Published:Updated:

ஊட்டச்சத்து ஊக்கம் தரும்!

ஊட்டச்சத்து ஊக்கம் தரும்!

ஊட்டச்சத்து ஊக்கம் தரும்!

ஊட்டச்சத்து ஊக்கம் தரும்!

Published:Updated:

ட்டச்சத்துக் குறைபாட்டால் குழந்தைகள் இறப்பதை முன்னாள் பிரதமரே ஒப்புக்கொண்ட தேசம் இது. ஊட்டச்சத்துக் குறைபாடு உள்ளவர்களில், பெரும்பாலானோர் சைவ உணவை மட்டுமே சாப்பிடுபவர்களாக உள்ளனர் என்றகின்றனர் சிலர். 'இது நிஜமா?’ என புதுச்சேரியைச் சேர்ந்த பொது நல மருத்துவர் நாகராஜனிடம் கேட்டபோது,

''அப்படி இல்லை. நம் உடலில் ஊட்டச்சத்துக்கள் இருப்பது நான்கு சதவிகிதத்துக்கும் குறைவுதான். ஆனால், நம் ஒவ்வொரு செயல்பாட்டுக்கும் அவைதான் அத்தியாவசியமாக இருக்கின்றன. ஆரோக்கிய வாழ்வுக்கு அஸ்திவாரமே, இந்த ஊட்டச்சத்துக்கள்தான். பொதுவாக, சத்துக் குறைபாடு ஏற்படுவதற்கு, நாம் சரியான உணவை எடுத்துக்கொள்ளாததுதான் காரணம். பெரும்பாலும் இரும்பு மற்றும் அயோடின் சத்துக் குறைபாடுதான் அதிக அளவில் காணப்படுகிறது. ஆரோக்கியமான நபர் ஒருவருக்குத் தினமும் தேவையான 10 அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் எவை, அவை எதற்காகத் தேவை, எவ்வளவு தேவை, எவற்றில் எல்லாம் இருக்கிறது என்பதை அனைவரும் தெரிந்து கொள்ளவேண்டியது அவசியம்.'

கால்சியம்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஒரு நாளைய தேவை: ஆண் - 1,200 மி.கி, பெண் - 1,000 மி.கி

எதற்குத் தேவை?: எலும்பு கட்டமைப்பு மற்றும் ஆரோக்கியம், தசைகளின் இயக்கம், திசுக்களின் செயல்பாட்டைக் கட்டுப்படுத்த.

பாதிப்பு: ஆஸ்டியோபொரோசிஸ், எலும்பு முறிவு, ரத்த அழுத்தம் அதிகரிப்பு, சிறுநீரகம் மற்றும் பித்தப்பை கல்.

எதில் இருக்கிறது: பாதாம், அத்திப் பழம், காரட், சிவப்பு அரிசி, பூண்டு, பேரீச்சம்பழம், கீரை, முந்திரி, பப்பாளி, பால் பொருட்கள்.

ஊட்டச்சத்து ஊக்கம் தரும்!

பொட்டாசியம்

ஒரு நாளைய தேவை: 4,700 மி.கி, கர்ப்பிணி - 5,000 மி.கி

எதற்குத் தேவை: நரம்புகள் செயல்பாடு, சீரான ரத்த அழுத்தப் பராமரிப்பு, ஆரோக்கியமான இதயச் செயல்பாடு, உடல் மற்றும் திசுக்களில் உள்ள நீரின் அளவைக் கட்டுப்படுத்த.

பாதிப்பு: இந்தச் சத்துக் குறைவின்போது மன அழுத்தம், சோர்வு ஆகியவை ஏற்படும். இதயத் துடிப்பு குறையும். உயர் ரத்த அழுத்தத்தை ஏற்படுத்தும்.

எதில் இருக்கிறது: ஆரஞ்சு, வாழைப்பழம், வேர்க்கடலை, பீன்ஸ், இளநீர், கீரை.

செலீனியம்

ஒரு நாளைய தேவை: ஆண் - 55 மை.கி, கர்ப்பிணி - 60 மை.கி

எதற்குத் தேவை: செல்கள் சேதம் அடையாமல் இருக்க, தைராய்டு செயல்பாட்டை ஒழுங்குபடுத்த, ஆண்களுக்கு விந்தணு உற்பத்தியைப் பெருக்க, ப்ராஸ்டேட், நுரையீரல், குடல் புற்றுநோய்க்கான வாய்ப்பைக் குறைக்க.

பாதிப்பு: சத்துக் குறைவு காரணமாக, தசைகள் தளர்வு, இதயம் பெரிதாவது மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு ஏற்படும்.

எதில் இருக்கிறது: சூரியகாந்தி விதை, மீன், நண்டு, விலங்குகளின் ஈரல், முட்டை, காளான், தானியங்கள்.

சோடியம்

ஒரு நாளைய தேவை: ஆண் - 1,500 மி.கி, பெண் - 1,300 மி.கி

எதற்குத் தேவை: உடல் மற்றும் ரத்தத்தில் உள்ள நீரின் அளவைக் கட்டுப்படுத்த.

பாதிப்பு: குறையும்போது சோர்வு, வித்தியாசமான உணர்வு, மனக் குழப்பம், வாந்தி, தசைப்பிடிப்பு ஏற்படுகிறது.

எதில் இருக்கிறது: கடல் உப்பு, அப்பளம், பால் பொருட்கள்.

துத்தநாகம்

ஒரு நாளைய தேவை: ஆண் - 14 மி.கி, பெண் - 12 மி.கி

எதற்குத் தேவை: நோய் எதிர்ப்பு சக்தி மேம்பட, இனப்பெருக்க மண்டலம் மற்றும் நரம்பு மண்டலம் மேம்பட, ரத்தம் உறைவதற்கு உதவிபுரிய.

பாதிப்பு: துத்தநாகம் குறையும்போது பார்வைக் குறைபாடு, சுவை, வாசனை உணர்வதில் குறைபாடு, அலர்ஜி போன்றவை ஏற்படும். அதிக அளவில் எடுத்துக்கொள்ளும்போது, வயிற்றுப்போக்கு வாந்தி, தலைவலி ஏற்படும்.

எதில் இருக்கிறது: கடல் உணவு, இறைச்சி, பாதாம், வேர்க்கடலை, சோயா, பால் பொருட்கள், காளான், சூரியகாந்தி விதை, கோதுமை, கீரை.

இரும்பு

ஊட்டச்சத்து ஊக்கம் தரும்!

ஒரு நாளைய தேவை: 10-12 மி.கி, கர்ப்பிணி- 27 மி.கி

எதற்குத் தேவை: உடல் முழுவதும் உள்ள திசுக்களுக்கு ரத்த சிவப்பு அணுக்கள் மூலம் ஆக்சிஜனைக் கொண்டுசேர்க்க, மூளை மற்றும் தசைகளின் செயல் திறனுக்கு.

பாதிப்பு: குறையும்போது ரத்த சோகை, சோர்வு, சருமம் மற்றும் நகத்தின் நிறம் மாறுதல், மன அழுத்தம் போன்றவை ஏற்படும். அதிகரிக்கும்போது இதயத்தில் அதிகமாகப் படிந்து இதய நோயை ஏற்படுத்தும்.

எதில் இருக்கிறது: கீரை, பச்சைக் காய்கறிகள், முட்டை, கோழி, சோயா, இறைச்சி, ஈரல், பேரீச்சம்பழம்.

அயோடின்

ஒரு நாளைய தேவை: 150 மை.கி, கர்ப்பிணி- 220 மை.கி, பாலூட்டும் தாய்மார்கள் - 290 மை.கி

எதற்குத் தேவை: செல்களின் வளர்சிதை மாற்றத்துக்கு, தைராய்டு செயல்பாடு மற்றும் உற்பத்திக்கு.

பாதிப்பு: தைராய்டு ஹார்மோன் பிரச்னைகள், காய்ட்டர் எனப்படும் கழுத்துக் கழலை நோய்.

எதில் இருக்கிறது: அயோடின் கலக்கப்பட்ட உப்பு, கடல் உணவு, பால்.

தாமிரம்

ஒரு நாளைய தேவை: 900 மை.கி

எதற்குத் தேவை: எலும்பு, ரத்த சிவப்பு அணுக்கள் உற்பத்தி, சீரான ரத்த ஓட்டத்துக்கு உதவுகிறது. மேலும் செல்களுக்கு ஆற்றல் அளிக்கிறது. இரும்புச் சத்தைக் கிரகிக்க உதவுகிறது.

பாதிப்பு: குறையும்போது ரத்த ஓட்டம் பாதிக்கப்படும். நோய் எதிர்ப்பு சக்தி குறையும், எலும்பு தொடர்பான பிரச்னை ஏற்படும்.

எதில் இருக்கிறது: ஆட்டின் இறைச்சி, ஈரல், முந்திரி, சூரியகாந்தி விதை, முழுத் தானியங்கள், காளான், உலர் பழங்கள்.

மக்னீசியம்

ஒரு நாளைய தேவை: 420 மி.கி, பெண் - 320 மி.கி

எதற்குத் தேவை: தசை மற்றும் நரம்பு மண்டலத்தின் செயல்பாடு, சீரான இதயத் துடிப்பு, எலும்பு உறுதி, உடலில் 300 வகையான உயிர்வேதி செயல்பாட்டுக்கு.

பாதிப்பு: குறையும்போது உயர் ரத்த அழுத்தம், இதய நோய்கள் ஏற்படுகின்றன. நோய் எதிர்ப்பு சக்தி குறைகிறது. மன அழுத்தம், மனப் பதற்றம், தலைவலி, ஆஸ்டியோபொரோசிஸ் ஏற்படலாம்.

எதில் இருக்கிறது: கோழி இறைச்சி, காளான், கீரை, முழு தானியங்கள், பச்சைக் காய்கறிகள், பாதாம், வாழைப்பழம்.

ஃபுளூரைட்

ஒரு நாளையத் தேவை: ஆண் - 3 மி.கி, பெண் - 4 மி.கி

எதற்குத் தேவை: எலும்பு அடர்த்தி, நோய்த் தொற்றுக் கிருமிகளுக்கு எதிராகச் செயல்பட, பற்சிதைவில் இருந்து பற்களைக் காக்க, வெண்மையான பற்களுக்கு அவசியம்.

பாதிப்பு: பற்சிதைவு, எலும்பு உறுதியின்மை, முதுகெலும்பு வளைதல், பார்வைக் குறைபாடு.

எதில் இருக்கிறது: முட்டைகோஸ், கேரட், பச்சைக் காய்கறிகள், பூண்டு, ஃபுளூரைட் கலந்த நீர், மீன், ஃபுளூரைட் பற்பசை, மவுத்வாஷ்.

- பா.பிரவீன் குமார்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism