Published:Updated:

குழந்தைக்கு பாலாடையில் பால் கொடுக்கறீங்களா? இதை கவனியுங்க...| பச்சிளம் குழந்தை பராமரிப்பு – 16

பாலாடை
News
பாலாடை

பவுடர் பால் கலக்கும்போது, தவறுதலாக நோய்க்கிருமி சென்றுவிட்டால், குழந்தைக்கு வயிற்றுப்போக்கு முதல் பல்வேறு தீவிரமான நோய்கள் ஏற்படலாம்.

Published:Updated:

குழந்தைக்கு பாலாடையில் பால் கொடுக்கறீங்களா? இதை கவனியுங்க...| பச்சிளம் குழந்தை பராமரிப்பு – 16

பவுடர் பால் கலக்கும்போது, தவறுதலாக நோய்க்கிருமி சென்றுவிட்டால், குழந்தைக்கு வயிற்றுப்போக்கு முதல் பல்வேறு தீவிரமான நோய்கள் ஏற்படலாம்.

பாலாடை
News
பாலாடை

`பச்சிளம் குழந்தை வளர்ப்பு’ பெற்றோருக்கு சவால் நிறைந்தது மட்டுமல்ல, பல்வேறு கேள்விகளும் நிறைந்தது. பெற்றோரின் கேள்விகள் கொண்டு `பச்சிளம் குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்புகள்’ ஒவ்வொன்றையும் வாரம் ஒன்றாக, மருத்துவ நுணுக்கங்ளைக் கொண்டு, எளிதில் விளங்கும் வண்ணம், விரிவாக விளக்குவதே இந்த மருத்துவத் தொடரின் நோக்கம்.

புதுச்சேரி, ஸ்ரீ லட்சுமி நாராயணா மருத்துவக் கல்லூரி குழந்தைகள் நல மருத்துவரான மு. ஜெயராஜ் MD (PGIMER, Chandigarh), இத்தொடரின் மூலம் உங்கள் சந்தேகங்களுக்கு விளக்கம் தருகிறார்.

குழந்தை நல மருத்துவர் ஜெயராஜ்
குழந்தை நல மருத்துவர் ஜெயராஜ்

கடந்த அத்தியாயத்தில், பாலாடை மற்றும் பாட்டிலில் பால் கொடுப்பதற்கான வேறுபாடுகள் குறித்தும், பவுடர் பாலை பாலாடையில் கொடுக்கும்போது, தேவைப்படும் பாலின் அளவை குழந்தையின் எடைக்கேற்ப எப்படிக் கணக்கிடுவது எனபதை குறித்தும் விரிவாகக் கண்டோம். பவுடர் பால் கொடுக்கும்போது, தவறுதலாக நோய்த்தொற்று, பவுடர் பாலின் வழியாக குழந்தைக்குச் செல்வதைத் தடுத்திட, பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து இந்த அத்தியாயத்தில் விரிவாகக் காணலாம்.

ஃபார்முலா மில்க் தாய்ப்பாலுக்கு எப்போதும் மாற்றில்லை. தாய்க்கு தாய்ப்பால் சுரப்பு போதுமாக இல்லை அல்லது குழந்தைக்கு சில மரபணு நோய் காரணமாக தாய்ப்பால் கொடுக்கக் கூடாது என்று மருத்துவர் அறிவுறுத்தியிருந்தால் மட்டுமே ஃபார்முலா மில்க் தொடங்க வேண்டும். நான் முன்னரே குறிப்பிட்டபடி, தாய்ப்பால் போன்று கார்போஹைட்ரேட், கொழுப்பு, புரதம், வைட்டமின்கள், மினரல்கள் என ஒப்பீட்டளவில் ஒன்றாக இருந்தாலும், தாய்ப்பாலில் குழந்தையை பல்வேறு நோயிலிருந்து காப்பாற்றும் பிறபொருளெதிரிகள் (ஆன்டிபாடிகள்), பெருவிழுங்கிகள் (Macrophages), நிணநீர் செல்கள் (Lymphocytes), லேக்டோஃபெரின் (Lactoferrin) மற்றும் இன்டர்ஃபெரான் (Interferon) போன்றவை ஃபார்முலா மில்க் பவுடரில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பவுடர் பால் கலக்கும்போது, தவறுதலாக நோய்க்கிருமி சென்றுவிட்டால், குழந்தைக்கு வயிற்றுப்போக்கு முதல் பல்வேறு தீவிரமான நோய்கள் ஏற்படலாம். எனவே, பவுடர் பால் கலக்கும்போது மற்றும் பாலடையில் குழந்தைக்கு பால் கொடுக்கும்போது என்று ஒவ்வொரு முறையும் பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றினால்தான், பவுடர் பால் வழியாக குழந்தைக்கு நோய்த்தொற்று ஏற்படாமல் தடுக்க முடியும்.

Sterilizer
Sterilizer

பவுடர் பால் கலக்கும்போது, பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு வழிமுறைகள்:

* பவுடர் பால் கலக்கவேண்டிய மேஜையின் மேற்புறத்தை கிருமிநாசினி கொண்டு சுத்தமாகத் துடைத்துவிடுங்கள்.

* கைகளை சுத்தமாக சோப்பு போட்டுக் கழுவி விடுங்கள்.

* கெட்டில் (Electric Kettle) இருந்தால், போதுமான அளவு தண்ணீர் நிரப்பி, நன்றாகக் கொதிக்க விடுங்கள். கெட்டில் இல்லையென்றால், பாத்திரத்தில் தண்ணீர் நிரப்பி நன்றாகக் கொதிக்க விடுங்கள்.

* கொதித்த நீரை, ஆற விடுங்கள். இந்த நீரினை, கொதித்ததிலிருந்து 30 நிமிடங்களுக்குள் உபயோகப்படுத்திட வேண்டும்.

* பாலாடை, பவுடர் பால் கலக்க உபயோகப்படுத்தப்படும் கிண்ணம், கரண்டி, சிரிஞ்ச் போன்றவற்றை தனியாக மற்றொரு பாத்திரத்தில் கொதிக்கும் நீரில் 20 நிமிடங்கள் போட்டு எடுங்கள். இவ்வாறு, பால் கொடுக்க உபயோகப்படுத்தப்படுபவற்றில் நோய்க்கிருமிகளை அழித்திடும் ஸ்டெரிலைஸர்கள் (Sterilizers), 3,000-6,000 ரூபாயில் கிடைக்கின்றன. ஸ்டெரிலைஸர் வாங்க முடியுமாயின், நேரடியாக பாலாடை, பவுடர் பால் கலக்க உபயோகப்படுத்தப்படும் கிண்ணம், கரண்டி, சிரிஞ்ச் போன்றவற்றை கொதிக்கும் நீருக்கு பதிலாக, ஸ்டெரிலைஸரில் போட்டு எடுக்கலாம்.

நான் சென்ற அத்தியாயத்தில் குறிப்பிட்டபடி, குழந்தையின் எடைக்கேற்ப ஒவ்வோர் இரண்டு மணிநேரத்திற்கும் எவ்வளவு பால் கொடுக்க வேண்டும் என்பதைக் கணக்கிடுங்கள்.

பின்பு, சிரிஞ்ச் மூலம், தேவையான அளவு தண்ணீரை உறிஞ்சி, பவுடர் பால் கலக்க உபயோகப்படுத்தப்படும் கிண்ணத்தில் நிரப்பி விடுங்கள்.

பால் பவுடருக்கு கொடுக்கப்பட்ட பிரத்யேகமான கரண்டி மூலம் தேவைப்படும் பவுடரை எடுத்து தண்ணீரில் நன்றாகக் கலந்திடுங்கள். எவ்வளவு மில்லிலிட்டர் தண்ணீரில், ஒரு கரண்டி (ஸ்கூப்) மில்க் பவுடரை கலக்க வேண்டும் என்று, டப்பா அல்லது அட்டையில் குறிப்பிட்டிருப்பார்கள்; அந்தளவிற்கு தான் தண்ணீர் உபயோகப்படுத்த வேண்டும். பெரும்பாலும் 30 மில்லிலிட்டர் தண்ணீருக்கு ஒரு கரண்டி (ஸ்கூப்) மில்க் பவுடரை கலக்க வேண்டும் என்று குறிப்படப்பட்டிருக்கும். எனினும், நிறுவனத்தைப் பொறுத்து, இது மாறுபடலாம் என்பதால், பால் பவுடர் அட்டையைப் பார்த்து உறுதிபடுத்திக்கொள்ளுங்கள்.

குழந்தைக்கு பாலாடையில் பால் கொடுக்கறீங்களா?  இதை கவனியுங்க...| பச்சிளம் குழந்தை பராமரிப்பு – 16

ஒவ்வொரு முறை பால் கொடுக்கும்போது, இவ்வாறு புதிதாக பவுடர் பாலை கலக்க வேண்டும். முன்னரே ஒட்டுமொத்தமாக பவடர் பாலை கலந்து நாள் முழுதும் உபயோகப்படுத்தாதீர்கள்; அவ்வாறு செய்தால் நோய்த்தொற்று அபாயம் ஏற்படும். பால் கொடுத்த பிறகு, பவுடர் பால் மிச்சம் இருந்தால், அதனை மீண்டும் உபயோகப்படுத்தாதீர்கள். உதாரணமாக, குழந்தைக்கு 50 மில்லிலிட்டர் பவுடர் பால் கொடுக்க வேண்டுமென்றால், 60 மில்லிட்டர் நீரில், இரண்டு கரண்டி பால் பவுடரை கலந்து, குழந்தைக்கு 5 முறை பாலாடையில் (பெரும்பாலான பாலாடையின் கொள்ளளவு 10 மில்லிலிட்டர்) பால் கொடுத்து முடித்த பிறகு, மிச்சமுள்ள 10 மில்லிலிட்டரை கொட்டிவிட வேண்டும்.

பாலாடையில் பால் கொடுக்கும்போது பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு வழிமுறைகள்:

குழந்தையை தாயின் மடியில், தலை உடலைவிட மேலே இருக்கும் வண்ணம் கிடத்த வேண்டும்.

வாயிலிருந்து வெளிப்படும் பாலை துடைப்பதற்கு, குழந்தையின் கழுத்தின் மேல் நாப்கின் அல்லது பர்ப் துணியை (Burp cloth) வைத்திட வேண்டும்.

பாலாடையில் விளிம்பிற்கு அருகாமை வரை, பாலை நிரப்பிக் கொள்ள வேண்டும். பாலாடையை, உங்கள் விரல்களைக் கொண்டு, பக்கவாட்டில் பிடித்திடுங்கள் (இவ்வாறு, பிடிக்கும்போது, விரல்கள் பாலில் படுவதைத் தவிர்த்திட முடியும்).

பாலாடையின் முனையை, குழந்தையின் வாயின் ஓரத்தில், உதடுகள் மத்தியில் வைத்து, சீராக பாலை கொடுக்கத் தொடங்குங்கள்.

பாலை, மிக மெதுவாக கொடுக்க வேண்டும்; குழந்தை, பாலை முழுங்குவதை உறுதி செய்திடுங்கள்.

பாலாடையிலுள்ள பாலை முழுமையாக கொடுத்த பின்பு, இரண்டாவது முறை பாலாடையில் பாலை நிரப்பி, மேற்கூறியவாறு, மீண்டும் மெதுவாக பாலாடையில் கொடுக்கத் தொடங்குங்கள்.

குழந்தைக்கு பாலாடையில் பால் கொடுக்கறீங்களா?  இதை கவனியுங்க...| பச்சிளம் குழந்தை பராமரிப்பு – 16

குழந்தையின் எடைக்கு ஏற்றவாறு, ஒவ்வொரு முறையும் எத்தனை முறை பாலாடையில் பால் கொடுக்க வேண்டுமென கணக்கிட்டீர்களோ, அத்தனை முறை பாலாடையில் பால் நிரப்பி, மிக மெதுவாக பால் கொடுத்திடுங்கள்.

குழந்தை பாலை சரியாக முழுங்கவில்லையென்றால், மெல்லிய தீண்டல் மூலம் குழந்தையை எழுப்பி, பிறகு பாலாடையில் பால் கொடுக்கத் தொடங்கிடுங்கள்.

பால் முழுமையாகக் கொடுத்து முடித்த பிறகு, குழந்தையை தோளின் மீது கிடத்தி, ஏப்பம் வரும் வரை முதுகில் தட்டிக் கொடுங்கள்.

பால் கொடுத்த பிறகு, பாலாடையை சோப்பு நீரில் சுத்தம் செய்திடுங்கள். அடுத்த முறை பவுடர் பால் கலக்குவதற்கு முன்பு, பாலாடை, பவுடர் பால் கலக்க உபயோகப்படுத்தப்படும் கிண்ணம், கரண்டி, சிரிஞ்ச் போன்றவற்றை தனியாக, கொதிக்கும் நீரில் 20 நிமிடங்கள் போட்டு எடுங்கள்; அல்லது ஸ்டெரிலைஸரில் போட்டு எடுங்கள். இதன் மூலம், பாலாடை மூலம் நோய்த்தொற்று ஏற்படுவதைத் தடுத்திட முடியும்.

அடுத்த அத்தியாயத்தில், புட்டிப்பால் ஏன் கொடுக்கக்கூடாது என்பதைப் பற்றி விரிவாகக் காண்போம்.

பராமரிப்போம்…