`போதைப் பொருளா, மருத்துவப் பயன்பாடா?' என்ற இரு நிலைக்களுக்கு நடுவே பல ஆண்டுகளாக ஊசலாடிக் கொண்டிருந்தது கஞ்சா. அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளிலெல்லாம் கஞ்சாவை சட்டபூர்வமாக மருந்தாகப் பயன்படுத்திவந்த நிலையில், இந்தியாவில் அது தடைசெய்யப்பட்ட போதைப்பொருளாகக் கருதப்பட்டது. `கஞ்சாவில் மருத்துவ குணங்கள் அதிகம் உள்ளன. எனவே, அதை மருந்தாகப் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும்’ என இந்தியாவில் பலரும் குரல் எழுப்பி வந்தனர். தடை செய்யப்பட்டிருக்கும்போதே இளைஞர்கள் அதைப் போதைப்பொருளாகப் பயன்படுத்தும் போக்கு அதிகரித்துள்ளதைக் காரணம் காட்டி அனுமதி வழங்க தயங்கிய இந்திய அரசு, தற்போது கஞ்சாவை மிகவும் ஆபத்தான போதைப்பொருள் பட்டியலிலிருந்து நீக்குவதற்கு ஒப்புதல் அளித்திருக்கிறது.
ஐ.நா போதைப்பொருள் கட்டுப்பாட்டு ஒப்பந்தங்களில் கஞ்சாவை நீக்குவது குறித்து 2019-ம் ஆண்டு ஜனவரியில் உலக சுகாதார அமைப்பு 6 பரிந்துரைகளை வெளியிட்டிருந்தது. இந்த நிலையில், ஐ.நா போதைப்பொருள் மருந்துகள் ஆணையம் 63-வது கூட்டம் கடந்த புதன்கிழமை நடந்தது. மிகவும் ஆபத்தான போதைப்பொருள் பட்டியலிலிருந்து கஞ்சாவை நீக்குவது குறித்து அந்தக் கூட்டத்தில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அப்போது 57 உறுப்பு நாடுகளில் இந்தியா அமெரிக்கா உள்ளிட்ட 27 நாடுகள், மிகவும் ஆபத்தான போதைப்பொருள் பட்டியலிலிருந்து கஞ்சாவை நீக்குவதற்கு ஆதரவாக வாக்களித்தன. இதையடுத்து மிகவும் ஆபத்தான போதைப்பொருள் பட்டியலிலிருந்து கஞ்சாவை நீக்குவதாக ஐ.நா அறிவித்திருக்கிறது.

இந்த அறிவிப்பின் காரணமாக, மருத்துவத் துறையில் கஞ்சாவின் பயன்பாடு அதிகரிக்கும் என்ற கருத்து எழுந்துள்ளது. இதுகுறித்து சித்த மருத்துவர் விக்ரம்குமாரிடம் பேசினோம், ``அந்தக் காலத்தில் சித்த மருத்துவத்தில் கஞ்சா முக்கியத்துவம் வாய்ந்த மூலிகையாக இருந்துள்ளது. காலப்போக்கில் மக்கள் அதை போதை வஸ்துவாக அதிகளவில் பயன்படுத்த ஆரம்பித்ததால்தான் அதற்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது. ஐ.நா-வின் இந்த அறிவிப்பால் கஞ்சாவின் மருத்துவ குணங்கள் மீண்டும் மக்களுக்கு பயன்படுவதற்கான வாய்ப்பு தற்போது உருவாகியிருக்கிறது.
கஞ்சா செடியின் முக்கிய ஊக்கப் பொருளான டெட்ரா ஹைட்ரோ கேனாபினால் (THC - Tetra Hydro Cannabinol) வலி நிவாரணியாக மிகவும் பலன் அளிக்கக்கூடியது. மேற்கத்திய நாடுகளில் இதுகுறித்து நிறைய ஆய்வுகள் மேற்கொண்டு கஞ்சாவில் இருக்கும் மருத்துவ குணத்தைக் கண்டறிந்துள்ளனர். ஆனால், நாம் பல நூறு வருடங்களுக்கு முன்பே இங்கு கஞ்சாவை மருந்தாகப் பயன்படுத்தியுள்ளோம். சித்த மருத்துவத்தில் கஞ்சாவை கோரக்கர் மூலிகை என்பார்கள். ஏனெனில், கோரக்கர் என்ற சித்தர்தான் இந்த மூலிகையை வலி நிவாரணியாகப் பயன்படுத்தியுள்ளார்.
சிகிச்சையின்போது வலி தெரியாமல் இருக்க மயக்கம் வரழைக்க இப்போதுதான் அனஸ்தீஸ்யா பயன்படுத்துகிறார்கள். அந்தக் காலத்தில் மயக்க வரவழைக்க கஞ்சாவைத்தான் பயன்படுத்தியுள்ளனர். முறைப்படி ஆய்வு மேற்கொள்ளப்பட்டு கஞ்சா செடியிலிருந்து கிடைக்கும் மருத்துவ குணத்தைப் பிரித்தெடுத்து பயன்படுத்தினால் மயக்கவியல் துறையிலும் வலி நிவாரணியாகவும் கஞ்சா நல்ல உதவியாக இருக்கும். குறிப்பாக, புற்றுநோயால் ஏற்படக்கூடிய வலிக்கு துணை மருந்தாகப் பயன்படக்கூடிய வாய்ப்பு அதிகம் உள்ளது” என்றார்.

``பொதுவாக டி.ஹெச்.சி. (Tetra Hydro Cannabinol) அதிகமுள்ள கஞ்சா, `சிபிஐ ரிசெப்டார்' (CB1 receptor) என்ற ஏற்பியுடன் இணைந்து அதிகளவு போதையை ஏற்படுத்தும். இதனால் அதற்கு அடிமையாவதுடன் குழப்பம், ஞாபகமறதி, கட்டுப்பாடற்ற நிலை மற்றும் மயக்கத்தை ஏற்படுத்தும். ஆனால், சி.பி.டி. (Cannabidiol) அதிகமுள்ள கஞ்சா, `CB2 receptor' என்ற ஏற்பியுடன் இணைவதால், இது வலி நிவாரணியாகச் செயல்படுவதுடன் தூக்கமின்மை, மன அழுத்தம், வலிப்பு நோய், நரம்புத் தளர்ச்சி, பார்கின்சன் நோய், பசியின்மை, ஆஸ்துமா, மூட்டுவலி, புற்றுநோய் போன்றவற்றால் உருவாகும் நாள்பட்ட வலிகளையும் போக்கும்.
எனவே, இந்த டி.ஹெச்.சி மற்றும் சி.பி.டி ஆகியவற்றின் பயன்பாடுகளைப் பொறுத்தே கஞ்சா பாதுகாப்பானதா அல்லது போதையை மட்டுமே அதிகரிக்குமா என்பதைத் தீர்மானிக்க முடியும்" என்று ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் ஒரு ஆய்வு தெரிவிக்கப்பட்டுள்ளதாக மருத்துவர் சசித்ரா தாமோதரன் கஞ்சா குறித்த தனது கட்டுரையில் எழுதியிருந்தது குறிப்பிடத்தக்கது. அந்தக் கட்டுரையை முழுமையாகப் படிக்க...