Published:Updated:

”அன்னை தெரசாவிடம் ஆசி பெற்றேன்!”

”அன்னை தெரசாவிடம் ஆசி பெற்றேன்!”

தூய வெண்ணிற மேல் கோட்... கண்ணாடிக்குப் பின்னே கருணை மிகு கண்கள்... கம்பீரக் குரல்... இவையே, நர்ஸிங் சூப்பரின்டெண்டென்ட் பிரிட்டோ மேரியின் அடையாளங்கள்.

35 வருடங்களாக செவிலியர் சேவையில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டவர்.  சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 29 ஆண்டுகள் நோயாளிகளுக்கான சேவையில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற பிறகும் சென்னை இசபெல்லா மருத்துவமனையில் நர்ஸிங் சூப்பரின்டெண்டென்ட் ஆகப் பணிபுரிகிறார். 'மிசஸ் பிரிட்டோ’ என்றே எல்லோரும் இவரை அழைக்கின்றனர்.  

”அன்னை தெரசாவிடம் ஆசி பெற்றேன்!”

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

''சேவைப் பணியான நர்ஸ் படிப்பை விரும்பித் தேர்ந்தெடுத்தீர்களா?''

''ஆமாம். சின்ன வயசிலிருந்தே கடவுள் நம்பிக்கை எனக்கு உண்டு.  முடிந்தவரை, அடுத்தவர்களுக்கு தொண்டு செய்யணும்கிற எண்ணம்  இருந்தது. கன்னியாஸ்திரி ஆகணும் என்பதும் என் லட்சியமா இருந்தது. அதனால்தான் நர்ஸ் படிப்பில் சேர்ந்தேன். என் சொந்த ஊர் திருநெல்வேலி. அப்பா, அம்மா ரெண்டு பேருமே ஆசிரியர்கள். அப்பா நல்லாசிரியர் விருது வாங்கியவர். நான் ஆசைப்பட்ட படிப்பிலேயே என்னை சேர்த்துவிட்டார். திண்டுக்கல்லில் மூன்றரை வருஷம் நர்ஸிங் கோர்ஸ் படிச்சேன். அங்கேயே கொஞ்ச காலம் நர்ஸா வேலை பார்த்தேன்.

சேலம் அரிசிபாளையத்தில் இருக்கிற செயின்ட் மேரீஸ் ஆஸ்பத்திரியில் உள்ள, தொழுநோய் மையத்தில் ஒரு வருஷம் வாலன்டியராக வேலை செஞ்சேன்... அப்போ எனக்கு 23 வயசு.''

''தொழுநோயாளி களுக்கு சேவை செய்யணும்கிற எண்ணம் எப்படி ஏற்பட்டது?''

''பொது நோயாளிகளைப் பார்க்கிறதுக்கு நிறையப் பேர் முன்வருவாங்க. தொழுநோயாளிகளுக்குப் பணிவிடை செய்ய ரொம்பச் சிலர்தான் வருவாங்க. எனக்கு அன்னை தெரசா மீது அதீத நேசமும் மரியாதையும் உண்டு. தொழுநோயாளிகளுக்காக, கடைசி வரை அவங்க சேவை செஞ்சாங்க.  அவரது முழுமையான சேவையில் ஒரு துளியாவது நாம் செய்வோமே என்ற எண்ணம்தான், இதில் ஈடுபடக் காரணம்.

1978-ல் கே.எம்.சி.யில் ஸ்டாஃப் நர்ஸாகச் சேர்ந்தபோது, என்னோட ஸ்பெஷலைஸ்டு ஏரியா, பிரசவ வார்டுதான். இருந்தும், தீக்காயம், ஜெனரல், போஸ்ட் ஆபரேடிவ்-னு எல்லா வார்டுகளிலும் பணியில் இருந்திருக்கேன்.''

''உங்களின் திருமண வாழ்க்கை பற்றி...?''

''நாகர்கோயில் பக்கத்தில் முட்டத்தைச் சுற்றியுள்ள கிராமங்களுக்கு ரெண்டு கன்னியாஸ்திரிகளுடன் போய் இயற்கை முறையிலான குடும்பக் கட்டுப்பாடு பற்றி அந்த மக்களுக்குக் கற்பிக்கிற வேலை பார்த்தேன். அப்புறம்தான் எனக்குக் கல்யாணமாச்சு. என் கணவர் இம்மானுவேல்.  என் சேவைகளில் எனக்கு உறுதுணையா இருக்கார். எனக்கு ரெண்டு மகன்கள். ரெண்டு பேருக்கும் கல்யாணமாயிடுச்சு.''

''பணி நாட்களில் நடந்த, நெகிழ்ச்சியான நிகழ்வு?''

''லட்சக்கணக்கான நோயாளிகள்... ஆயிரக்கணக்கான பிரசவங்கள், ஏராளமான சம்பவங்கள்... எதைச் சொல்ல? ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு விதமான நோய், காயம், வலி, வேதனை. ஒவ்வொருத்தரையும் தொடும்போதே, 'இவங்க நோய் சீக்கிரம் குணமாகணும் ஆண்டவரே!''னு பிரார்த்தனையோடுதான் தொடுவேன்.

மறக்க முடியாத சம்பவம் ஒண்ணு இருக்கு. 15, 20 வருஷத்துக்கு முன்னால், வட சென்னையில் பெட்ரோல் பங்க் ஒன்றில், கோரமான விபத்து நடந்தது.  அன்னிக்கு எங்களுக்கு சம்பள நாள். ஆஸ்பத்திரியில் ஒரு கட்டடத்தில் எங்களுக்கு சம்பளம் தருவாங்க. அப்போதான் அந்தத் தீவிபத்தில் பாதிக்கப்பட்டவங்களை ஆம்புலன்ஸில் கொண்டுவந்தாங்க. உடல் கருகி, பாதி உயிரை மட்டும் கண்ணுல வெச்சுக்கிட்டு, எரிஞ்ச வேதனை தாங்க முடியாமல், எமெர்ஜென்சியில் குவிஞ்சது கூட்டம். சம்பளமாவது, ஒண்ணாவதுனு, எல்லாத்தையும் அப்படியே போட்டுட்டு, நாங்க எல்லாரும் ஓடி, மருந்து போட்டு, காயத்தைத் துடைச்சு, முதல் உதவி பண்ணினோம். வலியால் அவங்க துடிக்கிறதைப் பார்க்கும்போது, ஒரு வாய் தண்ணி கூட தொண்டையில் இறங்கல.  அந்த சம்பவத்தை இன்னிக்கு நினைச்சாலும் என்னால் மறக்க முடியாது!''

”அன்னை தெரசாவிடம் ஆசி பெற்றேன்!”

''ஓய்வுக்குப் பிறகு இப்போ உங்க பணி எப்படி இருக்கு?''

''இங்கே நான் கண்காணிப்பாளர் என்பதால், நோயாளிகளுடனான நேரடித் தொடர்பு இல்லை. எல்லா வார்டிலும் நர்ஸ் இருக்காங்களான்னு பார்க்கிறது, ரவுண்ட்ஸ் போறது, நர்ஸ் யாராவது தப்புப் பண்ணினால் தனியே கூப்பிட்டுச் சொல்லித் திருத்துறதுன்னு இதுவும் ஒரு மாதிரி நிறைவாக இருக்கு!''

''சர்வதேச செவிலியர் தினத்தில், சக செவிலியர்களுக்கு நீங்கள் சொல்ல விரும்பும் செய்தி...?''

''அர்ப்பணிப்பு உணர்வோடு செய்யப்படவேண்டிய அற்புதப் பணி இது. எல்லோராலும் இதைச் சுலபமா செஞ்சிட முடியாது! வாழ்க்கையை நோயாளிகளுக்கு சேவை செய்றதுக்காக அர்ப்பணம் செய்ய முடிஞ்சவங்கதான் இந்தப் பணிக்கு முன்வரணும். நேரம், காலம் பார்க்காம வேலை செய்யணும். 'என் டியூட்டி முடிஞ்சிருச்சு’ன்னு ஓடக் கூடாது. வீட்டுக் கோபத்தை நோயாளிகளிடம் காண்பிப்பதோ, எரிஞ்சு விழுவதோ கூடாது. போரில் அடிபட்டு, காயம்பட்டவங்களுக்கு, இருட்டிலும் கையில் விளக்கை ஏந்தியபடி சிகிச்சை அளிச்சவங்க ஃப்ளாரன்ஸ் நைட்டிங்கேல். அவங்களோட பிறந்த நாளைத்தான் செவிலியர் தினமாகக் கொண்டாடுறோம். அவங்களைப் போல எல்லோரும் ஆக முடியாதுன்னாலும், இந்தப் புனிதப் பணிக்கு மரியாதை சேர்க்கும் விதமாக நடந்துக்கணும். பங்க்சுவாலிட்டி, ரெஸ்பான்ஸிபிலிட்டி, லாயல்ட்டி... இந்த மூணும் ஒவ்வொரு நர்ஸுக்கும் கண்டிப்பாகத் தேவை.''

''மிசஸ் பிரிட்டோ!'' என்று அழைப்பு வர, நம்மிடம் விடைபெற்று, வார்டுக்குள் விரைகிறார் அந்த செவிலித்தாய்!

'அன்னை’ காட்டிய வழி!

''மதர் தெரசா சென்னைக்கு வந்திருந்தபோது, அவரைப் பார்க்கக் காத்திருந்தவர்களில் நானும் ஒருத்தி. ஆனால், அவரை நெருக்கத்தில் பார்த்துப் பேசும் வாய்ப்புக் கிடைக்கும் என்று கனவிலும் நினைக்கலை.

''என்ன வேலை செய்கிறாய்?'' என்று கேட்டார். ''நர்ஸ்'' என்றதும், அவரது முகத்தில் அப்படி ஒரு சந்தோஷம். ''கருக்கலைப்புக்கு ஒருபோதும் ஆதரவாக இருக்காதே! நேரம் கிடைக்கும்போதெல்லாம், துன்பப்படும் என் சகோதர, சகோதரியருக்குத் தூணாக இருந்து உதவி செய்!'' என்று புன்னகைத்தபடியே என் தலையில் கைவைத்து ஆசீர்வதித்தார். அன்றிலிருந்து இன்று வரை எண்ணூரில் இருக்கும் 'மதர் தெரசா கான்வென்ட்’டில் தங்கியிருக்கும் மனநலம் குன்றியவர்கள், ஆதரவற்ற முதியோர், குழந்தைகளுக்கு இலவசமாக மருத்துவ உதவிகளை செய்கிறேன்''.

மேலும்...

”அன்னை தெரசாவிடம் ஆசி பெற்றேன்!”

 சுனாமி சமயத்தில், கொல்கொத்தா அன்னை தெரசா இல்லத்திலிருந்து வந்த, அதன் பொறுப்பாளர் மதர் நிர்மலா குழுவினருடன் இணைந்து, நாகப்பட்டினம், வேளாங்கண்ணி பகுதிகளில் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு மருத்துவ உதவிகளைச் செய்திருக்கிறார்.

”அன்னை தெரசாவிடம் ஆசி பெற்றேன்!”

 சென்னை கே.எம்.சி.யில் பணிந்த காலத்தில், 'சிறந்த நர்ஸ்’ விருது வாங்கியவர்.

- பிரேமா நாராயணன்

படங்கள்: ஜெ.வேங்கடராஜ்