Published:Updated:

“வீடுதான் ஜிம்... வேலைதான் வொர்க் அவுட்ஸ்!”

“வீடுதான் ஜிம்... வேலைதான் வொர்க் அவுட்ஸ்!”

பிரீமியம் ஸ்டோரி

மின்னும் கோதுமை நிறம்... சிரிப்பில் சிநேகிதம்... உடையில் நேர்த்தி... என அம்சமான அழகோடு பெரிய திரையில் வலம் வந்து, 'அழகி’ தொடர் மூலம் சின்னத்திரையில் இல்லத்தரசிகளையும் ஈர்ப்பவர் நடிகை விஜி சந்திரசேகர். கோடை மழை விட்ட ஒரு மாலை வேளையில், சென்னை ஆலப்பாக்கத்தில், ஷூட்டிங் இடைவேளையில் சந்தித்தோம். ஃப்ரீ ஹேர், பிங்க் குர்தியில் சின்னப் பெண்ணாக வந்து, ''ஹாய்!'' சொன்னார்.

'கடற்கரை பக்கத்துல வீடு. இயற்கையான காற்று. பிடிச்ச வேலை. நானே ரசிச்சு சமைக்கிற உணவு. உடலுக்கும் மனசுக்கும் தெம்பூட்டும் தோட்ட வேலை. அப்பப்போ ஏதாவது உடம்பு மக்கர் பண்ணா, வீட்டிலேயே செஞ்சுக்கிற கை வைத்தியம். நான் நல்லா இருக்கிறதுக்கு இதைவிட வேறென்ன வேணும்?' என்று ஆரம்பித்தார் உற்சாகமாக.

'ஆரோக்கியத்துக்கு அடுத்தபடியாகத்தான் நான் மத்த எல்லா விஷயத்தையும் பார்க்கிறேன். என் ஆரோக்கியம் மட்டுமில்லை... என் குடும்ப ஆரோக்கியமே என் கையில்தான் இருக்கு. பொதுவா பெண்கள் கல்யாணமாகி, குழந்தை பிறந்ததும், தன்னோட 'வெல்னெஸ்’ பற்றி அதிகம் அக்கறை எடுத்துக்கிறது இல்லை. ரெண்டு குழந்தை பிறந்ததும், ரிலாக்ஸ் ஆயிடறாங்க... தங்களைக் கவனிச்சுக்கிறதே இல்லை. நடுத்தர வயசில் முடி கொட்டி, தோல் சுருங்க ஆரம்பிக்கும். கணவரை விட அதிக வயசான மாதிரி தெரிவாங்க. சரியான சமயத்தில் கவனிக்கலைனா, 'ஏஜிங்’ தடுக்க முடியாமப் போயிடும். அதனால, கணவர்களும் கொஞ்சம் மனைவி மேல அக்கறை எடுத்து, அவங்க ஹெல்த் அண்டு வெல்னஸ்க்கு முக்கியத்துவம் கொடுக்கணும். ஏன்னா, ஒரு குடும்பத்தில் அம்மாவுக்கு முடியலன்னா, குடும்பம் மொத்தமும் டிஸ்டர்ப் ஆயிடும். இது எல்லாமே என் அனுபவத்தில் இருந்து சொல்றேன்.

“வீடுதான் ஜிம்... வேலைதான் வொர்க் அவுட்ஸ்!”

தினமும் குறைஞ்சது அரை மணி நேரமாவது நம்மோட உடல், மன நலனுக்காக ஒதுக்கணும். அமைதியாக உட்கார்ந்து தியானம் பண்ணலாம். பாட்டு கேக்கலாம். ஒரு கப் டீயை ரசிக்கலாம். நமக்கான நேரம் அது. அதுவே, மனக்கவலையை விரட்டி, சந்தோஷமா வைச்சிருக்க உதவும். நான் அப்படித்தான்!'' என்றார் முடியைக் கோதியபடி.

ஷூட்டிங் ஸ்பாட்டில், 'டீ பிரேக்’ அறிவிக்கப்பட, குழுவினர் அனைவருக்கும் ஸ்நாக்ஸ் வந்தது. பேப்பர் தட்டுகளில், சுடச்சுட கடுகு தாளித்த வெங்காயம், மாங்காய் துருவலுடன் அவித்த வேர்க்கடலை.

'ஷூட்டிங் ஸ்பாட்டில் சுண்டலா?' என்று நாம் வியக்க, 'வழக்கமா ஷூட்டிங் ஸ்பாட்ல பஃப்ஸ், சமோசாதான் இருக்கும். 'அதெல்லாம் வேணாம்.. சுண்டல் கொடுங்க... எல்லோருக்குமே உடம்புக்கு நல்லது!’னு நான்தான் மெனுவையே மாத்தினேன்!' என்று சிரித்தவர், தொடர்ந்தார்.

'தூக்கம்தான் நம் மூளைக்கான ஓய்வு. எதைப் பற்றியும் சிந்திக்காம, மனசை நிர்மலமா வைச்சிட்டு தூங்கினால், ஆழ்ந்த, நிம்மதியான தூக்கம் நிச்சயம் வரும். உடம்புக்குப் பலம் தர்ற அற்புத டானிக். நல்ல தூக்கத்துக்கு எனக்கு குறைவே இல்லை. வருஷத்துக்கு ஒரு தடவை, எல்லா வேலைகளையும் ஒதுக்கி வைச்சுட்டு, குடும்பத்தோட எங்கேயாவது ஒரு வாரம் போயிட்டு வருவோம். அதான் ஹெல்த்தியா இருக்கேன். ஒவ்வொரு குடும்பத்துக்கும் இப்படி ஒரு பிரேக் அவசியம்.''  

'உங்கள் உணவுப் பழக்கம் பற்றி?'

'இன்னிக்கு உணவு பத்தின விழிப்பு உணர்வு எல்லாருக்கும் ரொம்பவே இருக்கு. செயற்கை உரம் கலக்காத ஆர்கானிக் காய்கறி, பழங்களைதான் வாங்கி சமைக்கிறேன். அதிகம் எண்ணெய் சேர்க்காத ருசியான சமையல் செய்வேன். ஹோட்டல், ரெஸ்ட்டாரன்டுக்கு அடிக்கடி போற வழக்கம் இல்லை. மாசம் ஒரு முறை போறதே அதிசயம்தான். மத்தபடி, என்னவருக்கும் பிள்ளைகளுக்கும் பிடிச்சதை, வீட்டிலேயே செஞ்சு கொடுப்பேன். என் பிள்ளைகளுக்கும் கடைகளில் விற்கிற சிப்ஸ், சாக்லேட்ஸ், ஸ்வீட்ஸ்னு எதையுமே கொடுத்தது இல்லை. பாரம்பரிய உணவுகளை சாப்பிடப் பழக்கியிருக்கேன். கண்டிப்பாக தினமும் ஒரு கிளாஸ் பால் எடுத்துக்குவேன். நாப்பது வயதில் பெண்களுக்கு கால்சியம் சத்துக் குறையும். எலும்புகள் தேயும். அதை ஈடுகட்ட, பெண்கள் எல்லோருமே பால், தயிர், மோர் சேர்த்துக்கிறது அவசியம்.''

''அப்ப பார்த்த மாதிரியே இருக்கீங்களே... உங்க அழகின் ரகசியம்?''

''ஹேர் டூஸ் பண்றதுக்கு மட்டும்தான் பார்லர் போவேன். மத்தபடி, வீட்டிலேயே பனானா பீல், ஆரஞ்சு பீல்-னு நானே தயாரிச்சு முகத்துக்கு பேக் போட்டு, கடலை மாவு போட்டுக் கழுவுறது, லெமன் ஜூஸ் தடவுறது, தலைக்கு வெந்தயம், தயிர் அரைச்சுத் தேய்ச்சுக் குளிக்கிறதுனு என் வீட்டையே பியூட்டி பார்லரா மாத்திடுவேன். முடிஞ்சவரை நான் பயன்படுத்தற பொருட்கள் எல்லாத்திலுமே கெமிக்கல்ஸ் இல்லாமப் பார்த்துக்குவேன்.''  

“வீடுதான் ஜிம்... வேலைதான் வொர்க் அவுட்ஸ்!”

''உடம்பை 'ஸ்லிம்’மா வைச்சுக்க, நீங்க கடைபிடிக்கிற விஷயம்?''

'ஜிம்முக்குப் போய் வொர்க்அவுட்ஸ் எல்லாம் பண்றது கிடையாது. வீடுதான் நமக்கு ஃபிட்னெஸ் சென்டர். வீட்டு வேலைதான் எனக்கு வொர்க்அவுட்ஸ். தோட்டக்காரர் கிடையாது. தோட்டத்துக்குத் தண்ணீர் விடுறதுல இருந்து, எல்லாப் பராமரிப்பு வேலைகளும் நான்தான் செய்யறேன். வியர்வை வழிய வேலை பார்த்தால், தேவை இல்லாத கொழுப்பு கரைஞ்சு, எடை தன்னால குறைஞ்சு, உடம்பு ஸ்லிம் ஆயிடும்!

மாடி ஏறி இறங்குறது, வீட்ல தூசி இல்லாமல் துடைச்சுவைக்கிறதுனு வேலை இருந்துக்கிட்டே இருக்கும். சிலர் ஆயுத பூஜைக்கு மட்டும்தான் இதெல்லாம் செய்வாங்க. என் வீட்டுல தினசரி ஆயுத பூஜைதான். தினமும் சோபா விரிப்பு, ஜன்னல் கர்ட்டன் எல்லாத்தையும் மாத்தி, தூசி தட்டிப் பெருக்குவேன். அழுக்கு போயிடும்; அழகு வந்திடும். உடல் சுத்தம் அழகைக் கூட்டும். வீட்டு சுத்தம், ஆரோக்கியத்தைப் பெருக்கும்!'' - கண் சிமிட்டிச் சிரிக்கிறார்  ஆரோக்கிய 'அழகி’!

விஜியின் வைத்திய டிப்ஸ்!

“வீடுதான் ஜிம்... வேலைதான் வொர்க் அவுட்ஸ்!”

  ஜலதோஷம், தும்மல் இருந்தால், கொஞ்சம் இஞ்சியும், ஒரு பிடி துளசி இலையும் போட்டுக் கொதிக்க வைச்சு, பாதியாக வற்றியதும், ரெண்டு ஸ்பூன் தேன், கால் ஸ்பூன் லெமன் ஜூஸ் சேர்த்துக் குடிங்க. ரெண்டே நாளில் சரியாயிடும்.

“வீடுதான் ஜிம்... வேலைதான் வொர்க் அவுட்ஸ்!”

  மிளகைக் கொதிக்கவைச்சு, வடிகட்டி தேன் சேர்த்துக் குடிங்க. சளி சட்டென விலகும்.  

“வீடுதான் ஜிம்... வேலைதான் வொர்க் அவுட்ஸ்!”

  நாட்டு மருந்துக் கடையில் 'பாதாம் பிசினி’னு விற்கும். அதை வாங்கி, தண்ணீரில் போட்டுவைச்சு, நல்லா ஊறினதும் 'புசுபுசு’னு வரும். அந்தத் தண்ணியை வடித்துவிட்டு, பாதாம் பிசினியை, பால், சர்க்கரை சேர்த்துக் குடிக்கலாம். ரோஸ்மில்க் சேர்த்தும் குடிக்கலாம். உடல் உஷ்ணத்தால் வர்ற வாய்ப் புண் குணமாகும்.

“வீடுதான் ஜிம்... வேலைதான் வொர்க் அவுட்ஸ்!”

  மோரும், லெமன் ஜூஸ் எவ்வளவு முடியுமோ அவ்வளவு குடிக்கலாம். உடலுக்கு ரொம்பவே நல்லது.

- பிரேமா நாராயணன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு