Published:Updated:

Doctor Vikatan: அதிகரிக்கும் முகப்பருக்கள்; எண்ணெய்ப்பசையான சருமம்; சிகிச்சைகள் பலனளிக்குமா?

முகப்பருக்கள் (Representational Image)
News
முகப்பருக்கள் (Representational Image)

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதிகளில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

Published:Updated:

Doctor Vikatan: அதிகரிக்கும் முகப்பருக்கள்; எண்ணெய்ப்பசையான சருமம்; சிகிச்சைகள் பலனளிக்குமா?

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதிகளில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

முகப்பருக்கள் (Representational Image)
News
முகப்பருக்கள் (Representational Image)

என் 22 வயது மகள் அமெரிக்காவில் படித்துக்கொண்டிருக்கிறாள். அவளுக்கு எண்ணெய்ப்பசையான சருமம் என்பதால் பருக்கள் அதிகமிருக்கின்றன. வியர்வை வெளியேறும் அளவுக்கு உடற்பயிற்சி செய்யச் சொல்லி அறிவுறுத்துகிறேன். சோம்பேறித்தனம் காரணமாக செய்ய மறுக்கிறாள். சருமப் பராமரிப்பைப் பின்பற்றினாலும் எதுவும் அவளது பிரச்னைக்குப் பலனளிக்கவில்லை. என்ன செய்யலாம்?

- ஶ்ரீராம் (விகடன் இணையத்திலிருந்து)

சருமநல மருத்துவர் செல்வி ராஜேந்திரன்
சருமநல மருத்துவர் செல்வி ராஜேந்திரன்

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த சரும மருத்துவர் செல்வி ராஜேந்திரன்.

``எண்ணெய்ப் பசையான சருமம் உள்ளவர் என்பதால் பால் பொருள்களையும், இனிப்பையும் அவர் தவிர்க்க வேண்டும். வே புரோட்டீன் (whey protein) எடுத்துக்கொள்பவர் என்றால் அதையும் தவிர்க்க வேண்டும்.

சருமப் பராமரிப்பில் மிகுந்த அக்கறை செலுத்த வேண்டும். நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். சாலிசிலிக் அமிலம் (Salicylic Acid) அல்லது கிளைகாலிக் அமிலம் (Glycolic Acid) உள்ள ஃபேஸ் வாஷ் உபயோகிக்க வேண்டும். நியாசினமைடு சீரம் ( Niacinamide Serum) உபயோகித்து அதைத் தொடர்ந்து ஜெல் வடிவ மாயிஸ்ச்சரைசர் உபயோகிக்க வேண்டும். சன் ஸ்கிரீனிலும் ஜெல் வடிவிலுள்ளதையே பயன்படுத்த வேண்டும்.

இரவில் பருக்களின் மேல் பென்ஸாயில் பெராக்ஸைடு ஜெல் (Benzoyl Peroxide Gel) அல்லது அடாபலீன் ஜெல் (Adapalene Gel) தடவலாம். பருக்களால் ஏற்பட்ட அடர்நிறத் தழும்புகளின் மேல் அஸிலாயிக் அமிலம் சேர்த்த க்ரீம் (Azelaic Acid Cream) தடவலாம்.

சருமம் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றால் கூந்தல் ஆரோக்கியமாக இருக்க வேண்டியது மிக முக்கியம். கூந்தலில் எண்ணெய்ப் பசை இல்லாமல் பார்த்துக்கொள்ளவும். வாரத்துக்கு மூன்று நாள்கள் தலைக்குக் குளிக்கவும். பொடுகு இருந்தால் பருக்கள் வரும். பொடுகை கட்டுப்படுத்த ஆன்டி டான்டிராஃப் ஷாம்பூ உபயோகிக்கலாம்.

கூந்தல் முகத்தில் படியாதபடி கவனமாகப் பார்த்துக்கொள்ள வேண்டும். நகங்களும் சருமத்தில் படாதபடி அவற்றை வெட்டிவிட வேண்டும். தலையணை உறைகள், ஹேர் பேண்டு, டவல் போன்றவற்றை அடிக்கடி துவைத்து உபயோகப்படுத்த வேண்டும். மற்றவர்களுடன் அவற்றைப் பகிர்ந்துகொள்வதையும் தவிர்க்க வேண்டும். சரியான நேரத்துக்கும் போதுமான அளவுக்கும் துங்க வேண்டியது மிக முக்கியம்.

Sleep
Sleep
Photo by Isabella and Louisa Fischer on Unsplash

சரும மருத்துவரை அணுகி பிளாக் ஹெட்ஸ் மற்றும் வொயிட் ஹெட்ஸை அகற்ற பீல் (Peel) சிகிச்சை செய்துகொள்ளலாம். பருக்களால் சருமத்தில் ஏற்பட்ட நிற மாற்றத்துக்கு லேசர் சிகிச்சையும், தழும்புகளை நீக்க ரேடியோ ஃப்ரீக்வன்சி சிகிச்சையும் செய்துகொள்ளலாம். இத்தனைக்குப் பிறகும் பருக்கள் குறையவில்லை என்றால் ஹார்மோன் பிரச்னைகள் இருக்கின்றனவா என டெஸ்ட் செய்ய வேண்டும். குறிப்பாக பிசிஓடி எனப்படும் சினைப்பை நீர்க்கட்டி பிரச்னை இருக்கிறதா என்பதையும் பார்த்து, அதற்கான முறையான சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும்."

உடல்நலம், மனநலம் மற்றும் ஆரோக்கியம் தொடர்பான எந்தக் கேள்விகளையும் இங்கே நீங்கள் கேட்கலாம். அதற்கு துறைசார்ந்த நிபுணர்களின் பதிலையும் வழிகாட்டுதலையும் பெற்றுத் தருகிறோம். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான்; வழக்கம்போல கமென்ட் பகுதிகளில் உங்கள் கேள்விகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். இந்தப் புதிய பகுதி உங்கள் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும்கூட நிச்சயம் பயன்படும். ஆகவே, அவர்களிடமும் இந்தச் செய்தியைப் பகிர்ந்துகொள்ளுங்கள்! உங்கள் கேள்வி என்ன?