தன்னம்பிக்கை
லைஃப்ஸ்டைல்
தொடர்கள்
Published:Updated:

எடைக்குறைப்பு ஏ டு இஸட்: மீண்டும் எடை கூடுதே... என்னதான் செய்வது?

எடைக்குறைப்பு
பிரீமியம் ஸ்டோரி
News
எடைக்குறைப்பு

டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன்

‘எடையைக் குறைக்க ஏதோ ஒரு டயட்டைப் பின்பற்றுவது என முடிவு செய்துவிட்டேன். ஆனால், ஆயுள் முழுவதும் நான் பத்தியச் சாப்பாடுதான் சாப்பிட வேண்டுமா? டயட்டைப் பின்பற்றும் வரை எடை கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறது... விட்டால், மீண்டும் பழைய எடைக்குத் திரும்பிவிடுகிறதே... என்னதான் செய்வது?’ - எடைக்குறைப்பு ஏ டு இஸட் பகுதியைப் படிக்கிற பலரும் இப்படியான பல சந்தேங்களை எழுப்பியுள்ளார்கள்.

எடைக்குறைப்பு ஏ டு இஸட்: மீண்டும் எடை கூடுதே...
என்னதான் செய்வது?

எடைக்குறைப்பின் நுணுக்கங்களைச் சரியாகப் புரிந்துகொள்வோருக்கு இது சுலபமாக கைவரும். உயரத்துக்கும் எடைக்குமேற்ப சரியான நேரத்துக்கு, சரியான, சரிவிகித உணவுகளை, சரியான அளவுக்குச் சாப்பிடும் வித்தைபுரிந்தவருக்கு உணவுக் கட்டுப்பாட்டைப் பின்பற்றுவதில் சிக்கல்களோ, குழப்பங்களோ இருக்க வாய்ப்பில்லை. அவர்கள் வாழ்நாள் முழுவதும் சீரான எடையைத் தக்கவைத்துக்கொள்வார்கள்.

சாதாரண நாள்களில், விசேஷ தினங்களில், திருமணங்களில், விடுமுறையில், பயணங்களில்... இப்படி ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் எப்படிச் சாப்பிட வேண்டும், எவ்வளவு சாப்பிட வேண்டும் என்ற அடிப்படைப் புரிந்துணர்வு அவசியம். வெளிநாட்டுப் பயணங்களில் இருந்தாலும்கூட ஆரோக்கிய உணவுகளை அடையாளம் காண வேண்டும். வீட்டிலிருந்தே அப்படிப்பட்ட சில உணவுகளை எடுத்துச்செல்வதும் சிறந்தது. உணவுக்கு மாற்றான மீல் ரீப்ளேஸ்மென்ட் பவுடர்களை வாங்கி எடுத்துச்செல்லலாம். பசி உணர்வைக் கட்டுப்படுத்தும் இவை நார்ச்சத்தும், சில மூலிகைகளின் சாரமும் நிறைந்த புரோட்டீன் பவுடர்களே.

எடைக்குறைப்பு ஏ டு இஸட்: மீண்டும் எடை கூடுதே...
என்னதான் செய்வது?

பிசிஓஎஸ் எனப்படும் சினைப்பை நீர்க்கட்டி பாதிப்பு உள்ளவர்களுக்கும், இன்சுலின் ரெசிஸ்டன்ஸ் பிரச்னை உள்ளவர்களுக்கும் கார்போஹைட்ரேட் உணவுகளை ஏற்றுக்கொள்வதில் சிக்கல் இருக்கும். அதாவது இவர்கள் கார்போஹைட்ரேட் அதிகமுள்ள உணவுகளை உட்கொள்ளும்போது அவை இன்சுலின் சுரப்பை அதிகரிக்கின்றன. இது கார்போஹைட்ரேட்டைக் கொழுப்பாக மாற்றி, கொழுப்பு செல்களில் சேமித்து வைக்கும். எடைக்குறைப்பு முயற்சியில் இருப்பவர்கள், குறிப்பிட்ட டயட்டைப் பின்பற்றி, இலக்கை அடைந்ததும், மெள்ள மெள்ள கார்போஹைட்ரேட் உணவுகளைச் சேர்த்துக்கொள்ள ஆரம்பிக்கலாம். அதாவது காலை உணவுக்கு இரண்டு இட்லி, மதியம் அரை கப் சாதம், இரவுக்கு ஒரு சப்பாத்தி எனச் சாப்பிட்டு, எடையில் மாற்றம் தெரிகிறதா என்று பார்க்கலாம். ஒருவருக்கு எவ்வளவு சீக்கிரத்தில் எடை அதிகரிக்கிறது என்பதைப் பொறுத்து இந்த உணவு மாற்றம் அமையும்.

உடற்பயிற்சிகளைப் பொறுத்தவரை தசைகளின் அடர்த்தியைக் கூட்டும் பயிற்சிகளைச் செய்ய வேண்டும். இதன் மூலம் தேவையற்ற கொழுப்பு குறைந்து, உங்கள் உடைகளின் அளவும் சிறியதாகும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். உங்கள் தோற்றம் அழகாகும். உடற்பயிற்சிகளில் உங்கள் நேரத்தை முதலீடு செய்வது புத்திசாலித்தனமான முடிவென்பதை அனைவரும் உணர வேண்டும். வாரத்தில் மூன்று நாள்களை உடற்பயிற்சிக்காக ஒதுக்குவது சிறப்பு.

உடற்பயிற்சி
உடற்பயிற்சி

ஒரு டிப்ஸ்... பெண்கள் இடுப்பைச் சுற்றி ஒரு செயின் அல்லது நூலைக் கட்டிக்கொள்ளலாம். அது இறுக ஆரம்பித்தால் எடை அதிகரிக்கிறது என்பதை உணர்ந்து உடனடியாக உணவுக் கட்டுப்பாட்டிலும் உடற்பயிற்சியிலும் கவனம் செலுத்த வேண்டும். உடற்பயிற்சி என்பது வாழ்க்கையில் ஓர் அங்கமாக மாற வேண்டும். வெளியூர் செல்கிறீர்கள் என்றபோதிலும் ஒருநாள்கூட உடற்பயிற்சி செய்வதை நிறுத்தக் கூடாது.

எடைக்குறைப்பு முயற்சியில் எப்போதும் அலர்ட் ஆகவே இருங்கள். வெளியில் செல்லும்போது ஆரோக்கிய உணவுகளை வீட்டிலிருந்தே தயார்செய்து எடுத்துச் செல்லுங்கள்.

எடைக்குறைப்புக்காக நீங்கள் வழக்கமாக எடுத்துக்கொள்ளும் உணவுகள் பயணங்களின்போது கிடைக்காது என்று நினைத்தால் புரோட்டீன் ஷேக் பவுடர்களை எடுத்துச் செல்லுங்கள். ஏதேனும் ஒருவேளை நிறைய காய்கறிகள் அல்லது கிரில் செய்த அசைவ உணவுகள், பருப்பு போன்றவற்றை எடுத்துக் கொள்ளவும்.

விரதம் இருப்பதும் எடைக்குறைப்பில் பெரிய அளவுக்கு உதவும். 16 மணி நேரம் விரதமிருக்கலாம். எட்டு மணி நேர இடைவெளி கொடுத்து இரண்டு முறை உணவு எடுத்துக்கொள்ளலாம். அல்லது இரவுக்கு மட்டும் ஒருவேளை உண்ணலாம். இதை வாரம் ஒருமுறை பின்பற்றலாம் அல்லது மாதம் ஒருமுறை 24 மணி நேர விரதத்தையும் கடைப்பிடிக்கலாம். இது உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தில் மிகப்பெரிய முன்னேற்றத்தைக் காட்டும். கொழுப்பின் அளவும் அதிகரிக்காமல் கட்டுப்பாட்டில் இருக்க உதவும்.

ஆங்கிலத்தில் `ஆல் ஆர் நத்திங்' என்று சொல்வார்கள். எடைக்குறைப்பு முயற்சியில் இருப்பவர்கள் உணவு மற்றும் உடற்பயிற்சி விஷயங்களில் `ஆல் ஆர் நத்திங்' ஃபார்முலாவைப் பின்பற்றக் கூடாது. அதாவது... எடைக்குறைப்பு முயற்சியில் இருப்பவர்கள் ஒன்று அதில் மிகவும் தீவிரமாக நடந்துகொள்வார்கள். உணவு மற்றும் உடற்பயிற்சியில் சிறிய பிரேக் எடுக்க வேண்டும் என்று நினைக்கும்போது பிரியாணி, பரோட்டா, ஸ்வீட் எனக் கண்டதையும் சாப்பிட ஆரம்பித்துவிடுவார்கள். இந்த மனநிலை தவிர்க்கப்பட வேண்டும்.

ஆரோக்கியம் இல்லாதவை என நீங்கள் நினைக்கும் நொறுக்குத்தீனிகளையும் உணவுகளையும் வீட்டில் ஸ்டாக் வைக்காதீர்கள். குறிப்பாக மைதா, இனிப்பு மற்றும் எண்ணெய் சேர்த்த பலகாரங்கள்.

வாரம் ஒரு முறை உங்களுக்குப் பிடித்த ஓர் உணவை திருப்தியாகச் சாப்பிடுங்கள். அது பிரியாணியாகவோ, சாம்பார் சாதம் மற்றும் உருளைக்கிழங்கு வறுவலாகவோ, பூரி மசாலாகவோ இருக்கலாம். ஆனால், அது வீட்டிலேயே செய்ததாக இருக்கட்டும்.

எப்போதாவது ஒருமுறை வெளியில் சாப்பிடச் செல்லும்போது மெனுவில் தேர்ந்தெடுப்பதற்கு ஆரோக்கிய ஆப்ஷன்ஸ் உள்ள ரெஸ்டாரன்ட்டுகளுக்குச் செல்லவும்.

ஃபுட் ட்ராக்கர் பயன்படுத்தி நீங்கள் உட்கொள்ளும் உணவு, அதிலுள்ள கார்போஹைட்ரேட், புரதம் மற்றும் கொழுப்பின் விகிதங்களைக் கண்காணிப்பதை வழக்கமாக்கிக்கொள்ளவும்.

தினமும் பல் துலக்குவது, குளிப்பது போன்ற செயல்களைப் போல உணவுக்கட்டுப் பாட்டையும் உடற்பயிற்சியையும்கூட அன்றாட வழக்கங்களாக மாற்றிக்கொள்ள வேண்டும்.

எடையைக் குறைப்பதில் வாழ்வியல் மாற்றங்கள் பெரிய அளவில் உதவும்.

- நம்மால் முடியும்!

டயட் டவுட்டு

டைபாய்டு, மலேரியா போன்ற காய்ச்சல்களின்போது, கஞ்சி, பிரெட் போன்றவற்றை எடுத்துக்கொள்ள மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள். டயட்டைத் தீவிரமாகப் பின்பற்றுவோர், இந்த உணவுகளை எடுத்துக்கொள்வதால் அவர்களது எடை அதிகரிக்க வாய்ப்பிருக்கிறதா?

உடல்நலமில்லாதபோது எளிதில் செரிமானமாகக் கூடிய கஞ்சி, பருப்பும் அரிசி நொய்யும் சேர்த்து வேகவைத்த கலவை, பிரெட் போன்றவற்றைச் சாப்பிடச் சொல்வார்கள். பால் மற்றும் சமைக்காத சாலட் வகைகளைத் தவிர்க்கச் சொல்வார்கள். காய்ச்சல் நேரத்தில் தசைகள் பலவீனமடையும். எடை குறையும். உடலின் எனர்ஜி குறையும். எனவே இந்த நாள்களில் தீவிரமான டயட் தேவையில்லை.