நமது எண்ணமும் செயலுமே நமக்கான வாழ்க்கை பாதையைச் செதுக்குகின்றன. பிறரின் வாழ்க்கையையும் அவர்கள் கடந்து வந்த பாதையையும் பற்றி அறிந்து கொள்வதில் அனைவருக்குமே ஆர்வம் இருக்கத்தான் செய்கிறது. அதன் மூலம் நம் வாழ்க்கைக்கான பாடம் கிடைத்துவிடாதா என்கிற ஏக்கம்கூட அதற்கான காரணமாக இருக்கலாம். சோதனைகளையும் வேதனைகளையும் கடந்து வந்த ஒரு இளம்பெண் பற்றியே நாம் இங்கே பார்க்கப் போகிறோம்.

வாழ்வின் அடிமட்ட நிலையிலிருந்து மீண்டெழுந்து சாதனைப் பெண்ணாக உயர்ந்த அவரின் கதையை இணையத்தில், அவரே வெளியிட்டிருந்தார். லட்சக்கணக்கான மக்களின் பாராட்டைப் பெற்ற அந்தப் பெண், குடிகாரத் தந்தையின் அவதூறுப் பேச்சுகளையும் தற்கொலை முயற்சிகளையும் கடந்து, 'வாழ்க்கை வாழ்வதற்கே' என்பதை நிரூபித்துக் காட்டியிருக்கிறார்.
தான் கடந்து வந்த முள்பாதை குறித்து ஃபேஸ்புக் பக்கத்தில் அவர் குறிப்பிடுகையில், ''மிகச்சிறிய குடிசையில் பிறந்தேன். எனக்கு விவரம் தெரிந்தது முதல் என் தாயும் தந்தையும் எப்போதும் சண்டையிட்டுக்கொண்டே இருப்பார்கள். என் தந்தைக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருந்ததால் என் தந்தை, வீட்டுச் செலவுக்குப் பணம் தருவதில்லை என்பதால் அது தொடர்பாகவே அடிக்கடி சண்டை நடக்கும். சில சமயங்களில் சண்டை தீவிரம் அடைந்தால், கடைசியில் சதையைப் பிய்க்கும் அளவுக்கு என் தாய்க்கு பெல்ட் அடி விழும்.
'நாம் ஏன் சாக வேண்டும்? அது பிரச்னைக்கான தீர்வும் அல்ல. அதனால் நமக்கான வழியை நாமே தேடிக்கொள்வோம்.'சாதனைப் பெண்ணின் தாய்
இந்தச் சண்டைகளால் மனமுடைந்த என் தாய் ஒருநாள் என்னை அழைத்துக்கொண்டு கடற்கரைக்குச் சென்றார். அங்கு நாங்கள் இருவரும் கடலில் மூழ்கி தற்கொலை செய்ய வேண்டும் என்பதுதான் திட்டம். ஆனால், கடைசி நேரத்தில் மனத்தை மாற்றிக்கொண்ட அவர், 'நாம் ஏன் சாக வேண்டும்? அது பிரச்னைக்கான தீர்வும் அல்ல. அதனால் நமக்கான வழியை நாமே தேடிக்கொள்வோம்' என என்னை வீட்டுக்கே அழைத்து வந்துவிட்டார். இல்லாவிட்டால் நான் எப்போதோ செத்துப் போயிருப்பேன்.
மீண்டும் என் தந்தை சண்டையிட்டு அடித்தபோது வெகுண்டெழுந்த அம்மா, நேராகக் காவல்நிலையத்துக்குச் சென்று புகார் அளித்தார். அதனால் போலீஸார் வந்து என் தந்தையை அழைத்துச் சென்று விசாரித்துவிட்டு அனுப்பினார்கள். தொடர்ந்து அவர் அம்மாவைச் சித்ரவதை செய்து வந்தார். இப்படியான சூழலில் நான் கல்லூரியில் சேர்ந்தேன். அங்கு என்னோடு பழகிய ஒரு நண்பனின் மீது காதல் ஏற்பட்டது.

எனக்கு மிகவும் நம்பிக்கையாகவும் உறுதுணையாகவுமிருந்த அந்த நண்பன் திடீரென என் நட்பு வேண்டாம் என ஒதுங்கிக் கொண்டான். வாழ்க்கையே சூனியமாகிப்போனது போன்ற நிலையிலிருந்த அந்தச் சமயத்தில் வீட்டுக்குப் போனதும் என் தந்தை கோபமாகத் திட்டினார். மனம் முழுவதும் சோகம் அப்பிக் கிடந்ததால், வாழ்க்கையை முடித்துக்கொள்வதென முடிவெடுத்தேன். அதனால் ஒரு பாட்டில் பினாயிலைக் குடித்து விட்டேன்.
நான்கு நாள்களுக்குப் பிறகு, கண்விழித்தபோது மருத்துவமனையின் அவசரச் சிகிச்சை சிறப்புப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தேன். என்னைப் பார்க்க வந்திருந்த அப்பா, 'நீ தற்கொலை செய்வதென முடிவெடுத்திருந்தால், அதைச் சரியாகத் திட்டமிட்டுச் செய்திருக்க வேண்டும்' என்று எகத்தாளமாகச் சொன்னார். ஒரு வாரத்துக்குப் பின்னர் டிஸ்சார்ஜ் ஆனதும் வீட்டுக்குப் போனேன். அப்போது என் சுற்றுப்புற உலகமே மாறியிருந்தது. என் நண்பர்கள் யாரும் என்னைப் பார்க்கவே விரும்பவில்லை. பக்கத்து வீடுகளில் வசிப்போருக்கு நான் பேசு பொருளாக மாறியிருந்தேன்'' என்று, தான் கடந்து வந்த பாதையை நினைத்துப் பார்த்தார்.

தொடர்ந்து அவர் எழுதுகையில், ''உடல் நலம் தேறியதும் எனக்கு கவுன்சலிங் தேவைப்பட்டது. அது எனக்கு மிகவும் உபயோகமாக இருந்ததுடன், தற்கொலை முடிவுக்குப் பின் புதிதாகப் பிறந்தது போன்ற உணர்வை ஏற்படுத்தியது. எனக்கு வாழ்க்கை குறித்த புரிதல் ஏற்படத் தொடங்கியது. அதனால் நானும் எங்கம்மாவும் அந்தப் பகுதியிலிருந்து வெளியேறி எங்களுக்காக ஒரு வீட்டைத் தேர்வு செய்து குடியேறினோம். பழகிய வாழ்வு குறித்து அசிங்கப்பட எதுவுமில்லை என்பதை முடிவு செய்தேன்.
கல்லூரியில் முதுகலை ஜர்னலிசம் முடித்தேன். அதைத் தொடர்ந்து ஆல் இண்டியா ரேடியோவில் வேலை கிடைத்தது. கடந்த சில ஆண்டுகளில் எனது வாழ்வில் வசந்தம் வீசத் தொடங்கியது. நானும் சில நண்பர்களும் சேர்ந்து, பிறருக்கு உதவுவதற்காக ஒரு அமைப்பைத் தொடங்கியிருக்கிறோம். முதல்கட்டமாக அந்த அமைப்பு சார்பாக வெயிலிலும் வாகனப் புகையிலும் சாலைகளின் நடுவில் நின்று பணியாற்றும் காவலர்களுக்கு டீ கொடுத்து அன்பைப் பரிமாறி வருகிறோம். அதனால் அடுத்தவர்களைப் பற்றி முடிவெடுப்பதற்குப் பதிலாக அவர்களுக்கு உதவுங்கள்''எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
என்னைப் பார்க்க வந்திருந்த அப்பா, 'நீ தற்கொலை செய்வதென முடிவெடுத்திருந்தால், அதைச் சரியாகத் திட்டமிட்டுச் செய்திருக்க வேண்டும்' என்று எகத்தாளமாகச் சொன்னார்.சாதனைப் பெண்
அவருடைய முகநூல் பதிவுக்கு லட்சக்கணக்கானோர் வரவேற்பு தெரிவித்துள்ளனர். அவருடைய கதையைப் படித்த பலர் மிகுந்த உணர்ச்சிப் பெருக்குடன் நன்றி தெரிவித்துள்ளனர். 'உங்களின் நிஜக் கதையைப் பகிர்ந்துகொண்டதற்கு மிகுந்த நன்றி. அதைப் படித்ததும் மிகுந்த உத்வேகம் கிடைத்திருக்கிறது' என்பது உள்ளிட்ட எண்ணற்ற பாராட்டுகள் குவிந்து வருகிறது.
இதேபோல் உங்களுக்கும் ஏதேனும் மனநலம் சார்ந்த சந்தேகங்கள், சிக்கல்கள் இருந்தால் தீர்வு தேடித் தரக் காத்திருக்கிறது விகடன்!
உங்களுடைய பிரச்னைகளைப் பற்றி விவரமாக எழுதி,
mentalhealth@vikatan.com
என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள். அதற்கான தீர்வுகள் நிபுணர்களிடம் கேட்கப்பட்டு விகடன் இணையதளத்தில் விரைவில் பகிரப்படும்.
#NoMoreStress