Published:Updated:

நோய்க்கு நோ என்ட்ரி!

ஆர்கானிக் ஃபுட்

நோய்க்கு நோ என்ட்ரி!

'ணவே மருந்து’ என்பது போய் இன்று மருந்துகளையே உணவாக உட்கொள்ளும் காலத்தில் இருக்கிறோம். மூன்று வயது குழந்தைக்கு மூக்குக்கண்ணாடி, 25 வயதில் இதய நோய், 30 வயதில் மூட்டு வலி என அனைவருமே ஏதோ ஒரு நோயை சுமந்து திரிகின்றனர். உண்ணும் உணவே பெரும்பாலான நோய்களுக்கு நுழைவாயில் என்ற நிலையில் உணவின் மீது நாம் மிகுந்த அக்கறை செலுத்த வேண்டியது அவசியம்.

''உணவு என்பது வெறுமனே பசியைத் தணிக்கும் ஏற்பாடு அல்ல. அதுதான் நம் உடல்

நோய்க்கு நோ என்ட்ரி!

இயங்குவதற்குத் தேவையான சக்தியை அளிக்கிறது. உணவு தரமாக இல்லை என்றால், உடலும் தரமற்றுப் போகும். அதன் விளைவுதான் நோய்கள். இந்தப் பிரபஞ்சத்தில் மனிதர்கள் உள்ளிட்ட அனைத்து உயிரினங்களின் உணவுத் தேவையைப் பூர்த்தி செய்வது தாவரங்கள்தான். ஆனால், எல்லா உயிர்களும் எல்லா தாவரங்களையும் உண்ணுவது இல்லை. மாடுகளுக்கு பிடித்த வைக்கோலை நாய்கள் சீண்டுவது இல்லை. நாய்களுக்குப் பிடித்த எலும்புத் துண்டுகளை மாடுகள் தொடுவதும் இல்லை. இப்படி அனைத்து உயிர்களும் தனித்த உணவு நாகரிகத்தைக் கொண்டுள்ளன. ஒன்றை இன்னொன்று சார்ந்து உள்ளன. இதுதான் உணவுச் சங்கிலி'' என்கிறார் சித்த மருத்துவர் கு.சிவராமன்.

கடந்த கால் நூற்றாண்டுக்கும் மேலாக, அதிக உணவுத் தேவையாலும், அதீத ஆசையாலும் பூமி எங்கும் ரசாயன உரம் கொட்டப்பட்டது. அதன் வீரியம் தாங்காமல் ஏராளமான நுண்ணுயிர்கள் செத்து ஒழிந்தன. உண்மையில் இந்த நுண்ணுயிர்கள் தான் தாவரங்களுக்குத் தேவையான சத்துக்களை வழங்கக்கூடியவை. அவற்றை அழித்துவிட்டால் அப்புறம் செடிக்கு சத்து எங்கிருந்து வரும்? இப்படியாக நமது பாரம்பரிய விவசாய முறை அழிக்கப்பட்டு, அந்த இடத்தில் பூச்சிக்கொல்லி மற்றும் ரசாயன உரங்கள் ஆக்கிரமித்துவிட்டன. இது நமக்குத் தெரிந்த கதைதான். இந்நிலையில் ஆரோக்கியமான உணவுப் பொருட்களுக்கு நம்மிடம் எஞ்சியிருக்கும் ஒரே வழி, ஆர்கானிக் உணவுப்பொருட்கள் தான்.

நோய்க்கு நோ என்ட்ரி!

அவசியம் தேவை ஆர்கானிக் ஃபுட்!

''உடலுக்கு அதிக ஊட்டச்சத்துக்களையும், நோய் எதிர்ப்பு சக்தியையும் கொடுத்து வரும் சிறுதானிய வகைகளில் கம்பு, கேழ்வரகு, சாமை, சோளம், குதிரைவாலி, தினை மற்றும் துவரை, மொச்சை, கொள்ளு, பாசிப்பயறு போன்ற பயறு வகைகள் முக்கியமானவை. இவற்றைத் தொடர்ந்து சாப்பிடும்போது சர்க்கரை நோய், புற்றுநோய், இதயநோய் வராமல் தடுக்கப்படுகின்றன. ரத்த நாளங்கள் வலுப்பெறுகின்றன. நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. ஆனால், மக்களின் மனநிலை உடனடி பயன்பாட்டுக்கு பழகியுள்ளது. காய்ச்சல் வந்தால் ஒரு மாத்திரை போட்ட பத்தாவது நிமிடத்தில் அது போய்விட வேண்டும். ஃபேஸ்புக்கில் ஒரு புகைப்படத்தை பதிவேற்றினால் உடனடியாக அதற்கு லைக்ஸ் விழ வேண்டும். எல்லாமே உடனே நடக்க வேண்டும். ஆனால், இயற்கை உணவுகளிடம், இப்படி சுவிட்ச் போட்டதும் லைட் எரிவதைப் போன்ற பலனை எதிர்பார்க்க முடியாது; எதிர்பார்க்கவும் கூடாது. அது மெதுவாகத்தான் நடக்கும். அதுதான் சரியானதும்கூட! தொடர்ந்து ஓர் ஆண்டு இயற்கை உணவுகளைச் சாப்பிட்டால் ஏற்படும் உடல் மாற்றங்களை நீங்களே உணரலாம்'' என்கிறார் சிவராமன்.

எங்கு கிடைக்கும்?

முன்பு போல இல்லை. சென்னை போன்ற நகரங்களில் இன்று ஓர் ஏரியாவுக்கு ஒரு

நோய்க்கு நோ என்ட்ரி!

கடையிலாவது ஆர்கானிக் உணவுப் பொருட்களை விற்கின்றனர். இதர ஊர்களிலும் மெள்ள மெள்ள இவை வந்துகொண்டுஇருக்கின்றன.

சென்னை - தி.நகரில் 'தான்யா’ என்ற பெயரில் ஆர்கானிக் பொருட்களை விற்பனை செய்து வருகின்றனர் தென்றல் - மதுசூதனன் தம்பதியினர்.

''நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இந்தக் கடையை ஆரம்பிச்சோம். ஆரம்பத்தில் பழங்கள், காய்கறிகள் மட்டும்தான் விற்றோம். இப்போ தினை, சாமை, வரகு, மாப்பிள்ளை சம்பா, குதிரைவாலி... இப்படி அரிய சிறுதானியங்களையும் விற்பனை செய்யறோம். மக்கள்கிட்ட நல்ல வரவேற்பு இருக்கு. உணவுப் பொருட்கள் மட்டும் இல்லாம சோப்பு, ஊதுவத்தி, வாசனை திரவியங்கள்... இப்படி இயற்கையோட ஒன்றிய பல பொருட்களைக் கொண்டு வந்திருக்கோம். பொருட்களைக் கொடுக்கிற கவர்கூட பயோ பிளாஸ்டிக்தான்'' என்றவர்கள், ''பாலிஷ் செய்யப்பட்ட அரிசி, கோதுமை, ரவை எல்லாம் 3-4 மாதங்கள் ஆனாலும் ஃப்ரெஷ்ஷா இருக்கும். ஆனால், இயற்கை உரத்தில் தயாரிக்கப்படும் தானியங்களை ஒன்றரை மாதத்துக்கு மேல் வைத்திருந்தால் வண்டு, பூச்சி வர ஆரம்பிச்சுடும். வேப்பிலையை வைத்தால், அவை ஓடிவிடும்'' என்று டிப்ஸும் தந்தனர்.

ஆர்கானிக் பொருட்களை 'வேர்’          (vaerorganic.com ) என்ற ஆன்லைன் ஸ்டோர் மூலமாக விற்பனை செய்து வருபவர் ஸ்ரீராம். ''நான் இந்த ஆன்லைன் ஆர்கானிக் ஃபுட் ஸ்டோர் ஆரம்பிச்ச ஒரு வருஷத்துல சுமார் 150 கடைகள் புதுசா வந்துடுச்சு. மக்களிடம் நிறைய விழிப்பு உணர்வு வந்திருக்கு'' என்கிறார்.

''விலை அதிகமா இருக்கே!''

நோய்க்கு நோ என்ட்ரி!

''ஆர்கானிக் பொருட்கள் விலை அதிகமா இருக்கு'' என்பது பொதுவாக மக்கள் சொல்வது. அது உண்மைதான். ஒரு கிலோ சாதாரண அரிசி 50 ரூபாய் என்றால் ஆர்கானிக் அரிசி 80 ரூபாய் அளவில் விற்கப்படுகிறது. இப்படி எல்லா பொருட்களுமே விலை அதிகம்தான். இதற்குக் காரணம், ஆர்கானிக் விவசாயம் அதிகம் செலவு பிடிக்கக்கூடியதாக உள்ளது. அதை ஈடுகட்ட விலை அதிகமாக நிர்ணயிக்க வேண்டியுள்ளது. ஒருவேளை மக்கள் ஏகோபித்த ஆதரவு தந்து ஏராளமானோர் ஆர்கானிக் உணவை நோக்கித் திரும்பினால் இயற்கை விவசாயத்தின் பரப்பளவும், உற்பத்தியும் அதிகரிக்கும். அதன்பிறகு விலையும் குறையும். ''மருந்து, மாத்திரைக்கு செலவழிப்பதைவிட, இதற்கு செலவு செய்யலாம்'' என்பது பலரது கருத்து.

எப்படிக் கண்டறிவது?

இது பலருக்கு இருக்கும் சந்தேகம். 'இது ஆர்கானிக் வாழைப்பழம்’ என்று சொல்லி கூடுதல் விலைக்கு விற்கிறார்கள். விலை பிரச்னை இல்லை என்று வாங்கலாம். ஆனால், அது ஆர்கானிக் தான் என்பதை எப்படி உறுதிப்படுத்துவது? இது கொஞ்சம் சிக்கலானதுதான். வாங்குவதற்குத் தேர்வு செய்யும் கடை நம்பகமானதாக இருக்க வேண்டும் என்பது ஒரு பொதுவான அறிவுரை. அதுபோக சில அடிப்படை வேறுபாடுகளும் உள்ளன. செயற்கை உரம் போட்டு வளரும் காய்கறிகளும் பழங்களும் பார்ப்பதற்கு அளவில் பெரியதாக இருக்கும். பளபளப்பாக மின்னும். இயற்கை முறையில் விளைந்தவை இதற்கு நேர்மாறாக இருக்கும். அளவில் சிறியதாகவும் பளபளப்பு இல்லாமலும், பகட்டு இல்லாத கதர் ஆடை அணிந்த மனிதரை போல இருக்கும். இயற்கை முறையில் விளைந்த தக்காளி, கத்திரிக்காய் போன்றவற்றில் துளைப் புழுவால் சின்னச் சின்ன ஓட்டைகூட இருக்கும். அவற்றில் சிறு புழுக்கள் இருந்தாலும் அவற்றால் தீமை இல்லை. புழுவை நீக்கிவிட்டு அலசிச் சாப்பிடலாம்.

தேவை... விழிப்பு உணர்வு!

முன்பைவிட இப்போது விழிப்பு உணர்வு அதிகரித்து வருவது ஆரோக்கியமான அம்சம்தான். பொருட்களை வாங்குவதில் மட்டுமல்ல... நவீன தலைமுறையினர் பலர் இயற்கை விவசாயத்தில் ஈடுபடுவதிலும் ஆர்வம் கொண்டுள்ளனர். ஆர்கானிக் உணவுப் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளை நடத்துபவர்களில் 90 சதவிகிதம் பேர் இளைஞர்கள் மற்றும் படித்தவர்கள் என்பதில் இருந்தே இதை உணர்ந்துகொள்ளலாம். எனினும் அதிகரித்து வரும் நோய்களை ஒப்பிடும்போது இந்த விழிப்பு உணர்வின் அளவும், வேகமும் நமக்குப் போதாது. இது இன்னும் விரைவுப்படுத்தப்பட வேண்டும்.

ஆர்கானிக் உணவுப் பொருட்கள்தான் ஆரோக்கியத்தின் சாவி என்பதை நாம் ஒவ்வொருவரும் உணர வேண்டும்!

- ரேவதி  படங்கள் : ச.இரா.ஸ்ரீதர்,  தி.குமரகுருபரன்