Published:Updated:

``விகடன் வாசகர்கள் சரியான நேரத்துல உதவிட்டாங்க''- புற்றுநோயிலிருந்து மீளும் தாயின் ஆனந்தக்கண்ணீர்!

மோகன லட்சுமி
News
மோகன லட்சுமி

``இவ்ளோ பணத்துக்கு என்ன செய்யப் போறோம்; யார் நமக்கு உதவி செய்வாங்கன்னு ரொம்ப பயந்துட்டிருந்தேன்...''

Published:Updated:

``விகடன் வாசகர்கள் சரியான நேரத்துல உதவிட்டாங்க''- புற்றுநோயிலிருந்து மீளும் தாயின் ஆனந்தக்கண்ணீர்!

``இவ்ளோ பணத்துக்கு என்ன செய்யப் போறோம்; யார் நமக்கு உதவி செய்வாங்கன்னு ரொம்ப பயந்துட்டிருந்தேன்...''

மோகன லட்சுமி
News
மோகன லட்சுமி

``என் பொண்ணுக்காக நான் வாழணும்''... புற்றுநோயுடன் போராடும் ஒரு தாயின் கண்ணீர்க்கதையை, கடந்த வருடம் டிசம்பர் 22-ம் தேதி விகடன் டிஜிட்டலில் கட்டுரையாக வெளியிட்டிருந்தோம். வாசிக்காதவர்களுக்காக, அந்தத் தாயின் நிலைமை பற்றி சில வரிகள்.

சிகிச்சைக்கு முன்னால்
சிகிச்சைக்கு முன்னால்

நுரையீரல் புற்றுநோய்க்கு கணவரைப் பறிகொடுத்தவர் மோகன லட்சுமி. தனி மனுஷியாகப் படாதபாடுகள் பட்டு, தன் ஒற்றை மகளை வளர்த்தெடுத்தார். மகளும் தாயின் நிலைமை புரிந்து நன்கு படித்து, இன்று ஒரு தனியார் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்திருக்கிறார். தாயும் மகளும், 'இனி எல்லாம் நல்லதா நடக்கும்' என்று நம்பிக்கொண்டிருந்த நேரத்தில், மோகன லட்சுமியின் சினைப்பையில் புற்றுநோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

''நாலு மாசமா கீமோ தெரபிதான் போயிக்கிட்டிருக்கு. சினைப்பையையும் கருப்பையையும் ஆபரேஷன் செஞ்சு நீக்கிடணும்னு டாக்டர் சொல்லியிருக்கார். அதுக்கப்புறம் இன்னும் ரெண்டு தடவை கீமோ கொடுக்கணுமாம். இதுவரைக்கும் கீமோவுக்கே இரண்டரை லட்சம் செலவாகிடுச்சு. ஆபரேஷனுக்கு நாலு முதல் அஞ்சு லட்சம் செலவாகலாம்னு சொல்லியிருக்காங்க. கவர்ன்மென்ட் இன்ஷுரன்ஸ் எடுத்து வெச்சிருக்கேன். ஆனா, சமாளிக்க முடியலைங்க. ஒரு கீமோவுக்கு முப்பதாயிரம் செலவாச்சுன்னா, பன்னிரண்டு ஆயிரம்தான் க்ளெய்ம் பண்ண முடியுது. ஆபரேஷனுக்கும் அறுவதுல இருந்து எழுவது ஆயிரம்தான் க்ளெய்ம் ஆகும்னு சொல்றாங்க. பாவம், என் பொண்ணுதான் அவ ஃபிரெண்ட்ஸ்கிட்ட எல்லாம் பணம் கேட்டுட்டு இருக்கா. ஆனா, என் சிகிச்சைக்குத் தேவையான பணம் கிடைக்கலை. தவிச்சிக்கிட்டிருக்கா என் குழந்தை. அவ இப்போதான் ரெண்டு மாசத்துக்கு முன்னாடி ஒரு நிறுவனத்துல வேலைக்குச் சேர்ந்திருக்கா.

சிகிச்சைக்குப் பிறகு
சிகிச்சைக்குப் பிறகு

என் வீட்டுக்காரர் இறந்த பிறகு என் பொண்ணுக்காக வாழணும்னு ஆசைப்பட்டேன். இப்போ என் பொண்ணுக்குத் துணையா இருக்க முடியாதோன்னு பயமா இருக்கு. இந்தப் புற்றுநோய்ல இருந்து நான் மீண்டு வரணும். என் பொண்ணு நல்லபடியா வாழறதை கண்குளிரப் பார்க்கணும். உதவிகளுக்காகக் காத்திருக்கோம்'' என்கிற கண்ணீர் வார்த்தைகளுடன் விகடன் வாசகர்களின் உதவியை நாடியிருந்தார் மோகன லட்சுமி.

வாழ்வாதாரம் இல்லாமல் தவிப்பவர்களுக்கு, கல்வி கற்க பொருளாதார பலம் இல்லாமல் போராடும் மாணவர்களுக்கு, உயிர் காக்க பணஉதவி கோருபவர்களுக்கும், பேரிடர் காலங்களிலும் 'Vasan Charitable Trust' உதவி செய்து வருவது அனைவரும் அறிந்ததே... மோகன லட்சுமி பற்றிய கட்டுரை வெளியான நாளிலிருந்து, விகடன் வாசகர்கள் பலரும் என்ற Vasan Charitable Trust-க்கு நெட் பேங்க்கிங் மூலம் பணத்தை டிரான்ஸ்ஃபர் செய்யவும் ஆரம்பித்தார்கள்.

மோகன லட்சுமி
மோகன லட்சுமி

இதன் மூலம், மோகன லட்சுமிக்கு 2,02,137 ரூபாய் பண உதவி கிடைத்தது. இந்தத் தொகையுடன், உயிர் காக்க பணஉதவி கோருபவர்களுக்கு தொடர்ந்து உதவி வரும் 'Vikatan readers charitable Trust for medical aid' தன்னுடைய பங்காக ரூபாய் ஒரு லட்சத்தை, மோகன லட்சுமியின் புற்றுநோய் சிகிச்சைக்கு வழங்கியது.

தொகைக்கான காசோலையைப் பெற்றுக்கொண்ட மோகன லட்சுமி, ''இவ்ளோ பணத்துக்கு என்ன செய்யப் போறோம்; யார் நமக்கு உதவி செய்வாங்கன்னு ரொம்ப பயந்துட்டிருந்தேன். விகடன் வாசகர்களும், விகடனோட டிரஸ்ட்டும் கரெக்டான நேரத்துல உதவி செஞ்சிருக்காங்க. ஆபரேஷனுக்கு பிறகு அந்த இடத்துல இன்ஃபெக்‌ஷனாயிருக்குன்னு டாக்டர்ஸ் சொல்லியிருக்காங்க.

உதவிக்கரம் நீட்டிய விகடன் வாசகர்களின் விவரம்
உதவிக்கரம் நீட்டிய விகடன் வாசகர்களின் விவரம்

ஆனா, எனக்கு இப்போ எந்த பயமும் இல்ல. நான் எப்படியும் மீண்டு வந்திடுவேன்கிற தைரியம் எனக்கு வந்திருச்சு'' என்று மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியுமாய் கண்கலங்குகிறார் மோகன லட்சுமி.

'என் பொண்ணுக்காக நான் வாழணும்' என்று நீங்கள் விருப்பப்பட்டதைப் போலவே, ஆயுளுடனும் ஆரோக்கியத்துடனும் வாழ வாழ்த்துகள் அம்மா!