Published:Updated:

Doctor Vikatan: கர்ப்பப்பை நீக்க அறுவைசிகிச்சைக்குப் பிறகு, குறையும் தாம்பத்திய ஆர்வம்; தீர்வு என்ன?

Woman (Representational Image)
News
Woman (Representational Image) ( Photo by cottonbro from Pexels )

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதிகளில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

Published:Updated:

Doctor Vikatan: கர்ப்பப்பை நீக்க அறுவைசிகிச்சைக்குப் பிறகு, குறையும் தாம்பத்திய ஆர்வம்; தீர்வு என்ன?

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதிகளில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

Woman (Representational Image)
News
Woman (Representational Image) ( Photo by cottonbro from Pexels )

எனக்குத் திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். அதிக ப்ளீடிங் காரணமாக 40 வயதிலேயே கர்ப்பப்பையை அகற்றிவிட்டார்கள். அதன் பிறகு, எனக்கு தாம்பத்திய உறவில் நாட்டம் குறைந்தது போல உணர்கிறேன். கர்ப்பப்பை அறுவை சிகிச்சைக்கும், தாம்பத்திய உறவில் நாட்டமின்மைக்கும் தொடர்புண்டா?

பதில் சொல்கிறார் கோவை, கிணத்துக்கடவைச் சேர்ந்த மகளிர் நலம் மற்றும் மகப்பேறு மருத்துவர் ஸ்ரீதேவி

கர்ப்பப்பையை முழுவதுமாக அகற்றும் அறுவைசிகிச்சையை ஹிஸ்ட்ரக்டெமி (Hysterectomy) என்று சொல்கிறோம். கர்ப்பப்பையில் `பாடி ஆஃப் தி யூட்ரெஸ்' எனப்படும் மேல்பகுதி, செர்விக்ஸ் எனப்படும் வாய்ப்பகுதி என இரண்டு பகுதிகள் இருக்கும். இதில் மேல் பகுதியை மட்டும் நீக்கிவிட்டு, செர்விக்ஸ் பகுதியை விட்டுவிடுவதை `சப்டோட்டல் ஹிஸ்ட்ரக்டெமி (subtotal hysterectomy) என்று சொல்வோம். இரண்டு பகுதிகளையுமே அகற்றுவதை 'டோட்டல் ஹிஸ்ட்ரக்டெமி' ( total hysterectomy) என்று சொல்வோம்.

கர்ப்பப்பை
கர்ப்பப்பை

சிசேரியனுக்கு அடுத்து மிகப் பரவலாகச் செய்யப்படுகிற அறுவைசிகிச்சை இது. இந்த அறுவைசிகிச்சையை வயிற்றைத் திறந்து செய்யப்படும் ஓப்பன் சர்ஜரி முறையிலும், லேபராஸ்கோப்பி முறையிலும், ரோபோட்டிக் அசிஸ்ட்டடு முறையிலும், வெஜைனா மூலம் செய்யப்படுகிற வெஜைனல் ஹிஸ்ட்ரெக்ட்மி முறையிலும் எப்படி வேண்டுமானாலும் செய்யலாம்.

கேன்சர் உள்ள நிலையிலும் கேன்சர் இல்லாத நிலையிலும் இந்த அறுவைசிகிச்சை செய்யப்படுகிறது. கேன்சர் இல்லாத பாதிப்புகளான ஃபைப்ராய்டு எனப்படும் கர்ப்பப்பை கட்டிகளுக்கு, அடினோமயோசிஸ் எனப்படும் கர்ப்பப்பை வீக்கத்துக்கு, எண்டோமெட்ரியோசிஸ் எனப்படும் பிரச்னைக்கு இந்த அறுவைசிகிச்சை தேவைப்படலாம். கர்ப்பப்பை புற்றுநோய் மற்றும் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய்க்கும் செய்யப்படும்.

ஸ்ரீதேவி
ஸ்ரீதேவி

உங்கள் விஷயத்தில் எந்தக் காரணத்துக்காக இந்த அறுவை சிகிச்சை செய்யப்பட்டது என்று தெரிந்திருக்க வேண்டும். கர்ப்பப்பையை மட்டும் அகற்றினார்களா, கூடவே சினைப்பைகளையும் அகற்றினார்களா என்றும் தெரிய வேண்டும். 50 சதவிகிதப் பெண்களுக்கு கர்ப்பப்பையோடு சேர்த்து சினைப்பைகளையும் அகற்றுவது வழக்கம். சினைப்பை புற்றுநோய் ஆபத்து இருக்கும் நிலையில் கர்ப்பப்பையோடு சேர்த்து சினைப்பையையும் அகற்றுவது சில இடங்களில் வழக்கமாக இருக்கிறது.

Couple
Couple
Photo by Womanizer Toys on Unsplash

இதனால் புற்றுநோய் ஆபத்து தவிர்க்கப்படுகிறது என்றாலும் சினைப்பைகளிலிருந்து சுரக்கும் ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன் சுரப்பு முற்றிலும் தடைப்படுவதால் தாம்பத்திய உறவில் ஆர்வம் குறையலாம். அதனால் இவர்களுக்கு வெஜைனா பகுதியில் வறட்சி, தாம்பத்திய உறவின்போது அசௌகர்யம், உறவில் ஈடுபாடு இல்லாதது போன்றவை ஏற்படலாம். அதுவே சினைப்பைகளை அகற்றாமல் கர்ப்பப்பையை மட்டும் அகற்றும்போது தாம்பத்திய உறவில் ஈடுபாடு அதிகரிப்பதாகவே பல பெண்களும் சொல்கிறார்கள். எனவே, எந்த வயதில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது, எந்த முறையில், எந்தக் காரணத்துக் காகச் செய்யப்பட்டது என்ற தகவல்கள் அவசியம்.

இந்த அறுவைசிகிச்சைக்கு முன் உங்களது தாம்பத்திய ஆர்வம் எப்படியிருந்தது, உங்கள் கணவருடனான உறவு எப்படியிருந்தது, உங்கள் உடல் குறித்து உங்களுக்கு நெகட்டிவ் எண்ணங்கள் இருந்தனவா, மன அழுத்தம் இருந்ததா என்ற தகவல்கள் வேண்டும். இந்தப் பிரச்னைகள் இருந்திருந்தால் அறுவைசிகிச்சைக்குப் பிறகு இவையெல்லாம் தீவிரமாக வாய்ப்புகள் அதிகம்.

ஃபைப்ராய்டு உள்ளிட்ட பாதிப்புகளால் முன்பே செக்ஸ் உறவில் அசௌகர்யத்தை உணர்ந்தவர்களுக்கு, ஹிஸ்ட்ரக்டமிக்குப் பிறகு ஆர்வம் அதிகரிப்பதாகவே பலரும் சொல்கிறார்கள். ரேடிகல் ஹிஸ்ட்ரக்டெமி என ஒன்று உண்டு. புற்றுநோய்க்காகச் செய்யப்படுகிற இதில் கர்ப்பப்பை, சினைப்பைகள் கூடவே அருகிலுள்ள சில திசுக்கள் எல்லாம் அகற்றப்படும். இதில் நரம்புகள் பாதிக்கப்பட வாய்ப்புகள் அதிகம். அதன் காரணமாகவும் தாம்பத்திய உறவில் ஈடுபாடின்மை ஏற்படலாம்.

சினைப்பைகளையும் சேர்த்து அகற்றியிருந்தால் ஹார்மோன் ரீப்ளேஸ்மென்ட் தெரபி எடுத்துக்கொள்ளலாம். ஈஸ்ட்ரோஜென் ஹார்மோனை ரீப்ளேஸ் செய்ய கிரீம் அல்லது ஜெல் உபயோகிக்கலாம் அல்லது டெஸ்டோஸ்டீரான் பேட்ச்சஸ் பயன்படுத்தலாம்.