முருகானந்தத்தின் உடல்வாகு, அவரது தோற்றம், அவர் அணிந்திருக்கும் உடை ஆகியவற்றை முதலில் பார்க்கும் யாவருக்கும், 'உங்களுக்கென்ன ஒரு 45 வயசு இருக்குமா’ என்றுதான் கேட்கத் தோன்றும். ஆனால், அவருக்கு 63 வயது. ஆச்சர்யப்பட்டுப்போய், "இந்த இளமைத்தோற்றம், உற்சாகம் எல்லாத்துக்கும் காரணம் என்ன?" என்று கேட்டால், "கடந்த 26 வருஷமா வேலை, மளிகைக் கடை, மருத்துவமனை என்று எங்கு சென்றாலும், சைக்கிள் மட்டுமே பயன்படுத்துவதுதான்" என்று கூறி, நம்மை இன்னும் ஆச்சர்யப்படுத்துகிறார்.
கரூர் நகரில் சைக்கிள் சகிதம் சென்றுகொண்டிருந்த அவரை ஓரங்கட்டிப் பேசினோம். ஜீன்ஸ், டிஷர்ட், கூலிங் கிளாஸ் என 2கே கிட்ஸுகளுக்கே சவால்விடும் தோரணையில் இருந்த முருகானந்தம், தனது இளமை ரகசியத்தைச் சொல்ல ஆரம்பித்தார்.
"எனக்குச் சொந்த ஊர் குளித்தலை. நான் அந்தக் கால எஸ்.எஸ்.எல்.சி படித்தவன். 1984-ம் ஆண்டு தமிழக அரசுக்குச் சொந்தமான, திருச்சியில் இருந்த சிந்தாமணி சூப்பர் மார்க்கெட்டில் வேலை கிடைச்சுச்சு. பஸ்ல வேலைக்குப் போயிட்டு வந்தேன். 1996 வரை அங்க வேலை பார்த்தேன். இந்த நிலையில், சொந்தமா பைக் வாங்க ஆசைப்பட்டு, 1995 போல ஒரு டி.வி.எஸ் 50 வண்டி வாங்கி ஓட்ட ஆரம்பித்தேன். மூணு மாசத்துல சின்னதா ஆக்சிடென்டாகி, முதுகுல பயங்கர அடி. மருத்துவர்கள், 'ஒரு ஆறு மாசத்துக்கு பைக் ஓட்டக்கூடாது'ன்னு சொல்லிட்டாங்க. ஆனால், நான் ஆறு மாசத்துக்குப் பிறகும் பைக் ஓட்டலை. இந்நிலையில், 1996-ம் வருஷம் கரூர்ல உள்ள ஒரு ரேஷன் கடையில் விற்பனையாளராக டெபுடேஷன்ல பணி போட்டாங்க. ஆனா, இங்கேயும் பைக் ஓட்டலை. சைக்கிள் ஒண்ணை வாங்கி ஓட்ட ஆரம்பிச்சேன்.
1991-லேயே எனக்குத் திருமணம் ஆயிட்டு. மனைவி சங்கரேஸ்வரி, டீச்சர் ட்ரைனிங் முடிச்சிருந்ததால், 1997-ல் அவருக்கு அரசுப்பள்ளி ஆசிரியையா வேலை கிடைச்சுச்சு. ஆனால், நான் அப்பவும் பைக் வாங்கலை. அப்போ, கரூர் டவுன்ல குடியிருந்தோம். தினமும் ரேஷன் கடை, மதியம் சாப்பாட்டுக்கு வீடு வர, மறுபடியும் கடைக்குப் போக, மாலை வீடு திரும்பன்னு சைக்கிளை மட்டுமே யூஸ் பண்ணினேன். இதனால், என்னோட மனசும் உடம்பும் புத்துணர்ச்சியா இருந்துச்சு. விபத்தால ஏற்பட்ட முதுகுவலியும் இதனால படிப்படியா குறைஞ்சுச்சு. தினமும் 10 கிலோமீட்டர் வரை சைக்கிள் ஓட்டுவேன். அதன்பிறகு, கடந்த 2007-ம் ஆண்டு தான்தோன்றிமலைக்குக் குடிபெயர்ந்தோம். அப்போ, எல்.ஜி.பி நகர், குளத்துப்பாளையம் ரேஷன் கடைகளுக்குப் பணி போடுவாங்க. அப்போ, தினமும் 10 கிலோமீட்டர் தூரம் வரை சைக்கிள் மிதிச்சுப் பயணிப்பேன்.
தொடர்ந்து, 2012-ல் இருந்து இப்போ வரை காந்திகிராமத்துல குடியிருக்கிறோம். கடந்த 2019-ல் அரசு வேலையில் இருந்து ஓய்வுபெற்றுவிட்டேன். அதன்பிறகு, கடந்த மூணு வருஷமா தனியார் டெக்ஸ்டைல்ஸ் நிறுவனத்துல கேஷியராகப் பணியாற்றிக்கொண்டிருக்கிறேன். இப்போ, காலையில் அலுவலகம் செல்வது, அலுவலகத்திலிருந்து வங்கிக்கு இருமுறை செல்வது, மாலையில் அலுவலகத்திலிருந்து வீடு திரும்புவதுன்னு தினமும் குறைந்தது 15 கிலோமீட்டர் தூரம் சைக்கிள்ல பயணிக்கிறேன். இதைத்தவிர, விடுமுறை நாள்களில் கடைகளுக்கு சாமான் வாங்கச் செல்வது, ஜவுளிக்கடைகளுக்கு ஜவுளி எடுக்கச் செல்வது, மருத்துவமனைகளுக்குச் செல்வது என எல்லாம் இந்த சைக்கிளில்தான். வெளியூருக்கு, உறவினர்கள் வீட்டு விசேஷங்களுக்குப் போக மட்டும் பஸ், ஆட்டோன்னு பயன்படுத்துவேன்.
நான் இதுவரை ஏழு சைக்கிள் மாத்திட்டேன். நாலு வருஷத்துக்கு ஒருதடவை என்ன புதுமாடல் சைக்கிள் வருதோ, அதை வாங்கி ஓட்டுவேன். இப்போ வைத்திருக்கிற இந்த சைக்கிள் பத்து நாளைக்கு முன்னாடி வாங்கினது. என் மனைவி கடந்த பத்து வருஷமா வண்டி வச்சிருக்காங்க. இப்போ, காளியப்பனூர் அரசுத் தொடக்கப்பள்ளித் தலைமை ஆசிரியையா இருக்காங்க. அவங்ககிட்ட உறவினர்கள், 'உன் புருஷனுக்கு ஒரு வண்டி வாங்கிக் கொடுத்தா என்ன? ரெண்டு பேரும் சேர்ந்து, காசை மிச்சம் பன்றீங்களா?'ன்னு கிண்டல் பண்ணுவாங்க. அதனால், அவங்க அடிக்கடி, 'என் மானத்தை வாங்காதீங்க. நான் வண்டி வாங்கித் தரவா?'ன்னு கேட்பாங்க. நான் மறுத்துடுவேன். அதேபோல், எங்களுக்கு ஒரே மகள். பி.இ முடித்த அவளுக்குத் திருமணம் பண்ணிக்கொடுத்துட்டோம். பெங்களூருல சாஃப்ட்வேர்ல ஒர்க் பண்றாங்க.
அவளும், 'நானாச்சும் வண்டி வாங்கித்தரேன்பா'ன்னு சொல்லியும், நான் மறுத்துட்டேன். அதுக்கு காரணம், 63 வயதாகியும் நான் இளமையா இருக்கிறேன். சுகர் இல்லை. நல்லா தூக்கம் வருது. உடம்பும், மனசும் எப்போதும் புத்துணர்ச்சியா இருக்கு. உடம்புல வேறெந்த வியாதியும் இல்லை. நான் அடிக்கடி நொறுக்குத்தீனி உண்பேன். ஆனா, சைக்கிள் ஓட்டுவதால், அதனால் தொப்பை உருவாகலை. கொரோனா லாக்டௌன்ல சைக்கிள் ஓட்டாம, அதிகம் சாப்பிட்டதால 13 வருஷமா மெயின்டைன் பண்ணிக்கிட்டு இருந்த 67 கிலோ, திடீர்னு 74 ஆக அதிகரித்துவிட்டது. கொரோனாவுக்குப் பிறகு, சைக்கிள் தொடர்ந்து ஓட்டியதால், மறுபடியும் 68 கிலோவுக்கு வந்திட்டேன். 'இளமையா இருக்கீங்க'ன்னு பலரும் சொல்வாங்க. அதுக்கு காரணம் இந்த சைக்கிள் மிதிப்பதுதானே... அதை எப்படி விடமுடியும்?!
கடந்த அஞ்சு வருஷமா சைக்கிள் ஓட்டுறதுல பலருக்கும் ஆர்வம் வந்திருப்பதால், அதுமேல ஈடுபாடு உள்ளவங்க, 'இதோ சைக்கிள் இளைஞர் வந்துட்டார்'னு ஜாலியா சொல்வாங்க. அது, எனக்கு பெரிய உத்வேகத்தைத் தரும். அதேபோல், என் அலுவலகத்தில் வேலைபார்க்கும் 40 வயசு இளைஞர்கள்கூட, 'நான் உங்களுக்கு எங்க வயசுதான் இருக்கும்னு நினைச்சோம். சைக்கிள்ல போறீங்களே அவசரத்துக்கு எப்படிப் போவீங்க?'ன்னு ஆச்சர்யமா கேட்பாங்க. அங்கே வேலை பார்க்கிற 30 வயசு பசங்களுக்குக்கூட தொப்பை விழுந்து வயசான மாதிரி இருக்கிறப்ப, நான் இளமையா தெரியுறதுக்குக் காரணம் இந்த சைக்கிள்தான்.
மனசையும் இளமையா வச்சுக்க, 'ஆள் பாதி, ஆடை பாதி'ன்னு சொல்வதற்கு ஏத்தமாதிரி, ட்ரெண்டிங்கா உடையணிவேன். ஆனா, 'உடம்பைக் கட்டுக்கோப்பா வச்சுக்க, உடற்பயிற்சி செய்றேன்'னு கிளம்புற இளைஞர்கள்ல பலபேரு, நாலு நாளைக்கு மேல அதைத் தொடரமாட்டாங்க. அதனால், என்னைப்போல சைக்கிள் ஓட்டினால், வேலையோடு வேலையா உடற்பயிற்சி செஞ்சாப்புல இருக்கும். தொடர்ச்சியா சைக்கிள் ஓட்டவும் முடியும். என்னைப்போல இளமையாகவே இருக்கணும்னா, சைக்கிள் ஓட்டுங்க பாஸ்!" என்று கூறி, ஸ்டைலாக சைக்கிள் பெடலை மிதிக்கத் தொடங்கினார் முருகானந்தம்.