ஹெல்த்
தொடர்கள்
Published:Updated:

ஹெல்த்: திருட்டுப்பழக்கம்... தேவை தண்டனையல்ல... சிகிச்சை!

ஹெல்த்
பிரீமியம் ஸ்டோரி
News
ஹெல்த்

கமல்ஹாசன் நடித்த பிரபலமான படங்களில் ஒன்று, ‘மைக்கேல் மதன காம ராஜன்.’

 ஹெல்த்: திருட்டுப்பழக்கம்...
தேவை தண்டனையல்ல... சிகிச்சை!

அதில் இடம்பெற்ற ‘திருட்டுப் பாட்டி’ கதாபாத்திரம் நினைவிருக்கிறதா... அந்தப் பாட்டி கண்ணில்படும் பொருள்களையெல்லாம் திருடிக்கொண்டு போய்விடுவார். டெல்லி கணேஷின் வெற்றிலைப் பெட்டி, கல்யாண வீட்டில் சாப்பிடும் ஒருவரின் மூக்குக் கண்ணாடி, டம்ளர், சொம்பு என எதையும் விட்டுவைக்க மாட்டார்.

திரைப்படங்களில் இது போன்ற கதாபாத்திரங்கள் நம்மைச் சிரிக்கவைக்கலாம். நிஜத்தில் யாராவது திருடி மாட்டிக்கொண்டால், தர்ம அடி கொடுத்து, போலீஸில் ஒப்படைத்துவிடுவார்கள்.

திருடுவது குற்றமே; அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால், திருடுவதில் வேறு ஒரு பரிணாமம் இருக்கிறது. எந்த ஆதாயத்துக்காகவும் இல்லாமல், ‘திருட வேண்டும்’ என்ற ஏதோ ஓர் உந்துதல் காரணமாகத் திருடும் ஒரு வகையினர் இருக்கின்றனர். அந்த மனநிலையை ‘கிளெப்டோமேனியா’ (Kleptomania) என்கின்றனர் மனநல மருத்துவர்கள். `இம்பல்ஸ் கன்ட்ரோல் டிஸ்ஆர்ட’ரின் (Impulse Control Disorder) கீழ் வகைப்படுத்தப்படுகிறது கிளெப்டோமேனியா. இந்தக் குறைபாடு இருப்பவர்களுக்கு, குறிப்பிட்ட ஒரு செயலைச் செய்ய வேண்டும் என்ற உந்துதல் இருந்துகொண்டே இருக்கும். இது, அத்தனை தீவிரமானதா, இதற்குத் தீர்வுதான் என்ன... விரிவாகப் பேசுகிறார் மனநல மருத்துவர் ஆர்.வசந்த்.

“கிளெப்டோமேனியா பிரச்னை இருப்பவர்களுக்கு எதையாவது திருட வேண்டும் என்ற உந்துதல் இருக்கும். இதை `நோயியல் திருட்டு’ (Pathological Stealing) என்று மருத்துவச் சொற்களில் கூறுவோம். இந்தப் பிரச்னைக்கும், திருட்டுச் செயலுக்கும் வித்தியாசம் இருக்கிறது. திருட்டில் ஈடுபடுபவர், அந்தப் பொருளின் மூலம் பண ஆதாயம் தேடிக்கொள்வார் அல்லது அதைத் தன் தேவைக்காகப் பயன்படுத்திக்கொள்வார். பக்கத்து வீட்டு மரத்திலிருக்கும் மாம்பழத்தைத் திருடுபவருக்கு, அதைச் சாப்பிட வேண்டும் என்ற ஆதாயம் இருக்கும். ஆனால், கிளெப்டோமேனியா குறைபாட்டால் பாதிக்கப்பட்டவருக்கு, ‘ஏதாவது ஒரு பொருளைத் திருட வேண்டும்’ என்ற உந்துதல் மட்டுமே இருக்கும்: எந்த ஆதாயத்தையும் தேட மாட்டார்.

 ஹெல்த்: திருட்டுப்பழக்கம்...
தேவை தண்டனையல்ல... சிகிச்சை!

உதாரணமாக, ஓரிடத்தில் ஒரு பேனா இருக்கிறது என்றால், அதை எடுத்துவிட வேண்டும் என்ற ஆர்வம், உந்துதல், வெறி ஏற்படும். அவர்களே இதைவிட விலையுயர்ந்த பல பேனாக்கள் வைத்திருக்கலாம். ஆனாலும் அதை எப்படியாவது எடுத்துவிட வேண்டும் என்ற எண்ணத்திலேயே இருப்பார்கள். அது விலையுயர்ந்த பொருளாகவும் இருக்கலாம்; மலிவான பொருளாகவும் இருக்கலாம். அதிகபட்சம் அந்தப் பொருளை எடுத்து, தன் வீட்டில் எங்காவது போட்டுவைப்பார்கள். சில நேரங்களில் குப்பையில்கூட போட்டுவிடுவார்கள் அல்லது யாருக்காவது தானமாகக் கொடுத்துவிடுவார்கள். பேனாவின் உரிமையாளரிடம் கேட்டிருந்தால், அவரேகூட அதைக் கொடுத்திருப்பார். அதைத் திருடினால்தான் திருடியவர் திருப்தியாக உணர்வார். திருடுவதற்கு முன்பாக தேர்வெழுதப் போவதைப் போன்ற பதற்றத்துடனேயே காணப்படுவார்கள். அந்தச் செயலைச் செய்து முடித்த பிறகுதான் இயல்புநிலைக்குத் திரும்புவார்கள்.

காரணம் என்ன?

மூளையில் சுரக்கும் நரம்பியல் ரசாயனங்களே நம் சமூகச் செயல்பாட்டுக்கு (Social Behaviour) காரணமாக அமைகின்றன. சமுதாயத்தில் வாழும்போது என்ன குணநலன்கள் இருக்க வேண்டும், எது சரி, எது தவறு என்ற புரிந்துணர்வு ஏற்பட, நரம்பியல் ரசாயனங்கள் உதவிபுரிகின்றன. இவற்றில் ஏற்படும் மாற்றங்களே கிளெப்டோமேனியா ஏற்படக் காரணங்கள். ஆண், பெண் இருவருக்குமே இது காணப்படலாம். பொதுவாக வளரிளம் பருவத்திலேயே இந்தக் குறைபாடு ஏற்படும். வேறு மனநோய் இருப்பவர்களும்கூட திருட்டுச் செயலில் ஈடுபடக்கூடும். உதாரணமாக, மனச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு காதில் மாயக்குரல் கேட்டுக்கொண்டே இருக்கும். அந்தக் குரலின் உத்தரவுக்குக் கட்டுப்பட்டு, சில நேரங்களில் திருட்டுச் சம்பவங்களில் ஈடுபடுவார்கள். ஆனால் கிளெப்டோமேனியா இருப்பவர்களுக்கு வேறு எந்த மனநலப் பிரச்னையும் இருக்காது. ஒருவர் திருடுவதைப் பார்த்து ஊக்கம்கொண்டும் திருட மாட்டார்கள். திருடுவதற்கான உந்துதல் மட்டுமே பிரச்னையாக இருக்கும்.

 ஹெல்த்: திருட்டுப்பழக்கம்...
தேவை தண்டனையல்ல... சிகிச்சை!

இந்தப் பிரச்னை இரு விளைவுகளை ஏற்படுத்தலாம். ஆதாயத்துக்காகத் திருடுபவர்கள், தங்களுக்கு கிளெப்டோமேனியா குறைபாடு இருப்பதாகச் சொல்லித் தப்பிக்கலாம் அல்லது அந்தக் குறைபாடு இருப்பவர்கள் ‘திருடர்கள்’ என்று கூறி கைது செய்யப்படலாம். ‘திருட வேண்டும்’ என்ற உந்துதல் அதிகமாக இருந்தால், உடனடியாக மனநல மருத்துவரை அணுகி, அது கிளெப்டோமேனியாதானா என்பதை அறிந்துகொள்ள வேண்டும். இது ஒரு மனநலப் பிரச்னை என்பதை முதலில் அவரும் அவரைச் சுற்றியுள்ளவர்களும் உணர்ந்துகொள்ள வேண்டும்.

பிரித்தறிவது எப்படி?

`கிளெப்டோமேனியாவா அல்லது திருடும் செயலா?’ என்று பிரித்தறிய மனநல மருத்துவர், பாதிக்கப்பட்ட நபரிடம் பேசிப் புரிந்துகொள்வார். அதன் பிறகு எந்தப் பொருளைத் திருடுகிறார், எப்போதெல்லாம் திருடுகிறார், திருடியதை எங்கே வைத்திருக்கிறார், அதைப் பயன் படுத்துகிறாரா போன்ற திருட்டின் தன்மைகளை அவருக்கு நெருக்கமானவர்களை ஆராயச் சொல்வார். பிறகு மருத்துவமனையில் அனுமதித்து, குறிப்பிட்ட காலத்துக்கு அவர்களைக் கண்காணிக்க வேண்டும். ஆதாயத்துக்காகத் திருடுபவர்களைக் கண்காணிக்கும்போது, அந்தக் கால அவகாசத்தில் தங்களைக் கட்டுப்படுத்திக் கொள்வார்கள். ‘கண்காணிக்கப்படுகிறோம்’ என்பது தெரிந்தால், அதை அவர்கள் செய்ய மாட்டார்கள். கிளெப்டோமேனியாவால் பாதிக்கப்பட்டவர்களால், `கண்காணிக்கப் படுகிறோம்’, என்பது தெரிந்தாலும்கூட உந்துதல் ஏற்பட்டுவிட்டால் திருடாமல் இருக்க முடியாது. குற்றச் செயல்களின் அடிப்படையில், சட்டரீதியாகக் காவல்துறை மூலமோ, நீதிமன்றம் மூலமோ இது போன்ற மனநலப் பிரச்னைகளைக் கண்டறிய அரசு மருத்துவமனைகளில் ‘தடயவியல் மனநலம்’ என்ற தனிப்பிரிவு இயங்குகிறது.

 ஹெல்த்: திருட்டுப்பழக்கம்...
தேவை தண்டனையல்ல... சிகிச்சை!

தீவிரம் என்ன?

கிளெப்டோமேனியாவால் பாதிக்கப் பட்டவர்களுக்கு ஒரு கட்டத்தில், சமுதாயத்தில் தன் பெயர் கெட்டுவிடுமோ என்ற பயம் ஏற்படும். ‘திருடுகிறோம்’ என்ற குற்ற உணர்ச்சி இருந்துகொண்டே இருக்கும். அந்தக் குற்ற உணர்ச்சி, மெள்ள மெள்ள அதிகரித்து தீவிர மன அழுத்தம், மனச்சோர்வு போன்றவற்றை ஏற்படுத்தக்கூடும்.

சிகிச்சைகள்

முதலில் ‘திருட வேண்டும்’ என்ற உந்துதலைக் குறைக்க, மருந்துகள் கொடுக்கப்படும். இந்தப் பிரச்னைக்கு முக்கியமான சிகிச்சை கவுன்சலிங் தான். திருடுவதற்கு முன்னர் ஏற்படும் பதற்றமே அந்தச் செயலைச் செய்ய ஒருவரைத் தூண்டுகிறது. அதனால் பதற்றத்தைக் கட்டுப்படுத்துவதற்கான நுட்பங்கள் (Relaxation Techniques) கற்றுக் கொடுக்கப்படும். சிகிச்சைகளில் படிப்படியாக நிகழும் மாற்றத்தைக் கொண்டு, குறிப்பிட்ட ஆண்டுகள் சிகிச்சை எடுத்துக் கொண்டால், கிளெப்டோமேனியாவிலிருந்து நிச்சயம் விடுபடலாம்’’ என்கிறார் டாக்டர் வசந்த்.

 ஹெல்த்: திருட்டுப்பழக்கம்...
தேவை தண்டனையல்ல... சிகிச்சை!

மென்று சாப்பிட்டால்....

உணவை மென்று சாப்பிடுவதால் பற்களுக்கு பலமுண்டாகும். மெல்லும்போது சுரக்கும் அதிகளவிலான எச்சில், பற்களில் கிருமிகளின் தாக்கம் இல்லாமல் பார்த்துக்கொள்ளும். செல்போன் பேசிக்கொண்டும், வேறு செயல்களைச் செய்துகொண்டும் சாப்பிட்டால், உணவின் மேல் கவனம் இல்லாமல், மென்று சாப்பிடுவதற்கு வாய்ப்பே இல்லாமல் போகும்.