
கொரோனா வைரஸ்.
கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் முதல் இடத்தில் இருப்பது அமெரிக்காதான். அதன் காரணமாக அதிக பொருளாதார வீழ்ச்சியையும் அமெரிக்கா சந்திக்க நேரிடும்.

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பரவலைக் கண்காணிக்கவும், அதனைக் கட்டுப்படுத்தவும் அந்நாட்டின் துணை அதிபர் மைக் பென்ஸ் (Mike Pence) தலைமையில் ‘White house corona virus taskforce’ என்ற பெயரில் முதல் பணிக்குழுவை அமைத்தார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப். தற்போது நாட்டின் பொருளாதாரத்தைச் சீரமைக்க இரண்டாம் பணிக்குழு ஒன்றைக் கடந்த வாரம் வெள்ளை மாளிகையில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் அறிவித்துள்ளார் ட்ரம்ப். பொருளாதாரத்தை மீட்டெடுக்க ஒவ்வொரு துறையையும் சீரமைக்க வேண்டியது அவசியம் ஆதலால், அந்நாட்டில் வெவ்வேறு துறையைச் சேர்ந்த 200 பேர் தேர்வு செய்யப்பட்டி ருக்கிறார்கள். விவசாயம், வங்கி, தொழிலாளர்கள், பாதுகாப்பு, நிதிச் சேவைகள், உணவுப் பொருள்கள், சுகாதாரம், உற்பத்தி, சில்லறை வணிகம், தொழில்நுட்பம், தகவல் தொடர்பு, போக்குவரத்து மற்றும் விளையாட்டு என அனைத்துத் துறைகளையும் சேர்ந்த நிபுணர்கள் இந்த இரண்டாம் பணிக்குழுவில் இடம்பெற்றிருக்கிறார்கள்.

‘Great American Economic Revival Industry Group’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் பணிக்குழுவில் இடம் பெற்றிருப்பவர்களில் பெரும்பாலானவர்கள் அந்தந்தத் துறை சார்ந்த நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகளாகத்தான் இருக்கிறார்கள். இந்தக் குழுவில் இடம்பெற்றிருப்பவர்களில் ஆறு பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள். கூகுளின் சுந்தர் பிச்சை, மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சத்யா நாதெல்லா, ஐ.பி.எம் நிறுவனத்தின் அர்விந்த் கிருஷ்ணா, மைக்ரான் நிறுவனத்தின் சஞ்சய் மெஹ்ரோத்ரா ஆகியோர் தொழில்நுட்பப் பிரிவிலும், மாஸ்டர் கார்ட் நிறுவனத்திலிருந்து அஜய் பங்கா நிதிச் சேவைகள் பிரிவிலும், பெர்னோட் ரிக்கர்ட் நிறுவனத்திலிருந்து அன் முக்கர்ஜி உற்பத்திப் பிரிவிலும் இடம் பெற்றிருக்கிறார்கள்.

அமெரிக்கப் பொருளாதாரம் இனி வரும் ஆண்டுகளில் எப்படி இருக்கப் போகிறது என்பதை வெள்ளை மாளிகையுடன் சேர்ந்து இந்தப் பணிக்குழுவும் செயல்படும் என அரசுத் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. எப்போது இருந்து, என்ன மாதிரியான பணிகளை ஒவ்வொருவரும் மேற்கொள்ளப்போகிறார்கள் என்பது பற்றி வெளிப்படையாகத் தெரிவிக்கப்படவில்லை. எனினும் ஒவ்வொரு துறையில் இருப்பவர்களுடனும் அவர்கள் என்ன செய்யப்போகிறார்கள் என்பது குறித்த கலந்துரையாடல் நிகழ்ந்துள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்துவருகின்றன.

இந்தக் குழுவில் மேலும் சிலர் சேர்க்கப்படலாம், எனினும், முன்னர் ட்ரம்ப் கூறியிருந்ததுபோல அரசு அதிகாரிகள் கொண்ட சிறிய குழு அமைவதற்கு வாய்ப்பு இல்லை என்றே அமெரிக்க ஊடகங்கள் தெரிவிக்கின்றன.