Published:Updated:

பெற்றோரின் நிர்பந்தம்.. பாழாகுமா படிப்பு?

பெற்றோரின் நிர்பந்தம்.. பாழாகுமா படிப்பு?

பெற்றோரின் நிர்பந்தம்.. பாழாகுமா படிப்பு?

பெற்றோரின் நிர்பந்தம்.. பாழாகுமா படிப்பு?

Published:Updated:

கிருஷ்ணனுக்கு 40 வயது. குடும்ப வறுமை காரணமாக 10-வது படித்ததும் மெக்கானிக் வேலைக்குச் சென்றுவிட்டார். சொந்தமாக ஒரு மெக்கானிக் ஷாப் வைத்திருக்கிறார். கிருஷ்ணனின் பெரியம்மா, மாமா பிள்ளைகள் எல்லோரும் நன்கு படித்து நல்ல நிலையில் உள்ளனர். அவர்களைப் போல படிக்க முடியாமல் போய்விட்டதே என்ற ஏக்கம் அவருக்குள் எப்போதும் இருந்தது. ஒரு மகள், ஒரு மகன் என்று இரண்டு பிள்ளைகள். மகள் லலிதா ப்ளஸ் டூ, மகன் 10-ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தனர்.  

பெற்றோரின் நிர்பந்தம்.. பாழாகுமா படிப்பு?

'நான்தான் சரியாகப் படிக்கவில்லை, என் பிள்ளைகளாவது நன்கு படிக்க வேண்டும்’ என்று அதிகம் செலவு செய்து கான்வென்டில் சேர்த்துவிட்டார். லலிதா 10-ம் வகுப்பில் ஓரளவுக்கு நல்ல மதிப்பெண் வாங்கி வெற்றிபெற்றதும், மகளை என்ஜினீயர் ஆக்கிவிட வேண்டும் என்ற ஆசையில் ப்ளஸ் ஒன் வகுப்பில் முதல் குரூப்பில் சேர்த்துவிட்டார். ஆனால் லலிதாவுக்கு,  படிப்பைக் காட்டிலும் டி.வி., சினிமா மற்றும் இதர பொழுதுபோக்குகளில்தான் ஆர்வம் அதிகம் இருந்தது.  அறிவியலும் கணிதமும் கலந்த முதல் குரூப் அவளுக்கு வேப்பங்காயாகக் கசந்தது. இருப்பினும் பெற்றோரின் நிர்பந்தம் காரணமாகப் படித்தாள். லலிதாவுக்கும் படித்துப் பெரிய ஆளாக வேண்டும் என்று ஆசை இருந்தது. ஆனால், அந்த அளவுக்கு அவளால் படிக்க முடியவில்லை.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பெற்றோரின் நிர்பந்தம்.. பாழாகுமா படிப்பு?

இந்த ஆண்டு ப்ளஸ் டூ அரசுத் தேர்வு என்பதால், லலிதாவுக்கு ஏகப்பட்ட சலுகைகள். வீட்டு வேலை எதுவும் கிடையாது. எப்போதும் 'படி படி’ என்று பெற்றோர் நச்சரித்துக்கொண்டே இருந்தனர். 'நீ எடுக்கிற மார்க்கை வெச்சுத்தான் உனக்கு காலேஜ்ல, என்ஜினீயரிங் சீட் கிடைக்கும். அதனால நல்லாப் படி' என்று கிருஷ்ணன் சொல்லிக்கொண்டே இருப்பார். ஆனால், படிப்பில் ஆர்வம் இல்லாத லலிதா, புத்தகத்தைத் திறந்துவைத்துக்கொண்டு உட்கார்ந்திருப்பாள். கவனம் எல்லாம் வேறு எங்கோ இருக்கும்.

லலிதாவின் பாட்டிக்கு சாமியாடிக் குறிசொல்லும் வழக்கம் இருந்தது. சின்ன வயதில் இருந்து அதைப் பார்த்துப் பார்த்து வளர்ந்த லலிதாவுக்கும், மாதத்துக்கு ஒரு முறை, இரண்டு மாதத்துக்கு ஒரு முறை என்று எப்போதாவது அருள் வரும். ப்ளஸ் டூ வந்த பிறகு, அடிக்கடி அருள் வர ஆரம்பித்தது. அவளுடைய செய்கையில் லலிதாவின் பெற்றோருக்குப் பெரிய அளவில் வேறுபாடு ஏதும் தெரியவில்லை. லலிதா சாமியாடுவதும், அக்கம் பக்கத்தினர் வருவதும் என லலிதாவுக்கு ராஜ மரியாதை.  அப்படி வருபவர்கள் லலிதாவைக் கடவுளாக மதித்து, தங்கள் குறைகளைக் கூற, லலிதா அவர்களுக்குச் சில பரிகாரங்களையும் சொல்லுவாள். மாதத்துக்கு ஒரு முறை வந்த சாமி, இப்போது வாரம் ஒருமுறை வெள்ளிக்கிழமைதோறும் வர ஆரம்பிக்க, கூட்டமும் கூடிவிடும். இதில் லலிதா சொன்ன அருள்வாக்கு ஒன்றிரண்டு பலிக்கவே, கூட்டம் இன்னும் அதிகரித்தது.

பெற்றோரின் நிர்பந்தம்.. பாழாகுமா படிப்பு?

அடிக்கடி சாமியாடுவது லலிதாவின் படிப்பைப் பாதித்தது. மதிப்பெண்கள் குறையவே, பள்ளியில் பெற்றோரை அழைத்து விசாரித்திருக்கின்றனர். 'அருள் வருவது’ பற்றிச் சொல்லவும், 'என்னதான் அருள் வந்தாலும், அது அவளது படிப்பைப் பாதிக்கக் கூடாது’ என்று புத்திமதி சொல்லி அனுப்பினர் ஆசிரியர்கள். அதனால், 'சாமியாடினாலும் நீ படிக்க வேண்டும்’ என்று கிருஷ்ணன் நிர்பந்தித்தார். இதன் பிறகு, நிலைமை இன்னும் மோசமானது. முன்பு சாமியாடிவிட்டு இயல்புநிலைக்குத் திரும்பும் லலிதா,  இப்போது மயக்கம்போட்டு விழ ஆரம்பித்தாள். தொடர்ந்து ஐந்தாறு முறை மயக்கம்போட்டு விழ,  லலிதாவின் படிப்பு பாழாவதை நினைத்து கிருஷ்ணன் வருந்தினார். சாமி வருவது வரைக்கும் சரி. ஆனால், மயக்கம் போட்டு விழுவது புதிதாக இருக்கவே, 'வலிப்பு நோயாக இருக்குமோ’ என்று பயந்து லலிதாவை ஒரு பொது மருத்துவரிடம் காண்பித்தனர். அவர் பரிசோதித்துவிட்டு, ''பிரச்னை ஏதும் இல்லை, நீங்கள் மூளை - நரம்பியல் மருத்துவரைப் பாருங்கள்'' என்று அனுப்பிவிட்டார். அவரும் 'மூளையில் எந்தப் பிரச்னையும் இல்லை. எல்லாம் சரியாகத்தான் உள்ளது. நீங்கள் மனநல மருத்துவரைப் பாருங்கள்' என்று சொல்லவும், என்னிடம் லலிதாவை அழைத்து வந்தார் கிருஷ்ணன்.

லலிதாவிடமும் அவள் பெற்றோரிடமும் விரிவாகப் பேசினேன். சாமியாடிவிட்டு மயக்கம் போட்டு விழுகிறாள் என்று கிருஷ்ணன் கூறியதும், லலிதாவுக்கு 'ஹிஸ்டீரிக்கல் டிஸ்சோசியேஷன்’ (Hysterical Dissociation) என்ற பிரச்னை இருப்பது புரிந்தது.

தன்னுடைய இயல்பில் இருந்து வேறு இயல்புக்கு லலிதா மாறுகிறாள். இப்படி அவள் சாமியாடுவது அவளது தேவைக்காகத்தான். படிப்பில் அவளுக்கு உள்ள கஷ்டத்தைப் போக்குவதற்காக சாமியாட ஆரம்பித்தாள். 'ஏன் சரியாகப் படிக்கவில்லை?’ என்று கேட்டால், 'சாமி வந்துவிட்டது’ என்று கூறித் தப்பித்துக்கொள்ள முடிந்தது. மேலும், மற்றவர்கள் அளிக்கும் அதிகப்படியான மரியாதையும் கவனிப்பும் அவளை ஈர்த்தன. 'எப்போ பார்த்தாலும் டி.வி. பார்த்துட்டு இருக்கியே' என்று திட்டிய அம்மா, இப்போது மரியாதை கொடுத்துப் பேசுகிறார் என்றபோது லலிதாவுக்கு உள்ளுக்குள் சந்தோஷம். இதுபோன்ற இரண்டாம் நிலைப் பலன்கள் கிடைக்கவே, அதில் அவள் மூழ்கிவிட்டாள்.

அந்தப் பிரச்னையில் இருந்து உடனடியாக லலிதாவை வெளிப்படுத்திவிட முடியாது. முதல் கட்டமாக அவளுக்கு மாத்திரை, மருந்துகள் அளித்தோம். அவளை அமைதிப்படுத்த, பதற்றம் தணிக்க, அவளுக்குள் இருந்த தாழ்வு மனப்பான்மை, நம்மால் சாதிக்க முடியாது என்ற அவநம்பிக்கையைப் போக்க என மருந்துகள் பரிந்துரைக்கப்பட்டன. நீண்ட நாட்களுக்குப் பிறகு அன்று நன்கு தூங்கினாள். அதன் பிறகு அவளிடம் பேசும் போதுதான் அவளுக்குள் இருந்த இந்த நெருக்கடிகளைப் பற்றி சொன்னாள் லலிதா.

அதன் பிறகு அவளுக்கு 'ஈகோ ஸ்ட்ரெங்த்தனிங்’ தெரப்பி அளிக்கப்பட்டது. அவளது தன்னம்பிக்கை வளர்க்கப்பட்டது. அதேபோல, அவள் பெற்றோருக்கும் 'இப்படி சாமியாடுவது நவீன உலகில் ஏற்றுக்கொள்ளப் படுவது இல்லை.. தொடர்ந்து செய்தால் படிப்பு பாழாகி விடும். மீண்டும் இப்படி சாமியாடுகிறாள் என்றால் அதை அனுமதிக்காதீர்கள். அவளைத் தெய்வமாக நினைத்து வழிபடுவதை நிறுத்துங்கள், மற்றவர்கள் வழிபடுவதையும் தவிர்த்துவிடுங்கள்' என்று கவுன்சலிங் கொடுத்தேன். சில வாரங்களிலேயே நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. நம்பிக்கையுடன் ப்ளஸ் டூ தேர்வை எதிர்கொண்டு வெற்றிபெற்ற லலிதா, நல்ல மதிப்பெண்கள் பெற்று தற்போது மேல்படிப்பை தொடர்ந்து கொண்டிருக்கிறாள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism