தன்னம்பிக்கை
லைஃப்ஸ்டைல்
Published:Updated:

எடைக்குறைப்பு ஏ டு இஸட்: வாழ்க்கையை மாற்ற வளமான வாய்ப்பு!

எடைக்குறைப்பு
பிரீமியம் ஸ்டோரி
News
எடைக்குறைப்பு

டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன்

ஊரடங்கு... இந்த ஒற்றை வார்த்தையைப் பற்றிதான் உலகமே சிந்தித்துக்கொண்டிருக்கிறது. இதிலிருந்து மீள்வோமா என்கிற மிரட்சியே எல்லோர் மனத்திலும் மேலோங்கியிருக்கிறது.

ஏதோ கொஞ்சநஞ்சம் இயங்கிக்கொண்டிருந்த உடலுக்கும் இப்போது அசைவில்லை. பீன் பேக், சோஃபா, மெத்தை என சொகுசான இடங்களில் உட்கார்ந்தபடி வேலை பார்க்கிறோம். தூங்கும்நேரம் கன்னாபின்னாவென மாறியிருக்கிறது. இதுதான் இன்றைக்குப் பலரின் நிலைமையும். லாக் டெளனுக்கு முன், லாக் டெளனுக்குப் பின் என மீம் க்ரியேட்டர்களின் கற்பனையை ரசித்துக்கொண்டே அந்த மாதிரி எதுவும் நம் வாழ்க்கையில் நடந்துவிடக் கூடாது என சீரியஸாக முகத்தை வைத்துக்கொண்டு மீண்டும் பீன் பேகில் சாய்கிறோம்.

எடைக்குறைப்பு ஏ டு இஸட்: வாழ்க்கையை மாற்ற வளமான வாய்ப்பு!

எடை அதிகரிப்பது, சாப்பிட்டவுடன் தூக்கம், அதிக சோம்பலாக உணர்வது போன்ற எல்லாவற்றுக்கும் காரணம் அதிக கார்போஹைட்ரேட் உணவுகள் மற்றும் தூக்கச் சுழற்சியை பாதிக்கும் அதிக அளவிலான உணவுகள். மக்கள் இவற்றை கவனிக்கத் தவறுவதோடு, மீண்டும் மீண்டும் இதே தவறுகளைத் தொடர்ந்துகொண்டிருக்கிறார்கள். இதனால் உணவுத் தேடல் அதிகரிக்கும். அதிலும் குறிப்பிட்ட சில உணவுகளின் மீதான தேடல் அதிகரிக்கும்.

தூக்கச் சுழற்சி மாறுபடும்போது அது உணவுத் தேடலில் மிகப்பெரிய பங்கு வகிக்கும். தூக்கத் தொந்தரவுகளுக்கும் ஹார்மோன்களின் சமநிலையின்மைக்கும் நெருங்கிய தொடர்புண்டு. சாப்பிட்டதும் போதும் என்ற உணர்வைத் தரும் லெப்டின் ஹார்மோன், பசியைத் தூண்டும் க்ரெலின் ஹார்மோன், தூக்கத்தைத் தூண்டும் செரட்டோனின் ஹார்மோன், வீக்கத்துக்குக் காரணமான கார்ட்டிசால ஹார்மோன் என அனைத்தும் சமநிலை இழக்கும். இதன் காரணமாக உணர்வுகளில் பெரும் தடுமாற்றம் ஏற்படும். மன அழுத்தத்தின் விளைவு, அதிகம் சாப்பிடுவதில் முடியும். இவை அனைத்தின் தொடர்ச்சியாக இந்த லாக் டெளன் நாள்களில் அதிகம் சாப்பிட்டுப் பழகி, எடை கூடிவிடுவார்கள் பலரும்.

எடைக்குறைப்பு
எடைக்குறைப்பு

உணவுத் தேடலைக் கட்டுப்படுத்த எளிமையான சில வழிகளைப் பார்ப்போம்.

சரியான நேரத்தில் உறக்கம்

இது உங்கள் தூக்கச் சுழற்சியைக் கெடுத்துக்கொள்ளும் காலமல்ல, அதைச் சரிப்படுத்திக்கொள்ளும் காலம். 24 மணி நேரமும் வீட்டில்தான் இருக்கிறீர்கள். அலுவலக வேலைகளைக் கொஞ்சம் சீக்கிரமே முடித்துவிட்டு, இரவு 10 மணிக்கெல்லாம் தூங்கச்சென்றுவிடுங்கள். அது உங்கள் ஹார்மோன் சுழற்சியைச் சீராக்கும்.

நிறைய திரவ உணவுகள்

திரவ உணவுகள் அதிகம் எடுத்துக் கொள்வோருக்கு வயிறு நிறைந்த உணர்வு சீக்கிரமே ஏற்படும். பசியையும் தாகத்தையும் தவறாகப் புரிந்துகொள்ளாமல், பசி போலத் தோன்றும்போது திரவ உணவு அருந்திப் பாருங்கள். தாகம் என்றால் உடனே கட்டுப் படும். தவிர, திரவ உணவுகள் உடலின் கழிவு களை வெளியேற்றி, உடலில் நீர்வறட்சி ஏற்படாமலும் காக்கும்.

தரமான புரதம்

மெதுவாக செரிமானமாகும் கார்போ ஹைட்ரேட் உணவுகளுடன், புரதச்சத்து நிறைந்த உணவுகளையும் சாப்பிடும்போது நீண்ட நேரத்துக்குப் பசி உணர்வு தலைதூக்காது.இந்திய உணவுகளில் பெரும்பாலும் புரதச்சத்து குறைவு (சாம்பாரில் பருப்பு அதிகமிருக்காது. நீர்த்தநிலையில் இருக்கும். ஆன்மிகம் சார்ந்தும் சிலர் அப்படி நீர்த்தநிலையில் சாப்பிடுவதுண்டு).

எடைக்குறைப்பு
எடைக்குறைப்பு

`ஜர்னல் ஒபிசிட்டி' நடத்திய ஆய்வில் ஒரு விஷயம் தெளிவாகியிருக்கிறது. அதீத பருமன் கொண்ட ஆண்கள் தினசரி கலோரிகளில் 25 சதவிகிதத்தைப் புரதத்தின் மூலம் பெறும்போது, உணவுத் தேடலை 60 சதவிகிதம் வரை குறைக்க முடியும் என்கிறது அந்த ஆய்வு.

உணவு சகிப்புத்தன்மையின்மை

சில உணவுகளில் உங்களுக்கு சகிப்புத் தன்மையின்மை இருக்கலாம். அது உங்களுக்கே தெரியாமலிருக்கலாம். உணவுத்தேடலுக்கு அதுவும் ஒரு காரணம். சிலருக்கு குளூட்டன் உணவுகளில், வேறு சிலருக்கு பால் உணவுகளில் இந்த சகிப்புத்தன்மையின்மை இருக்கலாம். அந்த உணவுகளை அறவே கைவிட இதுதான் சரியான தருணம். இந்த விஷயத்தில் என்னையே உதாரணமாகச் சொல்லலாம். நீண்டநாள் தலைவலியிலிருந்து மீள நான் பால் உணவுகளை எடுத்துக்கொள்வதை நிறுத்தி விட்டேன்.

அதாவது உங்களுக்கு மிகப்பிடித்த உணவுகளைத் தியாகம் செய்யுங்கள்... பலனாக நீங்கள் விரும்பிய ஆரோக்கியத்தை மீட்டெடுங்கள்!

இவை எல்லாவற்றையும்விட முக்கியம் உடல் இயக்கம். உணவுத் தேடலிலிருந்து விடுபட அது நிச்சயம் உதவும். வீட்டுக்குள் முடங்கிப்போயிருக்கும் இந்த நிலையில் எப்படி வொர்க் அவுட் செய்வது எனக் கேட்கிறவர்கள், வீட்டுக்குள்ளேயே சுலபமாகச் செய்யக்கூடிய வீடியோக்களைப் பார்த்துக் கற்றுக்கொள்ளுங்கள். சூரிய நமஸ்காரம் போன்ற எளிய பயிற்சிகளும் உதவும். வீட்டுக்குள் இருப்போருக்கான சிம்பிள் உடற்பயிற்சிகளைப் பற்றிய நிறைய வீடியோக்கள், வழிகாட்டுதல்களைக் கடந்த சில நாள்களாகப் பார்த்துக்கொண்டிருக்கிறோம். அவையெல்லாம் எல்லாராலும் எளிதில் செய்யக்கூடியவையாகவே இருக்கின்றன. இந்த வாய்ப்பைத் தவறவிடாதீர்கள்.

உணவுத்தேடலைக் கட்டுப்படுத்தும் வழிகளைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறோம். சிலர் இதற்கான குறுக்குவழியாக சப்ளிமென்ட் எடுத்துக்கொள்வதைப் பற்றி யோசிக்கலாம். முறையான உணவுப்பழக்கமும் வாழ்வியல் முறைகளும்தான் இந்தப் பிரச்னையிலிருந்து வெளியே வருவதற்கான தீர்வுகள். சப்ளிமென்ட்டுகள் தேவையில்லை என்றாலும், அதீதமான உணவுத்தேடலால் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தற்காலிகமாக அவை நிவாரணம் தரலாம். மக்னீசியம், செலினியம், குரோமியம், பி காம்ப்ளெக்ஸ் மற்றும் துத்தநாகம் போன்றவை அடங்கிய சப்ளிமென்ட்டுகள் இனிப்பான உணவுகளின் மீதான தேடலிலிருந்து வெளியே வர உதவும்.

எல்லாம் சரிதான்... வீட்டிலிருந்து வேலை செய்கிற இந்த நாள்களில் என்னதான் கட்டுப்பாடாக இருந்தாலும் நொறுக்குத் தீனிகளைத் தேடுவதைத் தவிர்க்க முடியவில்லையே என்ற கேள்வியையும் கடந்த சில நாள்களாக அதிகம் கேட்கிறேன். அதற்கும் நம்மிடம் தீர்வுகள் உண்டு.

அவர் குழந்தையாக இருந்தபோது அழுதாலோ, அப்செட் ஆனாலோ அவரின் அம்மா எதையாவது வாயில் அடைத்து அவரை அடக்குவாராம். வளர்ந்த பிறகும் அதே பழக்கம் தொடர்வதாகச் சொன்னார்.

கடலை மிட்டாய், முளைகட்டிய பயறு சேர்த்து வீட்டிலேயே தயாரித்த பேல்பூரி, பொட்டுக்கடலை, வேர்க்கடலை, பச்சை மாங்காய்த் துருவல், கொத்தமல்லி, வெங்காயம், மாதுளம்பழ முத்துகள், தயிர், சாட் மசாலா சேர்த்த சன்னா மசாலா போன்றவை ஆரோக்கியமான நொறுக்குத்தீனிகள். பொரித்த, வறுத்த உணவுகளையும் மைதா மற்றும் இனிப்பு சேர்த்த உணவுகளையும் தவிர்த்துவிடுங்கள்.

இவற்றையெல்லாம் தாண்டி உணர்வு களுக்கும் உணவுத்தேடலுக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதையும் மறுக்க முடியாது. என்னுடைய க்ளையன்ட் ஒருவர் சொன்னது நினைவுக்கு வருகிறது.

அவர் குழந்தையாக இருந்தபோது அழுதாலோ, அப்செட் ஆனாலோ அவரின் அம்மா எதையாவது வாயில் அடைத்து அவரை அடக்குவாராம். வளர்ந்த பிறகும் அதே பழக்கம் தொடர்வதாகச் சொன்னார். மனசு சரியில்லை என்றால் கேக், பரோட்டா, பிரியாணி எனக் கண்டதையும் சாப்பிடுகிற பழக்கம் அவருக்குத் தொடர்ந்திருக்கிறது. மூளை அவரை அப்படிப் பழக்கியிருக்கிறது. இப்படி ஏதேனும் உளவியல் பிரச்னைகள் இருந்தால், அதற்கு உளவியல் நிபுணர்களின் ஆலோசனை பெற்று மீள்வதுதான் சரியாக இருக்கும்.

எல்லாவற்றையும்விட முக்கியம் மன உறுதி!

என்னுடைய இன்னொரு க்ளையன்ட்டை உதாரணமாகச் சொல்கிறேன். தன்னுடைய வார்ட்ரோபில் இரண்டு செட் உடைகள் வைத்திருப்பார். ஒன்று மீடியம் ஃபிட்டிங், இன்னொன்று லார்ஜ் ஃபிட்டிங். மீடியம் ஃபிட்டிங்குக்குள் வருவதுதான் அவரது லட்சியமாக இருந்தது. இப்படி ஒவ்வொருவருக்கும் ஒரு லட்சியம், அதை நோக்கிய முயற்சி அவசியம்.

ஆரோக்கியமாகச் சாப்பிடுங்கள்!

சரியான நேரத்துக்குத் தூங்குங்கள்... குறைந்த அளவிலாவது உடற்பயிற்சி செய்யுங்கள்... உணவுத் தேடலின் காரணமாக அதிகம் சாப்பிடுவது, எடை கூடுவது என எல்லாவற்றிலிருந்தும் தப்பிக்க இவையே தீர்வு.

Time isn’t the main thing. It’s the only thing என்கிறார் மைல்ஸ் டேவிஸ். லாக் டெளன் நாள்கள் உங்களுக்குத் தந்திருக்கும் இந்த வாய்ப்பை உங்கள் வாழ்க்கைமுறையை ரீசெட் செய்யப் பயன்படுத்துங்கள்!

(நம்மால் முடியும்)