Published:Updated:

சாமை சோறு... கேப்பைக் களி!

மயில்சாமி அண்ணாதுரை

சாமை சோறு... கேப்பைக் களி!

மயில்சாமி அண்ணாதுரை

Published:Updated:

மிழ் வழியில் பள்ளிப்படிப்பைத் துவங்கி, அரசு கல்லூரியில் பொறியியல் படித்த கிராமத்து மண்ணின் மைந்தன் 'மயில்சாமி அண்ணாதுரை’. உலகமே அண்ணாந்து பார்த்து அதிசயித்த இந்தியா அனுப்பிய முதல் நிலவு விண்கல செயற்கைக்கோளின் திட்ட இயக்குனர்.

'என்னோட ஆரோக்கியத்துக்கு சின்ன வயசுல நான் ஓடியாடி விளையாடின விளையாட்டுக்கள்தான் முக்கியக் காரணம்.

கோயம்புத்தூர் பக்கத்துல ஒரு சின்னக் கிராமத்துல நான் வாழ்ந்த வாழ்க்கையை மறக்கவே முடியாது. நண்பர்கள் எல்லாரும் ஒண்ணா சேர்ந்து குளத்துல சந்தோஷமா ஆட்டம் போடுவோம். குளம் வற்றிப்போச்சுன்னாகூட, குளத்து மண்ணுல பொம்மை உருவங்களைச் செஞ்சு விளையாடுவோம்.  அங்கு நான் படிச்ச பள்ளியில் தினமும் மூணு மணிக்கு விளையாடச் சொல்லிடுவாங்க. இந்த காலப் பிள்ளைங்க கிரிக்கெட், வாலிபால்னு ஒரே விளையாட்டை வருஷம் முழுக்க விளையாடுறாங்க. அப்பல்லாம், திருடன் போலீஸ், கபடி, நுங்கு மட்டை வண்டினு விளையாடுவோம். அதுதான் இப்போ ஆரோக்கியமா இருக்கிறதுக்குக் காரணம்.'

சாமை சோறு... கேப்பைக் களி!

'இடைவிடாத ஆய்வுப் பணிக்கு இடையில் ஓய்வு நேரத்தை எப்படி ஒதுக்கிக்கொள்கிறீர்கள்?'

'ஓய்வுக்கு என்று தனியா நேரம் எதுவும் ஒதுக்கியது இல்லை. என் வீட்டுக்கும், ஆராய்ச்சி மையத்துக்கும் குறைஞ்சது ஒரு மணி நேரத் தூரம் பயணம். அந்த நேரத்தில், பல நல்ல புத்தகங்களோடுதான் என் பயணம் இருக்கும். புத்தகங்கள் மனசுக்கு அமைதியைக் கொடுக்கும். என் பொழுதுபோக்கே புத்தகம் படிப்பதுதான். வருஷத்துக்கு ஒருமுறை குடும்பத்தோட கட்டாயம் சுற்றுலா போயிடுவேன். இதுதான் ஓய்வு.'

'தினசரி உங்களின் உணவுப்பழக்கம் என்ன?'

'கடந்த 30 வருஷமாவே உணவுக் கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்கிறேன். தினமும் காலையில் எட்டு மணிக்குள், இட்லி அல்லது சாமை சோறு, கேப்பைக் களி உருண்டைனு ஏதாவது ஒரு சிறுதானிய உணவு சாப்பிடுவேன். மதியம் குறைஞ்ச அளவு சாதம், சாப்பாத்தி சாப்பிடுவேன். அதோடு, கட்டாயம் ஒரு பூவன் வாழைப்பழம் இருக்கும். இரவு உணவையும் ஏழு மணிக்குள் சாப்பிட்டுவிடுவேன்.'

'உடற்பயிற்சி செய்யும் பழக்கம் உண்டா?'

'கல்லூரியில் படிக்கிறப்ப, ஜிம்முக்குப் போவேன். உடலை ஃபிட்டா வைச்சுப்பேன். இப்ப இருக்கிற மாதிரி நவீன உடற்பயிற்சிக் கருவிகள் அன்னிக்குக் கிடையாது. கிலோ மீட்டர் கணக்குல ஓடுவோம். இப்பவும் தினமும் நடைப்பயிற்சி செய்றேன். வேலை நிமித்தமா ஒரு சிலநாள் நடைப்பயிற்சி போக முடியாமப்போயிடும். அது மாதிரியான சமயங்களில், உடல் பலவீனமாவும், சோம்பலாவும் இருக்கிற மாதிரி உணர்வேன். அதனாலேயே, தினமும் அரை மணி நேரமாவது நடைப் பயிற்சிக்குன்னு ஒதுக்கிடுவேன்.'

'நோயில் இருந்து மீண்டு வந்த நிகழ்வு?'

'இதுவரையும் பெரிய அளவில் பாதிப்பு வந்தது இல்லை. சின்ன வயசில் பல் சொத்தையாகி, தாங்க முடியாத பல்வலி இருந்தது. அப்பல்லாம் இனிப்புன்னாலே வெல்லம்தானே. சாக்லெட் எல்லாம் கிடையாது. வெல்லக்கட்டிய வாயில் ரொம்ப நேரம் அடக்கிப்பேன். அதனால் பல்லுல சொத்தை வந்திடுச்சு. எங்க ஊர்ல ஒரு பெரியவர், வேப்பங்கொழுந்தோடு சில மூலிகைகளைச் சேர்த்து மருந்தா உருட்டித் தந்தார். சட்டுன்னு வலி போயிடுச்சு. அந்தகால கை வைத்தியமே தனிதான்.'

'இப்ப இருக்கும் பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு உங்க அட்வைஸ்?'

'நான் படிச்ச காலத்துல, போட்டிகள் குறைவு. ஆட்கள் குறைவு. ஆனால் இது போட்டிகள் நிறைஞ்ச காலம். அதுக்கேற்ப, வாய்ப்புகளும் அதிகம். திறமையை வளர்த்துக்கிட்டு, தீவிரமா செயல்படுங்க. அதேபோல, பெற்றோர்களும் குழந்தைகள் மேல அவங்களோட விருப்பத்தைத் திணிக்கக் கூடாது. என்கூட பிறந்தவர்கள் அஞ்சு பேர். எல்லார் வீட்டிலும் குழந்தைகள் அதிகம் இருக்கும். கவனிப்பும் அக்கறையும்கூட அதிகமா இருந்தது. இன்னிக்கு ஒன்று இரண்டு குழந்தைகள் இருக்கும் வீடுகளில்கூட கவனிப்பு குறைவாகத்தான் இருக்கு. அது அவங்களோட எதிர்காலத்தையே பாதிக்கவெச்சிடும். அக்கறையான அணுகுமுறைதான் பெற்றோருக்கு அவசியம்.'

ஆரோக்கிய அனுபவம்!

சமீபத்துல வெளி மாநில டூர் போய் இருந்தேன். நான் தங்கியிருந்த நட்சத்திர ஹோட்டலில், 'நீங்க விரும்பி சாப்பிடுவீங்க’ன்னு நம்ம ஊர் களியைக் கொண்டுவந்தாங்க. எதிர்காலத்தில், சிறுதானிய உணவுகளுக்கு நல்ல வரவேற்பு இருக்கும்னு அப்பவே நினைச்சேன். ஆரோக்கியம் பற்றின அக்கறையும் அதிகரிச்சிட்டிருக்கு. ரெடிமேட் உணவுகளைத் தவிர்த்து, நம்ம ஊர் சிறுதானிய உணவுகளை அதிகமா சாப்பிடுங்க. ஆரோக்கியமா இருக்கலாம்.  

- புகழ் திலீபன்