Published:Updated:

சருமத்தைப் பாதுகாக்க

எளிய வழிகள் 8

சருமத்தைப் பாதுகாக்க

எளிய வழிகள் 8

Published:Updated:

சுட்டு எரிக்கும் வெயில், கொட்டும் மழை, குளிர் என மாறி வரும் பருவ நிலைக்கு ஏற்ப, நம்முடைய சருமத்திலும் சகலவிதமான பாதிப்புகள் ஏற்பட ஆரம்பிக்கும். காலச் சூழலுக்கு ஏற்ப உணவு, உடையில் நாம் கவனம்  செலுத்துவது போல், சருமத்தையும் ஆரோக்கியமாக வைத்திருப்பதில் அக்கரை காட்டினால் என்றும் இளமையாக இருக்கலாம்.

''சூரியக் கதிர்வீச்சு, மாசடைந்த காற்று, மாறி வரும் உணவுப் பழக்கம், சரியான பராமரிப்பின்மை போன்ற காரணங்களால் உடல் ஆரோக்கியமும், அழகும் கெட்டுப்போகின்றன. துரிதவகை உணவுகளைத் தவிர்த்து, காய்கறிகள், பழங்கள் மற்றும் சிறு தானியங்கள், உலர் பழங்களை எடுத்துக்கொள்வதன் மூலம் சருமத்தில் பொலிவைக் கூட்டமுடியும் என்கிற எலிகண்ட் பியூட்டி கேர் அழகுக் கலை நிபுணர் சோபியா, சருமத்தைப் பாதுகாக்க கடைப்பிடிக்க வேண்டிய எளிய எட்டு வழிகளைப் பட்டியலிடுகிறார்.

சருமத்தைப் பாதுகாக்க

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

1  ஃபேஷியல்

பழ ஃபேஷியலுக்கு அதிக வரவேற்பு இருக்கிறது. ஃபேஷியல் செய்வதற்கு முன்பு பாலில் சருமத்தை 'க்ளஞ்ச்’ செய்ய வேண்டும். பிறகு பப்பாளியின் விதைகளைக் கொண்டு மென்மையாகத் தேய்க்க  வேண்டும். அதன் பிறகு, முகத்தில் பழங்களால் கீழிருந்து மேலாக மசாஜ் செய்ய வேண்டும். தொடர்ந்து மசாஜ் செய்வதால் முகத்தில் உள்ள சுருக்கங்கள் மறைந்து பொலிவு பெரும். மீதமுள்ள பழங்களைக் கொண்டு முகத்துக்கு குறைந்தது 20 நிமிடங்கள் மாஸ்க் போடலாம். பப்பாளி, ஆப்பிள் மற்றும் அவகேடோ பழங்களை அதிகம் பயன்படுத்த வேண்டும்.  இதுபோன்ற பழங்களைக் கொண்டு மாதம் ஒரு முறை ஃபேஷியல் செய்தால் முகம் பளிச்சென மாறும்.  

2   சன் ஸ்க்ரீன் லோஷன்

சூரியக்  கதிர்களில் இருந்து தற்காத்துக்கொள்ள அறிமுகப்படுத்தப்பட்டதே சன் ஸ்க்ரீன் லோஷன். இந்த லோஷனைப் பயன்படுத்துவதன் மூலம் சருமத்தின் உண்மையான நிறத்தைத் தக்கவைத்துக்கொள்ளமுடியும். சன் புரோடக்ஷன் ஃபேக்டர் (எஸ்.பி.எப்.) அளவு 30-க்கும் மேல் இருக்க வேண்டும். அப்படி இருந்தால்தான் நம் சருமத்துக்குச் சரியான பலனைக் கொடுக்கும். இதை மூன்று மணி நேரத்துக்கு ஒரு முறை உபயோகப்படுத்த வேண்டும்.வெளியில் சென்றுவிட்டு வந்த ஒவ்வொரு முறையும், முகத்தைக் குளிர்ந்த நீரால் கழுவி பருத்தி துணியால் மெதுவாகத் துடைக்க வேண்டும்.

3  கருவளையம்

சருமத்தைப் பாதுகாக்க

கண்களைச் சுற்றியுள்ள தோல் மிகவும் மென்மையானது. இது எளிதில் பாதிப்படையக்கூடும்.  தூக்கமின்மை மற்றும் டென்ஷன் காரணமாக கண்ணுக்குக் கீழ் கருவளையம் ஏற்படுகிறது. கண்களுக்கு அழகு சேர்ப்பதற்காகப் பயன்படுத்தப்படும் காஜல், கண் மை போன்றவை தரமற்றதாக இருந்தாலும்,  கருவளையம் வருவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. கூடுமானவரை இயற்கையாகத் தயாரிக்கப்படும் கண் மையைப் பயன்படுத்துவது நல்லது. அது கண்களுக்குக் குளுர்ச்சியையும் தந்து, சோர்வையும் போக்கும்.

குறைந்தது 6 முதல் 8 மணி வரை தூங்க வேண்டும். உடலும் மனமும் புத்துணர்ச்சியாக இருக்கும், சருமம் தொங்கிப் போகாமல் இருக்கும். கருவளையம் முற்றிலுமாக நீங்க, சத்தான உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். தினமும் தூங்கச் செல்வதற்கு முன்பு கண்களைக் குளிர்ந்த நீரினால் கழுவி, விளக்கெண்ணெயைத் தடவ வேண்டும். நாளடைவில் கருவளையம் காணாமல் போகும்.  

4    முகம் பொலிவு பெற

சருமத்தைப் பாதுகாக்க

தேன், உடல் நலத்துக்கு மட்டுமின்றி, சருமப் பாதுகாப்புக்கும் முக்கியப் பங்களிக்கிறது. தேன் மற்றும் எலுமிச்சைப் பழச் சாறை ஒன்றாகச் சேர்த்து முகத்துக்கு மாஸ்க் போட வேண்டும். குறைந்தது 10 முதல் 20 நிமிடம் வரை அப்படியே வைத்திருக்க வேண்டும். இது முகத்தில் இருக்கும் அழுக்குகளை நீக்கி சருமத்தை ஜொலிக்க வைக்கும். மிதமான வெந்நீரில் தேன் கலந்து எலுமிச்சைச் சாறு சேர்த்து காலையில் வெறும் வயிற்றில் குடித்துவர, உடல் எடை குறைவதுடன் ரத்தம் சுத்தமாகும். கொழுப்பும் நீங்கும். முகமும் மலர்ச்சியாக மாறும்.

5  உதட்டில் வெடிப்பு

சருமத்தைப் பாதுகாக்க

வெயில், பனி காலங்களில் பலருக்கும் உதடு வெடித்து வறண்டு போகலாம். இது அழகையே கெடுத்து விடுகிறது. சிலருக்கு உதடு கருத்தும் காணப்படும். இந்தப் பிரச்னைக்களுக்கு எல்லாம் தீர்வாக பெண்களின் பைகளில் இருப்பது, 'லிப் பாம்’ லோஷன். செயற்கையான முறையில் தயாரிக்கப்படும் லிப் பாம் தற்காலிகத் தீர்வுதான். இயற்கை முறையில் புதினா மற்றும் கொத்தமல்லி சாறை உதடுகளில் மீது தடவிவர உதட்டின் கருமை மறைந்து, வறட்சியும் போகும். எந்தவிதமான தீங்கும் இருக்காது.  இதேபோல், பழங்களின் சாறுகளை தினமும் உதடுகளில் தடவிவர உதட்டின் நிறம் மாறி ஈரப்பதத்துடன் அழகாகனத் தோற்றம் பெறும்.

6  மரு நீங்க

சருமத்தைப் பாதுகாக்க

பலரும் பார்க்கும் வண்ணம் சங்கு போன்ற கழுத்தில் சிலருக்கு சிறுசிறு மருக்கள் தோன்றி அழகைக் கெடுத்துவிடும்.  இதனால், நகைகளைப் பயன்படுத்துவதிலும் சிரமம் இருக்கும். இந்தச் சிறிய மருக்களை நீக்கும் தொழில் நுட்பமே வாட்ஸ் ரிமூவிங் (watts removing). இதற்கு என்று தனியாக ஒரு கருவி உண்டு.  அதனைக் கொண்டு, ஒவ்வொரு மருவாக எடுத்துவிடலாம். மீண்டும் அந்த இடத்தில் மரு வராது. ஒரு மருவை எடுக்க ரூ.50 முதல் 100 வரை செலவாகும். இந்த மருக்களை நீக்குவதற்கு முன்பு, மிகவும் லேசான மயக்க மருந்து கொடுக்கப்படுகிறது.

7  தழும்பும் / தேமலும்

சருமத்தைப் பாதுகாக்க

நகங்களால் ஏற்படும் கீறல், பருக்களைக் கிள்ளுதல் போன்றவற்றால், முகத்தில் தழும்புகள், கரும்புள்ளிகள் ஏற்படுகின்றன. இவை அழகையும், சருமத்தையும் வெகுவாகப் பாதிக்கும். பருக்களைக் கிள்ளுவதைத் தவிர்ப்பதன் மூலம் தழும்பு வராமல் தடுக்கலாம். அதோடு, அதிக ரசாயன அழகுசாதனங்களைத் தவிர்த்து, அவரவர் சருமத்துக்கு ஏற்ற இயற்கை அழகுப் பொருட்களையே உபயோகிக்க வேண்டும். சிலருக்கு முகத்தில் தேமல் இருக்கும். அவர்களுக்காகவே, பார்லரில் ஒரு 'பிரத்யேக ஜெல்’ பயன்படுத்தி, 'கெமிக்கல் பீலிங்’ செய்யப்படுகிறது. தொடர்ந்து 5 முதல் 7 முறை இந்த பீலிங் செய்துவர முகத்தில் உள்ள தேமல் நீங்கிவிடும்.

8  முகத்தில் முடி

இன்று, பல பெண்களுக்கு உதட்டின் மேல் பகுதி, தாடை... போன்ற பல பகுதிகளில் முடி வளருகின்றன. இதற்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும், சிறுவயதில் சருமத்தைச் சரிவர, பராமரிக்காததன் விளைவும் ஒரு காரணம். இதற்கு நிரந்தரத் தீர்வு லேசர் சிகிச்சை ஒன்றுதான். லேசர் சிகிச்சை மூலம், முகத்தில் உள்ள முடியை வேரோடு நீக்கிவிடலாம். சிலநாள் இடைவெளிக்குப் பிறகு மீண்டும் இதுபோல ஒரு லேசர் சிகிச்சை செய்து கொள்ளவேண்டும். 5 முதல் 7 முறை இந்தச் சிகிச்சை செய்து வர, முகத்தில் உள்ள அனைத்து முடிகளும் நிரந்தரமாக மறைந்துவிடும்.

- இ.லோகேஸ்வரி

படங்கள்: தி.குமரகுருபரன் மாடல்: காயத்திரி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism