தடுப்பூசி, மருந்து, தாமதம்... கொரோனா சந்தேகங்களும் விளக்கங்களும்! #LongRead #FightCovid-19

தடுப்பூசி, மருந்து, தாமதம்... கோவிட்-19 ஏன் தீர்க்கமுடியாத பிரச்னையாக இருக்கிறது?!
இன்றைய தேதிக்கு, `கொரோனா வைரஸை அழிக்க என்ன செய்ய வேண்டும்?' என்பதுதான் உலக நாடுகளின் மிகப்பெரிய தேடலாக இருக்கிறது. மருந்து மற்றும் தடுப்பூசியை யார் முதலில் கண்டுபிடிப்பது என்பதில் வளர்ந்து வரும் நாடுகள் தொடங்கி வல்லரசு நாடு வரை எல்லா நாடுகளும் போட்டி போட்டுக் கொண்டிருக்கின்றன.
ஒவ்வொரு நாட்டிலிருந்தும், `எங்களின் இந்த மருந்து `கோவிட் - 19' கொரோனா வைரஸை அழிக்கின்றது. இதைவைத்துதான், நாங்கள் எங்கள் நோயாளிகளைக் குணப்படுத்தினோம்' என குணமான நோயாளியின் அடையாளத்தோடு செய்திகள் வழியாகக் கூறப்பட்டு வருகிறது. அமெரிக்கா போன்ற ஒரு சில நாடுகளில், கொரோனா தடுப்பூசிகள் மனித சோதனைக்குத் தயாராகிவிட்டது. இருப்பினும், ` குறிப்பிட்ட இந்த மருந்து / வேதியியல் இணைப்பு கொரோனா வைரஸை முழுமையாக அழிக்கிறது' என எந்த மருந்தையும் இதுநாள் வரையில் உலக சுகாதார நிறுவனம் அங்கீகரிக்கவில்லை.
உலக நாடுகள் குறிப்பிடும் அந்த மருந்துகள் மற்றும் தடுப்பூசிகள் யாவும் மக்களுக்கு உண்மையிலேயே பலன் அளித்திருக்கும்பட்சத்தில், அது அங்கீகரிக்கப்படுவதில் ஏன் இவ்வளவு தாமதம்? கொரோனா தொற்றுக்கான முழுமையான மருந்து மற்றும் தடுப்பூசி எப்போது பொதுமக்களுக்கு கிடைக்கப்பெறும்? அதற்கு ஏதும் கால அளவுகோல் இருக்கிறதா? அதுவரையில் கொரோனா தடுப்புக்கு நாம் செய்ய வேண்டியது என்ன? தடுப்பூசியும் மருந்தும் மனித உடலில் எப்படிச் செயல்படும்? அனைத்துக் கேள்விகளுக்கும், இந்தக் கட்டுரை உங்களுக்கு விடையளிக்கும்!
முதல் விஷயம், கொரோனா வைரஸில் இருநூற்றுக்கும் மேற்பட்ட வகைகள் இருக்கின்றன. அவற்றில், ஏழு மட்டும்தான் மனிதர்களைத் தாக்குபவையாக இருக்கின்றன.

இந்த ஏழு வைரஸ் பாதிப்பு பட்டியலில், ஏழாவது பாதிப்பாக இருப்பது தற்போதைக்கு உலகையே அச்சுறுத்தி வரும், கோவிட் - 19 வைரஸ். `உலகளாவிய பெருந்தொற்று' என அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த கோவிட் - 19 கொரோனா, இதுவரையில் ஐந்தரை லட்சத்துக்கும் மேற்பட்டோரை பாதித்து, அதில் 24,000-க்கும் மேற்பட்ட இறப்புகளை ஏற்படுத்தியுள்ளது.
199 நாடுகளை அச்சுறுத்திவரும் இந்தக் கொரோனா பாதிப்பானது, உலக வரைபடத்தில் மீதம் வைத்திருப்பது அன்டார்டிக் கண்டத்தை மட்டும்தான்.
மற்ற வைரஸ்களோடு ஒப்பிடுகையில், கோவிட் - 19 கொரோனாவின் தீவிரம் அதிகமா?

NL63, 229E, OC43, HKU1 - இவையாவும் முதல் நிலை மற்றும் இடைநிலை பாதிப்புகளை ஏற்படுத்தும். பெரும்பாலும் சாதாரண சளிக்காய்ச்சலோடு பிரச்னை சரியாகிவிடும். மெர்ஸ் மற்றும் சார்ஸ், மிகத்தீவிரமான பாதிப்பை ஏற்படுத்தும். கோவிட் - 19 முதல் நிலை, இடைநிலை மற்றும் தீவிரமான பாதிப்பு ஆகியவற்றை ஏற்படுத்தும்.
வைரஸை அழிக்கவும், வருமுன் தடுக்கவும் மருந்து கண்டறிவதில் தாமதம் ஏற்படுவது ஏன்?
பிற வைரஸ்களின் மூலக்கூறுகளோடு ஒப்பிடுகையில், கொரோனா வைரஸ் வகைகளின் மரபணு வரிசையில் முழுவதுமாக வேறுபடுகின்றன. எப்போதுமே வைரஸ் தொற்றுகள் தம் இயல்பை குறிப்பிட்ட காலத்துக்கு ஒருமுறை மாற்றிக்கொண்டே இருக்கும் என்பதால், இந்த வேறுபாடுகளை கணிப்பது சிரமம். வைரஸின் சரியான வடிவத்தைக் கண்டறிவது கடினம். அதைக் கண்டறியும் பட்சத்தில்தான், அதை அழிக்கும் மருந்துகளும், தடுக்கும் மருந்துகளும் கண்டறியப்பட முடியும். வைரஸின் அமைப்பு, இப்போதுதான் கண்டறியப்பட்டுவருகிறது. அதனால்தான் தாமதம்!

பாக்டீரியா வகைத் தொற்றாக இது இருந்திருக்குமாயின், விரைவில் அதை அழிக்க மருந்து கண்டுபிடிக்கப்பட்டிருக்கலாம் என்கின்றனர் மருத்துவர்கள்.

இதற்கு முன் உலகை அச்சுறுத்திய கொள்ளைநோய்களின் வரலாறு :
கோவிட் - 19 ஐ போல, நம் வரலாற்றில் பேண்டெமிக் நோய் பாதிப்பாக அறிவிக்கப்பட்ட சில நோய் பாதிப்புகள், அவை ஏற்பட்ட ஆண்டு, அவை ஏற்படுத்திய இறப்பு எண்ணிக்கைகள் போன்றவற்றின் விவரம், இங்கே உங்களுக்காக!

இவை மட்டுமல்ல. வரலாற்றின் பக்கங்களில், கொரோனாவைவிடவும் வேகமாகப் பரவும் நோய்களும் இருந்திருக்கின்றன. அவற்றின் பட்டியல் இங்கே.

கோவிட் - 19 பாதிப்புக்கு, தடுப்பு மருந்து தயாராகிவிட்டதா?
இதுவரை உலகளவில் தோராயமாக 20 தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. அவற்றில் ஒன்று மட்டும், மனித உடலில் ஆய்வுக்காக உட்படுத்தப்பட்டுள்ளது. அமெரிக்காவில் கண்டறியப்பட்ட அந்தத் தடுப்பு மருந்து, கய்சர் பெர்மனென்ட் என்ற ஆய்வுக்கூடத்தில் கண்டறியப்பட்டுள்ளது.
இந்தியாவின் சி.எஸ்.ஐ.ஆர். - ஐ.ஐ.சி.டி இணைந்து மூன்று வேதிப்பொருள்களின் உதவியோடு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க முயல்கின்றனர். இவர்களோடு, க்ளினிக்கல் ட்ரையல் செய்வதற்காக சிப்லா நிறுவனமும் இணைவதாகச் சொல்லப்பட்டுள்ளது. அனைவரும் இணையும்பட்சத்தில், அடுத்த 6 - 10 வாரங்களுக்குள் தடுப்பு மருந்து கண்டறியப்படும் என சொல்லப்பட்டுள்ளது.
ஆகவே இப்போது வரையில், கோவிட் - 19 க்கு தடுப்பு மருந்து கண்டறியப்படவில்லை.
நுண்ணுயிரியல் துறையில் தனது முதுகலை ஆய்வுப் பட்டத்தை மேற்கொண்ட தமிழகத்தைச் சேர்ந்த பவித்ரா, தடுப்பு மருந்து குறித்து நம்மிடையே பேசுகையில், ``மேற்கூறிய 20 பேரும் அல்லது இன்னும் கூடுதலான ஆய்வாளர்கள் இணைந்து தடுப்பு மருந்தைக் கண்டறிந்து அதன் சோதனைகளில் வெற்றி கண்டாலும்கூட, அதன் உற்பத்தியில் நாள்கள் கடக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. உற்பத்தி செய்யப்பட்ட பின், முதலில் அது மருத்துவப் பணியாளர்களுக்கே அவை முதலில் தரப்படக்கூடும் என்பதால், அவர்களுக்குப் பின்னரே மருந்துகள் பொதுமக்களை அடையக்கூடும். இதற்கு குறைந்தபட்சமாக, ஒன்றரை வருடம் வரை ஆகலாம் என கணிக்கப்படுகிறது' என்றார்.
மனிதர்களைத் தாக்கும் ஏழு வகை கொரோனா வைரஸில் எதற்கெல்லாம் தடுப்பூசிகள் உள்ளன? இல்லாதவைக்கு, கண்டுபிடிக்கப்பட எவ்வளவு நாள்கள் ஆகலாம்?
இதற்கு முன் ஏற்பட்ட சார்ஸ் மற்றும் மெர்ஸ் கொரோனா வைரஸ்களுக்கு, இன்னமும் தடுப்பு மருந்துகள் கண்டறியப்படவில்லை. இதில், சார்ஸ் நோய்க்கு பாதிப்பு பரவுதல் தடுக்கப்பட்டுவிட்ட காரணத்தினால், மருந்துக்கான ஆய்வு நிதிகள் யாவும் அரசால் நிறுத்தப்பட்டுவிட்டன. அதனால் இடையிலேயே ஆய்வுகள் நிறுத்தப்பட்டுவிட்டன. மெர்ஸுக்கு மட்டுமே ஆய்வுகள் நடக்கின்றன. 2012 -லிருந்து நடைபெறும் இந்த மெர்ஸ் ஆய்வுகள், இன்னும் ஓரிரு வருடங்களில், முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றன.

கோவிட் - 19 கொரோனா தடுப்பு மருந்தைப் பொறுத்தவரையில், `ஆய்வுகள் யாவும் சிறப்பாகவும் சரியாகும் நடந்தால், மருந்து அடுத்த வருட மே மாதத்துக்குள் கிடைக்கப்பெறலாம். அனைத்தும் மிக விரைவாக நடந்தால், இன்னும் 4 -5 மாதங்களுக்குள் கிடைக்கலாம்' எனக்கூறியுள்ளார் உலக சுகாதார அமைப்பைச் சேர்ந்த விஞ்ஞானி சௌமியா.
மற்ற 4 சாதாரண சளி இருமல் கொரோனா பாதிப்புகளுக்கும், இன்னமும் தடுப்பு மருந்துகள் கண்டறியப்படவில்லை.
இவை அனைத்துக்கும் தடுப்பு மருந்துகள் கண்டறியப்பட்டாலும்கூட, அவை வைரஸை அழித்துவிடும் என உறுதியாகச் சொல்ல முடியாது என்கிறார்கள் மருத்துவர்கள். தடுப்பு மருந்துகள், வைரஸின் வீரியத்தை வெகுவாக குறைக்கும் என்கிறார்கள் அவர்கள்.

தடுப்பு மருந்து கண்டறியப்படும் வரையில், கோவிட் - 19 தடுப்புக்கு என்ன செய்வது?
சுத்தமாக இருக்க வேண்டும். வைரஸின் வீரியம் தம்மால் குறையும்வரையில், முடிந்தவரை ஒருவரிடமிருந்து இன்னொருவர் குறிப்பிட்ட தூரம் விலகியிருக்க வேண்டும். Social Distancing எனப்படும் விலகியிருத்தல், பரவுதலை வெகுவாகத் தடுக்கும்.

நோய் பாதித்தவரை மீண்டும் நோக்க வாய்ப்பிருக்கிறதா?
இது, சந்தேகத்திற்குரிய விஷயம்தான். ஒருவேளை வைரஸ் தன் வீரியத்தை இழந்துவிட்டாலோ, நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருந்தாலோ பாதிப்பு மீண்டும் ஏற்படக்கூடும். இதற்கு முன் ஏற்பட்ட ஆறு கொரோனா பாதிப்புகளில், மெர்ஸ், சார்ஸ் தவிர்த்த மற்ற நான்கும், பாதிப்பு ஏற்பட்டு அடுத்த 8 - 12 மாதங்களுக்குப் பிறகும் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. சார்ஸ், தனது தாக்கத்தை அதன்பின் ஏற்படுத்தவேயில்லை.

கோவிட் - 19 ஐ பொறுத்தவரையில், நோயிலிருந்து மீண்ட சிலருக்கு அடுத்த சில தினங்களில் மீண்டும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இது ஏன் ஏற்படுகிறதென மருத்துவர்களுக்கு உறுதியாகத் தெரியவில்லை என்பதால், `நோய்த்தாக்கம் ஏற்பட்டவர்களுக்கு நோய் எதிர்ப்புத் திறன் குறைவாகியிருக்கக்கூடும்' என்று கணித்துள்ளனர் மருத்துவர்கள்.
இந்திய மருந்து ஆய்வகத்தின் சார்பாக, சில தினங்களுக்கு முன் கோவிட் - 19 கொரோனா நோயாளிகளுக்கு, மலேரியாவுக்கு தரப்படும் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் (Hydroxychloroquine) என்ற மூலக்கூறு கொண்ட மருந்தைப் பரிந்துரைக்கலாம் என அறிவுறுத்தப்பட்டிருந்தது.

கோவிட் – 19 கொரானாவுக்கு சிகிச்சையே இல்லை எனக் கூறப்பட்டுவரும் சூழலில், இப்படியொரு மருந்தை அரசு பரிந்துரைத்திருப்பது, பொதுமக்களிடையே பெரும் சந்தேகத்தை உருவாக்கியிருந்தது.
இந்தச் சந்தேகத்துக்கான விடை காண, உடலின் நோய் எதிர்ப்புத்திறன்கள் குறித்து அமெரிக்காவில் தொடர்ச்சியாக ஆய்வு செய்து வரும் மூத்த மருத்துவர் அனுகாந்த்திடம் பேசினோம். அவர் கூறிய விஷயங்கள் இங்கே.
``அரசு குறிப்பிட்டிருக்கும் இந்த ஹைட்ராக்ஸி குளோரோகுயின் கோவிட் 19 கொரோனாவுக்கான முழுமையான முறையான தீர்வல்ல. கோவிட் – 19 கொரோனாவுக்கான மருந்தென்பது இப்போதுவரை ஆய்வு நிலையில் இருக்கிறது என்பதுதான் உண்மை.
பின் இதை அரசு ஏன் பரிந்துரைத்ததென நீங்கள் கேட்கலாம்.
கோவிட் – 19 கொரோனாவை அழிக்கும் மூலக்கூறோ, மருந்தோ எதுவென்றே நமக்குத் தெரியாது என்ற காரணத்தினால், அதன் அறிகுறிகளைக் கட்டுப்படுத்த முயல்கின்றனர் மருத்துவர்கள். அறிகுறிகளில் பெரும்பாலானவை ஆட்டோ இம்யூன் நோய்களுக்கான குறிகுணங்களோடு ஒத்துப்போவதால்,
இன்றைய தேதிக்கு மருத்துவச் சந்தையிலிருக்கும் ஆட்டோ இம்யூன் நோய்களின் அனைத்து மருந்துகளையும் இதற்கும் பரிந்துரைக்கின்றனர் அவர்கள்.
நச்சுத்தன்மை இல்லாத – குறிகுணங்களைக் கட்டுப்படுத்தும் மருந்து என்பது மட்டும்தான் இங்கு விதி / தேவை என்பதால், இதற்கு உட்பட்டு வரும் நூற்றுக்கணக்கான மருந்துகளில் எதைவேண்டுமானாலும் நோயாளிகளுக்கு மருத்துவர் தரலாம். எப்படியாவது நோயைக் கட்டுக்குள் கொண்டுவந்து நோயாளியைக் குணப்படுத்திவிட வேண்டும் என்பது மட்டுமே நோக்கம். கேரள மருத்துவர்கள் குறிப்பிட்ட ஹெச்.ஐ.வி தொற்றுக்கான மருந்தும் இந்த வகையில் பரிந்துரைக்கப்பட்ட ஒன்றுதான்.

மத்திய அரசு குறிப்பாக ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தை மட்டும் அதிகாரபூர்வமாக குறிப்பிடக் காரணம், சீனா – அமெரிக்கா போன்ற கொரோனா நோயாளிகள் அதிகமுள்ள நாடுகளில் இந்த மருந்து நல்ல பலனைத் தந்திருப்பதாகத் தொடர்ச்சியாக செய்திகள் வெளிவருகின்றன என்பதால்தான்.
இப்போதைக்கு எப்படியாவது கொரோனாவின் தாக்கத்தை தடுத்துவிட வேண்டும் என்ற பொறுப்புணர்வில், உலகளவில் அதிகம் பேருக்கு பலனளித்த ஒரு மருந்தை, நம் அரசு நமக்கும் பரிந்துரைத்திருக்கிறது” என்றார் அவர்.
இந்த ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மூலக்கூறு கொண்ட மருந்தை, கொரோனா தாக்கம் இல்லாதவர்கள் உட்கொண்டால் பக்கவிளைவுகள் தீவிரமாக இருக்குமென கூறுகின்றனர் மருத்துவர்கள். பாதிப்பு ஏற்பட்டவர்களுக்குமே கூட ரத்த அழுத்தம், இதய பாதிப்புகள் ஏற்படக்கூடும் என்பதால் ஆலோசனையின்றி இம்மருந்தை எடுத்துக்கொள்ளக் கூடாது. ஆகவே, எந்தச் சூழலிலும் பொதுமக்கள் சுயமாக இதை எடுத்துக் கொள்ள வேண்டாம்