Published:Updated:

பழங்கள் பலன்கள்

பழங்கள் பலன்கள்

பழங்கள் பலன்கள்

பழங்கள் பலன்கள்

Published:Updated:
பழங்கள் பலன்கள்

ழத்தைக் கொண்டாடியவர்கள் நம் 'பழ’ந்தமிழர்கள். 'முத்தமிழே...முக்கனியே...’ என கொஞ்சிப்பேசியவர்கள் நாம். இன்றைய பீட்சா, பர்கர் யுகத்தில் பழங்களை தினசரி உணவில் எடுத்துக் கொள்வதையே, நம் சந்ததியினர் பலர் மறந்துவிட்டார்கள். உணவாகவும் மருந்தாகவும் செயல்பட்டு, நிறைவான ஊட்டச்சத்துக்களையும் அள்ளித்தருபவை கனிகள்.

பழங்கள் பலன்கள்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பழங்களில் மிகக் குறைந்த அளவில் கொழுப்புச்சத்தும், அதிக அளவில் நார்ச்சத்தும் இருக்கிறது. இதனால் இதய நோய், உடல் பருமன், செரிமானக் குறைபாடு, மலச்சிக்கல் போன்ற பிரச்னைகள் நம் உடலுக்குள் எட்டிப்பார்க்காது.

கோடையின் வெப்பத்தைத் தணிக்கத் தர்ப்பூசணி, கிரிணி என அந்தஅந்தப் பருவத்துக்கு ஏற்ப இயற்கையே பழங்களை வாரி வழங்கி இருக்கும் நிலையில், தினமும் தொடர்ந்து பழவகைகளைச் சாப்பிடுவதே சிறந்தது. நம் ஊரில் கிடைக்கக்கூடிய சில முக்கியமான பழங்கள், அவற்றின் பலன்கள், எடுத்துக்கொள்ளும் முறைகள், தவிர்க்க வேண்டியவை பற்றி மூத்த டயட் கவுன்சலர் கிருஷ்ணமூர்த்தி பட்டியலிடுகிறார். பலம் தரும் பழங்களை நம் வாழ்க்கையோடு இணைத்துக் கொள்வோம்.

பழங்கள் பலன்கள்

ஒரு நாளைக்கு ஐந்து கப் அளவுக்கு காய்கறி- பழங்கள் கொண்ட சரிவிகித உணவை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.

பழங்கள் பலன்கள்

ஒருவரின் வயது, பாலினம் மற்றும் அவரது உடல் உழைப்பைப் பொருத்து பழங்கள் எடுத்துக்கொள்ளும் அளவு வேறுபடும். பொதுவாக எவ்வளவு எடுத்துக்கொள்ளலாம் என்று அட்டவணையில் தெரிவித்துள்ளோம். இருப்பினும் அவரவர் கலோரி தேவையைப் பொறுத்து இதற்கு மேலும் பழங்களை எடுத்துக்கொள்ளலாம்.

மாம்பழம்

பழங்கள் பலன்கள்

முக்கனிகளில் முதன்மையானது. பழங்களின் அரசன். மாம்பழத்தில் நார்ச்சத்து, வைட்டமின்கள், இரும்புச் சத்து, தாது உப்புக்கள் மற்றும் பாலிபீனாலிக் ஃபிளவனாய்ட் ஆன்டிஆக்சிடன்ட் அதிகம் உள்ளன. இதுதவிர, வைட்டமின் ஏ, பி6, சி, இ ஆகியவை நிறையவே உள்ளன.

100 கிராம் மாம்பழத்தில், 765 இன்டர்நேஷனல் யூனிட் வைட்டமின் ஏ உள்ளது. இது ஒரு நாளைக்குத் தேவையான அளவில் 25 சதவிகிதம். வைட்டமின் ஏ, பார்வை மற்றும் தோல் ஆரோக்கியத்துக்கு மிகவும் அவசியம்.

வைட்டமின் சி - நோய் எதிர்ப்பு சக்தியைத் தருகிறது. மாம்பழத்தில் மார்பகம், ரத்தப் புற்றுநோயைத் தடுக்கும் ஆற்றல் உள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன. நம் நோய் எதிர்ப்பு மண்டலம் மேம்பட இது உதவுகிறது.

பழங்கள் பலன்கள்

மாம்பழத்தில் உள்ள சிலவகையான என்சைம்கள், புரதத்தை உடைத்து உடலுக்கு ஏற்ற ஊட்டச்சத்தாக மாற்றும் பணியை ஊக்குவிக்கிறது. இதில் அதிக அளவில் நார்ச்சத்து உள்ளதால், நல்ல செரிமானத்துக்கு உதவுகிறது. மலச்சிக்கலையும் போக்கும்.

மாம்பழத்தில் குறிப்பிடத்தகுந்த அளவில் தாமிரம் உள்ளதால், ரத்த சிவப்பு அணுக்கள் உற்பத்திக்கு உதவுகிறது. மேலும், இரும்புச் சத்து நிறைந்தது. எனவே, பெண்கள், கர்ப்பிணிகள், மெனோபாஸ் நிலையில் உள்ள பெண்கள் எடுத்துக்கொள்வது நல்லது.

பலா

பழங்கள் பலன்கள்

ஆற்றல், நார்ச்சத்து, தாது உப்புக்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்த பழம் இது. 100 கிராம் பலாப் பழத்தில், 95 கலோரிகளே உள்ளது. இது மிகவும் எளிதில் செரிமானத்தைக் கொடுக்கும். நார்ச்சத்து அதிக அளவில் உள்ளதால், குடலைப் பாதுகாக்கிறது, மலச்சிக்கலைப் போக்குகிறது. குறைந்த அளவில் வைட்டமின் ஏ மற்றும் கரோட்டின் பி உள்ளிட்ட ஃபிளவனாய்ட் உள்ளதால், பார்வைத் திறன் மேம்பாட்டில் முக்கியப் பங்கு வகிக்கிறது. இயற்கையான முறையில் கிடைக்கும் இந்த வைட்டமின் ஏ மற்றும் கரோட்டின்கள், நுரையீரல் மற்றும் சில வகையான புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பைத் தடுக்கிறது.

பழங்கள் பலன்கள்

பலாவில் வைட்டமின் சி நிறைந்துள்ளது. 100 கிராம் பலாப்பழத்தில், ஒருநாளுக்குத் தேவையான வைட்டமின் சி-யில் கிட்டத்தட்ட 23 சதவிகிதம் உள்ளது. பி காம்ப்ளெக்ஸ் வைட்டமின்களான பி5, நியாசின், ரிபோஃபிளேவின், ஃபோலிக் அமிலம் போன்றவை இதில் அதிக அளவில் உள்ளன.

தாது உப்புக்களில் பொட்டாசியம், மக்னீசியம், மாங்கனீஸ், இரும்புச் சத்து ஆகியவை உள்ளன. பொட்டாசியம் அதிக அளவில் உள்ளதால், சிறுநீரகப் பாதிப்பு உள்ளவர்கள் மருத்துவர்களின் பரிந்துரையின்பேரில் எடுத்துக்கொள்ளலாம்.

வாழை

பழங்கள் பலன்கள்

வருடம் முழுவதும் கிடைக்கக்கூடிய பழம் இது. 100 கிராம் பழத்தில் 90 கலோரியை இது தருகிறது. தவிர, வைட்டமின்கள், தாது உப்புக்கள் இதில் நிறைவாக உள்ளன. வாழையில் உள்ள 'ஃபரக்டோஸ்’ போன்ற எளிய சர்க்கரை, உடலுக்கு உடனடி ஆற்றலை அளிக்கிறது. விளையாட்டு வீரர்கள், தடகள வீரர்கள் இதை தினமும் எடுத்துக்கொள்ளும்போது இயற்கையான உடனடி எனர்ஜி கிடைக்கும். உடல் எடை குறைவாக உள்ள குழந்தைகளுக்குத் தினசரி வாழைப்பழம் கொடுப்பது நல்லது. இதில் அதிக அளவில் நார்ச்சத்து உள்ளதால், செரிமானப் பிரச்னை உள்ளவர்கள் எடுத்துக்கொள்ளலாம்.  

இதில் உள்ள வைட்டமின் பி6, ரத்த சோகை போன்ற குறைபாடுகள் அண்டாமல் பார்த்துக்கொள்ளும். இதயப் ரத்தக் குழாய் பாதிப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படுவதற்கான வாய்ப்பைக் குறைக்கும்.

பழங்கள் பலன்கள்

தாது உப்புக்களைப் பொருத்தவரையில், தாமிரம், மக்னீசியம், மாங்கனீஸ் ஆகியவை  குறிப்பிடத்தகுந்த அளவில் உள்ளன. மக்னீசியம் நம் எலும்புகளின் உறுதிக்கும், இதய பாதுகாப்புக்கும் அவசியமான தாது உப்பு.

100 கிராம் வாழைப் பழத்தில் 358 கிராம் பொட்டாசியம் உள்ளது. இது, இதயத் துடிப்பைக் கட்டுக்குள் வைத்திருப்பது, ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருப்பது போன்றவற்றைச் செய்கிறது. பொட்டாசியம் சத்து அளவுக்கு அதிகமாக எடுத்துக்கொள்ளும்போது இதயத் துடிப்பைப் பாதிக்கச் செய்யும். எனவே, இதய மற்றும் சிறுநீரக நோயாளிகள் டாக்டர் அல்லது டயட்டீஷியன் பரிந்துரையின்பேரில் எடுத்துக்கொள்வது அவசியம்.

மாதுளை

பழங்கள் பலன்கள்

உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களை அள்ளித்தருவதால், மாதுளம் பழத்தை 'சூப்பர் ஃபுரூட்ஸ்’ என்று அழைக்கிறோம். உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்களுக்கும் கொழுப்பைக் கட்டுக்குள் கொண்டுவர நினைப்பவர்களுக்கும், இந்தப் பழத்தைத் தாரளமாகப் பரிந்துரைக்கலாம். நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் ரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. இதில் உள்ள கிரானடின் பி (Granatin B) உள்ளிட்ட வேதிப்பொருட்கள் இதய நோய்க்கான வாய்ப்பைக் குறைக்கின்றன. மேலும் திசுக்கள் பாதிக்கப்படுவதைத் தடுப்பதால், தோலில் சுருக்கம், கருவளையம் போன்ற சரும பிரச்னைகளைத் தவிர்க்கும் ஆற்றல் இதற்கு உண்டு.

கொலஸ்ட்ரால் கொஞ்சமும் இல்லாத பழம். 100 கிராம் மாதுளை 83 கலோரியைத் தருகிறது. 4 கிராம் நார்ச்சத்து இதில் இருப்பதால், நல்ல செரிமானத்துக்கும், செரிமான மண்டல இயக்கத்துக்கும் மிகவும் நல்லது.

பழங்கள் பலன்கள்

வைட்டமின் சி சத்தும் நிறைவாக உள்ளது. இதனால் நோய் எதிர்ப்புச் சக்தி மேம்படும்.  தொடர்ந்து இந்தப் பழத்தைச் சாப்பிட்டு வருபவர்களுக்கு, ப்ராஸ்டேட் புற்றுநோய், ப்ராஸ்டேட் பெரிதாகுதல், சர்க்கரை நோய்க்கான வாய்ப்பு குறையும். மேலும் இதில் ஃபோலிக் அமிலம் பி காம்ப்ளெக்ஸ் வைட்டமின்கள் நிறைவாக உள்ளதால், கர்ப்பிணிகள் எடுத்துக்கொள்ளலாம்.

உயர் ரத்த அழுத்தம், உடல் பருமன், வயிற்றுப்போக்கு, நோய்க் கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் மாதுளம் பழம் சாப்பிடுவது நல்லது.

கொய்யா

பழங்கள் பலன்கள்

குறைந்த விலையில் கிடைப்பதால், 'ஏழைகளின் ஆப்பிள்’ என்று அழைக்கப்படுகிறது. இதில் நார்ச்சத்து நிறைவாக உள்ளதால் நல்ல மலமிளக்கியாக செயல்படுகிறது. மேலும், இதில் உள்ள நார்ச்சத்து குடலைச் சுத்தப்படுத்தும். இதனால் குடலில் நச்சுக்கள் சேருவது தவிர்க்கப்பட்டு, குடல் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பைக் குறைகிறது.

100 கிராம் கொய்யாவில் 228 மி.கி வைட்டமின் சி உள்ளது. இது ஒரு நாள் தேவையைக் காட்டிலும் மூன்று மடங்கு அதிகம். அதிக அளவில் வைட்டமின் சி எடுத்துக்கொள்வது, உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும். இதனால் நோய் கிருமித் தொற்று, சில வகையான புற்றுநோய்த் தாக்குதலில் இருந்து உடலைக் காக்கிறது. மேலும் ரத்தக் குழாய்கள், எலும்பு, தோல், உடல் உள் உறுப்புக்கள் போன்ற உறுப்புக்களின் அடிப்படைக் கட்டமைப்பு புரதமான கொலாஜன் சேர்க்கைக்கு அவசியமாக இருக்கிறது.

பழங்கள் பலன்கள்

வைட்டமின் சி-யைத் தவிர வைட்டமின் ஏ-வும் இதில் நிறைவாக இருப்பதால், கண், தோல் போன்ற உறுப்புகளின் ஆரோக்கியத்துக்கு மிகவும் உதவுகிறது. வாழைப் பழத்தைப்போலவே இதிலும் பொட்டாசியம் நிறைவாக உள்ளது. பொட்டாசியமானது செல்களின் நீர்ச்சத்துப் பராமரிப்புக்கும், இதயத் துடிப்பு மற்றும் ரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கவும் மிகவும் அவசியம்.

கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மாருக்கு மிகவும் பாதுகாப்பான உணவு. சர்க்கரை நோயாளிகள், சிறுநீரக செயல் இழப்பு, இதய பாதிப்பு உள்ளவர்கள் மருத்துவரின் பரிந்துரையின்பேரில் இதை எடுத்துக்கொள்ள வேண்டும்.

அன்னாசிப் பழம்

பழங்கள் பலன்கள்

தென் அமெரிக்காவைப் பூர்வீகமாகக் கொண்ட அன்னாசிப் பழம் உலகம் முழுக்கப் பரவ கப்பல் மாலுமிகள் ஒரு மிகப் பெரிய காரணம். அவர்கள் எங்கு பயணத்தை மேற்கொண்டாலும் வைட்டமின் சி குறைபாட்டால் ஏற்படக்கூடிய ஸ்கார்வி நோயைத் தவிர்ப்பதற்காக, அன்னாசிப்பழத்தை எடுத்துச்செல்வது வழக்கம். இதில் இருந்தே இந்தப் பழத்தின் முக்கியத்துவத்தை அறிந்துகொள்ளலாம்.

உடலுக்குத் தேவையான சில குறிப்பிட்ட வைட்டமின்கள் மற்றும் தாது உப்புக்கள் இதில் நிறைவாகவே உள்ளன. திசுக்கள் வீக்கம் அடைவதைத் தடுக்கிறது. புற்றுநோயை எதிர்க்கும் ரசாயனப் பொருட்கள் உள்ளன. அன்னாசியைத் தொடர்ந்து சாப்பிட்டுவரும்போது எலும்பு தொடர்பான பிரச்னைகள், செரிமானக் குறைவு, குடலில் புழு தொந்தரவு போன்றவை வராமல் தடுக்கும்.

பழங்கள் பலன்கள்

மாங்கனீஸ் தாதுப்பொருள் இருப்பதால், எலும்பு உறுதித்தன்மைக்கு பெரிதும் உதவியாக இருக்கும். இதில் உள்ள ஆன்டிஆக்சிடன்ட்கள் கொழுப்பின் அளவைக் குறைத்து இதயத்தைப் பாதுகாக்கும். வைட்டமின் சி நிறைவாக உள்ளதால் நோய் எதிர்ப்புச் சக்தியை மேம்படுத்தும். குமட்டல், வாந்தியைத் தடுக்கும் ஆற்றல் இதற்கு உண்டு. குறிப்பாக கர்ப்பிணிகளுக்கு மார்னிங் சிக்னஸ் நேரத்தில் இது பெரிதும் உதவியாக இருக்கிறது. நார்ச்சத்து அதிகம் இருப்பதால், வயிறு செரிமானம் மற்றும் மலச்சிக்கல் பிரச்னைக்கு நல்ல தீர்வு கிடைக்கும். செரிமானத் திறன் அதிகரிக்கும்.

குறைந்த அளவிலேயே எடுத்துக்கொள்ள வேண்டும். அதிக அளவில் சாப்பிட்டால் வாய்ப்புண், வயிற்றுப்போக்கு, வயிற்று வலி போன்ற தொந்தரவு ஏற்படலாம். சிலருக்கு அன்னாசிப்பழம் அலர்ஜியை ஏற்படுத்தும் என்பதால், அலர்ஜி பிரச்னை உள்ளவர்கள்  தவிர்ப்பது நல்லது.

பொட்டாசியம் அளவு குறைவு என்பதால் சிறுநீரக செயலிழப்பு பிரச்னை உள்ளவர்கள் இதை ஓரளவுக்கு எடுத்துக்கொள்ளலாம்.

ஆப்பிள்

பழங்கள் பலன்கள்

நம் ஊரில் விளையக்கூடிய பழம் இல்லை என்றாலும் நம் வாழ்வில் இடம்பெறும் பழங்களுள் ஒன்றாகவே மாறிவிட்டது ஆப்பிள். தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டுவந்தால், டாக்டரிடம் செல்லவேண்டிய அவசியமே இருக்காது என்பார்கள்.

சுவை தரும் ஆப்பிள் பழத்தில் பைட்டோ நியூட்ரியன்ட்ஸ் மற்றும் ஆன்டிஆக்சிடன்ட் அதிகம் உள்ளது. இது மனிதனின் இயல்பான வளர்ச்சி, ஆரோக்கியமான வாழ்வுக்குப் பெரிதும் உதவியாக இருக்கும். 100 கிராம் பழத்தில் 50 கலோரியே உள்ளது. நுரையீரல் உள்ளிட்ட சில வகையான புற்றுநோய்கள் வராமல் தடுக்கும். பித்தப்பை கல்லைக் கரைத்து வெளியேற்றும். ஆப்பிளில் உள்ள கரையக்கூடிய நார்ச்சத்து, கொழுப்பைக் குறைத்து ஆரோக்கியம் தரும்.

பழங்கள் பலன்கள்

உடல் எடையைக் குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு, மிகச் சிறந்த உணவாக ஆப்பிள் கருதப்படுகிறது. சர்க்கரை நோய், மெட்டபாலிக் சிண்ட்ரோம், இதய நோய்கள், வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல் போன்றவை வராமல் தடுக்கவும் ஆப்பிள் உதவுகிறது.  

ஆப்பிள் கொட்டையில் சிறிதளவு நச்சுத் தன்மை இருப்பதால், கொட்டையை அகற்றிவிட்டு சாப்பிடவேண்டும்.  இதனால் சிலருக்கு ஏற்படும் ஒவ்வாமையைத் தடுக்கலாம்.  

குழந்தைகள், சர்க்கரை நோயாளிகள், சிறுநீரகப் பிரச்னை உள்ளவர்கள், கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள் என அனைவருக்கும் ஏற்றது.

பப்பாளிப் பழம்

பழங்கள் பலன்கள்

இதன் நிறைவான ஊட்டச்சத்துக்கள், செரிமானத்துக்கு உதவும் திறன், மருத்துவ குணநலன்கள் காரணமாக அனைவரும் விரும்பிச் சாப்பிடவேண்டிய பழம். கண் முதல் முடி வரை உடலின் அனைத்துப் பகுதிக்கும் தேவையான சத்துக்களை அள்ளித் தரும் பழம் இது.

பப்பாளிப் பழத்தின் மென்மையான சதைப்பகுதியில் அதிக அளவில் நார்ச்சத்து உள்ளது. இதனால் வயிறு செரிமானத்துக்கு உதவி, மிகச்சிறந்த மலமிளக்கியாக செயல்படுகிறது.

இதில், வைட்டமின் சி அதிக அளவு இருப்பதால், நோய் எதிர்ப்பு மண்டலத்தை மேம்படுத்தவும், நோய்க் கிருமிகளை எதிர்த்துப் போராடவும் உதவுகிறது. இதில் உள்ள ரசாயனங்கள் நுரையீல், வாய் புற்றுநோய்க்கான வாய்ப்பைப் பெருமளவில் குறைக்கின்றன.

பழங்கள் பலன்கள்

பப்பாளி, வைட்டமின் ஏ- சத்துக்கு மிகப் பெரிய ஆதாரமாக விளங்குகிறது. 100 கிராம் பழத்தில் 1094 இ.யு. வைட்டமின் ஏ உள்ளது. பார்வை மற்றும் ஆரோக்கியமான சருமத்துக்குப் பெரிதும் உதவியாக இருக்கிறது.

ஃபோலிக் அமிலம், வைட்டமின் பி6 போன்ற பி காம்ப்ளெக்ஸ் வைட்டமின்கள் இதில் அதிக அளவில் உள்ளன. மிககுறைவான அளவிலேயே சர்க்கரை உள்ளதால் சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் சிறந்தது. சர்க்கரை நோய் வராமல் தவிர்க்க இந்தப் பழத்தை எடுத்துக்கொள்ளலாம்.

பப்பாளியில் உள்ள பாப்பின் என்ற ரசாயனம் கர்ப்பத்தில் உள்ள சிசுவைப் பாதிக்கலாம் என்று சில ஆய்வுகள் கூறுகின்றன. கர்ப்ப காலத்தில் பப்பாளி சாப்பிடுவது நல்லது என்று சில மருத்துவர்கள் கூறுகின்றனர். எனவே, கர்ப்பம் மற்றும் பாலூட்டும் காலத்தில் உங்கள் மருத்துவரிடம் ஆலோசனை பெற்று அதன்படி எடுத்துக்கொள்வது நல்லது.

திராட்சை

பழங்கள் பலன்கள்

திராட்சையைப் 'பழங்களின் அரசி’ என்கின்றனர். பச்சை/வெள்ளை, சிவப்பு/பர்பிள், கருப்பு/கருநீலம் எனப் பல நிறங்களில் கிடைக்கிறது.

இதயப் பாதிப்பு, ரத்தக் குழாய் பிரச்னைகள், வெரிகோசிஸ் வெயின், உயர் ரத்த அழுத்தம் போன்ற பாதிப்புகளில் இருந்து காக்கும் ஆற்றல் திராட்சைக்கு உண்டு. மேலும் செரிமானக் குறைபாட்டைப் போக்கும்.

திராட்சையில் உள்ள ஒரு வகையான ரசாயனப் பொருள் குடல் மற்றும் ப்ராஸ்டேட் புற்றுநோயில் இருந்தும், இதய ரத்தக் குழாய் நோய்களில் இருந்தும், நரம்பு தொடர்பான பிரச்னைகளில் இருந்தும், வைரல் - பூஞ்சை நோய்த்தொற்றில் இருந்தும் நம்மைக் காக்கும் தன்மைகொண்டது. இந்த ரசாயனப் பொருள் பக்கவாதம் ஏற்படுவதற்கான வாய்ப்பைக் குறைக்கிறது. ரத்தத்தில் கெட்ட கொழுப்பின் அளவைக் குறைக்கிறது, ரத்த குழாய்களைத் தளர்வுறச் செய்வதால், மாரடைப்புக்கான வாய்ப்பைக் குறைக்கிறது.

பழங்கள் பலன்கள்

யூரிக் அமிலத்தை நீர்த்துப்போகச் செய்யும் தன்மை திராட்சைக்கு உண்டு என்பதால், சிறுநீரகத்தின் செயல்திறன் மேம்படுகிறது.

வைட்டமின் சி, ஏ, கே, கரோட்டினாய்ட், பி காம்ப்ளெக்ஸ் வைட்டமின்கள் இதில் ஓரளவுக்கு உள்ளன. தாமிரம், இரும்பு, மாங்கனீஸ் போன்ற தாது உப்புக்கள் இதில் நிறைவாக உள்ளன. திராட்சையில் புளிப்பு சுவை இருப்பதால் அசிடிட்டி, அல்சர், வாயுப் பிரச்னை, நெஞ்சு எரிச்சல் பிரச்னை இருப்பவர்கள் இதை அதிக அளவில் எடுத்துக்கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.

ஆரஞ்சு

பழங்கள் பலன்கள்

வடகிழக்கு இந்தியா மற்றும் தென்கிழக்கு ஆசியப் பகுதியை பூர்வீகமாகக்கொண்டது. முதலாம் நூற்றாண்டில் ரோமானியர்கள் இந்தியாவில் இருந்து ஒரு ஆரஞ்சு பழக் கன்றை எடுத்துக்கொண்டுபோய் தங்கள் நாட்டில் நட்டு, விளைவித்தனர். இதன் பிறகு 1518-ல் கிரிஸ்டோபர் கொலம்பஸ் மூலம் இது அமெரிக்காவுக்குப் பரவியது. தற்போது உலக அளவில் பயன்படுத்தப்படும் பழங்களில் ஒன்றாக ஆரஞ்சும் விளங்குகிறது.

கலோரி குறைவான இந்தப் பழத்தில் கொழுப்புச் சத்து இல்லை. ஆனால், நார்ச்சத்து பெக்டின் என்ற ரசாயனம் அதிக அளவில் உள்ளது. இந்த பெக்டின் குடலில் நச்சுக்கள் சேருவதைத் தவிர்த்து குடல் புற்றுநோய்க்கான வாய்ப்பைக் குறைக்கிறது. மேலும் ஆரஞ்சுப்பழம், ரத்தத்தில் கொலஸ்ட்ரால் அளவையும் குறைக்கிறது. இதனால் மாரடைப்புக்கான வாய்ப்பு குறைகிறது.

மற்ற சிட்ரஸ் பழங்களைப்போல் இதிலும் வைட்டமின் சி நிறைவாக உள்ளது. ஒரு நாள் தேவையில் 90 சதவிகித வைட்டமின் சி-யை இந்தப் பழம் தருகிறது. இதனால் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கிறது. வைட்டமின் சி மற்றும் ஆன்டிஆக்சிடன்ட்கள் இணைந்து சருமத்தைப் பொலிவுறச் செய்கிறது.

பழங்கள் பலன்கள்

தோல் மற்றும் பார்வைக்கு வைட்டமின் ஏ மிகவும் அவசியம். இயற்கையாகக் கிடைக்கக்கூடிய இதுபோன்ற வைட்டமின்களை எடுத்துக்கொள்ளும்போது, அது நுரையீரல் மற்றும் வாய்ப்புற்று நோய்க்கான வாய்ப்பைக் குறைக்கிறது.

தாது உப்புக்களைப் பொருத்தவரை பொட்டாசியம் மற்றும் கால்சியம் ஆரஞ்சுப் பழத்தில் அதிக அளவில் காணப்படுகிறது.

சப்போட்டா

பழங்கள் பலன்கள்

மாம்பழம், வாழையைப் போலவே அதிக அளவில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த, எளிதில் செரிமானம் ஆகக்கூடிய பழம் சப்போட்டா. இதில் சர்க்கரை மிக எளிய வடிவத்தில் இருப்பதால், சாப்பிட்ட உடனேயே உடலுக்கு ஆற்றலைத் தரும்.

100 கிராம் சப்போட்டாவில் 83 கலோரிகள் உள்ளன. அதேபோல் நார்ச்சத்தும் இதில் அதிக அளவு இருப்பதால், மலச்சிக்கலைப் போக்கி, குடலில் உள்ள நச்சுகளை வெளியேற்ற உதவுகிறது. டேனின் என்ற ஆன்டிஆக்சிடன்ட் நிறைவாக உள்ளது. இது அமிலங்களை நீர்த்துப்போகச் செய்வதில் முக்கியப் பங்காற்றுகிறது. மேலும் செல்களில் வீக்கம், வைரஸ் - பாக்டீரியா கிருமிகளுக்கு எதிராகவும் செயல்படுகிறது. வயிற்றுப்போக்கு, ரத்தக் கசிவுவைத் தடுக்கும் மருந்தாகவும் பயன்படுகிறது.

பழங்கள் பலன்கள்

ஓரளவுக்கு வைட்டமின் சி மற்றும் ஏ சத்துக்கள் உள்ளன. அதிக அளவில் கார்போஹைட்ரேட் மற்றும் ஊட்டச்சத்துக்கள் உள்ளதால், கர்ப்பிணிகள் இதை ஓரளவுக்கு எடுத்துக்கொள்ளலாம். கர்ப்ப காலத்தில் ஏற்படக்கூடிய பிரச்னைகளான குமட்டல் வாந்தியைத் தடுக்கும். பாலூட்டும் பெண்களும் இதை எடுத்துக் கொள்ளலாம்.

தர்பூசணி

பழங்கள் பலன்கள்

கோடை வந்துவிட்டாலே உடலுக்கு குளிர்ச்சிதரும் தர்பூசணியைத் தேடிச் செல்கிறோம். தாகத்தைப் போக்கி, சோர்ந்துபோன உடலுக்கு ஆற்றலைக் கொடுத்து சுறுசுறுப்பாக்குகிறது தர்பூசணி.

தர்பூசணியில் 95.7% நீர்ச்சத்து இருப்பதால், உடல் சூட்டைத் தணித்து, புத்துணர்வு அளிக்கிறது. மேலும் இதயத்தைக் குளிரச் செய்து ரத்தக் குழாய்களில் இருக்கும் அடைப்பைப் போக்குகிறது. ரத்த ஓட்டத்தை சீராக்குகிறது.இதில் மிகமிகக் குறைந்த அளவிலேயே கலோரி உள்ளது.

வைட்டமின் ஏ சத்து இதில் அதிக அளவில் உள்ளது. 100 கிராம் பழத்தில் ஒரு நாளைக்குத் தேவையான வைட்டமின் ஏ அளவில் 19 சதவிகிதம் உள்ளது. வயிறு, மார்பகம், ப்ராஸ்டேட், நுரையீரல், கணையப் புற்றுநோய்க்கான வாய்ப்பைக் குறைக்கிறது. இதில் உள்ள லைகோபீன் (Lycopene) என்ற வேதிப்பொருள் சூரியனின் புற ஊதாக் கதிர்வீச்சு பாதிப்பில் இருந்து சருமத்தைப் பாதுகாக்கிறது. இதில் உள்ள சிட்ருலைன் (Citrulline) என்ற வேதிப்பொருள் உடலில் உள்ள கொழுப்பைக் கரைக்க உதவுகிறது.

பழங்கள் பலன்கள்

சிறுநீரைப் பெருக்கி நீர்க்கடுப்பு, சிறுநீர் பாதை நோய்த் தொற்று போன்ற பாதிப்புகள் ஏற்படாமல் பாதுகாக்கிறது.

ஆஸ்துமா, சளிப் பிரச்னை உள்ளவர்கள் தர்பூசணிச் சாறை லேசாக சூடு செய்து குடிக்கலாம். அனைவருக்கும் ஏற்ற பழம் இது.

சாத்துக்குடி

பழங்கள் பலன்கள்

நோயாளியைப் பார்க்கச் செல்லும்போது கையோடு வாங்கிச் செல்லும் பழங்களில் சாத்துக்குடிக்குத்தான் முதல் இடம். அந்த அளவுக்கு ஊட்டச்சத்துக்களைக் கொண்டது சாத்துக்குடி.

செரிமான மண்டலத்தைத் தூண்டக்கூடிய ஃபிளவனாய்ட், சாத்துக்குடியில் அதிக அளவில் உள்ளது. இதனால் வயிறு மற்றும் செரிமானக் குறைபாடு உள்ளவர்களுக்கு இது பரிந்துரைக்கப்படுகிறது. மலமிளக்கியாக மட்டுமல்லாது வயிற்றுப்போக்கையும் கட்டுப்படுத்தும் ஆற்றல் இதற்கு உண்டு. செரிமானக் குறைபாடு உள்ளவர்கள் சாத்துக்குடி சாறுடன் ஒரு சிட்டிகை உப்பு போட்டு குடிக்கலாம்.

இதில் வைட்டமின் சி நிறைவாக உள்ளது. சாத்துக்குடியைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், அது உடலின் ஒட்டுமொத்த செயல் திறனையும் மேம்படுத்தும். ரத்த ஓட்டம் சீராகும், நோய் எதிர்ப்பு மண்டலம் வலுப்பெறும். இதில் உள்ள லெமனாய்ட்ஸ் என்ற ரசாயனம் பல்வேறு வகையான புற்றுநோய் செல்களுக்கு எதிராக செயல்பட்டு, புற்றுநோய்க்கான வாய்ப்பைக் குறைக்கிறது.

பழங்கள் பலன்கள்

உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்களுக்கு ஏற்றது. வெதுவெதுப்பான நீரில் சாத்துக்குடி சாறு மற்றும் தேன் கலந்து சாப்பிட்டால், உடல் எடை குறையும். மேலும் கொழுப்பைக் குறைப்பதுடன், ரத்த அழுத்தத்தையும் கட்டுப்படுத்துகிறது.

இதில் அதிக அளவில் பொட்டாசியம் உள்ளது. சிறுநீரகம், சிறுநீர்ப்பையில் உள்ள நச்சுக்களை வெளியேற்றவும், நோய்த் தொற்று ஏற்படாமல் பாதுகாக்கவும் உதவுகிறது. இருப்பினும், சிறுநீரகப் பாதிப்பு உள்ளவர்கள் இதைத் தவிர்ப்பது நல்லது.

பழங்கள் பலன்கள்

இதில் உள்ள வைட்டமின் சி சத்தானது உடலில் உள்ள நச்சுகளை வெளியேற்றி, சருமத்துக்கு இயற்கைப் பொலிவை தருகிறது. இதனால் தோல் சுருக்கம் உள்ளிட்ட சருமப் பாதிப்பில் இருந்து பாதுகாக்கிறது.

பழங்கள் பலன்கள்

 ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பழங்களைச் சாப்பிடுவது மாரடைப்பு உள்ளிட்ட இதய நோய்கள், பக்கவாதம், சில வகையான புற்றுநோய் போன்றவை ஏற்படுவதற்கான வாய்ப்பைக் குறைக்கிறது.

பழங்கள் பலன்கள்

 பழங்களில் பொட்டாஷியம் நிறைவாக உள்ளதால், ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைக்கிறது. மேலும் சிறுநீரகத்தில் கல் உருவாவதற்கான வாய்ப்பையும் குறைக்கிறது.

பழங்கள் பலன்கள்

 வயிறு நிரம்பிய உணர்வைத் தந்தாலும் இதில் கலோரி மிகமிகக் குறைவாகவே உள்ளது.

பழங்கள் பலன்கள்

மேலும் கொலஸ்ட்ரால் இல்லவே இல்லை. இதனால் பழம் சாப்பிட்டால் பருமன் கவலை இல்லை

பழங்கள் பலன்கள்

 பருக்கள் வருவதைத் தடுக்க நினைப்பவர்கள், வைட்டமின் ஏ சத்து நிறைந்த காய்கறி- பழங்களை எடுத்துக்கொள்வதில் கவனம் செலுத்த வேண்டும்.

பழங்கள் பலன்கள்

 வைட்டமின் சி உள்ள காய்கறி- பழங்களை அப்படியே சாப்பிடுவதுதான் நல்லது. இதனைச் சூடுபடுத்தும்போது வைட்டமின் சி குறைந்துவிடும் அல்லது அழிந்துவிடும்.

பழங்கள் பலன்கள்

 சூரிய வெளிச்சம், காற்று கூட வைட்டமின் சி-க்கு எதிராக செயல்படக்கூடியவை. எனவே, வைட்டமின் சி நிறைவாக உள்ள பழங்களை உடனடியாக சாப்பிட்டுவிட வேண்டும். நீண்ட நேரம் வைத்திருக்கக் கூடாது.

-பா.பிரவீன் குமார்