Published:Updated:

ஒல்லி பெல்லி! சாத்தியமா? உடான்ஸா?

எடை குறைய என்ன வழி?

ஒல்லி பெல்லி! சாத்தியமா? உடான்ஸா?

எடை குறைய என்ன வழி?

Published:Updated:

'மச்சி, ரெண்டு கிலோ எடையைக் குறைக்கிறதுக்கு... ஊரெல்லாம் தெருத் தெருவா ஓடுறேன்டா! அந்த டி.வி. புரோகிராம்ல 30, 40 கிலோனு எப்பிடிடா குறைச்சாங்க?' - விஜய் தொலைக்காட்சியின் ரியாலிட்டி ஷோவில், நூறு நாட்களில் உடல் எடையை 40 கிலோ வரை குறைத்த ஒரு

ஒல்லி பெல்லி! சாத்தியமா? உடான்ஸா?

பெண்மணியைப் பார்த்து வந்த பொறாமைப் புலம்பல் இது. 'ஒல்லி பெல்லி’ நிகழ்ச்சியைப் பார்த்தவர்கள் பலரின் கேள்வி இதுதான்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஜிம்முக்குப் போகாமலேயே, உடல் எடையைக் குறைக்க மாத்திரைகளில் ஆரம்பித்து ரோப், எலக்ட்ரானிக் பெல்ட் என ஆசை வார்த்தை காட்டும் விளம்பரங்களின் எண்ணிக்கை அதிகம். ''ஆறேழு கிலோ எடையைக் குறைப்பதற்கே அல்லாடுபவர்கள் இருக்கும் நிலையில், மிகக் குறுகிய காலத்தில் எப்படி இவ்வளவு எடையைக் குறைக்க வைத்தீர்கள்? திடீரென அதிக எடையைச் சில மாதங்களிலேயே குறைப்பது ஆரோக்கியமானதுதானா?'' - ரியாலிட்டி ஷோவின் பயிற்சியாளரும், விளையாட்டு மருத்துவ நிபுணரான கண்ணன் புகழேந்தியிடம் கேட்டோம்.

''இதுபோன்ற போட்டிகளில் கலந்து கொள்பவர்கள், முழு ஈடுபாட்டுடன் காலை முதல் இரவு வரை பயிற்சியில் ஈடுபட்டதால்தான் குறைந்த நாட்களில் எடையைக் குறைத்தது சாத்தியமானது. மற்றவர்களால் இதையே ஒரு வேலையாக எடுத்துச் செய்ய முடியாது. அவர்கள் ஒரு மணி நேரம் உடற்பயிற்சி செய்வதேகூடச் சிரமம். மேலும், வேலை, குடும்பம் எனப் பல காரணிகள் இருப்பதால், அவர்களால் உடனடியாக எடையைக் குறைக்க முடியாது. இத்தனை செயல்பாடுகளுக்கும் இடையில், உடனே எடை குறைய வேண்டும் என்று அவர்கள் ஆசைப்படுவதும் தவறு.

ஒல்லி பெல்லி! சாத்தியமா? உடான்ஸா?

400 மீட்டர் கூட நடக்க முடியாதவர்களை ஒரு நாளைக்குச் சராசரியாக 10 கி.மீ வரை பயிற்சியில் நடக்கவைக்க முடியும். அதற்கு, வெறும் உடல்வலிமை மட்டுமில்லை... மனவலிமையும் தேவை. உடல் எடையைக் குறைக்க முயற்சியும், முறையான பயிற்சியும், சரியான உணவுப் பழக்கமும் போதும். இதுபோன்ற ரியாலிட்டி ஷோக்களைப் பார்த்து, ஓர் உத்வேகத்தை ஏற்படுத்திக் கொள்ளவேண்டுமே தவிர, நான்கு நாட்கள் நடந்துவிட்டு,  உடல் எடை உடனே குறையவில்லை என வீணாகப் புலம்புவதில் அர்த்தம் இல்லை.

பொதுவாக உடல் எடை நமது உயரத்துக்குச் சரியாக இருக்கிறதா என்பதைப் பி.எம்.ஐ (ஙிவிமி) கொண்டு கணக்கிடுகிறார்கள். பி.எம்.ஐ அளவீடானது 30-க்கு மேல் இருப்பின், அவர்கள் ஒபிசிட்டி நோயின் தாக்கத்தில் இருக்கின்றனர் என்று அர்த்தம்.

உடல் எடை அதிகமாக இருப்பவர்களை மூன்று வகைகளாகப் பிரிக்கலாம். சிறிதளவு எடை அதிகமாக உள்ளவர்கள், தொப்பை விழும் அளவுக்குப் பருமனானவர்கள், ஒபிசிட்டி நோயால் பாதிக்கப்பட்டவர்கள். இதில், ஒபிசிட்டியால் பாதிக்கப்பட்டவர்களின் உடலில் நீரின் அளவு அதிகமாக இருக்கும். இவர்கள், தினமும் 1/2 கி.மீ தூரம்கூட நடக்க மாட்டார்கள். முறையாகத் தொடர்ந்து 1 - 2 கிலோ மீட்டர் நடந்தாலே, உடல் எடை பெருமளவு குறையும். மேலும், உடலில் உள்ள கொழுப்பு குறைவதற்குக் கடும் உடலுழைப்புத் தேவை. இவர்கள் உடற்பயிற்சி செய்யும்போது, உடலில் நீரின் அளவு எளிதில் குறைந்துவிடும். ஆனால், இது பி.எம்.ஐ 25 முதல் 30-க்குள் இருப்பவர்களுக்குப் பொருந்தாது. இவர்கள் ஒபிசிட்டி உள்ளவர்களைக் காட்டிலும் அதிக அளவு பயிற்சி செய்ய வேண்டும். உடல் எடையைக் குறைத்து பி.எம்.ஐ. 30-க்குள் கொண்டுவர வேண்டும். இப்படி, கடுமையான உடற்பயிற்சி செய்தால் மட்டுமே உடல் எடை மேலும் குறையும்.

ஒவ்வொருவருக்கும், அவரவர் உடல் எடையின் அளவைப் பொறுத்து, செய்ய வேண்டிய உடற்பயிற்சியின் அளவும் மாறுபடும்.

பொதுவாக உடல் எடையைக் குறைத்து ஆரோக்கியமாக வாழ ஆறு வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.

ஒல்லி பெல்லி! சாத்தியமா? உடான்ஸா?

மருந்து மாத்திரைக்கு நோ:

'அன்னாசிப் பழத்தில் இருந்து தயாரிக்கப்பட்டது, அமேசான் காடுகளில் இருந்து தயாரிக்கப்பட்டது’ என்று வரும் விளம்பரங்களை நம்பக் கூடாது. சில சிகிச்சைகளால் உடல் எடை குறைந்தாலும் அதனை வாழ்நாள் முழுவதும் எடுக்க வேண்டிய நிலை வரலாம். மேலும், பக்கவிளைவுகள் வருவதற்கு வாய்ப்புகள் இல்லையென்று உறுதியாகச் சொல்ல முடியாது.

 கலோரியில் கண் வை:

என்னதான் உடற்பயிற்சி செய்தாலும் முறையான உணவுப் பழக்கம் இல்லையென்றால், உடல் எடை குறையாது. எடுத்துக்கொள்ளும் உணவின் கலோரியை ஈடுகட்டும் அளவுக்கு உடற்பயிற்சி செய்யவேண்டும். நார்ச்சத்து, புரதச்சத்து அதிகம் உள்ள உணவை எடுத்துக்கொள்ள வேண்டும். ஐஸ் கிரீம், கேக், பிரியாணி, மசாலா உணவுகளுக்கு குட்பை சொல்வது அவசியமோ அவசியம். சாப்பிடும் ஒவ்வொரு வகை உணவும் எவ்வளவு கலோரி என்பதை அறிந்து உண்ண வேண்டும். மூலிகைகள், பழங்கள் அதிகம் எடுத்துக்கொள்ளவும். பசித்தால் மட்டும் சாப்பிடவும். வயிறு முட்ட சாப்பிடக் கூடாது. சீரான இடைவெளியில் தேவையான ஆகாரத்தை எடுத்துக் கொள்ளவும்.

காலை உணவு ஆரோக்கியம்:

ஒல்லி பெல்லி! சாத்தியமா? உடான்ஸா?

உடல் எடையைக் குறைக்கிறேன் என்று பலரும் காலை உணவைத் தவிர்க்கின்றனர். இது தவறு. காலை உணவை 9 மணிக்குள் உண்ண வேண்டும். அதிக கலோரி இல்லாத உணவுகளான இட்லி, சப்பாத்தி போன்றவற்றைத் தேவையான அளவு சாப்பிட்டு வந்தால் போதும்.

லட்சியத்தைத் துரத்து:

வாழ்க்கையில் சாதிக்க லட்சியங்களைத் துரத்திக்கொண்டு ஓடவேண்டும். தினமும் நடைப்பயிற்சி, ஜாகிங் செல்ல வேண்டும். ஆரம்பத்தில் குறைந்த தூரம் சென்று திரும்பி, கொஞ்சம் கொஞ்சமாகத் தூரத்தை அதிகரிக்க வேண்டும். பிறகு குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட தூரத்தைக் கடக்க வேண்டும் என உறுதிகொண்டு, அதற்கேற்ப செயல்பட வேண்டும். விடுமுறை, குடும்பப் பிரச்னை என எதற்காகவும் பயிற்சிக்கு லீவு கொடுக்காமல் தினமும் பயிற்சி மேற்கொள்ளவேண்டும்.

மனக்கட்டுப்பாடு முக்கியம்:

கையில் காசு இருக்கிறது, பெரிய நோய்களும் இல்லை என்றால், கொழுப்புச்சத்து மிகுந்த உணவுகளைப் பார்த்த மாத்திரமே எச்சில் ஊறும். ஏதாவது சாப்பிடவேண்டும் என்ற எண்ணம் ஏற்படும். மனதைக் கட்டுப்படுத்தி, உடல் எடை கட்டுக்குள் வரும் வரை கொழுப்புச் சத்து மிகுந்த உணவுகளை அறவே தவிர்க்கவேண்டும். உடல் எடை கட்டுக்குள் வந்தாலும், அதிக கலோரி உள்ள உணவுகளைக் கொஞ்சமாக எடுத்துக்கொண்டு, அன்றே அந்த கலோரியை எரிக்கும் அளவுக்கு உடற்பயிற்சி செய்யவேண்டும். யோகா, தியானம் போன்றவை உடலைப் போலவே மனதையும் தூய்மையாக வைக்க உதவும்.

தசைகளைக் கவனி:

நம் உடல் தசைகள் இயங்கினால்தான் மனிதன் நடமாட முடியும். உடல் எடையைக் குறைக்கத் தேவையற்ற கொழுப்பைத்தான் குறைக்க வேண்டுமே தவிர, தசைகளை அல்ல. எனவே, தசைகளைப் பலப்படுத்த அவ்வப்போது 'புஷ் அப்’ போன்ற பயிற்சிகளை மேற்கொள்ளவேண்டும். தசைப் பிடிப்புகள் இல்லாமல் இருந்தால்தான் வாக்கிங், ஜாகிங் செல்ல முடியும். வீட்டில் வெயிட் பார்க்கும் மெஷினை வைத்துக்கொண்டு தினமும் உடல் எடையைக் கண்காணிக்க வேண்டும்.

இந்த வழிகளை முறையாகப் பின்பற்றினாலே உடல் எடை சீரான அளவில் குறையும். ஒருவர், உடற்பயிற்சி மூலம் இவ்வளவுதான் எடை குறைக்கவேண்டும் என்ற எந்தக் கணக்கும் இல்லை. உடல் எடையைக் கட்டுக்குள் வைத்து, ஆரோக்கியமாக வாழ்வதற்கு ஏற்றவாறு தேவையான கூடுதல் எடையை உடற்பயிற்சியின் மூலம் குறைக்கலாம்.

ஓ.கே. ஸ்டார்ட் மியூசிக்!

ஒல்லி பெல்லி! சாத்தியமா? உடான்ஸா?

தினமும் எடையைக் கவனி!

40 கிலோவுக்கு மேல் எடையைக் குறைத்து, அதிசயிக்கவைத்த கோமதியிடம் பேசினோம், 'அடிப்படையில் நான் ஒரு விளையாட்டு வீராங்கனை. தேசிய, மாநில அளவிலான நிறையப் போட்டிகளில் கலந்துக்குவேன். ஒரு கட்டத்துல, விளையாட்டையும் விட்டுட்டு, உடலையும் கவனிக்காமல் விட்டுட்டேன். விளைவு எடை ரொம்பவே அதிகமாயிடுச்சு. தொலைக்காட்சிப் போட்டியில் கலந்துக்க ஆரம்பிச்சதும், நேயர்கள் நேரடியாகப் பார்ப்பாங்க... ஒவ்வொரு வாரமும் வெளியேற்றம் இருக்கும்னு கடுமையா உடற்பயிற்சி செஞ்சேன். கால் ரொம்பவே வலிச்சது. ஆனால் போகப் போகப் பழகிடுச்சு. முதல்ல, அரை கி.மீ கூட நடக்க முடியாம இருந்த நான், இப்ப, டிரெட்மில்லில் ஒரு நாளைக்கு 25 கி.மீ நடக்கிறேன், ஓடுறேன். மணிக்கு ஒருமுறை உடல் எடையைப் பரிசோதிச்சிட்டே இருப்பேன். சத்துள்ள உணவுகள், பழங்கள் மட்டுமே தேவையான அளவு எடுத்துக்கிட்டேன். ஆரம்பத்தில், 20 கிலோ எடையை ஈஸியாக் குறைக்க முடிஞ்சது. அதுக்கப்புறமும், உடல் எடையைக் குறைக்க அதிக அளவில் உடற்பயிற்சி செஞ்சேன். என் குடும்பமும் ரொம்ப உதவியா இருந்ததால்தான், இந்த அளவுக்கு எடையைக் குறைக்க முடிஞ்சது. ரொம்பவே உடம்பு லேசான மாதிரி, உற்சாகமா இருக்கு. இன்னும் அஞ்சு கிலோ எடையைக் குறைச்சால்தான், என் உயரத்துக்கு ஏற்ற எடைக்கு வர முடியும். அதற்கான பயிற்சிகளையும் எடுத்திட்டிருக்கேன்' என்கிறார் பெருமிதமாக!

- பு.விவேக் ஆனந்த்

படங்கள்: எம்.உசேன், ர.சதானந்த்