கோவிட் சமயத்தில் தொற்றுப் பரவலைக் குறைக்கவும், கைகளைச் சுத்தமாக வைத்துக் கொள்ளவும் `கை கழுவுதல்' வலியுறுத்தப்பட்டது. அதன் தொடர்ச்சியாகப் பல நிறுவனங்களின் `ஹேண்ட் சானிட்டைசர்கள்' பிரபலமாகத் தொடங்கின. இவற்றில் பலவும் வியாபார நோக்கத்திற்காக உருவாக்கப்பட்டவையே.

இந்த நிலையில், சானிட்டைசர்களின் தரம் மற்றும் லேபிளை ஆய்வுசெய்த அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம், `வெவ்வேறு வகையான 378 சானிட்டைசர்களை பயன்படுத்த வேண்டாம்' எனச் செய்திக் குறிப்பில் வெளியிட்டுள்ளது.
பட்டியலிடப்பட்ட சானிட்டைசர்களில் பெரும்பாலானவை மெக்ஸிகோ, அமெரிக்கா மற்றும் சீனா போன்ற நாடுகளில் தயார் செய்யப்படுகின்றன.
மக்கள் ஏன் இந்த சானிட்டைசர்களை உபயோகிக்கக் கூடாதென பல காரணங்களைச் சுட்டிக் காட்டியுள்ளது, அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம்.
* மெத்தனால், 1-புரோபனால், பென்சீன், அசிட்டல்டிஹைடு அல்லது அசெட்டால் கொண்ட தயாரிப்புகள், இவை இருப்பதாக லேபிளிடப்பட்ட சானிட்டைசர்களை பயன்படுத்தக் கூடாது.
* சோதனையில் நுண்ணுயிர் மாசுபாடு இருப்பது கண்டறியப்பட்டால், அவற்றைப் பயன்படுத்தக் கூடாது.

* எத்தில் ஆல்கஹால், ஐசோபுரோபைல் ஆல்கஹால் அல்லது பென்சல்கோனியம் குளோரைடு போன்றவை தேவையான அளவைவிடக் குறைவாக இருந்தால் பயன்படுத்தக் கூடாது.
* உணவு அல்லது குளிர்பானம் போன்ற கன்டெய்னரில் வைக்கப்பட்ட சானிட்டைசர்களை பயன்படுத்தக் கூடாது. ஏனெனில், அவற்றை உணவு என நினைத்து உட்கொண்டு விடும் அபாயம் உள்ளது.
* சானிட்டைசரின் தரம் மற்றும் உற்பத்தி செயல்முறை குறித்து அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் பலமுறை கேட்டும், பதிலளிக்காத சானிட்டைசர் தயாரிப்புகளைப் பயன்படுத்தக் கூடாது.
அதோடு சீனாவில் மிக்கி மௌஸ் சானிட்டைசர், டிஸ்னி பிரின்சஸ் ஹேண்டு சானிட்டைசர், மார்வெல் ஹேண்ட் சானிட்டைசர் என டிஸ்னி கதாபாத்திர லேபிளோடு சானிட்டைசர்கள் தயாரிக்கப்படுகின்றன. இவற்றைத் திரும்ப பெறுமாறு அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மெத்தனால் இருக்கும் சானிட்டைசர்களை பயன்படுத்தியவர்கள் உடனடியாக மருத்துவச் சிகிச்சையை நாட வேண்டும். சிறிய அளவு மெத்தனால் வெளிப்பாடு கூட, லேசான குமட்டல், வாந்தி, தலைவலியோடு, அதிகப்படியாக வலிப்பு, கோமா, நரம்பு மண்டலத்தில் நிரந்தர சேதம் போன்றவற்றை ஏற்படுத்தலாம்.

சானிட்டைசர்களை பயன்படுத்துபவர்கள் 60 சதவிகித ஆல்கஹால் கொண்ட தயாரிப்புகளைப் பயன்படுத்த வேண்டும். அதோடு சானிட்டைசர்கள் கொண்டு கை கழுவினால், கோவிட் தொற்றிலிருந்து 24 மணி நேரம் வரை பாதுகாக்கும் போன்ற விளம்பர தகவல்களுக்கு எந்த ஆதாரமும் இல்லை.
மக்கள் ஹேண்ட் சானிட்டைசர்கள் பயன்படுத்தும் போது, இவற்றையெல்லாம் கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டும் என வலியுறுத்தி உள்ளது.