Published:Updated:

காப்பகம்... கவனம்!

காப்பகம்... கவனம்!

கர்ப்புற வாழ்க்கையில் தனிக்குடித்தனம் தவிர்க்க முடியாத ஒன்று. கணவன், மனைவி இருவரும் வேலைக்கு செல்லும் சூழலில் குழந்தைகள் வளர்ப்பு என்பது மிகவும் சிக்கலானதாக மாறிவிட்டது. ஃப்ளாட்ஸ் கலாசாரத்தில் குழந்தைகளுக்கு ஓடிப் பிடித்து விளையாடக்கூட இடப் பற்றாக்குறை. பள்ளிக்கூடம் இருந்தாலாவது, அதிக நேரம் அங்கே செலவிடுவதால், பெற்றோருக்கும் ஒரு நிம்மதி இருக்கும். ஆனால், கோடை விடுமுறைவிட்ட பிறகு 'இந்த ஒன்றரை மாதம் எப்படித்தான் குழந்தையைப் பார்த்துக்கப் போறேனோ' என்று, வேலைக்கு செல்லும் பெற்றோர்கள் புலம்புவார்கள்.

காப்பகம்... கவனம்!

''பாட்டி வீட்டுக்குப் போறியா? ஆபீஸ் போயிட்டு சீக்கிரம் வந்திடறேன்'' என்றால், ''பாட்டி வீட்டுல விளையாட யாருமே இல்லை... போர் அடிக்கும்'' என்கிற குழந்தைகள், பெயின்டிங், டான்ஸ், ஸ்விம்மிங் என்று மற்ற குழந்தைகளுடன் சேர்ந்தே நேரத்தைச் செலவிட விரும்புகின்றனர்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

அலுவலகம் சென்று திரும்பும் வரை தன் குழந்தை பத்திரமாக இருக்கவேண்டும், விடுமுறை நேரத்தைப் பயனுள்ளதாக செலவிடவேண்டும் என்கிற பெற்றோர்களின் சாய்ஸ்...  குழந்தைகள் காப்பகம் (டே கேர் சென்டர்).

காலை 8.30 மணி முதல் இரவு 7.30 வரையிலான அலுவலக‌ நேரத்துக்கேற்ப காப்பகங்கள்

காப்பகம்... கவனம்!

உள்ளன. இப்படிப்பட்ட காப்பகங்களில் குழந்தையைச் சேர்ப்பதற்கு முன்பு பெற்றோர் கவனிக்கவேண்டிய விஷயங்கள் என்னென்ன என்பது குறித்து உளவியல் நிபுணரும், சென்னை ஆஸ்ட்ரல் கிட்ஸ் உரிமையாளருமான ரீனா விரிவாகக் கூறினார்.

''ஆசையோடு வளர்க்கும் குழந்தை, தினமும் காலை முதல் இரவு வரை இருக்கப்போகும் இடத்தில், உணவு, காற்றோட்ட வசதி, சுத்தம், சுகாதாரம், மருத்துவ கவனிப்பு எனத் தரமாக இந்த வசதிகள் அனைத்தும் இருக்க வேண்டியது அவசியம்.  

 சுத்தம்

நோய்களின் வாசஸ்தலமே கழிப்பறைதான். சுத்தமாகப் பராமரிக்கிறார்களா, மணிக்கு ஒருமுறை சுத்தம் செய்து கொண்டே இருக்கிறார்களா என்பதைக் கவனிக்கவேண்டும். பெரியவர்கள் பயன்படுத்தும் கழிப்பறையே குழந்தைகளுக்கும் இருக்கக் கூடாது. ஆண், பெண் குழந்தைகளுக்கென தனித்தனியே டாய்லெட் இருப்பது நல்லது. குழந்தைக்கு 'டயப்பர்’ போடுவதை அனுமதிக்கக் கூடாது.

உணவு

கட்டிக் கொடுத்த மதிய உணவு, ஆறிவிடும்... குழந்தையும் சாப்பிடாது என்பதால், சில காப்பகங்களில் மதிய உணவு தயார் செய்து கொடுக்கப்படுகிறது. குழந்தையைச் சேர்ப்பதற்கு முன்பு, நேரில் சென்று சமையலை ருசி பாருங்கள்.  குழந்தைக்கு என்ன கொடுக்கிறார்கள், அந்த உணவு சத்தானதாக இருக்கிறதா என்பதைக் கவனியுங்கள். சில இடங்களில் கேக், பன் பட்டர் ஜாம், சமோசா மட்டுமே கொடுக்கின்றனர். வளரும் குழந்தைக்கு மதிய உணவு சாதம், கூட்டு, ரசம், பொரியல், பருப்பு, நெய் சேர்த்தும், மாலை டிபன் அல்லது நட்ஸ், உருண்டை வகைகளை தருவதாக இருந்தால்தான் நல்லது.  உற்சாகத்துக்கு மட்டுமல்ல... குழந்தைகளின் ஊட்டத்துக்கும் குறைவிருக்காது.

காப்பகம்... கவனம்!

சூழல்

ஜன்னல்கள் இருக்கிறதா என்று பாருங்கள். வெளிச்சமும் காற்றும்தான் குழந்தைகளின் சுவாசத்தை சீராக வைத்திருக்கும்.  மேலும், மதியம் தூங்கும் இடம் ஓரளவு வெப்பம் தாக்காத குளிர்ச்சியான இடமாக இருக்கிறதா, விளையாடும் இடமும் நல்ல விஸ்தாரமாக இருக்கிறதா என்பதையும் பார்க்கவேண்டும். இதனால், குழந்தைகள் இடித்துக்கொள்ளவும் கீழே விழுந்து அடிபடவும் வாய்ப்பு இருக்காது. காப்பகத்தில் உள்ள அறைகளில் பல வண்ணங்கள் கலந்த பெயின்டிங், சுவரில் கார்ட்டூன்கள் இருந்தால், குழந்தைகளின் மனநிலையும் உற்சாகத்தில் மிதக்கும்.

பராமரிப்பு

ஆயாக்களின் கவனிப்பு அவசியம் தேவை. குறைந்தது மூன்று குழந்தைகளுக்கு ஒருவர் என்ற ரீதியில் இருந்தால், குழந்தைக்கு முழுமையாகக் கவனிப்பு கிடைக்க வாய்ப்பு உண்டு. குழந்தையைக் கவனிப்பவர்களின் பேச்சு, அரவணைப்பு, அணுகும் முறை, சுத்தம் இவற்றையும் கவனிக்க வேண்டும். ஆயாக்களிடம்தான் குழந்தைகள் வளர்கின்றனர் என்பதால், அவர்கள் அன்பானவர்களாக இருக்கவேண்டியது மிகவும் அவசியம்.  

டிப்ஸ்...

காப்பகம்... கவனம்!

  புதிதாக காப்பகத்தில் சேர்த்தவுடன், குழந்தை ஓரிரு வாரங்கள் போக மறுக்கலாம். பிறகு, அங்குள்ள சூழல் குழந்தைகளுக்கு நன்றாகப் பழகிவிடும். அதன் பிறகும் போக மறுத்தால், என்ன காரணம் என்பதைக் கவனித்து, அதைச் சரி செய்யுங்கள். அடிக்கடி காப்பகத்தை மாற்றுவதும் நல்லதல்ல!

காப்பகம்... கவனம்!

 குழந்தைகள் பராமரிப்பைத் தாண்டி, கூடவே யோகா, தியானம், ஸ்லோகம், டான்ஸ், பாட்டு போன்ற 'எக்ஸ்ட்ரா கர்ரிகுலர்’ வகுப்புகளும் இருக்கிறதா என்று பாருங்கள். ஒரே இடத்தில் அனைத்து வசதியும் இருப்பது ஆரோக்கியமான மனநிலைக்கு அச்சாரமாக இருக்கும்.  

காப்பகம்... கவனம்!

 நிறைய அன்பு, தேவையான அளவில் மெல்லிய கண்டிப்பு, போதிய சுதந்திரம் இருந்தால், காப்பகத்தை இன்னொரு தாய் வீடாக குழந்தைகள் நினைக்க ஆரம்பித்துவிடுவார்கள்.

- ரேவதி, படங்கள்: தி.குமரகுருபரன்