வேலூர் மாவட்டம் ஓல்டுடவுன் பகுதியைச் சேர்ந்த கண்ணகியின் மகன் பிரசாந்த். கடந்த 14-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மதியம் 2 மணியளவில், பள்ளிகொண்டாவில் நிகழ்ந்த சாலை விபத்தில் படுகாயமடைந்தார்.
அதனைத் தொடர்ந்து, அடுக்கம்பாறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பிரசாந்தை அவரின் உறவினர்கள் சி.எம்.சி. இராணிப்பேட்டை மருத்துவமனையில் சேர்த்தனர்.

தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்து வந்த நிலையில், பிரசாந்தின் நிலைமை மோசமடைந்ததை தொடர்ந்து, கடந்த 16-ம் தேதி மூளைச்சாவு நிலையை எட்டியதாக மருத்துவர்கள் அறிவித்தனர். அதைத் தொடர்ந்து அவருடைய இதயம், கல்லீரல், சிறுநீரகங்கள், நுரையீரல் போன்ற உடல் உறுப்புகளை தானமாக அளிக்க பெற்றோர் முன்வந்தனர். அதன்படி, விபத்தில் மூளைச்சாவு அடைந்த பிரசாந்தின் உடல் உறுப்புகள், இன்று அறுவை சிகிச்சை மூலம் பெறப்பட்டு, தானமாக வழங்கப்பட்டன.
இதுகுறித்து மருத்துவர்கள், ``வேலூர் ஓல்டுடவுன் பகுதியைச் சேர்ந்த பிரசாந்த என்பவர், கடந்த ஞாயிறன்று 2 மணியளவில் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது விபத்துக்குள்ளாகி, சி.எம்.சி இராணிப்பேட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார்.

அவருக்கு மூளைச்சாவு ஏற்பட்டதை தொடர்ந்து, அவருடைய உடல் உறுப்புகளை தானம் செய்ய குடும்பத்தினர் முன்வந்துள்ளனர். அதன்படி, அவருடைய இருதயம் மற்றும் நுரையீரலை சென்னையில் உள்ள எம்.ஜி. எம். மருத்துவமனை தானமாகப் பெற்றுக்கொண்டுள்ளது. ஒன்றரை மணி நேரத்திற்குள் இந்த உடல் உறுப்புகள் அதிவிரைவாக அங்கு எடுத்துச் செல்லப்படுகின்றன.
சிறுநீரகம் மற்றும் கல்லீரல் ஆகியவற்றை, சி.எம்.சி மருத்துவமனை தானமாகப் பெற்றுள்ளது. மற்றொரு சிறுநீரகத்தை சென்னை மியாட் மருத்துவமனை பெற்றுக்கொண்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. உடல் உறுப்புகளை அதிவிரைவாகக் கொண்டு செல்வதற்காக காவல்துறையினர் உதவினர்" என்று தெரிவித்தனர்.

’’எங்க பையன் இனி பிழைக்க வாய்ப்பில்லைனு தெரிஞ்சதும், அவன் மூலமா சிலர் பிழைக்க இந்த முடிவை எடுத்தோம்’’ என்று கண்ணீர் மல்கக் கூறுகின்றனர் பிரசாந்தின் குடும்பத்தினர்.
மூளைச்சாவு அடைந்த நிலையில், பிரசாந்தின் உடல் உறுப்புகளை தானம் செய்ய முன்வந்து மற்றவர்களுக்கு முன்னுதாரணமாகி பலருக்கு வாழ்வளித்துள்ள அவர் குடும்பத்தினரின் செயலைப் பலரும் நெகிழ்ச்சியுடன் பாராட்டி வருகின்றனர்.