Published:Updated:

அடக்கினால் ஆபத்துதான்!

சிறார்களின் சிறுநீரகப் பிரச்னைகள்...

ன்று யு.கே.ஜி. படிக்கும் அஸ்வினிக்கு திடீரென்று காய்ச்சல். அனலாய்க் கொதித்தது. டாக்டரிடம் அழைத்துச் சென்று காட்டி மாத்திரை மருந்து கொடுத்தும் சரியாகவில்லை. உடனே ரத்தம் மற்றும் சிறுநீர்ப் பரிசோதனை செய்துவரும்படி பரிந்துரைத்தார் டாக்டர். பிறகுதான் அந்தப் குழந்தைக்கு சிறுநீரகப் பாதை தொற்று இருப்பது தெரியவந்தது.  

ஏன் இந்த வயதிலேயே சிறுநீரகப் பாதை நோய்த் தொற்று? என்று விசாரித்தபோதுதான் தெரிந்தது,  பள்ளிக்கூடத்தில் டாய்லெட் செல்ல  விருப்பம் இல்லாமல் சிறுநீரை அடக்கியிருக்கிறாள் அஸ்வினி. ரொம்ப அவசரம் என்றால் மட்டுமே, பள்ளிக்கூட டாய்லெட்டைப் பயன்படுத்தியிருக்கிறாள். அஸ்வினியைப் போல ஏராளமான சிறுவர் சிறுமியர் சிறுநீர் கழிக்காமல் அடக்கிக்கொள்ளப் பழகிவிட்டனர். இதனால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைப் பற்றி திருப்பூரைச் சேர்ந்த குழந்தைகள் நல மருத்துவர் பிரியா விசுவாசத்திடம் கேட்டோம்.

அடக்கினால் ஆபத்துதான்!

''சிறுநீரகப் பாதை நோய்த்தொற்று இருபாலாருக்குமே வரக்கூடிய பிரச்னைதான். ஆனால், ஆண் குழந்தைகளைக் காட்டிலும் பெண் குழந்தைகளுக்குதான் இந்தப் பிரச்னை அதிகம் வர வாய்ப்பு உண்டு. அதிலும், ஒரு வயது நிரம்பிய பெண் குழந்தைகளுக்குச் சிறுநீர் பாதை நோய்த்தொற்று ஏற்படும் வாய்ப்புகள் மிக அதிகம். சளி, இருமலைப் போன்று இந்தப் பாதிப்பு வெளிப்படையாகத் தெரியக்கூடியது அல்ல என்பதால், கவனமாக இருக்கவேண்டும்.

தொடர் காய்ச்சல், வாந்தி, அடிக்கடி சிறுநீர் கழிப்பது, சிறுநீர் கழிக்கும்போது வலி, எரிச்சல் ஏற்படுதல், சிறுநீர் மஞ்சள் நிறமாக வெளியேறுதல், சிறுநீர் நாற்றம் வீசுதல் போன்ற அறிகுறிகள் இருந்தால், உடனடியாக குழந்தையை மருத்துவரிடம் அழைத்துச்சென்று பரிசோதிக்க வேண்டும்.

பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள் வகுப்பு நேரங்களில் சிறுநீர் வரும்போது அடக்கிவைத்திருத்தல், இடைவேளை நேரங்களில்கூடச் சிறுநீர் கழிக்காமல் இருப்பது போன்ற காரணங்களும் சிறுநீரகப் பாதிப்பை ஏற்படுத்திவிடும். இதனால், ஆறு முதல் ஏழு வயது குழந்தைக்கும் சிறுநீரகத்தில் கல் உருவாகலாம்.  இது தவிர, 'நெப்ரிடிக் சின்ட்ரோம்’ (Nephritic syndrome) எனப்படும் சிறுநீரகக் கோளாறு மற்றும் வீக்கம் ஏற்படவும் வாய்ப்பு உண்டு. இதன், அறிகுறிகளாக அடிக்கடி சிறுநீர் வெளியேறுதல், சிறுநீரின் நிறம் மாறி இருத்தல், கால் மற்றும் முகத்தில் வீக்கம் போன்றவை ஏற்படலாம். இதுபோன்ற பிரச்னைகள் வராமல் தடுக்க கழிப்பறை சுகாதாரமாக இருப்பது மிகமிக அவசியம்.

பெண் குழந்தை மலம் கழித்த பிறகு கழுவிவிடும்போது முதலில் முன் பக்கமாகத் தண்ணீரை ஊற்ற வேண்டும். பின்புறத்திலிருந்து கழுவிவிடும்போது பீய்ச்சி அடிக்கப்பட்ட தண்ணீரானது முன்னோக்கிச் சென்று, பெண்ணின் பிறப்பு உறுப்பில் படுவதற்கான வாய்ப்பு அதிகரிக்கிறது.  இதனாலும், சிறுநீர்ப் பாதையில் நோய்த் தொற்று ஏற்படக்கூடும். குழந்தைகளுக்கு இறுக்கமான உள்ளாடை அணிவிப்பதைத் தவிர்க்க வேண்டும். பருத்தி ஆடைகளை அணிவித்தலே நலம்.

ஒவ்வொரு முறை கழிப்பறைக்குப் போய்விட்டு வந்ததும், கைகளைச் சுத்தமாகக் கழுவிக்கொள்ள குழந்தைகளுக்கு அறிவுறுத்தவேண்டும். ஐந்து வயதுக்கு மேல் உள்ள குழந்தைக்கு தினமும் இரண்டு லிட்டர் குடிநீரை குடிக்கப் பழக்கப்படுத்த வேண்டும். சிறுநீரக பாதை நோய்த்தொற்றோ, கல் பிரச்னையோ ஓரிரு நாட்களில் குணமாகிவிடக்கூடியவை அல்ல. தொடர் மருத்துவக் கண்காணிப்பில் இருப்பது அவசியம்.  முழுவதுமாக குணமடைய ஒருசில வாரங்கள் தேவைப்படும். மருத்துவர்களுக்கு முழுமையான ஒத்துழைப்பு கொடுத்து அவர்கள் தரக்கூடிய மருந்துகளை முழுமையாக முறைப்படி உட்கொண்டால், சிறுநீரகப் பிரச்னையைச் சீக்கிரத்திலே தீர்க்கலாம்' என்றார்.

கவனம் கொள்ளுங்கள் பெற்றோர்களே!

- தி.ஜெயப்பிரகாஷ்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு