Published:Updated:

கமலரத்தினத்தின் தலைப்பிரசவம்!

தமிழகத்தின் முதல் சோதனைக் குழாய் குழந்தை, தாயான அனுபவம்

கமலரத்தினத்தின் தலைப்பிரசவம்!

தமிழகத்தின் முதல் சோதனைக் குழாய் குழந்தை, தாயான அனுபவம்

Published:Updated:

தென்னிந்தியாவின் முதல் சோதனைக் குழாய்க் குழந்தை கமலரத்தினத்துக்கு, இப்்போது வயது 24. மகப்பேறு மருத்துவத்தின் ஒரு மைல்கல் சம்பவம் கமலரத்தினத்தின் பிறப்பு. கடந்த ஆண்டு திருமணம் முடிந்த இவர், சென்ற மாதம் பிரசவத்துக்காக சென்னை ஜி.ஜி. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஜூலை 10ம் தேதி,  இவருக்கு பெண்குழந்தை பிறந்தது. 'எனக்குப் பேத்தி பிறந்திருக்கா...’ என்று உற்சாகத்துடன் கூவிய டாக்டர் கமலா செல்வராஜ், தன் முதல் சோதனை குழாய் சாதனையில் பிறந்த குழந்தையின் குழந்தைக்காக, இனிப்புக் கொடுத்துக் கண் கலங்கினார்.      

கமலரத்தினத்தின் தலைப்பிரசவம்!

கமலரத்தினத்துக்கு சிசேரியன் என்பதால், இரு வார ஓய்வுக்குப் பிறகு, அவர் தங்கியிருந்த வீட்டில் சந்தித்தோம். பூவின் மொட்டினைப் போல், கண்களில் தூக்கம் சொக்க, ரோஜா போன்ற உதடுகளை விரித்து, கொட்டாவி விட்டுக்கொண்டி

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ருந்தாள் புதிதாய் பூத்த பூக்குட்டி ஆராத்யா!  'நைட் எல்லாம் கொட்ட கொட்ட முழிச்சிட்டு இப்ப தூங்கறதைப் பாரு..." என்று செல்லமாக மகளைக் கொஞ்சியபடி வந்து அமர்ந்தார்் கமலரத்தினம்.  

'இந்த மகிழ்ச்சியைப் பகிர்ந்துக்க  அம்மா இல்லையேங்கிற வருத்தம் எனக்கு ரொம்பவே இருக்கு. என் கல்யாணத்தப்பவே, ரொம்ப தளர்ந்து போய்த்தான் இருந்தாங்க. எனக்கு பீரியட்ஸ் தள்ளிப் போனதை போனில் சொன்னதும், அவங்களுக்கு அப்படியொரு சந்தோஷம். குரல் உடைஞ்சு அழற மாதிரிப் பேசினாங்க!  'பத்திரமா இருக்கணும்... இந்தச் சேதியைக் கேக்கத்தாம்மா நான் காத்திருந்தேன்'னு உணர்ச்சிவசப்பட்டாங்க... உடனே, எங்க சொந்தக்காரங்க எல்லாருக்கும் போன் பண்ணிச் சொல்ல ஆரம்பிச்சிட்டாங்க...! நான், 'ஏம்மா அதுக்குள்ள அவசரப்படறே?... இன்னும் கொஞ்ச நாள் கழிச்சு சொல்லலாமே'ன்னு சொன்னதும், 'அடப் போடீ அசடு... 30 வருஷமா, ஒவ்வொரு மாசம் 'தூரம்’ வர்றதுக்கு முன்னால நான் தவிச்ச தவிப்பும், தூரம் ஆயிட்டதும் நான் அழுத கண்ணீரும் எனக்குத்தான்டி தெரியும்.  பல சோதனைகள், சிகிச்சைகளுக்கு அப்புறம் எனக்குக் கிடைச்ச மிகப் பெரிய பாக்கியம், உனக்குக் கிடைச்சிருக்குடி... இதை விட எனக்கு வேற என்ன வேணும்!'ன்னு அம்மா பேசினப்பதான் என் பிறப்போட முக்கியத்துவமே எனக்குப் புரிஞ்சுது! சொல்லப்போனா, நான் பிறந்தப்ப இருந்த சந்தோஷத்தை விட, நான் 'கன்சீவ்’ ஆகியிருக்கேன்னு தெரிஞ்சதும் அம்மா அடைஞ்ச சந்தோஷம் இருக்கே... கோடி கொடுத்தாலும், ஈடாகாது! ப்ச், இந்த விஷயத்தை அம்மாகிட்ட சொன்ன அஞ்சாம் நாளே,  அம்மா உடம்பு ரொம்ப சீரியஸாகி, எங்களை விட்டுப் போயிட்டாங்க. அம்மா, என்னை விட்டுப் போனதா நான் நினைக்கலை... தவமாய் தவமிருந்து பெத்த மகளைத் தவிக்க விட்டுட்டுப் போகக் கூடாதுன்னு,  அம்மாவே எனக்கு மகளா வந்து பிறந்துட்டாங்க...' என்று குரல் கம்மியவரிடம், சோதனைக் குழாய்க் குழந்தையாக வளர்ந்த அவருடைய அனுபவத்தைக் கேட்டோம்.

கமலரத்தினத்தின் தலைப்பிரசவம்!

'ஸ்கூல், காலேஜ்லகூட யாருக்கும் தெரியாது. நார்மலாப் பிறக்கிற குழந்தை போலத்தான் நானும் வளர்ந்தேன். கல்யாணம்னு வர்றப்ப மட்டும், என் கணவர் ராஜேஷ் குடும்பத்தாரிடம் சொன்னோம். கல்யாணப் பத்திரிகையை டாக்டருக்கு கொடுக்கறப்பவே, அவங்க சொன்ன முதல் வார்த்தை, 'எந்தக் காரணத்துக்காகவும் குழந்தை பெத்துக்கிறதை தள்ளிப் போடாதே'ங்கிறதுதான். கன்சீவ் ஆனதும்,  'நான்தான் உனக்குப் பிரசவம் பார்ப்பேன்'னு அன்புக் கட்டளை போட்டாங்க. செக் அப் போறப்பல்லாம், ஜிஜி ஹாஸ்பிடல்ல நான்தான் 'சென்டர் ஆஃப் அட்ராக்‌ஷன்'. 'நீங்கதானே டாக்டருடைய முதல் டெஸ்ட் ட்யூப் பேபி... எப்படி இருக்கீங்க? 'ன்னு அங்கே  சிகிச்சைக்கு வந்திருக்கும்  பலர் ஆர்வமாகக் கேட்பாங்க.  

கர்ப்பமானதும் எப்படி ரியாக்ட் பண்ணனும்னே தெரியலை... அதை ரியலைஸ் பண்றதுக்குள்ள, அம்மா போய்ட்டாங்க. அந்த இழப்பு  தெரியாம மாமியாரே, என்னோட இன்னொரு அம்மாவாக இருந்து பார்த்துக்கிட்டாங்க. இப்போ குழந்தைக்கு நல்லா ஃபீட் பண்ண முடியுது. நான் உருவானது மட்டும்தான் சோதனைக் குழாயில்... எல்லாக் குழந்தைகளையும் போல சாதாரணமான ஒரு வாழ்க்கைதான் என்னுடையதும்!'  என்று புன்னகையோடு முடிக்கிறார் கமலரத்தினம்.

தன் பிறப்பின் தனித்துவம் அறியாமல், அமைதியாக, அழகாகத் தூங்கிக்கொண்டிருந்தாள் ஆராத்யா!

கமலரத்தினத்தின் தலைப்பிரசவம்!

வாழவைக்கும் வாழ்த்துகள்!

கமலரத்தினம் பிறந்தபோது, அப்போதைய ஜனாதிபதியாக இருந்த ஆர். வெங்கட்ராமன்  முதல், அன்றைய முதல்வர் கருணாநிதி, பாடகர் கே.ஜே. யேசுதாஸ், நடிகைகள் பத்மினி, சரோஜாதேவி, மறைந்த வயலின் வித்வான் குன்றக்குடி வைத்தியநாதன்... என்று குழந்தையை நேரில் வந்து பார்த்து வாழ்த்திய வி.ஐ.பி.க்கள் பலர்.

பேர் சொல்ல ஒரு பேத்தி!

கமலரத்தினத்தின் தலைப்பிரசவம்!

கமலரத்தினத்தின் அப்பா ராமமூர்த்தி, தாத்தாவான சந்தோஷத்தில், பழைய நினைவுகளைப் பகிர்ந்துகொண்டார்.

'எங்க சொந்த  ஊர், தென்காசிக்குப் பக்கத்தில் சுந்தரபாண்டியபுரம். எனக்கும்  என் மனைவி பொன்னாவுக்கும் கல்யாணம் ஆகிப் பல வருஷங்களா குழந்தை இல்லை.  ஜெமினி சார் எங்க குடும்ப நண்பர். என்கிட்டே ஒரு சகோதரர் போல அன்பு காட்டிப் பழகுவார். அவர்தான், தன் மகள் டாக்டர் கமலாகிட்டே எங்களைக் கூட்டிட்டுப் போனார். அப்பதான், அவங்க ஆஸ்திரேலியாவில் செயற்கை முறைக் கருத்தரிப்பு பத்தி மேல்படிப்புப் படிச்சிட்டு வந்திருந்தாங்க.

1986ல் சென்னை வந்தோம். எல்லா டெஸ்ட்களும் எடுத்ததில், என் மனைவிக்கு ஃபெலோப்பியன் குழாய்ல அடைப்பு இருக்குனு கண்டுபிடிச்சாங்க. இயற்கை முறையில் கருத்தரிக்க வாய்ப்பு இல்லைனு சோதனைக் குழாய் முறையில் முயற்சியை ஆரம்பிச்சாங்க. டாக்டரின் கடினமான முயற்சிகளுக்குப் பலன் கிடைச்சசது... 89ல் என் மனைவி கருத்தரிச்சாங்க... டாக்டரோட வழிகாட்டுதலோட, அந்தக் காலகட்டத்தை நல்லபடியா கடந்து, 90ல் என் கமலரத்தினம் பிறந்தாள். அது, மருத்துவ வரலாற்றில் இடம்பெற்ற வரலாற்று நிகழ்ச்சி! அவளை உருவாக்கித் தந்த டாக்டர் கமலாம்மாவோட பெயரையும் என் அம்மா பெயரையும் சேர்த்து, 'கமலரத்தினம்’ பெயர் வெச்சோம். தென்னிந்தியாவின் முதல் சோதனைக் குழாய்க் குழந்தையான என் பொண்ணு, இப்போ தாயாகி இருக்கா... நான் தாத்தா ஆகிட்டேன்." என்றார் நெகிழ்ச்சியுடன்.

பிரேமா நாராயணன்

படங்கள்: சொ.பாலசுப்ரமணியன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism