Published:Updated:

‘மனிதர்களாகச் சிந்தியுங்கள்; ஏழைகளின் நிலையை எண்ணிப்பாருங்கள்!’ -அக்தர் அட்வைஸ் #Corona

அக்தர்
அக்தர்

'கொரோனா பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த வேளையில், மனிதர்களாக மக்களைப் பற்றி சிந்தியுங்கள்' என அக்தர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இந்த வேளையில் மக்கள் அனைவரும் மனிதநேயத்துடன் செயல்பட வேண்டும் என பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் சோயப் அக்தர் கூறியுள்ளார்.

கொரோனா
கொரோனா

கொரோனா வைரஸ் தாக்கம் குறித்து பேசியுள்ள அக்தர், ``உலகம் முழுவதும் உள்ள என்னுடைய ரசிகர்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுக்கிறேன். கொரோனா வைரஸ் தொற்று உலக அளவில் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. நாம் அனைவரும் ஒருங்கிணைந்த சக்தியாகச் செயல்பட வேண்டும்.

கொரோனா வைரஸ் பரவாமல் இருப்பதற்காகத்தான் ஊரடங்கு உத்தரவுகள் பிறப்பிக்கப்படுகின்றன. இந்த வேளையில் நீங்கள் மக்களை சந்தித்து உரையாடுவதால் எந்தப் பயனும் இருக்கப்போவதில்லை. நீங்கள் உங்கள் வீடுகளில் பொருள்களை வாங்கி பதுக்குகிறீர்கள் என்றால் தினக்கூலிகளின் நிலையை எண்ணிப்பாருங்கள். பணக்காரர்கள் எப்படியும் வாழ்ந்து விடுவார்கள். ஏழைகளின் நிலையைக் கொஞ்சம் எண்ணிப்பாருங்கள். கடைகள் எல்லாம் காலியாக உள்ளன. நீங்கள் மூன்று மாதங்களுக்குப் பிறகு உயிர்வாழ்வீர்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம் இருக்கிறது.

ஷோயப் அக்தர்
ஷோயப் அக்தர்

தினக்கூலிகளைக் கொஞ்சம் நினைத்துப்பாருங்கள் அவர்களுடைய குடும்பத்தினருக்கு அவர்களால் எப்படி உணவளிக்க முடியும். இந்த வேளையில் மனிதர்களாக மக்களைப் பற்றி சிந்தியுங்கள். இந்துவாகவோ, இஸ்லாமியராகவோ சிந்திக்காதீர்கள். பொருள்களை யாரும் பதுக்காதீர்கள். மக்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்ய வேண்டும். தேவையான நிதி திரட்ட வேண்டும். ஒருவருக்கொருவர் உதவியாக இருக்க முயற்சி செய்யுங்கள். நாம் ஒருவருக்கொருவரை கவனித்துக்கொள்ளும் நேரம் இது. பிரிந்து செல்வதற்கான நேரமில்லை. நாம் மனிதர்களாக மனிதாபிமானத்தோடு வாழவேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு