
கொள்ளை நோய்களை வென்ற வரலாறு
அசுத்தமான தண்ணீர் மூலம் பரவி, உடலில் அளவுக்கதிகமான நீரிழப்பை ஏற்படுத்தி, பேதியாகிய எட்டு மணிநேரத்தில் உயிர்களைக் கொன்று குவித்த காலன்... கொடிய கொள்ளைநோயான காலரா.
காலரா குறித்து, 1543-ம் ஆண்டு இந்தியாவுக்குப் பயணம் செய்த போர்த்துகீசிய வரலாற்று ஆய்வாளரான கஸ்பர் கோரியா(Gaspar Correa), தனது ‘லெஜண்டரி இந்தியா(Legendary India)’ புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். அதில், கங்கை நதிப்புரத்து டெல்்டா பகுதிகளில், இன்றைய இந்தியாவும் பங்களாதேஷும் இணையும் பகுதியில், அப்பகுதி மக்களால் ‘மோரிக்சி(moryxy)’ என்று அழைக்கப்பட்டு வந்த நோய் குறித்து எழுதியிருக்கிறார். அந்த நோய் தாக்கியவர்கள் பேதி ஏற்பட்டு அடுத்த எட்டு மணி நேரத்துக்குள் தீவிர நீரிழப்பால் உயிர் இழந்ததையும், மயானங்களில் பிணங்கள் குவியலாகக் கிடந்ததையும் பதிவு செய்துள்ளார்.

ஏழு காலராக்கள்... ஆறு இந்தியாவில் தோன்றியவை!
இதுவரை உலக வரலாற்றில் ஏழு காலரா தொற்றுநோய்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவற்றில் ஆறு பேண்டெமிக்குகள், பழைய பிரிட்டிஷ் இந்தியாவில் தோன்றியவை என்பது குறிப்பிடத்தக்கது.
1817-ம் வருடம் ‘ஏசியாடிக் காலரா’ என்று அழைக்கப்பட்ட முதல் காலரா கொள்ளைநோய், இந்தியாவின் கல்கத்தா நகரத்தில், கெட்டுப்போன அரிசியிலிருந்து பரவியது. கல்கத்தாவிலிருந்து தென்மேற்கு ஆசிய நாடுகள், மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் ஆப்பிரிக்காவுக்கு வணிகப்பாதை மூலமாகப் பரவியது. நோய் ஆட்கொண்டவர்களில் 25% பேருக்கு மரணத்தை ஏற்படுத்திய கொடிய நோயாக இருந்தது காலரா. நோய்த் தாக்குதலுக்கு உள்ளான இந்தோனேசியாவின் ஜாவா தீவில் மட்டும் ஒரு லட்சம் பேர் மாண்டனர். சீனாவுக்கு 1820-ம் ஆண்டும், ஜப்பானுக்கு 1822-ம் ஆண்டும் பரவியது. பிரிட்டிஷ் துருப்புகள் மூலம் இந்தியாவிலிருந்து ஐரோப்பாவுக்குச் சென்றது. 1824 வரை நீடித்தன மரணங்கள். பின்னர் அந்த வருடம் கடும் குளிரால் நீர்நிலைகளில் வாழ்ந்த கிருமிகள் தானாக இறக்க நேரிட, அதோடு அந்த பேண்டெமிக் முடிவுக்கு வந்தது.
இரண்டாம் அலை!
அதற்குடுத்த காலரா அலை, 1829-ம் வருடம் மீண்டும் இந்தியாவிலிருந்து தொடங்கியது. இம்முறை கிழக்கு மற்றும் மத்திய ஆசிய நாடுகளில் பரவி, அங்கிருந்து 1830-ம் ஆண்டு ரஷ்யாவை அடைந்தது. 1831-ம் ஆண்டு பிரிட்டனை அடைந்தது. பிரிட்டனில், இந்த நோய் பரவிய நாடுகளிலிருந்து வருபவர்களைத் தனிமைப்படுத்தும்(Quarantine) நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டன. நோய்த்தொற்றாளர்கள் மருத்துவமனைகளில் தனிமைப்படுத்தப்பட்டனர். ஆனால் அக்கால பிரிட்டிஷ் மக்கள், மருத்துவர்கள் தங்களைக் கொன்று பிரேத பரிசோதனை செய்து கற்றுக்கொள்ள இவ்வாறு மருத்துவமனையில் அடைக்கிறார்கள் என்று தவறாக எண்ணினர். இதனால், லிவர்பூல் எனும் நகரத்தில் கலவரம் வெடித்த நிகழ்வும் நடந்தேறியது.
1832-ம் ஆண்டு அமெரிக்காவுக்குக் காலரா நோய் முதன்முதலாகச் சென்றது. அங்குள்ள க்யூபெக் நகரில் பல மரணங்கள் அந்த வருடம் காலராவால் நேர்ந்தன. அதற்குப் பின்னான இரண்டு தசாப்த காலங்கள், உலகம் முழுவதும் அங்கு, இங்கு எனக் காலரா கொள்ளைநோயாக உருவெடுத்து, 1851வரை ஆதிக்கம் செலுத்தியது.

கொள்ளைநோயியலின் தந்தை!
மூன்றாவது காலரா அலை, 1852-ம் ஆண்டு உலகைத் தாக்கியது. இந்தியத் துணைக்கண்டத்தில் உருவெடுத்த கொள்ளைநோய் இங்கிருந்து ஆசியா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா, அமெரிக்கா என்று கிட்டத்தட்ட உலகம் முழுவதும் பரவி மரணங்களை ஏற்படுத்தியது.
19-ம் நூற்றாண்டின் அதிக உயிர்ப்பலி ஏற்படுத்திய கொள்ளை நோயாக இது அறியப்படுகிறது. ரஷ்யாவில் மட்டும் 10 லட்சம் பேர் மாண்டனர். பிரிட்டனில் 23,000 மக்கள் இறந்தனர்.
1854-ம் வருடம் ஜான் ஸ்நோ(John Snow) எனும் மருத்துவர் லண்டன் மாநகரில் உள்ள சோஹோ எனும் பகுதியில் அதிகமானோர் காலராவால் பாதிக்கப்பட்டு, அதிக மரணங்கள் ஏற்படுவதை அறிந்தார். அதுகுறித்துத் தீவிர ஆராய்ச்சியில் இறங்கினார். அப்பகுதி மக்கள் குடிநீருக்காகப் பயன்படுத்தி வந்த குறிப்பிட்ட அடிகுழாய்க் கிணற்றில் உள்ள நீரின் மூலம்தான் காலரா பரவுகிறது என்பதை, இறுதியாகக் கண்டறிந்தார். மாநகராட்சி அதிகாரிகள் உதவியுடன் அந்தக் கிணற்றிலிருந்து மக்கள் நீர் எடுப்பதைத் தடுத்து நிறுத்தினார். காலரா நோய்த்தொற்றாளர்கள் எண்ணிக்கையும் மரணங்களும், உடனடியாகக் கணிசமான அளவு குறையக்கண்டார் ஜான் ஸ்நோ. இவரே நவீன கொள்ளைநோயியலின் தந்தையாக(Father of Modern Epidemiology) அழைக்கப்படுகிறார்.
ஆய்வுகளும் அறிஞர்களும்!
அசுத்தமான குடிநீர் மற்றும் சுகாதாரமற்ற முறையில் கழிப்பிடங்கள் இருப்பதுதான் காலரா பரவக் காரணம் என்பதை மேற்குலகம் அறிந்துகொண்டு விழித்துக்கொண்டது. இதன் விளைவாக, அதற்கடுத்து வந்த நான்காவது காலரா அலை(1863-1875) மற்றும் ஐந்தாவது காலரா அலை(1881-1896), முன்னேறிய மேற்குலக நாடுகளில் அதிகளவு மரணங்களை ஏற்படுத்தவில்லை.
இதற்கிடையில் 1883-ம் ஆண்டு ராபர்ட் கோச்(Robert Koch) எனும் ஜெர்மானிய நுண்ணியிரியல் நிபுணர், எகிப்து மற்றும் கல்கத்தா என, காலரா கொள்ளைநோய் பரவும் இடங்களில் ஆராய்ச்சிசெய்து, ‘விப்ரியோ காலரே(Vibrio cholerae)’ எனும் பாக்டீரியா கிருமிதான் காலராவைத் தோற்றுவிக்கிறது என்பதைக் கண்டறிந்தார். நவீன பாக்டீரியாலஜியின் தந்தை என்று அழைக்கப்படும் ராபர்ட் கோச் கண்டறிந்த இதே பாக்டீரியாவை, 1854-லேயே கண்டறிந்த இத்தாலியின் பிலிப்போ பசீனியின்(Filippo Pacini) முயற்சிகள் வெளியுலகின் கண்களுக்குத் தெரியாமல்போயின என்பதையும் குறிப்பிட்டாக வேண்டும்.
ஆறாவது காலரா... ஐந்து லட்சம் மக்களை இழந்த இந்தியா!
ஆறாவது காலரா பேண்டெமிக் 1899 முதல் 1923 வரை நீடித்தது. ஆனால், அப்போது ஐரோப்பா மற்றும் அமெரிக்கக் கண்டங்களில் சுத்தமான குடிநீர் மற்றும் சுகாதாரமான கழிப்பறைகள் ஏற்படுத்தப்பட்டன. மேலும் காலரா நோய்த்தொற்றாளர்களைத் தனிமைப்படுத்தும் நடவடிக்கையும் சிறப்பாகச் செயல்முறைப்படுத்தப்பட்டது. எனவே இந்த அலையிலிருந்து மேற்குலகம் தப்பித்தது. இந்தியா, ரஷ்யா, மத்திய கிழக்கு நாடுகள், வட ஆப்பிரிக்க நாடுகள் இம்முறை மிகுந்த பாதிப்புக்குள்ளாகின. 1918-1919 ஆண்டுகளில் மட்டும் இந்தியா ஐந்து லட்சம் மக்களை காலராவுக்கு இழந்தது.

காலரா கொள்ளைநோயின் ஏழாவது அலை 1961-ம் ஆண்டு இந்தோனேசியாவில் தொடங்கி, ஆசிய நாடுகள், மத்திய கிழக்கு நாடுகள், ஆப்பிரிக்க நாடுகள் ஆகிய பொருளாதார வசதிகளில் பின்தங்கிய நாடுகளில் அவ்வப்போது கொள்ளைநோயாக உருவெடுத்து, தற்போதுவரை தொடர்ந்துவருகிறது. 1990களிலிருந்து, உலகின் 90% காலரா நோய்த்தொற்றுகள் ஆப்பிரிக்காவிலிருந்து மட்டுமே ஏற்படுகின்றன. எனவே தற்போது நிகழ்ந்துவரும் காலரா பேண்டெமிக் என்பது, வளர்ச்சியடைந்த ஏழை நாடுகளில் மட்டுமே நிகழ்ந்துவருகிறது.
உலகின் முதல் ரத்தநாள சிகிச்சை!
அதீத நீரிழப்பு மற்றும் தாது உப்புகளின் பற்றாக்குறையால்தான் காலரா நோயால் மரணம் ஏற்படுகிறது என்பது அறியப்பட்டது. 1831-ம் ஆண்டு ரஷ்யாவின் தலைநகரில் ஏற்பட்ட காலரா கொள்ளை நோயின்போது, ஜெர்மனியின் மருத்துவர் ஹெர்மான், ரத்தநாளம் மூலம் தண்ணீரை ஏற்றுவது குறித்து ஆராய்ச்சி செய்தார். இதுவே உலகில் முதன்முதலில் சோதிக்கப்பட்ட ரத்தநாள மருத்துவ சிகிச்சை. இதை இன்னும் கொஞ்சம் மெருகேற்றி பிரிட்டனைச் சேர்ந்த சாக்னெஸ்ஸி(Shaughnessy), மிதமான வெப்பத்தில் இருக்கும் நீரில் கொஞ்சம் உப்பு சேர்த்து நாளங்கள் மூலம் ஏற்றலாம் என்ற தனது கருத்தை வெளியிட்டார். இந்த முறை கடைப்பிடிக்கப்பட ஆரம்பித்ததும், காலரா மரண எண்ணிக்கை கொஞ்சம் குறைந்தது. பிறகு உப்பின் அளவு கொஞ்சம் அதிகரிக்கப்பட்டு முயலப்பட்டது. இதனால் மரண எண்ணிக்கை பாதியாகக் குறைந்தது. செல்லார்ட் எனும் மருத்துவர் சோடியம் குளோரைடு உப்புடன் சோடியம் பைகார்பனேட் உப்பைக் கலந்து நாளங்கள் மூலம் ஏற்றலாம் என்று அறிந்தார். இதன் மூலம் இறப்பு விகிதம் 20% ஆகக் குறைந்தது.
சர்வதேசங்கள் வியந்த கண்டுபிடிப்பு... சாதித்துக்காட்டிய இந்தியர்!
1970களில் உலகமே வியக்கும் கண்டுபிடிப்பை ஓர் இந்திய உயிரியல் நிபுணர் நிகழ்த்தினார். அவர், ‘டாக்டர் பாபு’ என்று மக்களால் வாஞ்சையுடன் அழைக்கப்பட்ட திலீப் மஹாலன்பிஸ்(Dilip Mahalanabis). கல்கத்தாவைச் சேர்ந்த திலீப், 1971-ல் நிகழ்ந்த வங்கதேச விடுதலைப்போரையடுத்து இந்திய எல்லையோரம் தஞ்சமடைந்த வங்கதேச அகதிகளிடம் காலராத் தொற்று பரவியதை அறிந்தார். நாள்தோறும் மக்கள் கொத்துக் கொத்தாக இறந்தனர். தனது பல்லாண்டு ஆராய்ச்சியின் பலனாக, அதுவரை ரத்தநாளம் மூலம் ஏற்றப்பட்டு வந்த திரவத்தை வாய் மூலம் கொடுக்கும் ஓ.ஆர்.எஸ்(Oral Rehydration Solution) திரவத்தைக் கண்டறிந்தார். குறைவான மற்றும் மிதமான அளவு பேதி ஆகும் மக்களுக்கு இந்த திரவத்தை வாய்வழியாகப் புகட்டியது மூலம் பல உயிர்கள் காக்கப்பட்டன. காலரா மற்றும் பேதி மூலம் நிகழும் மரணங்களில் 88% இதனால் குறைக்கப்பட்டது. 20-ம் நூற்றாண்டின் மிகச்சிறந்த கண்டுபிடிப்புகளுள் ஒன்றாக அடையாளம் காணப்பட்டது ஓ.ஆர்.எஸ் திரவம். அடுத்ததாக, டாக்ஸிசைக்ளின்(Doxycycline) எனும் வலிமை மிகுந்த ஆன்ட்டிபயாடிக்கின் வருகையால் காலரா பல நாடுகளில் இருந்த இடம் தெரியாமல்போனது உண்மை. இப்போது நம்மைப் பதறவைத்துக்கொண்டிருக்கும் கோவிட்-19-க்கு எதிரான மருந்தைக் கண்டறியும் முயற்சிகளிலும், உலகம் முழுக்கப் பல அறிவியலாளர்கள் ஈடுபட்டுவருகிறார்கள். அந்த ‘கேம் சேஞ்சர்’ குறித்த அறிவிப்புக்குக் காத்திருப்போம் நம்பிக்கையுடன்.
நிச்சயம் ஒழிப்போம்!
அறிவியல் வளர்ச்சி அடையாத காலங்களில் காலராவுக்குக் கொடுக்கப்பட்ட சிகிச்சைகளான எனிமா கொடுப்பது, விளக்கெண்ணெய் கொடுப்பது, ரத்தத்தை வெளியேற்றுவது, ஓபியம், பிராந்தி போன்ற போதை வஸ்துகளைப் புகட்டுவது, ஆசன வாயை அடைப்பது போன்ற மனிதத்தன்மையற்ற மூடநம்பிக்கைகளிலிருந்து வளர்ந்து, இப்போது பொது சுகாதாரத்தைப் பேணி, சுத்தமான குடிநீரைப் பருகி, காலரா நோயிலிருந்து கிட்டத்தட்ட மீண்டுவிட்டோம். இருப்பினும் ஆப்பிரிக்காவின் 47 நாடுகளில் இன்னும் காலரா நோயின் தாக்கம் இருந்துகொண்டுதான் இருக்கிறது. காலராவை முற்றிலும் ஒழிக்க, உலக சுகாதார நிறுவனம் ‘Ending Cholera 2030’ என்ற சபதமேற்று முயற்சிகளில் இறங்கியுள்ளது.

இந்திய அரசாங்கம், வருடம் ஒருமுறை இரண்டு வாரங்களைத் தீவிர பேதிநோய்க் கட்டுப்பாட்டுக்காக அர்ப்பணித்து, நாடு முழுக்க ஓ.ஆர்.எஸ் திரவ பாக்கெட்டுகளை வழங்கி அதன் முக்கியத்துவத்தை விளக்கி விழிப்புணர்வு வழங்கிவருகிறது. உலகம் ஒன்றிணைந்து, ஏழை நாடுகளுக்குச் சுத்தமான தண்ணீர் மற்றும் சுகாதாரமான கழிப்பறைகள் கிடைக்க வழிசெய்யுமானால், நிச்சயம் நம்மால் காலராவை முற்றிலும் ஒழிக்க முடியும்.
20-ம் நூற்றாண்டில் நமக்கு அச்சமூட்டிய எய்ட்ஸ், மலேரியா, எபோலாவுக்கு எதிரான நம் மருத்துவப் போர் பற்றி... அடுத்த இதழில்!
- நம்பிக்கை தொடரும்