அவரவர் பிரச்னை அவரவருக்குப் பெரியதுதான். ஆனால், எந்தப் பிரச்னைக்கும் தற்கொலை தீர்வாகாது. ஆத்திரமும் அவசரமும் கண்ணை மறைக்கும் என்பார்கள். அதுபோலவே, இக்கட்டான சில நேரங்களில் சிலர் எடுக்கத் துணியும் தவறான, எதிர்மறையான முடிவுகள், தற்கொலை நிகழ்வாகி, நம்மில் ஒருவரை இழக்கக் காரணமாகின்றன. இதுகுறித்து அதிர்ச்சியும் வேதனையுமாக அறிக்கை வெளியிட்டிருக்கிறது தேசியக் குற்ற ஆவணக் காப்பகம். அதில், கடந்த ஆண்டில் மட்டும் நாடு முழுக்க 10 சதவிகித தற்கொலை மரணங்கள் அதிகரித்திருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையில் வெளியிடப்பட்டிருக்கும் மற்றோர் அதிர்ச்சித் தகவல், கடந்த சில ஆண்டுகளாகவே மகாராஷ்டிராவுக்கு அடுத்தபடியாக, தமிழகத்தில்தான் தற்கொலை மரணங்கள் அதிகளவில் பதிவாகின்றனவாம். இந்திய அளவில் ஒப்பிடும்போது, இந்த இரண்டு மாநிலங்களில் மட்டுமே கடந்த ஆண்டு 24 சதவிகித தற்கொலை இறப்புகள் பதிவாகியுள்ளன.
இந்தியாவில் 2016-ல் 31,000 பேர் தற்கொலை செய்துகொண்டிருக்கின்றனர். இந்த எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்து, கடந்த ஆண்டில் மட்டும் 1,53,000-க்கும் மேற்பட்டோர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். மகாராஷ்டிரா, தமிழகத்துக்கு அடுத்தபடியாக, மத்தியப்பிரதேசம், மேற்கு வங்காளம், கர்நாடகா ஆகிய மாநிலங்களில் அதிகளவில் தற்கொலைகள் நிகழ்கின்றன.
தற்கொலை எண்ணங்களுக்கு, குடும்ப பிரச்னைகள் முதன்மையான காரணமாக இருப்பதாகவும், போதை மருந்துப் பயன்பாடு, திருமணம், காதல், தவறான உறவுமுறை, கடன் பிரச்னை, வேலையின்மை, தேர்வில் தோல்வி போன்றவையும் முக்கிய காரணங்களாக இருப்பதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பிரச்னைக்கான தீர்வைத் தேடி, இனியாவது நம்மில் யாரையும் எதற்காகவும் தற்கொலை நிகழ்வால் நாம் இழக்கக் கூடாது என்பதை வலியுறுத்துவதுதான் இந்த அறிக்கையின் நோக்கமே தவிர, அச்சமூட்டுவதல்ல!

தற்கொலை எண்ணம் ஏற்படுவதற்கான காரணங்கள், அந்த எண்ணம் நம்மை ஆட்கொள்ளும்போது உடனடியாக நாம் செய்ய வேண்டியவை, அந்த எண்ணத்திலிருந்து முற்றிலுமாக விடுபட்டு மகிழ்ச்சியாக வாழ்வதற்கான வழிமுறைகள், உடனடியாக நாட வேண்டிய ஆலோசனை மையங்கள் உட்பட அவசியமான வழிகாட்டுதல்கள் இடம்பெற்ற கட்டுரையைப் படிக்க, இந்த லிங்க்கை க்ளிக் செய்யவும்.
தற்கொலைக்கு எதிரான இலவச ஆலோசனை மையங்கள் :
தற்கொலைத் தடுப்பு மையம் - 104
சிநேகா தற்கொலைத் தடுப்பு மையம் - 044 - 24640050, 28352345.
பெண்களுக்கான தீர்வு மையம் - 1091