Published:Updated:

நம்பிக்கையூட்டும் மினி தொடர் 5 - மீண்டும் மீள்வோம்!

கொள்ளை நோய்
பிரீமியம் ஸ்டோரி
News
கொள்ளை நோய்

கொள்ளை நோய்களை வென்ற வரலாறு

‘சாதாரண கொசுவால் இவ்வளவு பெரிய அழிவை ஏற்படுத்த முடியுமா?’ மலேரியா குறித்த அறிவைப் பெறுவதற்கு முன்புவரை, இதை மனித சமுதாயம் கற்பனைசெய்துகூடப் பார்த்திருக்காது.

மன்னர் காலம் முதல் மலேரியா!

கி.மு 1333 முதல் கி.மு 1323 வரை எகிப்தை ஆண்ட மன்னன் துத்தன்காமுனின்(Tutankhamun) பாதுகாக்கப்பட்ட மம்மியிலிருந்து மலேரியா உருவாக்கும் கிருமி கண்டறியப்பட்டது. மாவீரன் அலெக்சாண்டர் மரணமடைந்ததற்கும் மலேரியாவே காரணம் என்ற கருத்தும் உண்டு.

நம்பிக்கையூட்டும் மினி தொடர் 5 - மீண்டும் மீள்வோம்!

கி.பி 1630-ம் ஆண்டு முதல் மலேரியா நோய்க்கு ஸ்பெயினிலிருந்து கிடைத்த சிங்கோனா எனும் மரப்பட்டை, மருந்தாகப் பயன்படுத்தப்படத் தொடங்கியது. 19-ம் நூற்றாண்டில் அந்த மரப்பட்டையிலிருந்து குயினின்(Quinine) எனும் வேதிப்பொருள் கண்டறியப்பட்டு, மாத்திரை வடிவத்தில் உருவாக்கப்பட்டது. 20-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில்தான் மனித சமுதாயம், மலேரியா நோய் அனாஃபிலஸ் எனும் கொசுவால் பரவுகிறது என்பதை அறிந்தது. அதற்குப் பிறகு கொசுவை முழுமூச்சாக ஒழிக்கும் நடவடிக்கைகளில் இறங்கியது. கொசுவை ஒழிக்க DDT எனும் பூச்சிக்கொல்லி மருந்தை ஸ்பிரே அல்லது புகை வடிவில் அடிக்கும் உத்தி கையாளப்பட்டது. இப்படியாக, வளர்ந்த நாடுகளில் மலேரியா நோய் நல்ல கட்டுப்பாட்டுக்கு வரவே, உலக சுகாதார நிறுவனம் மலேரியாவை உலகத்திலிருந்தே ஒழிப்பது என்ற லட்சியத்துடன் 1955-ம் ஆண்டு களம் இறங்கியது. ஆனால் 1969-ம் ஆண்டு, மலேரியா கொசு ஒழிப்புக் குறித்து உலக சுகாதார நிறுவனம் கண்ட கனவு பகல் கனவாக, தான் எடுத்த முடிவு தவறு என்று ஒப்புக்கொண்டு பின்வாங்கியது.

உலகம் முழுவதும் பூச்சிக்கொல்லி புகை அடித்து கொசுக்களை ஒழிக்கும் முயற்சியில், பூச்சிக்கொல்லி மருந்துக்கு எதிரான எதிர்ப்புச் சக்தியை கொசுக்கள் பெறத் தொடங்கின. அடுத்ததாக, கொசு மனிதர்களுக்குக் கடத்தும் ப்லாஸ்மோடியம் எனும் நுண்ணுயிரியைக் கொல்ல மனிதன் பயன்படுத்திய க்ளோரோகுயின் மாத்திரைக்கு, அந்த நுண்ணுயிரிகள் எதிர்ப்பு சக்தியைப் பெற்றன. ஆக, மலேரியாவை ஒழிக்கும் முடிவிலிருந்து, அதைக் கட்டுப்படுத்தும் திட்டத்துக்கு உலக நாடுகள் மாறின.

விஞ்ஞானியின் பெயர்!

1967-ம் ஆண்டு மே 23-ம் தேதி, ‘523 புராஜெக்ட்’ என்ற பெயரில் மலேரியாவுக்கு சிறப்பான மருந்தைக் கண்டறியும் பணி சீனாவில் தொடங்கப்பட்டது. இந்தப் பணியில் 1969-ம் வருடம் தன்னை இணைத்துக்கொண்டார் பேராசிரியையும் விஞ்ஞானியுமான யூயூ து(Youyou Tu) என்ற பெண்மணி. மருந்தியல் துறையில் இளங்கலைப் படிப்பும் சீன புராதன மருத்துவ முறைகளில் ஈர்ப்பும் கொண்டவர். மலேரியா குறித்த மருத்துவ குணங்களை அறிய சீன நாட்டைச் சேர்ந்த பண்டைய மருத்துவ நூல்களைப் படிக்க ஆரம்பித்தார். 1,600 வருடங்கள் பழைமையான ஒரு நூலிலிருந்து, மலேரியாவுக்கான நிவாரணத்தைக் கண்டறிந்தார். அந்த மருந்துதான் தற்போது வெகுவாகப் பயன்படும் ‘ஆர்டிமிசினின்(Artemisinin)’. ஆப்பிரிக்க நாடுகளில் மலேரியாவால் ஏற்படும் மரணங்களை பாதியாகக் குறைத்த பெருமை இந்த மருந்துக்கு உண்டு. இந்த மருந்தின் கண்டுபிடிப்புக்காக யூயூ து-க்கு 2015-ம் ஆண்டுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. மலேரியாவின் வரலாற்றில் யூயூ துவின் பெயர் நிச்சயம் பொன்னெழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டியவை.

இந்தியாவில், மலேரியாவைத் தடுத்துக் கட்டுப்படுத்த தேசிய மலேரியா கட்டுப்பாட்டு இயக்கம் 1953-ல் தொடங்கி, தற்போதுவரை நடைபெற்று வருகிறது. மலேரியாவுக்கான சிகிச்சை முறைகளில் நவீன மருத்துவம் முன்னேற்றம் கண்டுள்ளதாலும், மலேரியாவைப் பரப்பும் கொசுக்கள் மக்களைக் கடிக்காத வண்ணம் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவதாலும் மலேரியா எனும் கொடிய நோய் இந்தியாவில் கட்டுப்பாட்டில் இருந்துவருகிறது.

கொசு
கொசு

ஹெச்.ஐ.வி!

அடுத்ததாக, 20-ம் நூற்றாண்டில் உருவான முக்கியமான கொள்ளைநோயைப் பற்றிப் பார்ப்போம். அது... ஹெச்.ஐ.வி. பாதுகாப்பற்ற உடலுறவு, பாதுகாப்பற்ற ரத்தம் ஏற்றும் முறைகள், ரத்த நாளம் மூலம் போதை ஊசி போடும் பழக்கம் உடையவர்கள், தன்பாலின உறவாளர்களிடையே முதலில் அறியப்பட்ட இந்த நோய், முதன்முதலாக அதிகாரபூர்வமான முறையில் கண்டறியப்பட்ட ஆண்டு 1981. அன்று தொடங்கி இன்றுவரை சுமார் 360 லட்சம் மக்களைக் கொன்றுகுவித்த கொள்ளைநோயாக ஹெச்.ஐ.வி இருந்துவருகிறது.

ஆப்பிரிக்காவின் காங்கோ பகுதியில் சிம்பன்சி குரங்கு வகைகளில் காணப்பட்ட எதிர்ப்பு சக்தியைக் குறைக்கும் வைரஸ் ஒன்று, இனம் விட்டு இனம் தாவி 1920லேயே மனிதனுக்கு வந்திருக்கிறது. மனிதனின் எதிர்ப்பு சக்தி மண்டலத்தைத் தாக்கி பல நோய்களை உருவாக்கும் வல்லமை கொண்டிருந்ததால் அந்த வைரஸுக்கு Human Immuno Deficiency Virus(HIV), அதாவது மனித உடலின் எதிர்ப்பு சக்தியைக் குறைக்கும் வைரஸ் என்று பெயரிடப்பட்டது. 2018 கணக்கெடுப்பின் படி, உலகில் நான்கு கோடி மக்கள் ஹெச்.ஐ.வியால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுள் வருடம்தோறும் எட்டு லட்சம் பேர் இறக்கின்றனர். இத்தகைய கொடிய நோய் இந்தியாவில் எப்படி, எங்கு முதன்முதலில் கண்டறியப்பட்டது தெரியுமா? அதற்கு நாம் 1986-ம் வருடத்துக்குச் செல்ல வேண்டும்.

கொசு
கொசு

இந்தியாவில் முதன்முதலாகத் தமிழகத்தில்!

அப்போது 32 வயதான டாக்டர் நிர்மலா, தமிழகத்தில் உள்ள மெட்ராஸ் மருத்துவக்கல்லூரியில் நுண்ணுயிரியியல்(microbiology) மேல்படிப்பு படிக்கும் மருத்துவர். டாக்டர் சுனிதி சாலமன், இவரது துறைப் பேராசிரியர். அப்போது சுமார் 80 கோடி மக்கள்தொகை கொண்டிருந்த நம் நாட்டில், ஒரு ஹெச்.ஐ.வி நோயாளிகூட கண்டறியப்படவில்லை. இந்தச் சூழ்நிலையில் டாக்டர் நிர்மலாவை, ஹெச்.ஐ.வி குறித்து ஆராய்ச்சிக் கட்டுரை சமர்ப்பிக்குமாறு பேராசிரியர் சுனிதி கேட்கிறார். அதற்கு முன் மும்பை, டெல்லி, கொல்கத்தா போன்ற பெருநகரங்களில் செய்த ஆராய்ச்சியிலும்கூட ஹெச்.ஐ.வி நோயாளிகள் கண்டறியப்படவில்லை. இந்த நகரங்களில் எல்லாம் ‘ரெட் லைட் ஏரியா’ என்ற பெயரில் பாலியல் தொழிலாளிகள் சட்டத்துக்கு உட்பட்டு செயல்பட்டுவந்த இடங்கள் இருந்தன. மும்பையில் சோனாபூர், டெல்லியில் ஜி.பி.ரோடு, கொல்கத்தாவில் சோனா காச்சி என, பாலியல் தொழிலுக்கென தனியிடங்கள் ஒதுக்கப்பட்டிருந்த அந்த நகரங்களிலேயே ஹெச்.ஐ.வி இல்லை எனும்போது, தமிழகத்தில் எப்படி இருக்கும் என்ற எண்ணம் மக்களிடம் இருந்தது.

டாக்டர் நிர்மலா ஆராய்ச்சிக்காகக் களத்தில் இறங்கினார். ‘ஹெச்.ஐ.வி-யால் பாதிக்கப்பட்டி ருக்கலாம்’ என்று சந்தேகிக்கப்படும் பாலியல் தொழிலாளிகள், தன்பாலின ஈர்ப்பாளர்கள், ஆப்பிரிக்க மாணவர்களைக் கண்டறிந்து, ரத்த மாதிரிகளை எடுக்க வேண்டும். இவர்கள் High Risk Population என்று அழைக்கப்படுவார்கள். இவர்களில் 200 பேரிடம் ரத்த மாதிரிகள் சேகரிக்க வேண்டும்.

நம்பிக்கையூட்டும் மினி தொடர் 5 - மீண்டும் மீள்வோம்!

டாக்டர் நிர்மலா, சென்னை மருத்துவக்கல்லூரியின் பால்வினை நோய்கள் பிரிவில் சிகிச்சை எடுக்கவரும் பாலியல் தொழிலாளிகள் இருவரை நண்பர்களாக்கிக்கொண்டார். அவர்கள் மூலம் மற்ற பாலியல் தொழிலாளிகளின் முகவரியைப் பெற்றார். அப்போது பாலியல் தொழிலாளிகள் கைதுசெய்யப்பட்டால், ‘விஜிலன்ஸ் ஹோம்’ எனும் இடங்களில் தங்கவைக்கப்படுவர். இதை ரிமாண்ட் ப்ரிசன் என்றும் கூறுவார்கள். டாக்டர் நிர்மலாவின் ஆய்வுக்கு உந்துசக்தியாக இருந்த கணவர் வீரப்பன் ராமமூர்த்தி, காலையில் அவரை ஸ்கூட்டரில் ஏற்றிச்சென்று ரிமாண்ட் ஹவுஸில் விடுவார். அங்கு நிர்மலா ரத்த மாதிரிகளைச் சேகரிப்பார். இப்படியாக 80 சாம்பிள்களைச் சேகரித்துவிட்டார்.

நம்பிக்கையூட்டும் மினி தொடர் 5 - மீண்டும் மீள்வோம்!

ராஜிவ் காந்திக்குத் தெரிவிக்கப்பட்டது!

அந்தக் காலகட்டத்தில், சென்னையில் ஹெ.ஐ.வி கிருமியைக் கண்டறியும் ELIZA(Enzyme linked immunosorbent assay) பரிசோதனை வசதி இல்லை. எனவே டாக்டர் சுனிதி, வேலூர் கிறிஸ்துவ மருத்துவக் கல்லூரியில் அதற்கான ஏற்பாட்டைச் செய்தார். டாக்டர் சுனிதியும் டாக்டர் நிர்மலாவும் எடுத்துச் சென்ற ரத்த மாதிரிகளில், அனைவரும் அதிர்ச்சிக்குள்ளாகும் வண்ணம் ஆறு மாதிரிகள் ஹெச்.ஐ.வி பாசிட்டிவ் என்று வந்தன. மீண்டும் ரத்த மாதிரிகள் மறுபரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. அதிலும் பாசிட்டிவ் என்று ரிசல்ட் வரவே, செய்தி ICMR (Indian Council for Medical Research)க்கு தெரிவிக்கப்பட, அங்கிருந்து செய்தி அப்போதைய பிரதமர் ராஜிவ் காந்திக்குத் தெரிவிக்கப்பட்டது. பிறகு, தமிழக சுகாதார அமைச்சர் ஹண்டேவுக்குத் தெரிவிக்கப்பட்டது.

அந்த இரண்டு பெண் மருத்துவர்கள்!

மே மாதம் நடந்த தமிழக சட்டசபைக் கூட்டத்தில், இந்தியாவில் ஹெச்.ஐ.வி வைரஸ் முதன்முதலாகத் தமிழகத்தில் கண்டறியப்பட்ட அதிர்ச்சித் தகவலை, ஹண்டே தெரிவித்தார். அப்போது டாக்டர் சுனிதியும் டாக்டர் நிர்மலாவும் சட்டமன்றத்தின் பார்வையாளர் கூடத்தில் அமர்ந்திருந்தனர்.

கொசு
கொசு

தொடர்ந்து, தனது ஆராய்ச்சிக்குத் தேவையான 200 சாம்பிள்களை எடுத்து முடித்து, 1987-ல் ஆராய்ச்சிக் கட்டுரையை சமர்ப்பித்தார் டாக்டர் நிர்மலா. மேற்படிப்பை முடித்தவர், 2010-ம் ஆண்டு கிண்டி கிங்ஸ் தடுப்பூசி இன்ஸ்ட்யூட்டில் பணிபுரிந்து ஓய்வுபெற்றார். டாக்டர் நிர்மலா கண்டுபிடித்த அந்த முதல் இரண்டு நோயாளிகளுக்குப் பிறகு, இந்தியா ஹெச்.ஐ.வி மீதுகொண்டிருந்த பார்வை மாறியது. 2006 கணக்கெடுப்பின்படி, 20 லட்சம் ஹெச்.ஐ.வி நோயாளிகளுடன், உலகில் ஹெச்.ஐ.வி நோயாளிகள் அதிகம் வசிக்கும் நாடானது இந்தியா. ஹெச்.ஐ.வி நோயாளிகளுக்கு சிகிச்சை தருவதற்கென தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டுக் கழகம் அமைக்கப்பட்டது. இப்போது ஹெச்.ஐ.வி நோயாளிகளுக்கு இலவசமாக, ஹெச்.ஐ.வியை மூன்று மருந்துகள் இணைந்து கட்டுப்படுத்தும் ஆன்டிரெட்ரோவைரல் தெரபி(antiretroviral therapy) அளிக்கப்படுகிறது. இன்று இந்தியாவில் ஹெச்.ஐ.வி பாதிப்பு பெருமளவு குறைக்கப்பட்டிருக்கிறது. இவை எல்லாவற்றுக்கும் விதைபோட்ட அந்த இரண்டு பெண்கள், வணக்கத்துக்குரியவர்கள்.

கோவிட் 19 தடுப்பு மருந்து மற்றும் சிகிச்சை ஆராய்ச்சிப் பாதையிலும், விரைவில் சில பெயர்கள் கொண்டாடப்படலாம். அப்போது, எந்தக் கொள்ளை நோயையும் வெல்லும் வல்லமை கொண்டது மனித இனம் என்று மீண்டும் ஒருமுறை நிரூபிக்கப்படும்.

அடுத்த இதழில், 21-ம் நூற்றாண்டின் மனித குலத்தின் புதிய வைரஸ் எதிரிகளைப் பற்றியும், அவற்றை நாம் வென்ற வரலாற்றையும் காண்போம்.

- நம்பிக்கை தொடரும்