Published:Updated:

நடிப்பும் எனக்கு விளையாட்டு தான்!

நடிப்பும் எனக்கு விளையாட்டு தான்!

பிரீமியம் ஸ்டோரி

'வெண்ணிலா கபடி குழு’ படத்தில் கபடி வீரனாகக் களம் இறங்கி, 'முண்டாசுப்பட்டி’யில் 80-களின் புகைப்படக் கலைஞராக, தனக்கென தனிப்பாதையை உருவாக்கி வளர்ந்துவரும் நடிகர் விஷ்ணு. விளையாட்டில் அதிக ஈடுபாடு கொண்ட விஷ்ணுவின் ஆரோக்கியம், ஃபிட்னெஸ் ரகசியங்களை அறிந்து கொள்ளும் ஆர்வத்தோடு நலம் விசாரித்தோம்.

''அடிப்படையில் நான் ஒரு கிரிக்கெட் வீரர். அதுக்கு அப்புறம்தான் நடிப்பு  எல்லாமே. 10-ம் வகுப்பு படிக்கறப்ப கிரிக்கெட்ல ரொம்ப தீவிரமா இறங்க ஆரம்பிச்சேன். என் கனவு இந்தியன் டீம்ல சேரணுங்றதுதான். படிப்படியா முன்னேறி ஸ்டேட் லெவல் டீமில் சேர்ந்து, ரஞ்சி கோப்பை, டி20-னு விளையாடி இருக்கேன். டோனி, யுவராஜ் சிங், பாலாஜி. அஸ்வின், விஜய் எல்லாருடனும் கிரிக்கெட் விளையாடியிருக்கேன். கிரிக்கெட்டில் எனக்கு நெருங்கிய நண்பர்களும் அவங்க தான். இப்பவும் நான் நடிச்ச படங்களைப் பார்த்துட்டு போன் பண்ணிப் பேசுவாங்க.'

'கிரிக்கெட் ஸ்டாராகும் நேரத்தில் சினிமாவுக்குள் வந்தது ஏன் பாஸ்?'

'சினிமாவுக்குள் நுழையறதுக்கு முன்னாடிதான் தமிழ்நாடு கிரிக்கெட் டீம்ல சேர்ந்தேன்.  விளையாடறப்ப, எதிர்பாராத விதமா கால் முட்டியில பயங்கர அடி!  ஆறுமாசம் பெட் ரெஸ்ட். அதுக்கப்புறம் தொடர்ந்து ஆட முடியாதுங்கற நிலைமை. எனக்கும் கிரிக்கெட்டுக்குமான அந்தப் பிரிவில், மனசளவில் ரொம்பவே கஷ்டப்பட்டேன். திரும்பவும் எனக்கு கால் சரியாகி வருவதற்குள், எங்க அணியில் புது முகங்கள் வந்து, வாய்ப்புகள் கை நழுவிப் போயிடுச்சு!

அதுக்கப்புறம், வேறு எதிலுமே என்னால் கவனம் செலுத்த முடியலை. என்னோட பெரியப்பா சினிமாவுல இருந்தார். அவர்தான், 'சினிமாவில் முயற்சி பண்ணு, கண்டிப்பா உனக்கு வாய்ப்பு கிடைக்கும்’னு ஊக்கப்படுத்தினார். எனக்கு நடிக்கணும்னு எந்த ஆசையும் ஆரம்பத்தில் இல்லை... ஆனா, தொடர்ச்சியா நிறைய படங்கள் பார்த்தேன். அந்தப் பாதிப்புதான் என்னையும் சினிமா பக்கம் தள்ளுச்சுன்னு சொல்லலாம். ஆரம்பத்துல வாய்ப்பு எதுவும் கிடைக்காம, ரொம்பவே சிரமப் பட்டேன். ஒரு கட்டத்துல, சினிமா ஆசையையும் மூட்டை கட்டிட்டு, மனசே இல்லாம நான் படிச்ச எம்.பி.ஏ. துறை சார்ந்த வேலைக்குப் போனேன். வேலையில் சேர்ந்த 20-வது நாள் 'வெண்ணிலா கபடி குழு’ பட வாய்ப்பு வந்தது. நம்பிக்கையோடு, சினிமா வாழ்க்கைக்குள் மீண்டும் நுழைஞ்சிட்டேன்.'

நடிப்பும் எனக்கு விளையாட்டு தான்!

'உங்க 'ஃபிட்னெஸ்’ ரகசியம்...?'

'சொன்னா நம்ப மாட்டீங்க. நான் ஜிம் பக்கமே போறது இல்லை. ஆனா, ரன்னிங் போவேன். உணவுக் கட்டுப்பாடு எல்லாம் எதுவும் கிடையாது. நல்லா சாப்பிடுவேன். வெயிட் அதிகமான மாதிரி தெரிஞ்சதுனா, அன்னைக்கு மட்டும் கொஞ்சம் அதிகமாவே ரன்னிங் போவேன். எல்லாருமே நடைப்பயிற்சி, ரன்னிங் போறது உடம்புக்கு நல்லது.

அடுத்து கிரிக்கெட்டை மையமா வெச்சுத் தயாராகிட்டு இருக்கிற படத்துல தான் நடிச்சிக்கிட்டு இருக்கேன். ஆரம்பத்துல பட்ட காயத்துனால மூட்டுப் பகுதியில் இன்னும் வலி, பாதிப்பு இருக்கு.  ஆனாலும் படத்துக்காக காலையும், உடலையும் தயார்ப்படுத்திட்டு இருக்கேன்.'

'சி.சி.எல் கிரிக்கெட் அனுபவம் எப்படி இருந்தது?'

'விளையாட்டில், சி.சி.எல். தான் எனக்கு இன்னொரு வாழ்க்கையைத் தந்துச்சுன்னு கூடச் சொல்லலாம். நிறைய சினிமா நண்பர்களையும் கொடுத்துச்சு. என் விளையாட்டைப் பார்த்துட்டு ரஜினி சார் பாராட்டினார். ஆர்யா, விஷால் எல்லாம் நெருங்கிய நண்பர்களாக மாறக் காரணம் கிரிக்கெட்தான். உண்மையிலேயே மனசுக்கு ரொம்பச் சந்தோஷமா இருக்கு. வாழ்க்கையில் நான் ஆசைப்பட்ட கிரிக்கெட், சினிமா ரெண்டுமே எனக்குக் கிடைச்சிடுச்சு... இதைவிட, வேற என்ன சந்தோஷம் வேணும்!'

'மைதானங்களில் கிரிக்கெட் விளையாடாமல், வீட்டிலேயே வீடியோ கேமில் கிரிக்கெட் விளையாடும் குழந்தைகளுக்கு உங்க அட்வைஸ் என்ன?'

'நான் ஸ்கூல் படிக்கிறப்ப, எங்கெல்லாம் காலி கிரவுண்ட் இருக்குன்னு தெரு தெருவா தேடிப் போய் மழை, வெயில்னு பாக்காம விளையாடுவோம். லீவு விட்டாப் போதும். எதிர் வீடு, பக்கத்து வீட்டு ஜன்னல் கண்ணாடியெல்லாம் கண்டிப்பா உடையும். ஆனா, இப்ப இருக்கற பிள்ளைங்க, வெளியில் விளையாடறதுல ஆர்வம் காட்டறதே இல்லை. நொறுக்கு தீனியைக் கொறிச்சபடியே, வெறித்தனமா வீடியோ கேம் விளையாடறாங்க. இதனால்தான், குழந்தைகளுக்குகூட ஒபிசிட்டி பிரச்னை வருது. இதைத் தவிர்த்தும் சிலர் விளையாடுறாங்க... அதுவும் பெரும்பாலும் இன்டோர் கேம்ஸ்தான். நல்லா வியர்க்க விறுவிறுக்க விளையாடணும். குழந்தைகளை விளையாடச் சொல்லி பெற்றோர்களும் ஊக்குவிக்கனும். அதுதான் அவங்களோட ஆரோக்கியத்துக்கும், எதிர்கால வாழ்க்கைக்கும் நல்லது.'

விஷ்ணுவின் வெற்றி டிப்ஸ்...

நடிப்பும் எனக்கு விளையாட்டு தான்!

  புகை, மதுவுக்கு அடிமை ஆகாதீங்க. இந்த ரெண்டையும் தவிர்த்தாலே வெற்றி நிச்சயம்.

நடிப்பும் எனக்கு விளையாட்டு தான்!

  'சுவர் இருந்தால் தான் சித்திரம்’! உடலையும், மனசையும் ஹெல்தியா வெச்சுக்கங்க.

நடிப்பும் எனக்கு விளையாட்டு தான்!

  ஒரே உணவைத் தொடர்ந்து சாப்பிடாதீங்க... அதுதான் நோய் வர்றதுக்கான ஆரம்பம். கோதுமை, கேழ்வரகு’னு எல்லா வகை உணவையும் மாற்றி மாற்றி சாப்பிடுங்க.

நடிப்பும் எனக்கு விளையாட்டு தான்!

  குழந்தைங்களை படிப்பு தவிர்த்துக் கொஞ்சம் விளையாடவும் அனுமதிங்க.

நடிப்பும் எனக்கு விளையாட்டு தான்!

  அதிகம் எண்ணெய் கலந்த உணவுகளைத் தவிர்த்து, புரதம் நிறைந்த உணவுகளைச் சாப்பிடுங்க.

- புகழ். திலீபன்

படம்: ப.சரவணகுமார்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு