Published:Updated:

நம்பிக்கையூட்டும் மினி தொடர் 8 - மீண்டும் மீள்வோம்!

கொள்ளை நோய்
பிரீமியம் ஸ்டோரி
News
கொள்ளை நோய்

கொள்ளை நோய்களை வென்ற வரலாறு

இதுவரை இந்தத் தொடரில், மனித இனத்தை அச்சுறுத்திய பெரும் கொள்ளைநோய்கள், அறிவியல் வளர்ச்சியால் அழிக்கப்பட்டதைப் பற்றிப் பார்த்தோம். நம் நாடு லாக்டௌன் தளர்வை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கும் இவ்வேளையில், கோவிட் 19-ஐ எதிர்கொள்ள நாம் செய்யவேண்டியவை குறித்துப் பார்ப்போம்.

சார்ஸைவிட இரு மடங்கு;

ஃப்ளூவைவிடப் பத்து மடங்கு!

2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 31-ம் தேதி, இதுவரை காணாத வகையில் விசித்திரமான தீவிரத்தன்மை மிக்க நிமோனியா போன்ற நுரையீரல் தொற்றுகள், தனது வூஹான் நகரில் ஏற்பட்டிருப்பதாக உலக சுகாதார நிறுவனத்துக்கு சீன அரசாங்கம் எச்சரிக்கை மணி அடித்தது. வூஹான் நகரில் இயங்கிவந்த ஹுவானின் தெற்காசிய கடல் உணவுப் பேரங்காடியில் இருந்து அந்த நோய்த் தொற்று பரவியதாகக் கூறப்பட்டது.

கொள்ளை நோய்
கொள்ளை நோய்

கிட்டத்தட்ட 2003-ல் பரவிய சார்ஸ் நோய்த் தொற்றைப்போலவே இந்த நோயும் பரவியதை அறிந்த சீனா, ஜனவரி 23-ம் தேதி சுமார் ஒரு கோடி மக்கள் வாழும் வூஹான் நகரை ‘லாக்டௌன்’ செய்தது. அதற்கடுத்த சில நாள்களில் ஆறு கோடி மக்கள் வசிக்கும் ஹூபை மாகாணம் முழுவதும் சிறைபிடிக்கப்பட்டது. அதற்கடுத்த நாள்களில் சீனா மொத்தமாகத் தனது செயல்பாட்டை நிறுத்தியது. சீன மக்கள் அனைவரும் வீடுகளுக்குள் தங்களைத் தனிமைப்படுத்திக்கொண்டனர்.

சுவாசப்பாதை மூலம் பரவும் கொரோனா வைரஸால் ஏற்படும் இந்நோய், முந்தைய 2003 சார்ஸ் நோயைவிட இரண்டு மடங்கு வேகமாகப் பரவுவதையும், ஃப்ளூ காய்ச்சலைவிடப் பத்து மடங்கு அதிக மரணங்களை ஏற்படுத்துவதையும் அறிய முடிந்தது.

உலகின் மூச்சு திணறுகிறது!

சீனாவில் ஆரம்பித்த கோவிட்-19 தொடர்ந்து தாய்லாந்து, சிங்கப்பூர், ஈரான், தென் கொரியா, ஜப்பான், இத்தாலி, ஐரோப்பிய நாடுகள், அமெரிக்கா, இந்தியத் தீபகற்ப நாடுகள், மத்திய கிழக்கு நாடுகள், ஆஸ்திரேலியா, ஆப்பிரிக்கா என்று, விமானங்களில் பறந்து சென்று உலக நாடுகளைப் பற்றிக்கொண்டது. 21-ம் நூற்றாண்டு இதுவரை கண்ட மாபெரும் பெருந்தொற்றான கோவிட்-19, ஆரோக்கியத்தை மட்டுமன்றி சர்வதேசப் பொருளாதாரத்தையும் முடக்கி, உலகின் மூச்சையே திணறவைத்துக்கொண்டி ருக்கிறது. இதுவரை இந்தியாவின் வரலாற்றில் யாருமே கண்டிராத வகையில் 136 கோடி மக்களும் தங்களைத் தனிமைப்படுத்திக்கொண்டு, 50 நாள்களுக்கும் மேலாக வீட்டிலிருக்கும் நிலையை கோவிட்-19 உருவாக்கியிருக்கிறது.

கொள்ளை நோய்
கொள்ளை நோய்

ஆராய்ச்சிகள், தடுப்பூசி, மருந்துகள், சிகிச்சைகள்..!

இந்நிலையில் கோவிட்-19க்கான தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணிகளைப் பல்வேறு ஆராய்ச்சி நிறுவனங்கள் உலகம் முழுவதும் முடுக்கி விட்டுள்ளன. இந்தியாவிலும் இந்த வைரஸுக்குத் தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணிகள் நடந்துவருகின்றன. தமிழகத்தின் மருத்துவப் பல்கலைக்கழகமான டாக்டர் எம்ஜிஆர் பல்கலைக்கழகத்தில் தடுப்பூசிக்கான ஆரம்பக்கட்டப் பணிகள் வெற்றிகரமாக முடிந்து அடுத்த கட்டத்துக்குச் சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே, இந்த நோய்க்கு எதிரான மருந்து கண்டுபிடிப்பு முயற்சிகளிலும் வைரஸை அக்குவேறு ஆணிவேறாகப் பிரித்து ஆராய்ந்து கொண்டிருக்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். ஏற்கெனவே நம்மை அச்சுறுத்தி வரும் வைரஸ் தொற்றுகளான ஹெச்.ஐ.வி, எபோலா, ஃப்ளூ, பன்றிக்காய்ச்சல் போன்ற நோய்களுக்குக் கண்டறியப்பட்ட வைரஸ் கொல்லி மருந்துகளை கோவிட்-19 நோய்க்கு சிகிச்சையாகக் கொடுத்துப்பார்த்து வெற்றி கிடைக்கிறதா என்பதைக் கண்டறியும் ஆய்வுகளும் நடந்து வருகின்றன. அந்த வகையில் இப்போது...

நம்பிக்கையூட்டும் மினி தொடர் 8 - மீண்டும் மீள்வோம்!
  • ஹெச்.ஐ.விக்கு எதிராகச் செயல்படும் மாத்திரைகளான லோபினாவிர்(Lopinavir), ரிட்டோனாவிர்(Ritonavir)

  • எபோலா நோய்க்கு எதிராகச் செயல்படும் ரெம்டெசிவிர்(Remedesivir)

  • ஃப்ளூ காய்ச்சலுக்கு எதிராகச் செயல்படும் ஃபேவிபிராவிர்(Favipiravir)

  • 2009-ம் வருடம் வந்த H1N1 பன்றிக்காய்ச்சல் பெருந்தொற்றுக்குக் கண்டறியப்பட்ட ஒசல்டாமிவிர்(Oseltamivir) மாத்திரை.

இவை கோவிட்-19 தொற்றாளர்களுக்கு நோயின் தீவிரத்துக்கேற்ப வழங்கப்பட்டு, அந்தச் சிகிச்சையால் முன்னேற்றம் இருக்கிறதா என்பதைக் கண்டறியும் ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன.

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மூலம் ஹைட்ராக்ஸி குளோரோகுயின்(Hydroxy chloroquine) மாத்திரை பிரபலமானது. இந்த மாத்திரை ஏற்கெனவே லூபஸ், ருமட்டாய்டு ஆர்த்ரைடிஸ் போன்ற மூட்டுவாத நோய்களுக்கு அளிக்கப்பட்டு வந்த மாத்திரை. கோவிட்-19 தொற்றாளர்களுக்கு இதைக் கொடுப்பதால் பயனளிக்கிறது என்று சில ஆய்வுகளும், பலன் இல்லை என்று சில ஆய்வுகளும் தெரிவிக்கின்றன. எனவே இந்த மருந்தைப் பற்றிய இன்னும் தீவிர ஆய்வு தேவைப்படுகிறது.

கொள்ளை நோய்
கொள்ளை நோய்

அடுத்தது, பிளாஸ்மா தெரபி. அதாவது, கோவிட்-19 நோய்த்தொற்று பெற்று குணமடைந் தவரின் ரத்தத்தில் அந்த நோய்க் கிருமியை எதிர்க்கும் எதிர்ப்புத் திறன் இருக்கும். அந்த எதிர்ப்புத் திறன் கொண்டவர் ரத்தத்தின் பிளாஸ்மாவை, நோய் பாதிப்பு கண்டு மோசமான நிலைமையில் இருப்பவருக்குக் கொடுக்கும் சிகிச்சை இது. டெல்லியில் கவலைக்கிடமான நிலையில் இருந்த கோவிட்-19 தொற்றாளர் ஒருவருக்கு, இந்த முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டு, ஆரோக்கியம் மீட்கப்பட்டு வீடுதிரும்பியிருக்கிறார். இருப்பினும் இந்த முறை குறித்தும் அதிகமான ஆராய்ச்சிகள் தேவைப்படுகின்றன.

தமிழகமும் கேரளாவும்..!

கோவிட்-19 நோய்த் தொற்றுக்கு எதிரான மருந்துகள் மற்றும் தடுப்பூசி கண்டறியும் பணிகள் உலகெங்கும் தற்போது வேகமாக நடந்துவருகின்றன. நம் கைகளில் தடுப்பூசியோ, மருந்தோ கிடைக்கும்வரை, சமூக இடைவெளி மற்றும் தனிமைப்படுத்திக்கொள்ளுதலை மக்கள் கடைப்பிடிக்க அனைத்து நாட்டு அரசுகளும் வேண்டுகோள் விடுத்துவருகின்றன. இந்தியாவிலும் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவத்துறை ஊழியர்கள், காவலர்கள் எனப் பல தரப்பினரும் தொடர்ந்து கொரோனா வைரஸுக்கு எதிரான போரில் முன்வரிசையில் நின்று மக்களைக் காத்துவருகின்றனர். இந்தியாவைப் பொறுத்தவரை, தமிழகத்தில் மரண விகிதம் குறைவாக இருக்கிறது. தொற்றிலிருந்து மீண்டவர்களின் சதவிகிதத்தில் கேரளா மற்றும் தமிழகம் ஆகியவை முக்கிய இடங்களில் இருக்கின்றன.

கொள்ளை நோய்
கொள்ளை நோய்

தேவை... தற்காப்பு!

லாக்டௌன் நீட்டிக்கப்பட்டாலும் சரி, லாக்டௌன் தளர்வு அறிவிக்கப்பட்டாலும் சரி... இன்னும் பல மாதங்கள் நம்முடன் இருக்கப்போகிற கோவிட்-19 இடமிருந்து நம்மைத் தற்காத்துக் கொள்ளச் செய்யவேண்டிவை இவைதாம்:

  • கோவிட்-19 பாதிப்பு முற்றிலும் அகலும்வரை தொடர்ந்து சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும். ஒருவருக்கும் மற்றவருக்கும் இடையே ஒரு மீட்டர் இடைவெளி இருக்க வேண்டும். வெளியே பொருள் வாங்கச் செல்பவர்கள் குடை எடுத்துச்செல்லலாம். குடையை விரித்து நிற்பதன் மூலம் வெயிலிலிருந்தும் காத்துக்கொள்ள முடியும், சமூக இடைவெளியையும் பேண முடியும்.

  • முகக்கவசம் அணியாமல் வீட்டை விட்டு வெளியே செல்வது கட்டாயம் கூடாது. மாஸ்க் கிடைக்காதவர்கள் துணியால் ஆன கவசம் பயன்படுத்தலாம். மூக்கையும் வாயையும் மூடுமாறு கவசம் அணிய வேண்டும்.

  • நோய்த்தொற்றின் அறிகுறிகளான காய்ச்சல், இருமல், வயிற்றுப்போக்கு, தொண்டை வலி போன்றவற்றை உதாசீனப்படுத்தாமல் அருகில் இருக்கும் அரசு மருத்துவமனைக்குச் சென்று பரிசோதனை செய்துகொண்டு சிகிச்சை எடுக்க வேண்டும்.

  • மருந்துக்கடைகளில் சுயமருத்துவம் செய்துகொள்வது, இந்தக் காலகட்டத்தில் இன்னும் ஆபத்தானது.

  • பொது இடங்கள், விழாக்கள், வழிபாட்டுத் தலங்கள், குடும்ப நிகழ்ச்சிகள் என்று கூட்டம் கூடுவது கட்டாயம் தவிர்க்கப்பட வேண்டும்

கொள்ளை நோய்
கொள்ளை நோய்
  • வெளியே சென்று வீடு திரும்புபவர்கள் கைகளைக் கழுவுவது, குளிப்பது, மாஸ்க்கை அப்புறப்படுத்துவது, அணிந்திருந்த துணிகளைத் தனியே வைப்பதுவரை அனைத்து வழிமுறை களையும் பின்பற்ற வேண்டும்.

  • கோவிட்-19 தொற்றாளர்களை மனித நேயத்துடன் நடத்த வேண்டும். அவர்களைத் தீண்டாமைக்கு உள்ளாக்கக்கூடாது. உறவுகள், அவருடன் உடலால் தனித்திருந்தாலும் மனதால் எப்போதும் ஒன்றிணைந்து இருக்க வேண்டும்.

  • ஊரடங்கைத் தளர்வு செய்தாலும் முதியோர்கள், குழந்தைகள் வீட்டிலேயே இருக்க வேண்டும். முக்கியமாக நீரிழிவு, ரத்தக் கொதிப்பு, சிறுநீரக நோய், கல்லீரல் நோய், புற்றுநோய் இருப்பவர்கள், கர்ப்பிணிகள் கட்டாயம் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது. வீட்டின் பொருளாதாரத்துக்காக வெளியே செல்லவேண்டிய தேவை இருப்பவர்கள் மட்டுமே செல்ல வேண்டும்.

  • லாக்டௌன் தளர்வில் வெளிநாடுகளிலிருந்து தமிழ்நாட்டுக்குத் திரும்பவிருக்கும் லட்சக்கணக்கான தமிழர்கள், குறிப்பிட்ட காலம்வரை தங்களைத் தனிமைப்படுத்திக்கொள்வதிலும், நோய்ப்பரவல் தடுப்பு நடவடிக்கைகளிலும், பரிசோதனை, சிகிச்சைகளிலும் விழிப்புணர்வுடனும் சுயபொறுப்புடனும் நடந்துகொள்ள வேண்டும்.

  • கோவிட்-19, பாதித்தவர்கள் அனைவரையும் கொல்லும் நோயன்று; தமிழகத்தில் பாதிக்கப்பட்ட 100 பேரில் ஒருவர் இறக்கிறார்; 90% பேர் எந்த அறிகுறியும் இல்லாமல் நோயிலிருந்து குணமடைகின்றனர். எனவே தேவையற்ற பீதியடைய வேண்டாம். எச்சரிக்கை உணர்வுடன் இருந்தால் போதுமானது. வதந்திகளை நம்புவதை விடுத்து அரசு தரும் அதிகாரபூர்வமான தகவல்கள், மருத்துவ நிபுணர்களின் ஆலோசனைகளில் கவனம் செலுத்த வேண்டும்.

கொள்ளை நோய்
கொள்ளை நோய்

நம் முன்னோர் எந்த அறிவியல் முன்னேற்றமும் இல்லாத காலத்தில்கூட, அம்மைக்கு வாசலில் வேப்பிலை, மஞ்சள்நீர் வைப்பது, சம்பிரதாயக் காரணங்கள் சொல்லி அந்தக் குடும்பத்தை சமூகத் தொடர்பிலிருந்து விலக்கிவைப்பது என, பெருந்தொற்றுகளை மதியின் துணையுடன் எதிர்கொண்டு வென்றார்கள். 21-ம் நூற்றாண்டு நமக்குப் பலகட்டப் பாதுகாப்புகளை வழங்கியுள்ளது. அந்த நோய்த் தடுப்பு நடவடிக்கைகளாலும், எச்சரிக்கை உணர்வாலும் தொற்றுப்பரவலைத் தடுப்போம். கொரோனா ஏற்படுத்தக்கூடிய மரணங்களைத் தவிர்ப்போம். கோவிட்-19 உடனான போரில், சேதாரத்தின் அளவைக் குறைத்து வென்று வாகை சூடுவதில் ஒவ்வொரு தனிமனிதனின் பங்களிப்பும் முக்கியம். தயாராவோம்!

- நலம் பெறுவோம்