Published:Updated:

`குழந்தை ஜனிக்கும்போது..!' - தம்பதிகளுக்குச் சில மனநல ஆலோசனைகள் - இப்படிக்கு... தாய்மை - தொடர் 04

Pregnancy
News
Pregnancy

`கர்ப்பகாலத்தில் நல்ல அணுக்களின் கூட்டே ஓர் அற்புதமான குழந்தையை உருவாக்கும் என்பதோடு, அதில் ஜெனிட்டிக்கின் பங்கு 50% மட்டுமே, மீதி உள்ள 50% பண்புகளை கர்ப்பகாலத்தின்போதான சுற்றுச்புறச்சூழல் தீர்மானிக்கிறது’

Published:Updated:

`குழந்தை ஜனிக்கும்போது..!' - தம்பதிகளுக்குச் சில மனநல ஆலோசனைகள் - இப்படிக்கு... தாய்மை - தொடர் 04

`கர்ப்பகாலத்தில் நல்ல அணுக்களின் கூட்டே ஓர் அற்புதமான குழந்தையை உருவாக்கும் என்பதோடு, அதில் ஜெனிட்டிக்கின் பங்கு 50% மட்டுமே, மீதி உள்ள 50% பண்புகளை கர்ப்பகாலத்தின்போதான சுற்றுச்புறச்சூழல் தீர்மானிக்கிறது’

Pregnancy
News
Pregnancy

உணவுக்கும் உணர்வுக்கும் சம்பந்தம் உண்டு. உணர்வுக்கும் உறக்கத்துக்கும் மிகுந்த சம்பந்தம் உண்டு. உழைப்புக்கும் உறக்கத்துக்கும் அதிகமான சம்பந்தம் உண்டு. உணவுக்கும் உறக்கத்துக்கும் மிக அதீதமான சம்பந்தம் உண்டு.

புரியவில்லையா? மீண்டும் ஒருமுறை படியுங்கள்.

உணவு - உடல் உழைப்பு - உறக்கம் - உணர்வுகள்... இந்த நான்கிற்கும் எப்போதும் நெருங்கிய தொடர்பு உண்டு. நான்கையும் பேலன்ஸ்டாகக் கையாள்பவர்கள் சீரிய சிந்தனையுடையவர்களாகவும், மகிழ்ச்சியான மனோபாவத்தில் இருப்பவர்களாகவும் இருக்க முடியும்.

இப்படிப்பட்ட மகிழ்வும் மன அமைதியும் கருவுறப்போகும் பெண்ணிடமும், அக்காலகட்டத்தில் அந்த ஆணிடமும் இருந்தால் அடுத்து வரும் அவர்கள் தலைமுறை பேறுபெற்றதாகும். சில காலங்களாக நாம் தொலைத்துவிட்டுத் தேடிக்கொண்டிருப்பது இந்த ஆரோக்கியத்தைத்தான். விரிவாக அலசுவோம். நம் தொடரில் வரும் மேனகா, இந்த வாரம் தன்னைப் புதுப்பித்துக்கொள்ள பல்வேறு முயற்சிகளை யோசித்த நிலையில், அவள் தோழி மூலமாக, 'Happy Motherhood' என்ற பெயரில் நடத்தப்படும், கர்ப்பத்திற்குத் தயாராவது மற்றும் கர்ப்பகாலப் பாதுகாப்பு குறித்த ஒரு புதுமையான பயிற்சி முகாம் பற்றித் தெரிந்துகொள்கிறாள்.

Anandhi Ragupathy
Anandhi Ragupathy

`ஆரோக்கியமான தலைமுறையை கருவிலிருந்தே தீர்மானிக்கலாம்' என்ற கோட்பாட்டில், கர்ப்பம் உண்டாவதற்கு முன்னதாக ஒரு கணவனும் மனைவியும் உடலளவில், மனதளவில், உணர்வு அடிப்படையில் எப்படிப் பக்குவப்பட வேண்டும் என்ற புதுமையான சிந்தனையில் நடந்து வரும் பயிற்சி முகாம் மையம் அது. `அப்படி அங்கு என்ன இருக்கிறது, என்ன பயிற்றுவிக்கிறார்கள்' என்று தேடும் பணியில் அமர்ந்தாள் மேனகா. அவளுக்குப் பல ஆச்சர்யமூட்டும் தகவல்கள் காத்திருந்தன.

கர்ப்பிணிகள் ஒவ்வொருவரையும் நடக்கவைத்து, பாடவைத்து, ஆடவைத்து, இசை கற்கவைத்து, நல்லவற்றைச் சாப்பிடவைத்து, தவறாமல் உடற்பயிற்சி செய்யவைத்து, புத்தகம் படிக்க வைத்து, நல்லுறக்கம் கொள்ளவைத்து, இயன்றவரை இயற்கையோடு இசைந்து வாழவைத்து, மூச்சுப் பயிற்சியை முறையே செய்யவைத்து, இயல்பாக எடை உயரவைத்து, ஐந்து நிறங்கள் இல்லாமல் உணவில் கைவைக்க மாட்டோம் என்று சூளுரைக்கவைத்து, இயற்கை வழியில் வந்த உணவுகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கவைத்து, ஐம்புலன்களையும் கூர்மையாக்கிட எண்ணற்ற பயிற்சி கொடுத்து, கிரியேட்டிவ்வாக இருப்பது மகிழ்ச்சியை உண்டுபண்ணும் என்பதைப் புரிந்துகொள்ளவைத்து,

Walking lady
Walking lady

கடற்கரையில் யோகா செய்யவைத்து, நிறைமாதத்தில் நீச்சல் குளத்தில் குளிக்க வைத்து, எளிய தியானப்பயிற்சிகள் மேற்கொள்ள வைத்து, இயன்றவரை எளிய முறையில் சுகப்பிரசவம் ஆக வைத்து, நினைத்தது நினைத்த மாதிரியே குழந்தையை ஈன்றெடுக்க வைத்து, தாய்ப்பால் மட்டுமே ஆறு மாதங்கள் தவறாமல் கொடுக்க உதவிபுரிந்து, கட்டாயம் தாலாட்டுப் பாடவைத்து, உடன் தைரியத்தையும் கொடுத்து வளர்த்தெடுக்க வைத்து, கதை சொல்லக் கற்றுக்கொடுத்து, தாய்க்கு மீண்டும் இடை சிறுக்கப் பயிற்சி கொடுத்து, எடை சரியாக உறுதுணை புரிந்து, நேர்மறையான வார்த்தைகளை மட்டுமே குடும்பங்களில் உபயோகிக்கக் கற்றுக்கொடுத்து, மூன்று வயதிற்குள் குழந்தைக்கு முக்கால் பாகம் மூளை வளர்ச்சி முடிந்துவிடுவதால் அதற்குள் முயன்றவற்றையெல்லாம் செயல்படுத்தச் சொல்லிக்கொடுத்து, பன்முகச் சிந்தனையுடன் குழந்தையை வளர்க்க ஊக்கமளித்து, ஒவ்வொரு மாதமும், ஒவ்வொரு குழுவிற்கும் இந்தச் செயல்பாடுகளை எல்லாம் இயன்றவரை மாற்றி யோசித்து, இதுவரை பல குழந்தைகளையும் சிறந்தவர்களாய் ஆக்கியிருப்பது... இந்தப் பயிற்சி வகுப்பின் சில வருடச் சாதனை என்றது அந்தப் பட்டியல்.

படிக்கப் படிக்க மேனகாவிற்கு ஆர்வமும் ஆச்சர்யமுமாக இருந்தது. தற்போது அந்த மையத்தில் இன்னொரு புதிய முயற்சியாக, கர்ப்பத்திற்கு முன்னதாக ஆணும் பெண்ணும் தயாராகும் பயிற்சிகள் நடப்பதாகவும் தெரிவித்திருந்தனர். `இதற்கெல்லாம் பயிற்சியா என்று ஆச்சர்யப்பட வேண்டியதில்லை. இன்றைய காலகட்டத்தில் பெரும் நகரங்களிலும் சரி, சிறு நகரங்களிலும் சரி ஆரோக்கியமான கர்ப்பம் என்பது எட்டாக்கனியாகி வருவதே இதற்குக் காரணம்.

Pregnant woman
Pregnant woman

பத்தில் எட்டுப் பெண்கள் சிக்கலான பேறுகாலத்தை எதிர்நோக்குகிறார்கள்; அதைச் சரிசெய்வது கர்ப்பகாலத்தில் இயலாது போகிறது. கர்ப்பகாலத்தை மெதுவாகக் கடத்தி, பல ஆரோக்கியத் தடைகளைத் தாண்டி பிரசவம் வரை செல்லும் கஷ்டங்களை, தற்போது மருத்துவ உலகம் மிகுந்த சங்கடத்துடன் அணுகி வருகிறது. அதைத் தவிர்க்க வேண்டுமென்றால் முன்னேற்பாடுகள் கர்ப்பத்திற்கு முன்னரே எடுக்கப்பட வேண்டும் என்ற கோட்பாட்டின் அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்ட புதுமையான முயற்சியே இந்தப் பயிற்சி' - விளக்கத்தை வாசித்த மேனகா, தொடர்ந்து படித்தாள்.

'அப்படிப்பட்ட அழகான கர்ப்பகால முன்னேற்பாடுகள், இன்னும் ஆளுமை மிக்க ஆரோக்கியமான குழந்தைகளையும், தலைமுறையையும் கொண்டுவரும். மேலும் நாளை கருவுற்ற பிறகு கருச்சிதைவு, உதிரப்போக்கு, குறைமாத பிரசவம், குறைவான வளர்ச்சி, பலவீனமான நஞ்சுப்பை, பனிக்குட நீர் வற்றிப்போதல், நோய்த்தொற்று போன்ற பிரச்னைகள் இன்றி கர்ப்பகால நாள்களை இயல்பாய் எடுத்துச்செல்ல வேண்டும் என்றால், உங்கள் ஆரோக்கியத்தை தயவுசெய்து மேம்படுத்திய பின்னர் கர்ப்பமாகுங்கள்' என்று குறிப்பிடப்பட்டிருந்தது மேனகாவை ஈர்த்தது. தற்போதைய காலகட்டத்தில் தன்னோடு பணிபுரியும் நட்பு வட்டம், உறவுகள் எனப் பலரும் இப்படி சங்கடங்களை எதிர்நோக்கி வருவதை மேனகாவால் இணைத்துப் பார்க்க முடிந்தது.

Pregnant woman
Pregnant woman

குறிப்பிட்ட அந்தப் பயிற்சி மையத்தில், ஶ்ரீராமும் மேனகாவும் ஒரு வாரகாலம் சில பயிற்சிகள் மேற்கொண்டனர். இருவரையும் ஆச்சர்யப்படுத்திய வார்த்தைகள் பல. அவற்றில் எபிஜெனிடிக் (Epigenetic) என்ற ஒரு நுட்பம் மிகுந்த ஆச்சர்யத்தை வரவழைத்தது. 'பல வளர்ந்த நாடுகள் இந்த நூற்றாண்டில் எபிஜெனிடிக், அதாவது 'மேல்மரபியல்' என்ற தேர்ந்த விஷயங்களை எல்லாம் கரு உண்டாவதற்கு முன்னதாக யோசிக்கத் தொடங்கி செயல்படுத்துகின்றனர். அதாவது, ஒரு குழந்தையின் டி.என்.ஏ, தன் தாய், தந்தையின் மரபுப் பண்களை மட்டுமே பெற்றிருப்பதில்லை, அதைத் தாண்டிய சில பண்புகளும் அதன் டி.என்.ஏவில் அமையப்பெறுகின்றன என்பதைக் குறிப்பதே, எபிஜெனிட்டிக்.

அப்படிப்பட்ட மேல்மரபியல் முறைப்படி, உடலையும் மனதையும் பக்குவமாக வைத்திருக்கும் தறுவாயில் ஆணின் ஒற்றை விந்தணுவும், பெண்ணின் ஒற்றை கருமுட்டையும் அத்துணை நல்ல விஷயங்களையும் கடத்தி ஒரு கருவை உண்டாக்குகிறது. பெற்றோர் தங்களுக்கு எப்படிப்பட்ட குழந்தை வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்களோ, அப்படியே அந்தக் கரு உருவாகி வளரும்' - இதை எல்லாம் கேட்டவுடன் ஶ்ரீராமும் மேனகாவும், தாங்கள் இத்தனை நாளாகக் கருத்தரிக்காமல் இருந்ததற்கும் ஒரு காரணம் இருக்கிறது என்று சமாதானமடைந்தனர்.

Couple
Couple

ஜெனிடிக் மற்றும் எபிஜெனிடிக் மூலமாக நாம் விரும்பும்படி அழகான, ஆரோக்கியமான குழந்தைகளைப் பெற முடியும் என்பதெல்லாம் ஆச்சர்யமான உண்மை. ஆனால் நாமெல்லாம் அதை விடுத்து ஆணும், பெண்ணும் குறைபாட்டுடனே கர்ப்பம் தரித்து, ஆரோக்கியமில்லா குழந்தையைக் கருவில் சுமந்து, ஆயிரம் கவலையுடன் நாள்களை நகர்த்தி, பிஞ்சுக் குழந்தைகளை கஷ்டப்படுத்தி, அவர்கள் வளர வளர நம் புலம்பல்கள் அதிகமாகி என்று இருக்கிறோம். எப்படி இப்படி மரபுரீதியான நோய்கள் வருகின்றன என்று புலம்பித்தீர்த்து வாழ்நாளில் போராடிக்கொண்டிருக்கிறோம்.

கரு உண்டாகும்போதே அக்குழந்தைக்குப் பிற்காலத்தில் சர்க்கரை வியாதியோ, ரத்த அழுத்தமோ வரலாம் என்பது முதல் அது இன்ட்ரோவெர்ட்டாக (introvert) வளருமா, எக்ஸ்ட்ராவெர்ட்டாக (extrovert) வளருமா என்பதுவரை அதன் மரபணுக்களில் பதிவாகி அக்குழந்தை ஜனிக்கும்போதே தீர்மானிக்கப்படுவதாய் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இரண்டாம் உலகப்போரின்போது மன அழுத்தத்திற்கு ஆளான தாய்மார்களின் மூலம் ஜனித்த பல குழந்தைகளுக்கு, அவர்களின் நடுத்தர வயதில் ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரைநோய்க்கான அறிகுறிகள் அதிக விகிதாசாரத்தில் இருந்ததை ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆக கர்ப்பகாலத்தில் நல்ல அணுக்களின் கூட்டே ஓர் அற்புதமான குழந்தையை உருவாக்கும் என்பதோடு, அதில் ஜெனிட்டிக்கின் பங்கு 50% மட்டுமே, மீதி உள்ள 50% பண்புகளை கர்ப்பகாலத்தின்போதான சுற்றுச்புறச்சூழல் தீர்மானிக்கிறது என்ற நம்பமுடியாத உண்மைகளை எல்லாம், ஶ்ரீராமும் மேனகாவும் நம்பிக்கையுடன் உள்வாங்கிக்கொண்டார்கள். அவர்களுக்கு, நல்லபடியாகச் சாப்பிட்டு, ஆழ்ந்து தூங்கி எழுந்து, அளவான உடற்பயிற்சி மேற்கொண்டு, மனதளவில் பதற்றம் இல்லாமல் சாந்தமாக இருக்க எல்லா வழிமுறைகளும் படிப்படியாகக் கற்பிக்கப்பட்டன.

தம்பதி இருவருக்கும் வைட்டமின் டி குறைபாடு இருப்பதையும், மேனகாவிற்கு PCOS (Polycystic ovary syndrome) சினைப்பை நோய்க்கான ஆரம்ப அறிகுறிகள் இருப்பதால் அதைச் சரிசெய்ய சில உணவு முறைகள், கர்ப்பப்பையைத் திடமாக்க சில உடற்பயிற்சி உள்ளிட்ட அனைத்திற்கும் மிக அழகாக அட்டவணை போட்டு கொடுத்துச் செயல்படவைத்தனர். எல்லாவற்றிற்கும் மேலாக மன அமைதி ஒன்றே ஹார்மோன் சுரப்பிகளை இயல்பாய் வேலைசெய்யவைக்கும் என்ற ரகசியத்தை இருவரும் உணர்ந்து, அதற்கான எல்லா வழிமுறைகளையும் மேற்கொள்ள ஆரம்பித்தனர்.

இப்போது காலை முதல் மாலை வரை ஶ்ரீராமும் மேனகாவும் எப்படிப்பட்ட வாழ்வியல் சூழலில் வாழ்கின்றனர் என்பதைப் பார்ப்பவர்கள் வியப்புற்றுப்போவார்கள். அந்த அட்டவணையை அடுத்த அத்தியாயத்தில் பார்க்கலாம். அதற்கு முன்னதாக, PCOS பற்றிய சில விளக்கங்களையும், டயட்டீஷியன் திலகவதி மதனகோபால் இந்தப் பிரச்னைக்குப் பரிந்துரைக்கும் சில உணவுகளையும் குறித்துக்கொள்ளுங்கள்.

Dietician Thilagavathy
Dietician Thilagavathy

PCOS வரக் காரணங்கள்!

உடல் பருமன்

இன்சுலின் எதிர்ப்பு நிலை

உள்காயங்களால் ஏற்படும் PCOS

ரத்தத்தில் அதிகப்படியாக இன்சுலின் இருப்பது

அளவுக்கு அதிகமான உடற்பயிற்சி

ஹைப்போதைரோய்டு

புரொலேக்ட்டின் ஹார்மோன் அதிகமாகச் சுரப்பது

சினைப்பைச் செயலிழப்பு

மன அழுத்தம்

அதிகப்படியான ஆண்ட்ரோஜென் சுரப்பு

PCOS இருப்பதற்கான அறிகுறிகள்!

ஒழுங்கற்ற மாதவிடாய்

மாதவிடாய் வராமல் இருத்தல்

முகப்பரு

தேவையற்ற இடங்களில் முடி வளர்தல்

கொத்துக் கொத்தாக முடி உதிர்தல்

கழுத்துப் பகுதி கருமையாக மாறுதல்

மலட்டுத்தன்மை

PCOSஐ இயற்கையாக சரிசெய்வது எப்படி?

இன்சுலின் ரெசிஸ்டன்ஸ் PCOS இருந்தால் குறைந்த மாவுச்சத்து, அதிகக் கொழுப்புச்சத்து (low carb high fat diet) உணவு முறையைக் கடைப்பிடிப்பது நல்லது. உள்காயங்களால் ஏற்படும் PCOS என்றால் anti inflammatory foods எடுப்பது, உடற்பயிற்சி, நல்ல தூக்கம் ஆகியவற்றில் கவனம் செலுத்தவேண்டும். Xenoestrogens எனப்படும், சுற்றுச்சூழலிலிருந்து வரும் ஈஸ்ட்ரோஜென் நிறைந்த பொருள்களைத் தவிர்க்க வேண்டும். உதாரணமாக பிளாஸ்ட்டிக் பொருள்கள், ஷாம்பூ, வீடு துடைக்க உபயோகிக்கும் பொருள்கள், ஒப்பனைக்கு மற்றும் சிகையை அழகுபடுத்த உபயோகிக்கும் பொருள்கள் ஆகியவற்றைத் தவிர்க்கவேண்டும்.

PCOS உள்ளவர்கள் தவிர்க்கவேண்டிய உணவுகள்!

வெள்ளை ரொட்டி மற்றும் மஃபின்கள் போன்ற சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட்டுகள் (refined carbs) அதிகம் உள்ள உணவுகள்

சர்க்கரை சேர்த்த சிற்றுண்டி மற்றும் பானங்கள்

பதப்படுத்தப்பட்ட மற்றும் அழற்சி (processed foods) உணவுகள்

ட்ரான்ஸ் ஃபாட் (trans fat)

Salmon fish
Salmon fish

PCOS உள்ளவர்கள் சாப்பிட வேண்டிய உணவுகள்!

அதிக நார்ச்சத்துள்ள உணவுகள்: புரோக்கோலி, காலிஃபிளவர் மற்றும் முளைகட்டிய தானியங்கள் போன்றவை

சிவப்பு இலைக் கீரை (red leaf lettuce)

பச்சை மற்றும் சிவப்புக் குடைமிளகாய்

பீன்ஸ் மற்றும் பயறு வகைகள்

பாதாம்

பெரி

இனிப்பு உருளைக்கிழங்கு

பூசணி

புரதச்சத்து நிறைந்த கோழி, மீன், முட்டை, கொட்டை வகைகள்

உள்காயங்கள் குறைக்க உதவும் உணவுகள்:

தக்காளி

கீரை

பாதாம் மற்றும் அக்ரூட் பருப்புகள்

ஆலிவ் எண்ணெய்

புளூ பெரி மற்றும் ஸ்ட்ராபெரி போன்ற பழங்கள்

சால்மன் மற்றும் மத்தி போன்ற ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் அதிகம் உள்ள கொழுப்பு மீன் ஆரோக்கியமான கொழுப்புகள் ஆலிவ் எண்ணெய், தேங்காய் எண்ணெய், கொட்டைகள், வெண்ணெய் மற்றும் மீன்களில் காணப்படுகின்றன.