முப்பது, நாற்பது வருடங்களுக்கு முன், கர்ப்பம் தரிப்பதும் சுகப்பிரசவத்தில் குழந்தை பெறுவதும் இயல்பான விஷயங்களாக இருந்தன. அன்றைய குழந்தை வளர்ப்பு, தற்போது ஒரு குழந்தை வளர்ப்பதற்கு நாம் எடுத்துக்கொள்கிற நேரம், உழைப்பு, பொருள் செலவைவிட பல மடங்கு குறைவாய் இருந்தது. இந்த உண்மை எல்லோருக்கும் தெரியும். நவீன பேரன்டிங் சிரமங்களுக்கு, கண்ணுக்குத் தெரியாத ஸ்ட்ரெஸ்ஸும் கண்ணுக்குத் தெரிந்த தவறான உணவுப் பழக்கமும்தான் காரணம். இந்தியா போன்ற வளரும் நாடுகளில் மக்களிடையே பதற்றம் சற்று கூடுதலாக இருப்பது இயல்புதான். அதனால், உணவுப் பழக்கத்தை இயற்கையாய், ஆரோக்கியமானதாய் உடனடியாக மாற்ற முயல வேண்டும். அடுத்தது, ஸ்ட்ரெஸ். 'ஈன்ற பொழுதில் பெரிதுவக்கும்' குறளுக்கான அர்த்தமே தற்போது வேறொரு கோணத்தில்தான் பார்க்கப்படுகிறது. ஈன்ற பொழுதிலிருந்தே, தன் மகனை/மகளை சான்றோன் ஆக்குவதே லட்சியமாகப் போராடிவருகிற தாய், தந்தை அதிகரித்துவிட்டார்கள். விளைவு, ஸ்ட்ரெஸும் அதிகரித்துவிட்டது.

எந்த பூதக்கண்ணாடி வைத்துப் பார்த்தாலும் எந்தக் கோணத்தில் பார்த்தாலும், குழந்தைகளின் உலகம் நமக்கெல்லாம் முழுவதுமாக புரியப்போவது இல்லை. குழந்தைகளுடைய மூளை வளர்ச்சியின் வேகம், வளர்ந்த மனிதர்களுக்குப் பிடிபடாதது. மூன்று மாதத்தில் குப்புற விழுவதற்கு குழந்தைகள் எடுக்கும் முயற்சியில் வெறும் 5% நம்மிடம் இருந்தாலே எப்படிப்பட்ட சோதனையையும் சாதனையாக்கிவிடலாம். மல்லாந்து படுத்தே பழக்கப்பட்ட குழந்தை, மெள்ள மெள்ள பாதி உடம்பை திருப்பப் பார்க்கும். அப்படி முயலும்போது, பிஞ்சுக் கை மாட்டிக்கொண்டு 'ஓ' வென்று அழும். அடுத்த நொடியே மறுபடியும் குப்புற விழ முயல்வது என, தொடர்ந்து முயன்றுகொண்டே இருக்கும். இதுவரை அந்தக் காட்சியைப் பார்க்காதவர்கள் இனியாவது பாருங்கள் ப்ளீஸ். பெரும் தொகை கொடுத்து தன்னம்பிக்கை பயிற்சி எடுத்துக்கொண்ட உணர்வு இலவசமாய்க் கிடைக்கும்.
குழந்தைகள் நான்கு மாதங்களில், கண்ணில்பட்ட பொருள்களையெல்லாம் வாயில் வைத்துக்கொள்வார்கள். குழந்தைகளின் மூளை இடும் கட்டளையால் நடக்கும் பயிற்சி அது. ஆங்கிலத்தில், 'ஓரல் கிராட்டிஃபிகேஷன் (oral gratification)' என்போம். பால் அருந்தியதால் கிடைத்த மனநிறைவை வெளிப்படுத்துகிற ஒரு செயல் இது. இதைச் செய்வதற்கு குழந்தைகளை அனுமதியுங்கள். பின்னாளில், திருப்தியற்ற மனநிலையினால் வருகிற 'ஓவர் ஈட்டிங்' போன்ற பிரச்னைகள் வராது.
பத்து மாதத்தில் நடைபயிலும்போது, 'நானே முயல்கிறேன், என்னைத் தொடாதீர்கள்' என்பதைத்தான் நம் கைகளைத் தட்டிவிடுவதன் மூலம் வெளிக்காட்டுகிறார்கள் குழந்தைகள்.''ஆனந்தி ரகுபதி (குழந்தைப் பிறப்பு பயிற்சியாளர்)
எந்தப் பொருளைப் பார்த்தாலும் தொட்டுப் பார்த்து அதன் தன்மையை உணர்வார்கள். உடல் முழுக்க உயிர்ப்புடன் இருப்பதற்கான செயல்பாடு இது. குழந்தைகளின் மோந்துபார்க்கும் சக்தி அளப்பரியது. தனி மனிதனின் வளர்ச்சியில் வேறெந்த வயதிலும் இல்லாத அளவுக்கு, எட்டு மாதக் குழந்தையின் சுவை நாளங்களுடைய வளர்ச்சி அதிகமாக இருக்கும். இந்த நேரத்தில் ஆரோக்கியமான உணவுகளை அறிமுகப்படுத்தினால், ஒரு வயதிலிருந்தே 'ஹெல்தி ஈட்டிங் ஹேபிட்' வந்துவிடும் குழந்தைகளுக்கு.
ஆறேழு மாதம் வரை அனைவரிடமும் கையை விரித்து ஆசையாய்ப் போன குழந்தை, திடீரெனப் புதியவர்களைக் கண்டால் மிரள்வார்கள். இது Strangers anxiety. அவர்களின் அறிவின் முதிர்ச்சியைக் காட்டுகிற செயல் இது. வீட்டு ஆள்களுடன் மட்டும் ஒட்டிக்கொள்வார்கள், குறிப்பாக அம்மாவிடம். இது Separation anxiety. அம்மா நம்மைவிட்டுவிட்டு எங்காவது போய்விடுவாளோ என்கிற யோசனையின் வெளிப்பாடு இது.

பத்து மாதத்தில் நடைபயிலும்போது, 'நானே முயல்கிறேன், என்னைத் தொடாதீர்கள்' என்பதைத்தான் நம் கைகளைத் தட்டிவிடுவதன் மூலம் வெளிக்காட்டுகிறார்கள் குழந்தைகள். அவர்கள் உலகத்தின் ஒவ்வொரு நிமிடமும் அவர்களுடைய வளர்ச்சியால் நிறைந்தது.
இந்தத் தொடரின் முதல் அத்தியாயத்தில் நான் அறிமுகப்படுத்திய அம்மா மதுமிதாவையும் அவருடைய மகன் ரிஷப்பையும் உங்களுக்கு நினைவிருக்கிறதா? மகனை வெளியே விளையாடவிட்டால் அக்கம்பக்கத்து அப்பார்ட்மென்ட் வம்பையெல்லாம் வாங்கி வந்துவிடுகிறான் என்று, மகனை வீட்டுக்குள்ளேயே பூட்டி வைத்து வளர்க்கிறார் மதுமிதா. விளையாட முடியாத ரிஷப் கார்ட்டூன் சேனல்கள் பார்க்க ஆரம்பிக்கிறான். மதுமிதா போன்ற அம்மாக்கள் அதிகரித்துவிட்டார்கள்.

குழந்தைகளின் ஆரம்பகாலத்தில், அவர்கள் செய்ய நினைப்பதையெல்லாம் செய்வதற்கான சூழ்நிலைகளை நாம்தான் வழங்க வேண்டும்.
இந்தத் தொடரில் வருகிற சீதாவின் பிள்ளைகளைப்போல, தாயின் கருவறையிலிருந்தே ஆரோக்கியத்தோடும், ஆன்ம பலத்தோடும் பிறந்த குழந்தைகள், வெளியே வந்த பிறகு நல்ல உறக்கம், சரியாக உணவு உட்கொள்வது என ஆரோக்கியக் குறைவின்றி, நான் மேலே சொன்ன அத்தனை வளர்ச்சி நிலைகளையும் சரியாக அடைவார்கள்.

ஒரு குழந்தை, தன்னுடைய ஏழு வயதுவரை தாயின் அத்தனை ஆற்றலையும் உறிஞ்சி வளரும். ஏழு வயதுவரை குழந்தையை சந்திரன் என்றும் தாயை சூரியன் என்றும் உருவகப்படுத்துவதற்குக் காரணம் இதுதான். குழந்தை வளர்ப்பில் முதல் மூன்று ஆண்டுகள், பெற்றோர்கள் அதீதமான ஆற்றலோடும் பொறுமையோடும், அன்போடும் நிதானத்தோடும் வளர்த்தால், எல்லா குழந்தைகளும் அற்புதமானவர்களே.