கழக மாணவர்களுக்கென்று வாசகர் வட்டம் இருக்கிறது. இங்குள்ள கல்லூரிகளிலும் அந்தச் சூழலை உருவாக்கினால், மனவள, உடல்நல ஆரோக்கியம் பெருகும்.''

உடல் நலத்துக்கு எஸ்.ரா-வின் டிப்ஸ்:

“ஓடி விளையாடுங்கள்... உடல் ஆரோக்கியம் பெருகும்!”

எண்ணெயில் பொறித்த உணவுகளைத் தவிர்த்திடுங்கள். உடலில் கெட்ட கொழுப்பு சேராமல் இருக்கும்.

“ஓடி விளையாடுங்கள்... உடல் ஆரோக்கியம் பெருகும்!”

 எங்கேயோ கிடைக்கும் கிவிப் பழம், ஆப்பிளில் இருக்கும் சத்துக்களைவிட, நமது மண்ணில் கிடைக்கும் கொய்யாவில் சத்துக்கள் அதிகம். ஜங்க் ஃபுட் தவிர்த்து, சிறுதானிய உணவுகளைச் சாப்பிடுங்கள்.

“ஓடி விளையாடுங்கள்... உடல் ஆரோக்கியம் பெருகும்!”

 நீங்கள் விரும்பிச் சாப்பிடும் உணவின் தன்மையை சத்துக்களை முழுதாகத் தெரிந்துவைத்துக்கொள்ளுங்கள்.

“ஓடி விளையாடுங்கள்... உடல் ஆரோக்கியம் பெருகும்!”

 நம் சீதோஷ்ண நிலைக்கு ஏற்ற, அந்தந்தப் பருவத்தில் விளையும்  உணவுப் பொருட்களை தவறாமல் சாப்பிடுங்கள்.

- புகழ் திலீபன்

படங்கள்: ச.இரா.ஸ்ரீதர்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism