Mouth is the mirror of the oral cavity - இது, பல் மருத்துவர்களால் அதிகம் பயன்படுத்தப்படும் சொற்தொடராகும். நம் உடலின் நுழைவாயிலான வாய், நமது ஆரோக்கியத்தைப் பிரதிபலிக்கும் கண்ணாடி என்பது மிகைப்படுத்தப்படாத உண்மை. வாய் என்றவுடன் நம் நினைவுக்கு வருவது பற்கள்தான். ஆனால் அவற்றோடு நம் வாயில் நாக்கு, உதடு, அண்ணம், கன்னத்தின் உள்பகுதி, மேல் தாடை, கீழ் தாடை, அவற்றின் எலும்புகள் என்று, பல பகுதிகள் உள்ளன. இவை எல்லாவற்றையும் பற்றி அடிப்படை புரிந்துணர்வு ஏற்படுவது மிகவும் அவசியம். அதை உணர்த்தவே இந்தத் தொடர்.
இந்தத் தொடரை எழுதும் பா.நிவேதிதா, பல் மருத்துவ நிபுணர். இந்தத் துறையில் 20 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். தற்போது தனியார் தனியார் பல் மருத்துவக் கல்லூரியில் இணைப் பேராசிரியராகப் பணிபுரிந்து வருகிறார்.
இப்போது இத்தொடருக்கான தேவை என்ன என்ற கேள்வி உங்களுக்குள் எழலாம். தற்போதைய காலச்சூழலில் நமது உணவுப்பழக்க வழக்கங்கள் வெகுவாக மாறிவிட்டன, மக்களின் வாழ்க்கைத் தரமும் உயர்ந்திருக்கிறது. அடிப்படை மருத்துவத் தேவைகள் பூர்த்தியாகி இருக்கிற சூழலில், பற்கள், சீரான முக அமைப்பு, அழகான சிரிப்பு போன்றவை முக்கியத்துவம் பெறுகின்றன. அதன் அடிப்படையில், அறிவியல்ரீதியான தெளிவை ஏற்படுத்தி, பொதுவாக எழும் கேள்விகளுக்கான விடை அளிப்பதே இத்தொடரின் நோக்கம். இத்தொடரின் முதல் வாரத்தில், பற்கள் மற்றும் அவற்றில் ஏற்படும் சொத்தை, அதன் அறிவியல் காரணிகள், அதன் அறிகுறிகள் குறித்து விரிவாகப் பார்க்கலாம்.

Also Read
பல் அமைப்பும் தன்மையும்
மனிதர்களுக்கு இரண்டு வகையான பல் அமைப்புகள் உள்ளன. பால் பற்கள் ( primary dentition), இதில் மொத்தம் இருபது பற்கள். நிரந்தர பற்கள் ( permanant dentition), இதில் மொத்தம் முப்பத்தி இரண்டு பற்கள்.
இப்போது பற்களின் உள்கட்டமைப்பு குறித்து ஒரு சிறு அறிமுகத்தைப் பார்ப்போம்...
பல் என்பது Enamel, dentin, pulp என்ற திசுக்களைக் கொண்ட ஒரு கடினமான கட்டமைப்பாகும். எனாமல் என்பது எலும்பைக் கடித்து நொறுக்கும் அளவுக்கு கடினமான பகுதி. ஆனால் அது ஒரு உயிரற்ற திசு. பற்களின் உயிர் என்பது, dentin-ல் இருந்துதான் தொடங்குகிறது. இதுபற்றி ஏன் இவ்வளவு விரிவாகச் சொல்கிறேன் என்றால், இதற்கும் பல் சொத்தையால் ஏற்படும் பல் வலிக்கும் நேரடித் தொடர்பு உள்ளது. இதுதவிர பற்களுக்கு வேர் என்ற பகுதி உள்ளது. தாடை எலும்பில் இது புதைந்திருக்கும்.
பல் சொத்தையின் தொடக்கம்!
நமக்கு எப்போதுமே வாயோடு பல்லையும், பல்லோடு சொத்தை பிரச்னையையும் தொடர்புபடுத்தும் மனநிலை இயல்பாகவே இருக்கிறது. ஒரேயொரு பல்கூட சிதைவடையாத நபர் என்று இவ்வுலகில் ஒருவர்கூட இருக்க முடியாது என்பதே உண்மை. காதல்வலியைவிட பல் வலி கொடுமையானது என்பது, அனுபவித்தவருக்குத்தான் தெரியும். இந்த வலியைக் கொடுக்கும் பல் சொத்தை, நாம் உண்ணும் சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட் (refined carbohydrates) மற்றும் பாக்டீரியா நுண்கிருமியின் கூட்டுச்சதியில் உண்டாகும் அமில திரவத்தின் விளைவே ஆகும். இந்த அமிலம், பற்களின் எனாமலை கரைத்துவிடும் தன்மை வாய்ந்தது. இதுதான் பல் சொத்தையின் தொடக்கம்.

சுத்தரிகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட் இருக்கும் உணவுகள் எவை என்று தெரியுமா? நாம் அன்றாடம் உட்கொள்ளும் க்ரீம் பிஸ்கட்டுகள், கேக், டோனட், பீட்சா உள்ளிட்டவை. இவைதான் 90 சதவிகிதம் பல் சொத்தைக்கு காரணம். இது அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்ட உண்மை. அதெப்படி இவற்றையெல்லாம் சாப்பிடாமல் இருப்பது என்று கேட்கும் ரகமா நீங்கள்? அப்படியென்றால், இவற்றை சாப்பிட்டதும் பல் தேய்த்துவிடவும்; இது முடியாத பட்சத்தில் குறைந்தபட்சம் வாயை நீங்கள் கொப்பளிக்கலாமே. இதுவும் முடியாது என்றால், நிச்சயம் நீங்கள் பல் சொத்தையில் இருந்து தப்பவே முடியாது.
அசைவம் பல்லுக்கு ஆபத்தா?
இதுதவிர, பல் சொத்தைக்கு பற்களின் அமைப்பு, பரம்பரை, வைட்டமின் குறைபாடு உள்ளிட்ட பல காரணிகள் இருக்கின்றன. பல் சொத்தை குறித்து சில தவறான தகவல்கள், கருத்துகள் உள்ளன. அவற்றில் உண்மை எது, கட்டுக்கதை எது என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும். முதலில் பல் சொத்தை என்பது புழுக்களால் வருவதல்ல, நுண்கிருமிகளால் வருவது. இரண்டுக்கும் வேறுபாடு இருக்கிறது. இரண்டாவதாக, சொத்தை ஒரு பல்லில் இருந்து மற்றொரு பல்லுக்குப் பரவாது, இரண்டு பற்களிலும் biofilm என்ற படிமம் இருந்தால் இரண்டிலும் தனித்தனியாகத்தான் சொத்தை வரும்.
அடுத்து, பற்களில் உள்ள கால்சியத்திற்கும், பல் சொத்தைக்கும் நேரடித் தொடர்பு இல்லை. ஆனால், பல் சொத்தை ஏற்படுவதைத் தடுக்க fluorine என்ற கனிமம் மிக அவசியமாகும். பொதுவாக பல் என்றாலே கால்சியம் கனிமத்தோடு நாம் முடிச்சு போடுகிறோம். அது, தவறான நம்பிக்கை.

உங்களது டூத் பேஸ்ட்டில் 1000 PPM என்றளவில் fluoride இருக்கிறதா என்று பார்த்து வாங்க வேண்டும். கடைசியாக, பல் சொத்தைக்கு அசைவ உணவு, சைவ உணவு முறை என்ற பாகுபாடெல்லாம் கிடையாது. நார்ச்சத்து மிகுதியாக உள்ள உணவை எடுத்துக் கொண்டால், அது இயற்கையாகவே பற்களைத் தூய்மைப்படுத்திவிடும். எனவே, அத்தகைய உணவுகளைத் தேடி உட்கொள்வது சிறந்தது.
இப்போது உங்களுக்கு பல் சொத்தை பற்றிய அடிப்படை தெளிவு ஏற்பட்டிருக்கும் என்று கருதுகிறேன். இவ்வாரத்தின் TAKE HOME MESSAGE ஒன்றுதான். பற்களில் பிசுபிசுப்புத் தன்மையுடன் ஒட்டிக்கொள்ளும் கார்போஹைட்ரேட் உணவுகளை உண்டால் உடனே பல் துலக்கிவிடுங்கள்.
பல் சொத்தை, பல் வலி , மற்றும் அவற்றுக்கான சிகிச்சை முறைகள் குறித்து அடுத்த வாரம் பார்க்கலாம்.