
தண்டுவடம் காயமடைந்தோர் அமைப்பு’ என்ற சங்கத்தைக் கடந்த ஒன்பது ஆண்டுகளாக நடத்திவருகிறார் ஞானபாரதி.
அன்று குரோம்பேட்டை ரயில்நிலையத்தில் வழக்கத்தைவிட அதிக கூட்டம். ஏதோ சிந்தனையில் தண்டவாளத்தைக் கடந்த ஞானபாரதி, குறுக்கே வந்த ரயிலைக் கவனிக்கவில்லை. கண்ணிமைக்கும் நேரத்தில் அவர்மீது ரயில் மோதியது. பல அடி தூரம் தூக்கி வீசப்பட்டவருக்கு முதுகுத் தண்டுவட பாதிப்பு ஏற்பட்டது. ‘வீல்சேரில்தான் வாழ்க்கை’ என்றான ஞானபாரதிக்கு, மார்புக்குக் கீழுள்ள மற்ற உடல் உறுப்புகளில் எந்த உணர்வும் கிடையாது.
படிப்பு மற்றும் திறமை இருந்தும் மாற்றுத்திறனாளி என்பதாலேயே உரிய பணி மாறுதல் கிடைக்காமல் பல்வேறு புறக்கணிப்புகளை எதிர்கொண்டிருக்கிறார். சென்னையிலுள்ள மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தில் மூத்த முதன்மை அறிவியலாளராகப் பணியாற்றுபவர், தன்னைப்போல் முதுகுத் தண்டுவட பாதிப்புள்ளவர்களின் வாழ்வில் புதிய விடியலை உண்டாக்குகிறார். சென்னை குரோம்பேட்டையிலுள்ள ஞானபாரதியின் தங்கை வீட்டில் அவரைச் சந்தித்தேன். மாதக் கணக்கில் நீக்கப்படாத தாடிக்கு இடையே புன்னகைக்கீற்று ஒளிர்கிறது.
“பூர்வீகம் புதுக்கோட்டை. அங்குதான் பள்ளிப்படிப்பை முடித்தேன். உத்தரகாண்ட் ரூர்க்கி ஐ.ஐ.டி-யில் எம்.எஸ்ஸியும், ஜார்க்கண்ட் தன்பாத் ஐ.ஐ.டி (ஐ.எஸ்.எம்)-ல் எம்.டெக்கும் முடித்தேன். ஜார்க்கண்ட் மாநிலத்திலுள்ள மத்திய எரிபொருள் ஆராய்ச்சி நிறுவனத்தில் அரசு வேலை கிடைத்தது. அங்கு சுரங்கத்தில் வெட்டி எடுக்கப்படும் நிலக்கரியின் தரத்தை ஆய்வு செய்வது மற்றும் மேம்படுத்தும் அறிவியலாளராகப் பணியாற்றினேன். தொடர்ந்து அங்கு ஐந்தாண்டுகள் நிறைவுடன் வேலை செய்தேன். இந்த நிலையில்தான் 2002-ல் தீபாவளி விடுமுறைக்குப் புதுக்கோட்டை வந்தி ருந்தேன். தற்போது நாம் பேசிக்கொண்டிருக்கும் இதே வீட்டில் தங்கை குடும்பத்தினரைப் பார்த்துவிட்டு கொல்கத்தா கிளம்பத் தயாரானேன். ஆட்டோவில் குரோம்பேட்டை ரயில் நிலையம் சென்றேன். அங்கிருந்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் செல்லத் திட்ட மிட்டிருந்தேன்.

கையில் சூட்கேஸுடன் ஏதோ யோசனையில் நடந்துசென்றேன். மூன்றாவது ரயில்வே டிராக்கைக் கடக்கும்போதுதான் ரயில் என்மீது மோதியது. பலத்த காயத்துடன் தூரமாகத் தூக்கிவீசப்பட்டதில் எனக்குச் சுயநினைவு போய்விட்டது. மருத்துவமனை சிகிச்சைக்குப் பிறகு, உடலில் எந்த உணர்வுமின்றிப் பல மாதங்கள் படுக்கையில் இருந்தேன். என் சிகிச்சைகளுக்காக நிறைய கடன் வாங்கி யிருந்தோம். எனவே, விபத்துக்குப் பிறகு ஓராண்டுக்குள் நான் மீண்டும் வேலைக்குச் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அப்போதெல்லாம் என் உடலிலிருந்து வியர்வை வெளியேறாமல் உடல் வெப்பமாகி அடிக்கடி மயங்கிவிடுவேன். என் உடல்நலப் பிரச்னையால் சென்னையிலேயே பணி மாறுதல் கேட்டேன். ஆனால், மாற்றுத்திறனாளி என்பதால் புறக்கணிப்புகளே அதிகம் கிடைத்தன” என்று ஆதங்கத்துடன் கூறும் ஞானபாரதிக்கு தேசிய உலோகவியல் நிறுவனத்தின் சென்னைத் தரமணிக் கிளையில் பணி மாறுதல் கிடைத்தது. அதன் பிறகும் இவருக்குப் பணிச்சூழல் பிரச்னைகள் தொடர்ந்ததுதான் கொடுமை.
“தரமணி நிறுவனத்தில் எனக்கு எந்த வேலையும் தரவில்லை. எந்த புராஜெக்ட்டிலும் என்னைச் சேர்த்துக்கொள்ளவில்லை. தினமும் அலுவலகம் சென்று வெறுமனே இருந்துவிட்டு வருவதாகவே மூன்று ஆண்டுகள் கழிந்தன. வேலை செய்யாமல் சம்பளம் வாங்கவும், படிப்பறிவைப் பயன்படுத்தாமல் இருப்பதையும் மனம் ஏற்றுக்கொள்ளவில்லை. பிறகு டெல்லியிலுள்ள தேசிய அறிவியல் மற்றும் தொழில்துறை நிறுவனத்துக்குச் சென்று என் நிலையை எடுத்துச் சொல்லி முறையிட்டேன். நீண்ட சவால்களுக்குப் பிறகு சென்னையிலுள்ள தோல் ஆராய்ச்சி நிறுவனத்தில் 2007-ல் பணி மாறுதல் கிடைத்தது. அங்கு ஆராய்ச்சிப் பொறுப்புகளுக்குப் பதிலாக, நூலகத்துறையில் எனக்குப் பணி ஒதுக்கினார்கள். அறிவியலாளர்களின் தாக்கத்தையும், அவர்களின் கண்டுபிடிப்பு சார்ந்த அறிவியல் ஏடுகளின் தரத்தையும் ஆய்வு செய்வது உட்பட அறிவியல் தரமதிப்பீட்டுத் துறையில் சில வேலைகளை நிறைவாகச் செய்தேன். மற்றபடி அந்தப் பொறுப்பிலும் சொல்லிக்கொள்ளும்படி எனக்கு எந்த வேலையும் தரப்படவில்லை.
இடைவிடாமல் போராடியதால் 2016-ல் அதே நிறுவனத்தின் சுற்றுச்சூழல் துறையில் எனக்குப் பணிமாறுதல் கிடைத்தது. தற்போதுவரை எனக்குப் பணிச்சூழல் திருப்திகரமாக அமையவில்லை. இப்போதும் கூட்டுப் பணிகளில் நான் புறக்கணிப்படுகிறேன்.
அதேசமயம் சுற்றுச்சூழல், மரபு சாரா எரிசக்தித்துறை உட்பட சில துறைகளில் நான்கு புதுக் கண்டுபிடிப்புகளுக்கான காப்புரிமைக்கு விண்ணப்பித்திருக்கிறேன். தவிர ஒரு கண்டுபிடிப்புக்கான காப்புரிமைக்கு விண்ணப்பிக்க இருக்கிறேன்” என்பவரின் முகத்தில் படர்ந்திருக்கும் சோகத்தைக் கடந்து மெதுவாக எட்டிப்பார்க்கிறது மெல்லிய புன்னகை.
‘தண்டுவடம் காயமடைந்தோர் அமைப்பு’ என்ற சங்கத்தைக் கடந்த ஒன்பது ஆண்டுகளாக நடத்திவருகிறார் ஞானபாரதி. இதன்மூலம் தமிழகத்திலுள்ள 2,200-க்கும் மேற்பட்டோர், தண்டுவட பாதிப்பிலிருந்து அடுத்தகட்ட நகர்வை நோக்கிப் பயணிக்கின்றனர்.
“பெரும்பாலும் எதிர்பாராத விபத்து களினால்தான் தண்டுவட பாதிப்பு ஏற்படுகிறது. எங்களால் டியூப் (catheter) வழியேதான் சிறுநீரை வெளியேற்ற முடியும். இதேபோல் மலம் கழிக்கவும் மருத்துவ உதவிகள் தேவைப்படுகின்றன. இதுபோன்ற அடிப்படை விஷயங்களைச் சரிசெய்துகொள்வதே எங்களுக்குக் கடும் சவால்தான். தமிழகத்தில் 50,000-க்கும் அதிகமானோர், குணப்படுத்த முடியாத இந்தத் தண்டுவட பாதிப்புடன் இருக்கின்றனர். அவர்கள் குறித்த முறையான விவரங்கள் அரசிடம் இல்லை.
எனவேதான், 2010-க்கு முன்பு என்னைப் போன்ற பாதிப்புடைய பலரையும் சந்தித்தேன். தண்டுவட பாதிப்பு உடையவர்கள் வளர்ந்த நாடுகளில் சராசரியாக 30 ஆண்டுகளும், இந்தியா போன்ற வளரும் நாடுகளில் சராசரியாக 10 ஆண்டுகளும்தாம் உயிர் வாழ்கின்றனர். அதிலும் இந்த பாதிப்புடைய பெண்களைக் கவனித்துக் கொள்ள முடியாமல் அதிகளவில் கருணைக் கொலைகள்கூட நடக்கின்றன. இதே போன்று தண்டுவட பாதிப்புடையவர்களுக்கு உதவும் நோக்கத்தில்தான் எங்கள் அமைப்பைத் தொடங்கினோம். ஆண்டுதோறும் பல்வேறு மாவட்டங்களில் சந்திப்புக்கூட்டம் நடத்தி, எங்களைப் போன்றோருக்கு மருத்துவப் பரிசோதனைகள், தேவையான உதவிகள் மற்றும் கிடைக்கவேண்டிய நியாயமான உரிமைகளுக்கு வழிகாட்டுவோம். தவிர தினந்தோறும் இதற்கான முயற்சிகளில் கவனம் செலுத்தி வேலைவாய்ப்பு, உடல்நல ஆலோசனைகள் உட்பட பல வழிகளிலும் உதவுகிறோம்” என்பவர், தமிழக அரசு மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கிவரும் தானியங்கி சக்கர நாற்காலியை வடிவமைக்கும் குழுவில் பணியாற்றியிருக்கிறார்.

ரயில் விபத்துக்குப் பிறகு, மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக் நீச்சல், டேபிள் டென்னிஸ், துப்பாக்கிசுடுதல் போட்டிகளில் தேசிய மற்றும் தென்னிந்திய அளவில் தங்கம் உட்பட பல்வேறு பதக்கங்களை வென்றிருக்கிறார் ஞானபாரதி. வெளியூர்களுக்கு, வெளி நாடுகளுக்குத் தனியாகவே செல்கிறார். அலுவலகத்துக்கு ஸ்கூட்டரில் செல்பவர், தானே கார் ஓட்டுகிறார். பிறர் துணையின்றி வாழப் பழகிக்கொண்டவர், அலுவலகக் குடியிருப்பில் வசிக்கிறார்.
“என் அலுவலக வேலை பாதிக்காதவாறு என் அமைப்பின் பணிகளைச் செய்துவருகிறேன். அந்த ரயில் விபத்துக்கு முன்பு ஆராய்ச்சியாளராக பல்வேறு கனவுகளுடன் இருந்தேன். அதெல்லாம் நடக்காமல்போனாலும், என்னைப்போன்ற மாற்றுத்திறனாளிகளுக்கு இயன்ற உதவிகள் செய்வதில் அளவற்ற மகிழ்ச்சி. இனி இழப்பதற்கு ஒன்றுமில்லை! பணிச்சூழல் புறக்கணிப்புகள் தொடருமானால் வேலையிலிருந்து விலகி முழுக்கவே சமூகப் பணிகளில் ஈடுபடும் முடிவில் இருக்கிறேன்” - அழுத்தமாகக் கூறும் ஞானபாரதி, புன்னகையுடன் விடைகொடுத்தார்.