கட்டுரைகள்
தொடர்கள்
Published:Updated:

வளரும்போதே வக்கிரமா?

பாய்ஸ் லாக்கர் ரூம்
பிரீமியம் ஸ்டோரி
News
பாய்ஸ் லாக்கர் ரூம்

பாய்ஸ் லாக்கர் ரூம்’ சம்பவம் குறித்துப் பாலியல் மருத்துவரான கார்த்திக் குணசேகரனிடம் பேசினேன்.

‘மச்சான் நான் சீரியஸா சொல்றேன்டா... அவளுக்கு நான் கால் பண்றேன். அவ எந்த இடத்துக்குக் கூப்டுறாளோ அங்க வந்துடுறதா சொல்றேன். நாம இன்னும் ரெண்டு பசங்களக் கூட்டிட்டுபோய் ஈஸியா அவள...’ - இப்படித் தொடங்கி நீள்கிறது அந்த உரையாடல். இது ஏதோ திரைப்படத்தின் வில்லன் காட்சி வசனம்போலத் தோன்றலாம்; ஆனால், உண்மையில் இவை ‘பாய்ஸ் லாக்கர் ரூம்’ இன்ஸ்டாகிராம் பக்கத்தின் வக்கிர சாட்கள்!

‘பாய்ஸ் லாக்கர் ரூம்’(Bois Locker Room) - கடந்த வாரம் கொரோனாவையும் தாண்டி நாட்டில் கொந்தளிப்பை ஏற்படுத்திய சர்ச்சை. டெல்லியைச் சேர்ந்த உயர்நிலைப் பள்ளிகளில் படிக்கும் 15 வயதுக்குட்பட்ட சிறுவர்களால் தொடங் கப்பட்டது, ‘பாய்ஸ் லாக்கர் ரூம்’ இன்ஸ்டா பேஜ். இதில் உள்ள சிறுவர்கள் தங்களுக்குள் செய்துகொண்ட குரூப் சாட்களின் ஸ்கிரீன்ஷாட் சமீபத்தில் இணையத்தில் லீக்காகி வைரலானது. காரணம், அதில் இடம் பெற்றிருப்பவை எல்லாமே செக்ஸ் சாட்கள். பெண்களின் ஆடையற்ற புகைப்படங்கள், அந்தரங்க உறுப்புகளைப் பற்றிய கேலிகள், உடலுறவு குறித்த பேச்சுகள், சிறுமிகளை எப்படிக் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யலாம் என்ற உரையாடல்கள் என்று... அந்த ஸ்கிரீன்ஷாட்கள் மனதைப் பதறவைக்கின்றன.

‘பாய்ஸ் லாக்கர் ரூம்’ ஏற்படுத்திய அதிர்வலைகள் டெல்லியைத் தாண்டி இந்தியா முழுவதும் எதிரொலித்தது. இந்த இன்ஸ்டா குரூப்பின் அட்மினான 15 வயதுச் சிறுவனை டெல்லி காவல்துறை கைது செய்து, அவன்மீது சைபர் க்ரைம் பிரிவின் கீழ் எஃப்.ஐ.ஆர் தாக்கல் செய்துள்ளது. ‘பாய்ஸ் லாக்கர் ரூம்’ குரூப்பில் சம்பந்தப்பட்டுள்ள மற்ற சிறுவர்களுக்கும் விசாரணை நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

வளரும்போதே வக்கிரமா?

கல்வி கற்க வேண்டிய வயதில் நம் ஆண் பிள்ளைகள் கலவியைப் பற்றிச் சிந்தித்துச் சீரழிந்துகொண்டிருக்கிறார்கள் என்பதற்கு, அதிர்ச்சி உதாரணம் இது. இது எங்கோ டெல்லியில் நடந்தது என்று எண்ணிக் கடந்துவிட முடியாது. ‘லாக்டௌன் நாள்களில் போர்ன் வீடியோக்கள் பார்க்கும் குழந்தைகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது’ என்று சமீபத்தில் நம்மை உலுக்கிய அறிக்கையையும் இங்கே தொடர்புபடுத்திப் பார்க்கவேண்டி யுள்ளது. இப்படி மதிகெட்டுத் திசைமாறிச்செல்லும் குழந்தைகளை மீட்பது எப்படி? குழந்தைகளுக்கான மனநல மருத்துவர் பூங்கொடி பாலாவிடம் பேசினேன்.

இணையம்தான் எல்லாவற்றுக்கும் காரணம்!

“பொதுவாகக் குழந்தைகளுக்கு 11, 12 வயதில் எதிர்பாலினத்தினர் பற்றி அறிந்துகொள்ள ஓர் ஆர்வம் ஏற்படும். அவர்களின் வளர்சிதை மாற்றங்களும், ஹார்மோன்களும் இந்த எண்ணம் உருவாக முக்கியக் காரணம். இந்த ஆர்வம் 14, 15 வயதில் உடலுறவைப் பற்றித் தெரிந்துகொள்ளும் எண்ணமாக உருமாறி நிற்கும். 15, 20 ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் இதுபோன்ற விஷயங்களைப் பற்றித் தெரிந்துகொள்ளக் குழந்தைகளுக்கு வாய்ப்புகள் பெரிதாக இல்லை. ஆனால், இப்போதுள்ள குழந்தைகளுக்கு இணையம், சினிமா, ஊடகம் என்று எத்தனையோ வழிகள் உள்ளன. ஆரம்பத்தில் பொழுதுபோக்குக்காக இணையத்திற்குள் செல்லும் குழந்தைகள் கொஞ்சம் கொஞ்சமாக அதிலுள்ள ஆபாசங்களைக் கண்டு பரவசமடையத் தொடங்குகின்றனர். இது அவர்களை போர்னோகிராபி அடிக்‌ஷன்வரை கொண்டு நிறுத்துகிறது.

வளரும்போதே வக்கிரமா?

18 வயதுக்குக் கீழே உள்ள ஒரு குழந்தை தொடர்ந்து ஆபாசப் புகைப்படங்கள், வீடியோக் களைப் பார்க்கும்போது அதன் மனதில் பல்வேறு வகையான மாற்றங்கள் ஏற்படுகின்றன. வீடியோ பார்க்கும்போது உடலில் ஏற்படும் பாலியல் உணர்வுகளால் சுய இன்பம் காணத் தொடங்கும். சில டீன் ஏஜ் குழந்தைகள் ஆபாச வீடியோவில் தான் ‘பார்த்ததை’ தன் வீட்டிலும், வீட்டுக்கு அருகிலும் உள்ள தன்னைவிட வயது குறைந்த எதிர்பாலினக் குழந்தைகளிடம் செயல்படுத்திப் பார்க்கவும் தொடங்குவார்கள். ஒரு சிறுவன், சிறுமியைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்திய செய்தியையெல்லாம் கேள்விப்பட்டிருப்போம்.

போர்னோகிராபி உருவாக்கும் குழந்தைக் குற்றவாளிகள்!

இவற்றுக்கெல்லாம் முக்கியக் காரணம், ஆபாசப் படங்கள்தான். போர்னோகிராபி அடிக்‌ஷனில் இருக்கும் குழந்தைகள் எப்போதும் இணையத்திலேயே மூழ்கியிருப்பார்கள். இவர்களை யாரும் கவனிக்காமல் விடும்போது பின்னாளில், மது, சிகரெட் மற்றும் போதைப்பொருள்களுக்கு அடிமையாகி, பாலியல் வன்கொடுமைவரை சென்று முழுக்குற்றவாளியாகவே மாற வாய்ப்புள்ளது.

வளரும்போதே வக்கிரமா?

இதுபோன்ற விளைவுகளிலிருந்து குழந்தைகளை மீட்பதற்கான வழி, அவர்களுக்குத் தெரியாமல் அவர்களுடைய செயல்களைக் கண்காணிக்க வேண்டும். உங்கள் குழந்தைகள் ஆபாசப் படங்கள் பார்ப்பது உங்களுக்குத் தெரியவரும் வேளையில் அவர்களை ஒரு குற்றவாளிபோல நடத்தாமல், இதுபோன்ற படங்களைப் பார்ப்பதால் ஏற்படும் தீமைகளை அவர்களுக்கு எடுத்துச் சொல்லிப் புரியவைக்கலாம். சூழ்நிலையைக் கையாளத் தெரியாத பெற்றோர், மனநல ஆலோசகரிடம் பிள்ளையை அழைத்துச் செல்லலாம். அடுத்ததாக, ஆபாசப் படங்கள் பார்க்க அவர்களுக்கு இருக்கும் வாய்ப்புகளைக் குறைக்க வேண்டும். அவர்களுடைய கவனத்தைப் படிப்பு, விளையாட்டு போன்றவற்றை நோக்கித் திருப்ப வேண்டும். குடும்பத்தினர் டீன் ஏஜ் குழந்தைகளிடம் கண்டிப்புடன் மட்டும் இல்லாமல் கொஞ்சம் நட்பாகப் பழகும்போது ‘பாய்ஸ் லாக்கர் ரூம்’ போன்ற விபரீதங்களுக்கான வாய்ப்புகள் குறையும்.

மன அழுக்குகளைக் களைய வேண்டும்!

‘நிர்பயா குற்றவாளிகளைத் தூக்கில்போட்டால் ஆண்களுக்கு அச்சம் வந்து திருந்திவிடுவார்களா?’ என்று கேட்கப்பட்ட கேள்விக்கு, இன்றைய ஆண் குழந்தைகள்கூட பெண்களைப் பாலியல் பண்டமாகவே பார்ப்பது வலுச்சேர்க்கிறது. ஆக, பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்கு ஆண்களின் அடிப்படை மன அழுக்குகளைச் சுத்தம் செய்யாமல், தூக்குக்கயிற்றை மட்டுமே தீர்வாக முன்னிறுத்த முடியாது. மாற்றம் வீடுகளிலிருந்து, ஆண்பிள்ளைகள் வளர்ப்பிலிருந்து தொடங்க வேண்டியது மிக முக்கியம். பெண்ணைக் கீழ்மையுடன் பார்க்காமல் இருக்கவும், உடலைத் தாண்டி அவளை சக மனுஷியாகப் பார்க்க, மதிக்க, நடத்தவும் நம் குடும்ப அமைப்புகளும், கல்வி நிறுவனங்களும், சமூகமும் கற்றுத்தர வேண்டும்’’ என்கிறார் பூங்கொடி பாலா.

பாலியல் கல்வியா, போர்னோகிராபியா...

முடிவு உங்கள் கையில்!

‘பாய்ஸ் லாக்கர் ரூம்’ சம்பவம் குறித்துப் பாலியல் மருத்துவரான கார்த்திக் குணசேகரனிடம் பேசினேன். “இணையம் என்பது வயது வித்தியாசம் இல்லாமல் எல்லோரும் பயன்படுத்தும் ஒன்றாகிவிட்டது. இந்நிலையில் பாலியல் தொடர்பான விஷயங்களைப் பற்றி அறிந்துகொள்ள விரும்பும் குழந்தைகளுக்கு, இணையம் கதவுகளைத் திறந்துவிடுகிறது.

வளரும்போதே வக்கிரமா?

போர்னோகிராபியில் காட்டப்படும் பாலுறவுக் காட்சிகள் எல்லாம் மிகைப்படுத்தப்பட்டவை. போர்னோகிராபியில் காட்டப்படுவதை உண்மையென நினைத்து உடலுறவின்போது தங்களால் அப்படி இருக்கமுடியவில்லையே என்று அதையே குறையாகக் கருதி சிகிச்சைக்கு வருபவர்கள் பலர். இந்நிலையில் உடல், மனம் இரண்டுமே பக்குவமடையாத ஒரு டீன் குழந்தை அதைப் பார்க்கும்போது அதன் மனதில் விகாரங்கள் தோன்றலாம். பாலியல் கல்வியே இதற்கான சிறந்த தீர்வு. 13, 14 வயதில் குழந்தைகளிடம் பாலியல் சார்ந்த புரிந்துணர்வை ஏற்படுத்த வேண்டும். இதுபோன்ற விஷயங்களைப் பிள்ளைகளிடம் மூடி மறைக்கும் காலமெல்லாம் மலையேறிவிட்டது. இணையம் அவர்களின் கைகளைப் பிடித்து வக்கிர சாக்கடைக்குள் தள்ளுவதற்கு முன், பெற்றோர்களும், ஆசிரியர்களும் பாலியல் சார்ந்த சரியான புரிந்துணர்வைக் குழந்தைகளுக்கு ஏற்படுத்த வேண்டும்” என்றார் கார்த்திக் குணசேகரன்.

திசை மாறுவதற்குமுன் தெளிவை ஏற்படுத்த வேண்டியது நமது கடமை.

‘பாய்ஸி’ன் பழி உணர்வு!

‘பாய்ஸ் லாக்கர் ரூம்’ சர்ச்சையைத் தொடர்ந்து ‘கேர்ள்ஸ் லாக்கர் ரூம்’ என்ற பெயரில் பெண்கள் தங்களுக்குள் ஆண்களின் அந்தரங்கம், உடலுறவு குறித்து ஆபாசமாகப் பேசிக்கொண்டதாகக் கூறப்படும் இன்ஸ்டா சாட்களின் ஸ்கிரீன்ஷாட்களும் இணையத்தில் பரவின. ஆனால், இதை உறுதிப்படுத்த யாருமில்லை. வெளியிட்டவரையும் கண்டறியமுடியவில்லை. பழிவாங்கும் நோக்கத்தோடும், ஆண்கள் பெண்கள்மீது கொண்டுள்ள வன்மத்தாலும் இவை வேண்டுமென்றே உருவாக்கப்பட்டவை என்று கூறப்பட்டது.