
மீரா
கொரோனா பாசிட்டிவ் குறைய வேண்டும் என்று எல்லாரும் காத்திருக்கிறார்கள்; நாம் கொரோனாவினால் நடந்த சில பாசிட்டிவ் நிகழ்வுகளைத் தொகுத்தோம். அவற்றில் சில இவை!
டெக்ஸாஸில் ராபர்ட்சன் ஆரம்பப் பள்ளி கொரோனாவுக்காக விடுமுறை விடப்பட்டுள்ளது.
அந்தப் பள்ளியின் ஆசிரியைகள் சிலர் காரை எடுத்துக்கொண்டு அவர்களிடம் படிக்கும் மாணவர்கள் இருக்கும் வீதி வழியே ஹாரன் அடித்துக்கொண்டே சென்றிருக்கிறார்கள். வெளியில், ஜன்னலில் வந்து நின்ற மாணவ, மாணவியரிடம் கையசைத்து வி மிஸ் யூ என்று கத்தியபடி சாலையில் சென்ற ஆசிரியர்களைப் பார்த்து பெற்றோருக்கும் செம நெகிழ்ச்சி!

அமெரிக்க ஓட்டப்பந்தய வீராங்கனை ரெபேக்கா மெஹ்ரா பகிர்ந்திருந்த சம்பவம் இது. சூப்பர் மார்க்கெட் பார்க்கிங்கில் ரொம்ப நேரம் வயதான தம்பதி நின்றுகொண்டிருந்ததைப் பார்த்து விசாரித்திருக்கிறார். ‘மளிகைப்பொருள்கள் வாங்க வேண்டும். ஆனால் கூட்டத்தில் போவது எங்களைப் போல வயதானவர்களுக்கு நல்லதல்ல என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள். எங்களால் வேறு பலருக்கும் சங்கடங்கள் இருக்கலாம். அதனால்தான்...’ என்று இழுக்க, இவரே காசு வாங்கி, பொருள்களை வாங்கிக்கொடுத்து அனுப்பியிருக்கிறார். அவரது ஃபாலோயர்ஸும் ‘இனிநாங்களும் இப்படி உதவிக்கரம் நீட்டுவோம்’ என்று குறிப்பிட்டிருந்தது உதவிகள் நீள்வதை உறுதிப்படுத்தியிருந்தது.

அமெரிக்கா மசாசூசெட்ஸில் உள்ள ஸ்டெர்லிங் வில்லேஜில் க்வாரன்டீனில் இருந்தார் மில்லி எரிக்சன். அவர் இருந்த சுற்றுவட்டாரம் முழுவதுமே தீவிரக் கண்காணிப்பில் இருந்தது. அவருக்கு அன்று வயது 100. மகன் கேரி எரிக்சன் குடும்பத்தாருடன் சென்று ஜன்னலுக்கு வெளியிலிருந்தே ஹாப்பி பர்த்டே பாடியிருக்கிறார். கையில் ‘இன்று எனக்கு 100வது பிறந்தநாள்’ என்ற அட்டையை ஏந்தியபடி ஆனந்தக் கண்ணீரோடு குடும்பத்தாருக்கு மில்லி கையசைத்த வீடியோ அங்கே வைரல்!

ஒலிவியா, ரால் டி ஃப்ரெய்டாஸ் ஜோடிக்கு வாழ்வின் மறக்க முடியாத நாள்கள் இவை. மாலத்தீவிலுள்ள ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டலுக்கு ஆறுநாள் தேனிலவுக்குத் திட்டமிட்டு வந்த இந்தத் தென்னாப்பிரிக்க ஜோடி இப்போது அங்கே ஸ்பெஷல் விருந்தினர்கள். கொரோனாவால் விமான நிலையங்கள் மூடப்பட்டுவிட மற்ற விருந்தினர்கள் எல்லாரும் தனி விமானம், கப்பல் என்று போய்விட்டனர். இவர்களுக்கு விமானமும் கிடைக்கவில்லை. தனி விமானத்துக்கும் வழியில்லை. அரசு விதிப்படி ஹோட்டலில் விருந்தினர்கள் இருக்கும்போது மூட முடியாது என்பதால், ஹோட்டலின் அத்தனை ஊழியர்களும் இந்த இருவருக்காக உணவு பரிமாறுவதும், இரவு கேண்டில் லைட் டின்னருக்கு ஏற்பாடு செய்வதும் என்று ஏக கவனிப்பு. அங்கிருக்கும் பீச், நீச்சல் குளம், பார், ரெஸ்டாரன்ட் என்று நாளொரு இடம் பொழுதொரு ஃபோட்டோ என்று கொண்டாடிக்கொண்டிருக்கிறது இந்த இளஞ்சோடி!

வழக்கமான நோயாளிகளுக்கு மருத்துவரின் இணக்கமான புன்னகையும் உடல்மொழியும் தருகிற நம்பிக்கைதான் நோய்க்கு முதல் மருந்து. கோவிட் பேஷன்ட்களுக்கு அந்த பாக்கியம் கிட்டுவதில்லை. தலை முதல் கால் வரை விண்வெளி வீரர்கள் போலத் தெரியும் அவர்களால் சிகிச்சைகளுக்கு வருபவர்களைப் பார்த்து சிரிக்கக்கூட முடிவதில்லை. சாண்டியாகோவின் ஸ்கிரிப் மெர்சி மருத்துவமனை மருத்துவர்கள் அதற்கும் ஒரு ஐடியா செய்திருக்கிறார்கள். தங்கள் பெயர், துறை ஆகியவற்றோடு சிரித்தபடி தாங்கள் இருக்கும் புகைப்படத்தை கோவிட் ஸ்பெஷல் உடையில் ஒட்டிக்கொண்டிருக்கிறார்கள். ஆரம்பத்தில் ஒன்றிரண்டு பேர் இதைச்செய்து நோயாளிகளின் புன்னகையைப் பரிசாகப் பெற, எல்லாரும் இதைப் பின்பற்ற ஆரம்பித்துவிட்டார்கள்!

கெண்டகி பல்கலைக்கழகத்தில் காதுகேளாருக்கான துறையில் படித்துக்கொண்டிருப்பவர் ஆஷ்லே லாரன்ஸ். ஒருவரின் உதட்டசைவைப் பார்த்துப் புரிந்துகொள்வதுதான் காது கேளாருக்கான கம்யூனிகேஷன். கொரோனாவால் எல்லாரும் மாஸ்குடன் வெளியில் திரியும்போது, காது கேளாதோர் சிரமப்படுவதை உணர்ந்த இவர் உதடுகளைச்சுற்றி மட்டும் டிரான்ஸ்பரன்ஸாகத் தெரியும் வண்ணம் மாஸ்க் ஒன்றை உருவாக்கி ஃபேஸ்புக்கில் பதிவிட்டார். பலரும் பார்த்து இன்ஸ்பயராகிவிட, மருத்துவர்கள் உட்பட பொதுமக்களும் பாராட்ட அவரவர் தேவைக்கேற்ப உருவாக்கி எல்லாருக்கும் கொடுத்துக்கொண்டிருக்கிறார்கள்.