
தேவை அதிக கவனம்
கொரோனா வைரஸ் மனிதர்களிட மிருந்து மனிதர்களுக்குப் பரவக்கூடியது என்பது உறுதியானதும், வொர்க் ஃப்ரம் ஹோம், ஐசோலேஷன், க்வாரன்டீன் எனப் பல்வேறு வழிகளில் நம்மை நாமே பாதுகாத்து வருகிறோம்.
அதே நேரம், நாம் ஒருவரையொருவர் சார்ந்துதானே வாழ வேண்டியிருக்கிறது. உதாரணத்துக்கு... பால் பாக்கெட், பேப்பர், வாட்டர் கேன், காய்கறிகள் உள்ளிட்ட நம் தேவைகளை மற்றவர்களே நம் வீடு தேடி வந்து கொடுத்துச்செல்கிறார்கள். லாண்டரி, கொரியர் கொண்டு வருபவர்கள், சலூன், பார்லரில் நம்மை அழகுபடுத்துபவர்கள், வீட்டு வேலை செய்பவர்கள், நோயாளிகள் மற்றும் வயதானவர்களை வீட்டுக்கு வந்து பராமரிக்கிற நர்ஸ்கள் எனப் பலரையும் தினசரியோ, தேவைப்படும்போதும் நாம் சந்தித்தே ஆக வேண்டிய சூழ்நிலையில்தான் இப்போதும் இருக்கிறோம்.

இவர்கள் மூலமாகவோ, இவர்கள் கொண்டுவந்து தருகிற பொருள்கள் மூலமாகவோ நம் வீட்டுக்குள் வைரஸ் நுழையாமலிருக்க, நாம் எப்படியெல்லாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று விளக்கம் தருகிறார்கள் பொது மருத்துவர்கள் அர்ஷத் அகில் மற்றும் ராஜேஷ்.
இரும்பு கேட் அல்லது கதவில் ஒரு துணிப் பையை மாட்டி, அதில் பால் பாக்கெட்டுகளை போடச் சொல்லுங்கள். பிறகு ரன்னிங் வாட்டரில் பால் பாக்கெட்டை அலசிவிட்டு, மற்ற நாள்களைவிட சில நிமிடங்கள் கூடுதலாகக் கொதிக்கவைத்து அருந்துங்கள்.
வாட்டர் கேனை வாசலிலேயே வைக்கச் சொல்லலாம். கேன் போடுபவர்களை, கேனை கைகளால் தூக்காமல் அதற்கென இருக்கிற உபகரணத்தைப் பயன்படுத்தித் தூக்கச் சொல்லலாம். கேன் கொண்டு வருகிறவர்கள் சமையலறை வரை வருவதைத் தவிர்க்கலாம். வாட்டர் கேனின் மேற்புறங்களை சானிட்டைஸ் செய்து, சிறிதுநேரம் வெயிலில் வைத்து, பிறகு உள்ளே எடுத்து வரலாம். பொதுவாகவே தண்ணீரைக் கொதிக்கவைத்து ஆற வைத்துக் குடிப்பதுதான் நல்லது.
வெளியிலிருந்து வருகிற நியூஸ் பேப்பர், கொரியர், பார்சல்களை சில நிமிடங்கள் வெயிலில் வைத்து, பிறகு எடுத்துக்கொள்ளலாம்.

காய்கறிகளை 15 நிமிடங்கள் கல் உப்பு கலந்த தண்ணீரில் ஊறவிட்டு, பிறகு ரன்னிங் வாட்டரில் கழுவி ஃபிரிட்ஜில் வையுங்கள். நன்கு வேகவைத்தே சாப்பிடுங்கள். கீரையை அரைமணி நேரம் கல் உப்பு கலந்த நீரில் ஊறவைத்த பிறகே சமையுங்கள்.
துணிகளை அரை மணி நேரம் சூரிய ஒளியில் வைத்து, பிறகு அணியலாம். இப்போதைக்கு வீட்டிலேயே சலவை மற்றும் இஸ்திரி வேலைகளைச் செய்துகொள்வதே பாதுகாப்பானது.
சிலிண்டர் கொண்டு வருகிறவர்கள் வீட்டுக்குள் வரும்போது முகத்துக்கு மாஸ்க் போடச் சொல்லுங்கள். நீங்களும் போட்டுக்கொள்ளுங்கள். சிலிண்டரின் சீலைக் கழற்றி அவர்களே காஸ் வெளியே வருவதற்கான இணைப்பை மாட்டிவிட்டுச் செல்கிறார்கள் என்றால், ஆன், ஆஃப் செய்கிற திருகை வெறும் கைகளால் தொடாமல், கிளவுஸ் அல்லது பிளாஸ்டிக் கவர் அணிந்து தொடுங்கள்.

இன்னும் சில வாரங்களுக்கு செல்ஃப் மேக்கப் மற்றும் ஹேர் டிரஸ்ஸிங் செய்துகொள்வதே பாதுகாப்பானது.
வீட்டில் வேலை பார்ப்பவர்களுக்கு விடுமுறை அளித்துவிடுவது நல்லது. வயதானவர்கள் மற்றும் நோயாளிகள் இருக்கிற வீடுகளில், வேலைக்காரர்களையும் ஹோம் நர்ஸ்களையும் தவிர்க்கமுடியாத சூழ்நிலை எனில், அவர்கள் உங்கள் நம்பிக்கைக்குரியவர்களாக இருந்தால், அவர்களை உங்கள் வீட்டிலேயே தங்க வைக்கலாம். இது கொரோனா விடமிருந்து உங்கள் குடும்பத்தை முழுமை யாகக் காப்பாற்ற உதவும்.