
டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன்
`டீடாக்ஸ் டயட்' என்ற வார்த்தை சமீபகாலத்தில் டிரெண்டாகி வருகிறது. அதைப் பயன்படுத்தி நீங்களே சுயமாக டீடாக்ஸ் செய்துகொள்ள பிரத்யேக தயாரிப்புகளும் மூலிகை சப்ளிமென்ட்டுகளும் விளம்பரப்படுத்தப்படுகின்றன. உங்கள் பர்ஸை பதம் பார்க்கும் அவை உண்மையிலேயே உபயோகமானவைதானா? அலசுவோம்.
அது என்ன டீடாக்ஸ்? உடலில் உள்ள நச்சுகளை இயற்கையான மற்றும் சுத்தமான உணவுகளின் மூலம் வெளியேற்றுவதே டீடாக்ஸ். உடலிலுள்ள நச்சுகள் வெளியேறும்போது உடலுக்குப் பல்வேறு நன்மைகள் கிடைக்கும்.
என்னென்ன நன்மைகள்?
எடை குறையும்.
அதிக ஆற்றலை உணர முடியும்.
தலைவலி மற்றும் உடல்வலிகள் நீங்கி களைப்பின்றி உற்சாகமாக உணரமுடியும்.
மலச்சிக்கல் பிரச்னை தீரும்.

டீடாக்ஸ் டயட்டைப் பின்பற்றும்போது திரவ உணவுகள் மட்டுமே எடுத்துக்கொள்ள அறிவுறுத்தப்படும். அதாவது காய்கறி அல்லது பழ ஜூஸ், ஃப்ரூட் வாட்டர், எலுமிச்சைச்சாறு கலந்த கிரீன் டீ போன்றவையே பிரதானம். திட உணவுகளைத் தவிர்க்க வேண்டியிருக்கும்.
சில நேரங்களில் டீடாக்ஸ் டயட்டில் சப்ளிமென்ட்டுகள், தேநீர், மலமிளக்கிகள் / இனிமா போன்றவையும் பரிந்துரைக்கப்படலாம்.
டீடாக்ஸ் டயட் எப்படி வேலை செய்கிறது?
திட உணவுகள் எடுத்துக் கொள்வதைத் தவிர்ப்பதால் செரிமான மண்டலத்துக்கு ஓய்வு கிடைக்கிறது. அது இந்த ஓய்வைப் பயன்படுத்திக்கொண்டு தன்னைத் தானே பழுதுபார்த்துக்கொள்கிறது. முன்பைவிட நன்றாக இயங்க தன்னைத் தயார்படுத்திக் கொள்கிறது.
கல்லீரலில் உள்ள நச்சுகள் வெளியேற்றப்படுகின்றன.
சிறுநீரின் வழியே நச்சு வெளி யேற்றம் நடப்பது தூண்டப்படுகிறது.
ரத்த ஓட்டம் மேம்படுகிறது.

டீடாக்ஸ் செய்யும் பொதுவான வழிகள்...
பெரும்பாலான டீடாக்ஸ் முறை ஒன்று முதல் மூன்று நாள்களுக்கு விரதம் இருப்பதிலிருந்து தொடங்கும்.
ஃபிரஷ்ஷாகத் தயாரிக்கப்பட்ட காய்கறி அல்லது பழ ஜூஸ், ஸ்மூதீஸ், டீ மற்றும் தண்ணீர் சேர்த்த எலுமிச்சைப்பழச்சாறு... இவற்றை மட்டுமே அருந்துவது.
மூலிகைகள் மற்றும் சப்ளிமெட்டுகளையும் சேர்த்துக்கொள்வது.
முறையான உடற்பயிற்சி.
ஆல்கஹால், சிகரெட், பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை போன்றவற்றைத் தவிர்ப்பது.
ஒவ்வாமையை ஏற்படுத்தும் உணவு களையும் செயற்கை உரங்கள் சேர்த்த உணவு களையும் தவிர்ப்பது.
டீடாக்ஸ் செய்வது அவசியம்தானா? அது உண்மையிலேயே உதவுமா?
நம் உடலில் இயற்கையிலேயே டீடாக்ஸ் மெக்கானிசம் உள்ளது. நம் சருமம், செரிமான மண்டலம், கல்லீரல் மற்றும் சிறுநீரகங்கள் போன்றவை உடலின் நச்சுகளை வியர்வை, சிறுநீர் மற்றும் மலம் மூலம் வெளியேற்றுகின்றன. இதைத்தாண்டி உடல் கழிவுகளையும் நச்சுகளையும் வெளியேற்ற பிரத்யேகச் செயல்முறைகள் தேவையில்லை.
திட உணவுகளைத் தவிர்ப்பதால் உடல் ஆரோக்கியம் மேம்படும் என்பதற்கு ஆதா ரங்கள் இல்லை. உடலின் நச்சுகளை வெளி யேற்ற திட உணவுகளும் உதவும். நார்ச்சத்து நிறைந்த காய்கறிகள் பழங்கள் மற்றும் முழு தானியங்கள் மெதுவாகவே செரிமானமாகும். அவை உடலிலுள்ள நச்சுகளை மலத்தின் வழியே வெளியேற்றிவிடும். தயிர், புளிக்க வைக்கப்பட்ட கஞ்சி போன்றவற்றில் உள்ள நல்ல பாக்டீரியா நச்சுகளை வெளியேற்றி குடலுக்கு நல்லது செய்யக் கூடிய உணவுகள்.
டீடாக்ஸ் என்பது நிரந்தரமான அல்லது நீண்டகால எடைக் குறைப்புக்கான சிறந்த தீர்வாகும் என்று சொல்ல முடியாது. டீடாக்ஸ் செய்த பிறகு உங்கள் உடலிலுள்ள நீர்ச்சத்து மற்றும் உடலில் சேமித்து வைக்கப்பட்ட கார்போஹைட்ரேட் மற்றும் தேங்கியிருக்கும் மலத்தின் அளவு இறக்கப்பட்டு அதன் விளைவாகவே எடை குறைந்த தோற்றத்தைத் தரும். டீடாக்ஸ் டயட்டை நிறுத்தியதும் உடல் மீண்டும் பழைய எடைக்குத் திரும்பிவிடும்.

டீடாக்ஸின் சாதகங்கள்
டீடாக்ஸ் டயட்டின்போது நீங்கள் எடுத்துக்கொள்ளும் பழ ஜூஸ் வகைகள், சப்ளிமென்ட்டரி அவற்றின் மூலம் உங்கள் உடலுக்குப் போதுமான அளவு வைட்டமின்களும் தாதுச்சத்துகளும் கிடைக்கும்.
குறுகியகால எடைக்குறைப்பு சாத்தியமாகும்.
தவறான உணவுப் பழக்கங்களைக் கைவிட இது நல்ல தொடக்கமாக இருக்கும். டீடாக்ஸுக்குப் பிறகு முழு தானியங்கள், பருப்பு வகைகள், காய்கறிகள், பழங்கள், மீன், முட்டை, பால் பொருள்கள் மற்றும் அசைவ உணவுகள் அடங்கிய பேலன்ஸ்டு உணவுமுறை பின்பற்றப்பட வேண்டும்.
திருமணம் அல்லது பண்டிகை நாள்களில் அளவுக்கதிகமாகச் சாப்பிட்டதாகவும், நிறைய மது அருந்தியதாகவோ நினைக்கும் பட்சத்தில் டீடாக்ஸ் டயட்டைப் பின்பற்றுவதன் மூலம் பழைய ஆரோக்கியத்தைத் திரும்பப் பெறலாம்.
டீடாக்ஸ் டயட்டுக்குப் பிறகு பலரும் அதிக ஆற்றலை உணர்கிறார்கள். படுத்தப்பட்ட உணவுகள், ஆல்கஹால் சிகரெட் உள்ளிட்ட ஆரோக்கியமற்ற உணவுகளைத் தவிர்ப்பதன் விளைவாகவும் இது இருக்கலாம்.
டீடாக்ஸின் பாதகங்கள்
டீடாக்ஸ் உணவுகளில் கலோரி மற்றும் புரதத்தின் அளவு மிகக் குறைவாகவே இருக்கும்.
களைப்பு, எரிச்சல் உணர்வு போன்றவை ஏற்படலாம்.
ரத்தச் சர்க்கரையின் அளவு குறையலாம்.
நீண்டகாலத்துக்கு இதைப் பின்பற்றும்போது ஊட்டச்சத்து குறைபாடுகள் உருவாகலாம்.
குடலைச் சுத்தம் செய்யும் முறைகள், மலமிளக்கிகள் மற்றும் பேதி மருந்துகள் போன்றவை டீடாக்ஸிங்கில் பயன்படுத்தப்படுவதுண்டு. இவை வயிற்று உப்புசம், வாந்தி அடிக்கடி சிறுநீர் மற்றும் மலம் கழிக்கும் உணர்வு போன்றவற்றை ஏற்படுத்தலாம்.
குழந்தைகள், விடலைப் பருவத்தினர், முதியோர், கர்ப்பிணிகள் மற்றும் தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள், நீரிழிவாளர்கள் போன்றோருக்கு டீடாக்ஸ் டயட் உகந்ததல்ல.
ஒரு மெசேஜ்...
ஏற்கெனவே சொன்னதுபோல நம் உடலிலிருந்து நச்சுகளை வெளியேற்ற தனிப்பட்ட வழிகளோ, சப்ளிமென்ட்டுகளோ தேவையே இல்லை. நம் உடலிலுள்ள அதிசயமான ஓர் உறுப்பு கல்லீரல். விளம்பரங்களை நம்பி பெரிய தொகையைச் செலவழித்து டீடாக்ஸ் முறைகளைப் பின்பற்றுவதற்கு பதில் முழு தானியங்கள், பல வண்ண காய்கறிகள் மற்றும் பழங்களைச் சேர்த்துக்கொள்வதன்மூலம் நச்சு நீக்கும் வேலையைக் கல்லீரல் இயற்கையாகச் செய்துவிடும். புரோபயாடிக் உள்ள தயிர், பழைய சாதம் போன்றவற்றையும், பிரீபயாடிக் நிறைந்த பூண்டு, வெங்காயம், வாழைப்பழம் ஓட்ஸ் போன்றவற்றையும், நார்ச்சத்துள்ள உணவுகளையும் சேர்த்துக் கொள்வதன் மூலம் குடலுக்கு நன்மை செய்யும் பாக்டீரியா அதிகரிக்கும். உடலின் நச்சு நீக்க வேலையையும் சிறப்பாகச் செய்து விடும். முறையான உணவு, கூடவே கொஞ்சம் உடற்பயிற்சி - இந்த இரண்டும் உங்கள் எடையைச் சரியான அளவில் வைத்திருப்பதோடு நோய்களையும் அண்டவிடாமல் பாதுகாக்கும்.
- நம்மால் முடியும்!
எடைக்குறைப்பின்போது முகம் இளைப்பது ஏன்?
மருத்துவ விளக்கம்
எடைக்குறைப்புக்கென சில விதி முறைகள் உள்ளன. நிரூபிக்கப்பட்ட, மருத்துவர்கள் மற்றும் டயட்டீஷியன்களால் பரிந்துரைக்கப்பட்டவை - `சயின்ட்டிஃபிக் வெயிட் லாஸ் பிராக்டிஸ்' வகை.
அறிவியல்ரீதியாக நிரூபிக்கப்படாத, யாரின் பரிந்துரையும் இல்லாமல் பின்பற்றப் படும் டயட் முறைகள் - `அன்சயின்ட்டிஃபிக் வெயிட் லாஸ் பிராக்டிஸ்' வகை.
உடலில் நீர்ச்சத்தை அதிக அளவில் இழக்கவைக்கிற பெரும்பாலான டயட் முறைகள் `அன்சயின்ட்டிஃபிக் வெயிட் லாஸ்' வகையைச் சேர்ந்தவையே, இந்த டயட்டுகளைப் பின்பற்றும்போது முகம் இளைக்கும்... அது ஆரோக்கியமானதல்ல.
சயின்ட்டிஃபிக் வெயிட்லாஸில் அதிகபட்சமாக ஒரு வாரத்தில் 0.8 முதல் 1 கிலோ வரை குறைக்கலாம்.
அன்சயின்ட்டிஃபிக் வெயிட் லாஸில் நான்கு வாரங்களில் பத்து கிலோ குறைப்பது போன்ற தவறான வாக்குறுதிகள் வழங்கப்படும்.
நம் உடலில் விசெரல் ஃபேட், சப்கியூட்டேனியஸ் ஃபேட் என இரண்டு கொழுப்புகள் உண்டு. விசெரல் ஃபேட் ஆரோக்கியமற்றது. இரண்டாவது வகை உடலுக்குப் பாதுகாப்பானது. முகத்தில் இருப்பதும் இந்த வகைதான். தவறான டயட்டைப் பின்பற்றும்போது இந்தக் கொழுப்பு குறையும். அதனால்தான் முகம் இளைக்கிறது.
போலி விளம்பரங்களைப் பார்த்து எந்த டயட்டையும் பின்பற்றக் கூடாது என்பதும் இதனால்தான் வலியுறுத்தப்படுகிறது.
டயட் இருக்கும்போது முகம் இளைக்கிறது என்றால் அது உங்கள் டயட் முறை தவறு என்பதை எச்சரிக்கும் ஓர் அலாரம் என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்!