திருத்தலங்கள்
தொடர்கள்
Published:Updated:

‘தேரோட்டம் தொடர்ந்தது!’

தேரோட்டம்
பிரீமியம் ஸ்டோரி
News
தேரோட்டம்

கோயில் தரப்பினரோ வந்த வழியில் திருப்பி இழுத்துச் செல்வதை அபசகுனமாகக் கருதினர்.

ஒரு கிராமத்தில் கோயில் திருவிழா நடைபெற்றது. இதில் தேரோட்டம் நடைபெற்றது. ஸ்வாமி விக்கிரகத்தை அழகாக அலங்கரித்து தேரில் அமர்த்தி, பக்தகோடிகள் வலம் பிடித்து இழுத்து வந்தனர்.

ஓரிடத்தில், பெரிய மரக்கிளை ஒன்று தேர் பவனிக்குத் தடையாக இருந்தது. அந்தக் கிளையை வெட்டி விடலாம் என்று முடிவு செய்தனர். இதற்கு, அந்தப் பகுதியில் வசித்தவர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். ‘’இந்த மரம் எங்கள் மூதாதையர்கள் வழிபட்ட மரம். இதில் எங்களின் குலதெய்வம் குடிகொண்டிருக்கிறது. கிளையை வெட்டினால் தெய்வக் குற்றத்துக்கு ஆளாவீர்கள்!’’ என்று தடுத்தனர்.

கோயில் தரப்பினரோ வந்த வழியில் திருப்பி இழுத்துச் செல்வதை அபசகுனமாகக் கருதினர். தவிர, வேறு வழியில் தேரைக் கொண்டு செல்லவும் அவர்கள் தயாராக இல்லை. இந்த இக்கட்டான சூழலில் இரு தரப்பினருக்கும் இடையே வாய்த் தகராறு முற்றியது. வன்முறை வெடிக்கும் அபாயம் தெரிந்தது. ஊர்ப் பெரியவர்கள், விஷயத்தை திப்பு சுல்தானிடம் கொண்டு சென்றனர்.

இரு தரப்பினரும் கூறிய விளக்கத்தைப் பொறுமையாகக் கேட்டறிந்த திப்பு சுல்தான் யோசித்தார். ‘இந்த வழக்கில் நான் தீர்ப்பு சொல்வது சரியல்ல!’ என்று தயங்கினார். இறுதியில், இந்த வழக்குக்குத் தீர்ப்பு சொல்லும் தகுதி வாய்ந்தவர் அப்பாஜியே என்ற முடிவுக்கு வந்தார். உடனடியாக அப்பாஜியை வரவழைத்து, வழக்கை அவரிடம் ஒப்படைத்தார்.

தேரோட்டம்
தேரோட்டம்

அப்பாஜி சம்பவ இடத்துக்கு விரைந்தார். என்னதான் தீர்ப்பு சொல்லப் போகிறார் என்பதை அறிந்து கொள்ளும் ஆவலில் திப்பு சுல்தானும் அங்கு மாறுவேடத்தில் சென்றார். தேர் தடைபட்டு நின்ற இடத்தை நன்கு சுற்றிப் பார்த்தார் அப்பாஜி. பிறகு, இரு தரப்பினரையும் அழைத்தார். அவர்களிடம் மீண்டும் பேசிப் பார்த்தார். அவரவர்கள், தங்களது நிலையில் உறுதியாக இருந்தனர்.

சற்று நேரம் யோசித்த அப்பாஜி, ‘’இந்தக் கிளை மட்டத்தைக் காட்டிலும் தேர் எவ்வளவு உயரம் அதிகமாக உள்ளது?’’ என்று கேட்டார்.

‘’சுமார் 5 அடி இருக்கும் ஐயா!’’ என்று பதில் வந்தது.

உடனே, ‘’அப்படியா... சரி, இந்தப் பாதையில் ஐந்தடி ஆழத்துக்குப் பள்ளம் தோண்டி பாதை அமையுங்கள். தேர், அந்தப் பாதை வழியே செல்லட்டும். மரக் கிளையும் தடையாக இருக்காது; தேரும் இந்த வழியாகவே பயணிக்கும்!’’ என்றார்.

மறு கணம், அங்கிருந்த இளைஞர்கள் மின்னல் வேகத்தில் செயல்பட... பள்ளமான பாதை அமைக்கப்பட்டு, தேர் பவனி தொடர்ந்தது. அனைவரும் மகிழ்ச்சியில் திளைத்தனர். சிக்கலான வழக்கை சாதுர்யமாக சமாளித்த அப்பாஜியின் அறிவுக் கூர்மையைப் பாராட்டி அவருக்கு பொன்னும் பொருளும் பரிசளித்து கௌரவித்தார் திப்பு சுல்தான்.

- கே.பிருந்தா, சென்னை-44